பட மூலாதாரம், Yousuf Sarfaraz
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள அரசு சதார் மருத்துவமனையில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிபிசியிடம் பேசிய மேற்கு சிங்பூம் மாவட்ட மாஜிஸ்திரேட் சந்தன் குமார், எட்டு வயதுக்குட்பட்ட தலசீமியாவால் பாதிக்கப்பட்ட ஐந்து குழந்தைகள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.
இந்த வழக்கில், சாய்பாசா சிவில் சர்ஜன், எச்.ஐ.வி பிரிவுக்குப் பொறுப்பான மருத்துவர் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிபுணர் ஆகியோர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் உதவித் தொகையை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ரத்த மாற்றத்தின் மூலம் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட மூன்று தலசீமியா பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையை அறிய பிபிசி முயன்றது.
முதல் குழந்தை மஞ்சாரி தொகுதியைச் சேர்ந்த ஏழு வயது ஷஷாங்கை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பற்றியது. எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தம் செலுத்தப்பட்டதால் அவருக்கும் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளியாகியவுடன், அக்டோபர் 30 அன்று ஷஷாங்க் தங்கியிருந்த சாய்பாசாவில் உள்ள வீட்டை, அந்த வீட்டின் உரிமையாளர் காலி செய்ய வைத்துள்ளார்.
அங்கு தங்கி, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஷஷாங்க், ஒரு ஆங்கில வழிப் பள்ளியிலும் படித்து வந்தார்.
வாடகை வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது
பட மூலாதாரம், Yousuf Sarfaraz
“உங்கள் மகனுக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளது, அதனால் வீட்டை காலி செய்யுங்கள்” என்று வீட்டு உரிமையாளர் கூறியதாக, ஷஷாங்கின் தந்தை தஷ்ரத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகிறார்.
“நான் பலமுறை விளக்கி, அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர்கள் பிடிவாதமாக வீட்டை காலி செய்ய சொன்னார்கள். இறுதியில், சுமார் 27 கிலோமீட்டர் தூரத்தில் மஞ்சாரி தொகுதியில் உள்ள எனது கிராமத்துக்கு திரும்ப வேண்டியிருந்தது” என்று அவர் கூறுகிறார்.
தலசீமியா நோயின் காரணமாக, அவரது மகனுக்கு மாதத்தில் இரண்டு முறை ரத்தம் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அவர்கள் மாதத்திற்கு இரண்டு முறை சதார் மருத்துவமனைக்கு வர வேண்டும்.
“கிராமத்துக்கு வந்து விட்டதால், என் மகனுக்கு நல்ல சிகிச்சை கிடைப்பது கடினமாகிவிட்டது. அவன் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை” என்று தஷ்ரத் கூறுகிறார்.
நெல் சாகுபடியை மட்டுமே நம்பி வாழும் விவசாயியான தஷ்ரத் குடும்பத்தின் பொருளாதார சூழல் மோசமாக உள்ளது.
“இந்த சூழ்நிலையில், எனக்கு சவால்கள் மேலும் அதிகரித்துள்ளன.ஏற்கனவே தலசீமியா இருந்தது, இப்போது என் மகன் எச்.ஐ.வி-யுடனும் போராட வேண்டியுள்ளது” என அவர் வருந்துகிறார்.
‘தயங்கிய சுகாதார ஊழியர்கள்’
ஷஷாங்கைப் போலவே, ஹட்கம்ஹாரியா தொகுதியைச் சேர்ந்த தலசீமியா நோயாளியான ஏழு வயதான திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளார்.
திவ்யாவின் மூத்த சகோதரனுக்கும் சகோதரிக்கும் தொற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் இருக்கக்கூடாது என்பதற்காக, அவர்களின் தாய் சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவர்களை தனது தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
திவ்யாவுக்கு தலசீமியா இருப்பது கண்டறியப்பட்டதிலிருந்து, மாதத்திற்கு இரண்டு முறை சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சதார் மருத்துவமனைக்குச் சென்று ரத்தமாற்றம் செய்து வருவதாக சுனிதா கூறுகிறார்.
“ஒவ்வொரு மாதமும் கார் வாடகையை ஏற்பாடு செய்வதுதான் மிகப்பெரிய சவால்” என்கிறார் சுனிதா.
இது குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் சந்தன் குமாரிடம் கேட்டபோது, ”குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் தொலைபேசி எண்ணை வழங்கியுள்ளோம். அவர்கள் வர வேண்டிய நேரங்களில், மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்யும்” என்றார்.
செப்டம்பரில் சதார் மருத்துவமனையில் திவ்யாவுக்கு ரத்தமாற்றம் செய்யும்போது, மருத்துவர்கள் கையுறைகள் அணிந்து அவரது பெண்ணைத் தொட்டதாகவும், ஆனால் செவிலியர்கள் அவரைத் தொட தயங்கினார்கள் எனவும் சுனிதா குற்றம் சாட்டுகிறார்.
“அவர்களின் நடத்தையைப் பார்த்ததும் நான் பயந்து விட்டேன். என் மகளுக்கு ஏதோ நடந்திருக்கலாம் என்று அப்போது தான் சந்தேகம் வந்தது” என்று சுனிதா அழுது கொண்டே கூறுகிறார்.
அவர் காரணம் கேட்டபோது தெளிவான பதில் தராமல், ‘அறிக்கை வந்த பிறகுதான் சொல்ல முடியும்’ என்று அவர்கள் கூறியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
“அக்டோபர் 4 அன்று ஒரு சுகாதார ஊழியர், ‘தவறான இரத்தம் கொடுக்கப்பட்டதால் உங்கள் மகள் எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகியுள்ளார் ‘ என்று சொன்னார்,” என சுனிதா கூறுகிறார்.
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பது, திவ்யாவின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும்?
“ஆரம்பத்தில் அதன் தீவிரத்தை நான் முழுமையாக உணரவில்லை, ஆனால் படிப்படியாக எய்ட்ஸ் எவ்வளவு தீவிரமானது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்” என்று சுனிதா கூறுகிறார்.
அம்மாவின் ஒரே நம்பிக்கை
பட மூலாதாரம், Yousuf Sarfaraz
ஜிக்பானி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், குளக்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் ஆறரை வயது ஷ்ரேயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒரு சிறிய வீட்டில் தன் தாய் ஷ்ரத்தாவுடன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசிக்கிறார்.
கணவர் இறந்த பிறகு, ஷ்ரத்தாவின் வாழ்க்கையில் மீதமுள்ள ஒரே ஒரு நம்பிக்கை அவரது மகள் ஷ்ரேயா மட்டும் தான்.
தலசீமியா காரணமாக, ஷ்ரத்தா மாதம் ஒருமுறை 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாய்பாசா சதார் மருத்துவமனைக்கு சென்று மகளுக்கு ரத்தமாற்றம் செய்து வருகிறார்.
இதற்காக, அவர்கள் ஒவ்வொரு முறையும் ஒரு காரை முன்பதிவு செய்ய வேண்டும், அதற்கான செலவு அவர்களின் பொருளாதார சூழலுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.
இப்போது, தலசீமியாவுடன் சேர்ந்து எய்ட்ஸைக் கையாள்வதில் உள்ள கடினமான சவாலை அவர் எதிர்கொள்கிறார். ஷ்ரத்தாவுக்கு எய்ட்ஸ் குறித்து எதுவும் தெரியாது.
“எச்.ஐ.வி ஒரு தீவிரமான நோயாக இருக்க வேண்டும், அதனால் தான் மருத்துவமனை செய்த தவறால் எனக்கு ரூ. 2 லட்சம் காசோலை கிடைத்தது” என்று அவர் கூறுகிறார்.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி ?
ஷ்ரத்தாவுக்கும் சுனிதாவுக்கும் எச்.ஐ.வி குறித்து முன்பு எதுவும் தெரியாது. ஆனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் நடத்தையை பார்த்ததும், அவர்களின் குழந்தைகளுக்கு ஏதோ பெரிய நோய் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருவருக்கும் வந்தது.
அக்டோபர் மாத இறுதியில் ஷஷாங்கின் எச்.ஐ.வி ரிப்போர்ட், பாசிட்டிவ் என வந்த பிறகு, உள்ளூர் ஊடகங்கள் தஷ்ரத்தை தொடர்பு கொண்டன, அப்போது இந்த சந்தேகம் உண்மையாக மாறியது.
“அக்டோபர் 18 அன்று என் மகனுக்கு ரத்தம் கொடுப்பதற்கு முன், சதார் மருத்துவமனையில் எச்.ஐ.வி. டெஸ்ட் செய்தனர். அக்டோபர் 20 அன்று, என் மகன் பாசிட்டிவ் என்று தெரிவித்தனர். அதன்பின், நானும் என் மனைவியும் பரிசோதனை செய்துகொண்டோம். எங்களது ரிப்போர்ட்கள் நெகட்டிவ் என வந்தது. பின்னர் மருத்துவர், ‘தொற்று உள்ள ரத்தம் மாற்றப்பட்டதால் உங்கள் மகனுக்கு எச்.ஐ.வி ஏற்பட்டிருக்கிறது ‘ என்று கூறினார்”
தஷ்ரத், மாஜிஸ்திரேட் சந்தன் குமாரிடம் புகார் அளித்தார். அதன்பின் இந்த குறித்த தகவல் ஊடகங்களில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து (suo motu) வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையில், அவரது மகன் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பதால், மாவட்ட மாஜிஸ்திரேட், எம்.எல்.ஏ, எம்.பி ஆகியோர் வருவார்கள் என்ற தகவலும் தஷ்ரத்துக்கு வந்தது.
அபுவா வீட்டுவசதி, ரேஷன், கழிப்பறை போன்ற அனைத்து அரசு திட்டங்களின் பலன்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று சந்தன் குமார் கூறுகிறார்.
மேலும், “தலசீமியாவால் பாதிக்கப்பட்டு எச்.ஐ.வி பாசிட்டிவ் ஆன ஐந்து குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் உதவி வழங்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறுகிறார்.
அரசு உதவியால் அதிருப்தி அடைந்துள்ள குடும்பத்தினர்
பட மூலாதாரம், X/@IrfanAnsariMLA
“மாவட்ட மாஜிஸ்திரேட்டும், எம்.பியும், எம்.எல்.ஏவும் வந்து ரூ. 2 லட்சம் காசோலை கொடுத்துவிட்டு சென்றார்கள். ஜார்க்கண்டில் இதுதான் நடைமுறை. ஏழைக்குழந்தைக்கு ரூ. 2 லட்சம். ஆனால் இதுவே ஒரு அமைச்சரின் மகன் என்றால், அவருக்கு கோடிகளில் உதவி கிடைத்திருக்கும்,” என்று தஷ்ரத் வருத்தத்துடனும் கோபத்துடனும் கூறுகிறார்.
மேலும் “ஏழை மக்களின் உயிருடைய மதிப்பு வெறும் இரண்டு லட்சம் ரூபாய் மட்டும்தானா?” என்றும் அவர் கேள்வி எழுப்பிகிறார்.
அரசாங்கத்திடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும்? என்ற கேள்விக்கு, “அரசாங்கம் உண்மையில் உதவ விரும்பினால், எங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஒரு பெரிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். தவறு அரசு மருத்துவமனையால் தானே நிகழ்ந்தது? அப்படியானால் அதற்கும் அரசாங்கமே பொறுப்பு” என்று தஷ்ரத் பதில் அளிக்கிறார்.
“மேற்கு சிங்பூம் மாவட்டம் தலசீமியா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதி. தற்போது இங்கு 59 தலசீமியா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலருக்கும் மாதம் இருவேளை ரத்தம் தேவைப்படுகிறது. அதற்கான ரத்த விநியோகம் முழுவதும் நன்கொடையாளர்களைப் பொறுத்தது”என்று சுகாதார அமைச்சர் மருத்துவர் இர்பான் அன்சாரி கூறுகிறார்.
யாருக்காவது ஹெச்.ஐ.வி தொற்று இருக்கிறதா?
பட மூலாதாரம், Yousuf Sarfaraz
இந்நிலையில் எழுந்துள்ள மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், பாதிக்கப்பட்ட ரத்தம் எங்கிருந்து வந்தது என்பது தான்.
இது குறித்து சந்தன் குமார் கூறுகையில், “2023 முதல் 2025 வரை, மாவட்டத்தில் மொத்தம் 259 பேர் ரத்த தானம் செய்துள்ளனர். இதில் 44 பேரை கண்டறிந்து பரிசோதித்தோம். அவர்களில் நான்கு நன்கொடையாளர்கள் எச்.ஐ.வி. பாசிட்டிவ் எனத் தெரியவந்துள்ளது”என்றார்.
மேலும், “மீதமுள்ள நன்கொடையாளர்களின் நிலையையும் பரிசோதித்து வருகிறோம். அவர்களில் வேறு யாருக்காவது எச்.ஐ.வி தொற்று இருந்தால் கண்டறிய முடியும்”என்றும் குறிப்பிட்டார்.
யார் பொறுப்பு?
இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த ஜார்க்கண்டின் முன்னாள் சுகாதார அமைச்சர் ராமச்சந்திர சந்திரவன்ஷி, “இந்த விவகாரத்தில் சிவில் சர்ஜன் மற்றும் பிற அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். எனவே குற்றவாளிகள் அவர்கள்தான்” என்று கூறுகிறார்.
ஜார்க்கண்டின் சிறப்பு சுகாதார செயலாளர் மருத்துவர் நேஹா அரோரா, இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
தானம் செய்யப்பட்ட ரத்தத்தை பரிசோதிக்கும் செயல்முறை குறித்து அவர் கூறுகையில், “பிரீ-கிட் (Pre-kit) மூலம் சோதனை செய்தால், ‘விண்டோ பீரியட்’ நீளமாக இருக்கும். அதனால் தொற்று இருந்தாலும், பாசிட்டிவ் முடிவு தாமதமாக வரும். ஆனால் எலிசா அல்லது நாட் சோதனை ஆன்டிஜென்களை நேரடியாக கண்டறிவதால், வைரஸ் சீக்கிரமே கண்டுபிடிக்கப்படும். அதனால் நன்கொடையாளர்கள் ரத்தத்தை சோதிக்க பயன்படுத்தப்படும் பிரீ-கிட் இப்போது தடை செய்யப்பட்டுள்ளது”என்றார்.
பட மூலாதாரம், Yousuf Sarfaraz
மறுபுறம், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் மாநில அரசிடம், உரிமம் இல்லாமல் ரத்த வங்கிகள் ஏன் இயங்குகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளது.
உள்ளூர் தகவல்களின் படி, சாய்பாசா உட்பட மாநிலத்தில் உள்ள ஒன்பது ரத்த வங்கிகளின் உரிமங்கள் காலாவதியாகிவிட்டன, ஆனால் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன எனத் தெரிய வருகிறது.
இது குறித்து சுகாதார அமைச்சர் இர்பான் அன்சாரி கூறுகையில், “உரிமம் புதுப்பிப்பதற்கான என்ஓசி மத்திய அரசிடமிருந்து பெறப்படுகிறது. அது வழங்காவிட்டால், நாங்கள் எவ்வாறு புதுப்பிக்க முடியும் ? ஆனால் நாங்கள் கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம்” என்றார்.
மாநில அரசு எழுத்துப்பூர்வமாக பரிந்துரை அனுப்பாவிட்டால், மத்திய அரசு உரிமத்தை புதுப்பிக்க முடியாது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் ராமச்சந்திர சந்திரவன்ஷி கூறுகிறார்.
“உரிமம் புதுப்பிக்கப்படாததற்கான காரணம் விதிமுறையை பின்பற்றாதது தான். இதனால் ரத்தத்தின் தரம் பாதிக்கப்பட்டது. அதன் விளைவு தான், சாய்பாசாவில் நடந்த துயர சம்பவம் “என்று தலசீமியா ஆர்வலர் அதுல் கெரா குற்றம் சாட்டுகிறார்.
“ஜார்க்கண்ட் போன்ற ஒரு மாநிலத்தில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலசீமியா நோயாளிகள் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு சிகிச்சையளிக்க ஒட்டுமொத்த மாநிலத்திலும் ஒரே ஒரு ஹீமாட்டாலஜிஸ்ட் மட்டுமே உள்ளார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு