பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் அதிக மரணங்களை விளைவிக்கும் காரணிகளுள் இதய நோயும் ஒன்று. குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் ஆய்வின்படி, இந்தியாவில் நிகழும் மரணங்களில் நான்கில் ஒன்று இதய நோயால் நிகழ்கின்றன.
இதய நோயால் ஏற்படும் மரணங்களில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானவை மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகின்றன.
உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு சரியாக இருந்தால் அனைத்தும் நன்றாக உள்ளது என்பது தான் இதய ஆரோக்கியம் தொடர்பான பரவலான நம்பிக்கையாக உள்ளது. ஆனால் இந்த அனுமானம் சரியா என்கிற கேள்வியும் மருத்துவ வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது.
கொலஸ்ட்ரால் தவிர வேறு எந்த அறிகுறிகள் மற்றும் காரணிகள் மாரடைப்பு தொடர்பான எச்சரிக்கையை வழங்குகின்றன, குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.
குளிர் காலத்தில் வரும் ஆபத்துகள்
2024-ஆம் ஆண்டு அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜியின் முதன்மை ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, தீவிரமான குளிர்ந்த வானிலை மற்றும் திடீர் குளிர் அலை ஆகியவை மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை அதிகரிப்பதாகத் தெரிவிக்கிறது.
இந்த ஆய்வின்படி, குளிர்காலம் தொடங்கிய உடனே பெரிய ஆபத்து இல்லையென்றாலும் 2 – 6 நாட்கள் கழித்து மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தரவுகள்படி, அதிக அளவிலான மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்புடைய மரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டியே பதிவு செய்யப்படுகின்றன.
குளிர், வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் உடல் சார்ந்த எதிர்வினை ஆகியவற்றின் கலவை இதயத்தின் மீது கூடுதல் அழுத்தம் தருவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
குளிர் காலத்தில் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் 4 காரணிகள்
குளிர் காலத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பது ஏன் என்கிற கேள்வியை மேதாந்தா மூல்சந்த் ஹார்ட் சென்டரின் இணை இயக்குநரும் தலைமை பேராசியருமான தருண் குமாரிடம் முன்வைத்தோம்.
இதன் பின் நான்கு முதன்மையான காரணங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
“வானிலை குளிராக இருக்கிறபோது உடல் தன்னை இதமாக வைத்துக் கொள்ள ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை சுருக்குகிறது. இது இதயத்தின் முக்கியமான ரத்த நாளங்களை சுருக்குகிறது. இதன் விளைவாக இதயத்திற்கு குறைவான ரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்கிறது.”
“குளிர்காலத்தில் குறைவாகவே வியர்க்கிறது, மக்கள் அதிகம் நகர்வதும் இல்லை. இது உடலில் பிளாஸ்மா அல்லது மொத்த ரத்த அளவை அதிகரிக்கிறது. இது ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு விகிதத்தை அதிகரித்து இதயத்திற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது,” என்றார்.
குளிர்காலத்தில் உடலின் வளர்சிதை மாற்றம் சிறிதளவு மெதுவாகும் என்று கூறும் அவர், “மக்கள் தங்களை அறியாமலே கலோரி அதிகமாக உள்ள கேரட் அல்வா, வெல்லம், வேர்க்கடலை, வறுத்த பக்கோடா போன்ற உணவுகளை சாப்பிடத் தொடங்குகின்றனர். கூடுதலாக அவர்கள் வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் உடற்பயிற்சியை குறைத்துக் கொள்கின்றனர். இது உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது.”
“குளிர்காலம் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இதனால் ரத்தம் கசியும் போக்கையும் அதிகரிக்கிறது. இந்தக் கசிவு இதயத்தின் நரம்புகளில் ஏற்பட்டால் நரம்பு அடைத்து மாரடைப்பும் ஏற்படலாம்.’ என்று தெரிவித்தார்.
நொய்டாவில் உள்ள மெட்ரோ மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜியின் இயக்குநரான மருத்துவர் சமீர் குப்தா பிபிசியிடம் கூறுகையில், “ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயம் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்களுக்கு குளிர்காலத்தில் அதிக அளவில் சூப் அல்லது உப்பான உணவுகளை எடுத்துக் கொள்வது ஆபத்தானது. அதிக அளவிலான உப்பு, ரத்த அழுத்தம் மற்றும் இதயம் செயலிழக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது.” என்றார்.
குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
குளிர் காலத்தில் அதிக அளவிலான வறுத்த உணவுகள் மற்றும் மன அழுத்தம் இதயத்திற்கு ஆபத்தானது என்கிறார் சமீர் குப்தா.
“உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், ஏனென்றால் கூடுதல் எடை இதயத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. மன அழுத்தத்தை குறைக்க தினமும் யோகா, தியானம் செய்ய வேண்டும். 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
பக்கோடா மற்றும் சமோசா போன்ற வறுத்த உணவுப் பொருட்களை உட்கொள்வதை குறைக்க வேண்டும் எனக் கூறும் அவர், பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
“அதிக அளவில் உப்பு மற்றும் சர்க்கரை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இதய துடிப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த புகையிலை மற்றும் மது பழக்கத்தை கைவிட வேண்டும்,” என்றார்.
உடலில் உள்ள ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீரான இடைவெளிகள் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும் எனக் கூறும் அவர், நெஞ்சு வலி, சுவாசக் குறைபாடு அல்லது தலைச்சுற்றல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த சிறிய அளவிலான மாற்றங்களால் குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்றார்.
மாரடைப்பின் அறிகுறிகள்
2025-ஆம் ஆண்டு ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ் இணைந்து நடத்திய ஆய்வில் இளைஞர்களிடம் நிகழும் திடீர் மரணங்களுக்கு இதய நோய் முதன்மை காரணியாக இருப்பது தெரியவந்தது.
இதய பிரச்னையால் ஏற்படும் 85% மரணங்களூக்கு ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் ஏற்படும் மாரடைப்பே காரணமாக உள்ளது.
“இந்தியாவில் மாரடைப்பு சம்பவங்கள், இளைஞர்களிடம் கூட வேகமாக அதிகரித்து வருகிறது. 50 வயதுக்கு உட்பட்டவர்களிடம் மாரடைப்பு என்பது மிகவும் இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது. இதில் 25-30% மரணங்கள் 40 வயதுக்கும் குறைவானர்களிடம் நிகழ்கிறது,” என்கிறார் தருண் குமார்.
உடனடியாக மருத்துவ உதவியைப் பெறுவதற்கு மாரடைப்பின் அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது முக்கியமாகிறது.
பட மூலாதாரம், Getty Images
நெஞ்சின் இடது பக்கம் அல்லது நடுப் பகுதியில் வலி, அழுத்தம், கனமான அல்லது எரிச்சல் உணர்வு மாரடைப்பின் முதன்மையான அறிகுறிகள். இந்த வலி வயிற்றின் மேல் பகுதியிலிருந்து கீழ் பகுதிக்கு பரவலாம். இந்த வலி இடது கையின் மேல் பகுதிக்கும் பரவலாம்.
அத்துடன், பதற்றமாக உணர்வதும் தலைச்சுற்றல் மற்றும் சுவாசக் குறைபாடு ஏற்படுவதும் பொதுவான அறிகுறிகள் எனக் கூறும் தருண் குமார், இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்கிறார்.
“அனைவரும் நெஞ்சு வலியை அனுபவிக்க மாட்டார்கள். பலரும் சுவாசக் குறைபாட்டை உணர்வார்கள். சுயமாக இதனைக் கையாளாமல் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். இந்த அறிகுறிகளைப் புறக்கணிப்பது ஆபத்தாக அமையும்,” என்கிறார் தருண் குமார்.
இதர காரணிகள்
இதய நோய் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கும் கொலஸ்ட்ரால் அல்லாத இதர காரணிகளை சமீர் குப்தா விவரித்தார்.
ஏபிஓ பி அளவு (Apo B Level): இவை ஒவ்வொரு கெட்ட கொலஸ்ட்ரால் துகளிலும் இடம்பெற்றிருக்கும். ஏபிஓ பி ரத்தத்தில் உள்ள கெட்ட துகள்களின் எண்ணிக்கையை துல்லியமாக தெரிவித்து இதய நோய் ஆபத்து பற்றிய சிறப்பான கணிப்பை வழங்குகிறது.
லிபோபுரோட்டீன் (எ) அளவுகள்: இது பிறப்பின் போதே தீர்மானிக்கப்படும் மரபணு அம்சம் மற்றும் இவற்றை பெரிதாக மாற்ற முடியாது. தெற்கு ஆசியாவில் வசிப்பவர்களிடம் (குறிப்பாக இந்தியர்களிடம்) இவை அதிக அளவில் காணப்படுகிறது. இது இதய நோய் மற்றும் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
ஹீமோகுளோபின் ஏ1சி: இந்த ரத்தப் பரிசோதனை கடந்த 2-3 மாதங்களாக உள்ள சராசரி ரத்த சர்க்கரை அளவைத் தெரிவிக்கிறது. நீரழிவு நோயுடன் அதிக அளவிலான ரத்த சர்க்கரையும் இதய நோய் பாதிப்பை அதிகரிக்கிறது.
இதய நோய் ஆபத்தை தீர்மானிப்பதற்கான சில முக்கியமான வரம்புகளையும் பரிசோதனைகளையும் தருண் குமார் குறிப்பிடுகிறார். இவற்றைப் பரிசோதிப்பதன் மூலம் நோய் பாதிப்பை முன்கூட்டியே எச்சரிக்க முடியும் என்கிறார்.
முக்கியமான வரம்புகள் என்ன?
எடை மற்றும் பிஎம்ஐ: பிஎம்ஐ 18.5 – 24.9 என்கிற அளவில் இருக்க வேண்டும்.
கொலஸ்ட்ரால் அளவு: எல்டிஎல் (கெட்ட கொலஸ்ட்ரால்) – 100 எம்ஜி/டில் என்கிற அளவிற்கு குறைவாக இருக்க வேண்டும். இது மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் கணிசமாக குறைக்கிறது.
ஹெச்டிஎல் (நல்ல கொலஸ்ட்ரால்): இவை 50எம்ஜி/டிஎல் என்கிற அளவில் இருப்பது இயல்பானதாகக் கருதப்படுகிறது.
அதிக உணர்திறன் கொண்ட சி-ரியாக்டிவ் புரோட்டின்: இது உடலில் உள்ள ரத்தக்குழாய் வீக்கத்தைக் கணக்கிடுகிறது. கொலஸ்ட்ரால் அளவு இயல்பாக இருந்தாலும் ரத்தக்குழாய்களில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் முறிவு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. இவை கடினமான உடற்பயிற்சி மற்றும் அழுத்தம் ஏற்படும் சமயங்களில் கசிவிற்கு வித்திடுகிறது.
ஆபத்தைக் கணக்கிடும் வழிமுறை
பட மூலாதாரம், Getty Images
ஃப்ராமிங்காம் ரிஸ்க் கால்குலேட்டர்: இது அடுத்த 10 ஆண்டுகளில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் கணக்கிடுகிறது. வயது, பாலினம், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்ற காரணிகள் இதில் கணக்கிடப்படுகின்றன. ரிஸ்க் 5 சதவிகித்தை விட அதிகரித்தால் மருத்துவரைக் கலந்தாலோசித்து சிகிச்சை பெற வேண்டும்.
கொரோனரி ஆர்டெரி கால்சியம் ஸ்கோர்: இது சிடி ஸ்கேன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஸ்கோர் பூஜ்ஜியத்தை விட எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது.
இவை போக மேலும் சில பரிசோதனைகளையும் தருண் குமார் பரிந்துரைக்கிறார். “நீரழிவு அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு இருக்கும் என சந்தேகித்தால் ஈசிஜி, எகோ மற்றும் டிஎம்டி (டிரெட்மில் பரிசோதனை) எடுத்துக் கொள்ள வேண்டும். டிஎம்டி பரிசோதனையில் நடக்கிற நிலையில் ஈசிஜி மேற்கொள்ளப்படுகிறது. இது பிரச்னையை முன்கூட்டியே கணிக்க உதவும்.” என்றார்.
இளம் வயதிலிருந்தே கவனமாக இருப்பது முக்கியம் எனக் கூறும் அவர் 18-20 வயதிலே கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றார்.
30 – 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஃப்ராமிங்காம் ரிஸ்க் கால்குலேட்டர், கொரோனரி ஆர்டெரி கால்சியம் ஸ்கோர் மற்றும் டிஎம்டி பரிசோதனையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு