0
குழந்தைகளுக்கான சில பால் பொருள்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தையிலிருந்து மீட்டுக்கொள்வதாக Nestle நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்படுகிறது.
பால் பொருள்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு மூலப்பொருள் தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என Nestle தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது. மேலும், அந்த பால் பொருள்களில் செரிமானச் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக Nestle தெரிவித்துள்ளது. இதுவரை அந்த பால் பொருள்களை பயன்படுத்தியவர்களுக்கு எந்தவித உடல்நலக் குறையும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இந்த பால் பொருள்கள் வெவ்வேறு வர்த்தகப் பெயர்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் பாதிக்கப்பட்டுள்ள பொருள்களின் விவரங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்பு எண்கள் குறித்த தகவல்களை Nestle வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பொருள்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அவற்றை திருப்பி அளித்து முழுமையான பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதற்கான வழிகாட்டுதல்களை Nestle வழங்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.