
மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சமீபத்தில் குப்பைகளை மேலாண்மை செய்வதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, பொது உள்ளாட்சி திடக்கழிவு மேலாண்மை வசதி (Common Municipal Solid Waste Management Facility, CMSWMF) எனப்படும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பான வரைவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னை கொடுங்கையூரில் திட்டமிடப்பட்டுள்ள எரிஉலை தங்கள் விருப்பத்தை மீறி வந்துவிடுமோ என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். அவர்கள் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கையே அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டுமெனக் கோருகின்றனர்.
வடசென்னை பகுதியில் ஒருவர் பயணித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென கடுமையான துர்நாற்றம் உங்கள் நாசியைத் தாக்கினால், நீங்கள் கொடுங்கையூரை நெருங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். இந்த துர்நாற்றம் உங்களைத் தாக்க, நீங்கள் அங்கிருக்கும் குப்பைக் கிடங்கிற்கு அருகில்கூட செல்ல வேண்டியதில்லை. சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு முன்பே அந்தத் துர்நாற்றம் உங்களைத் தாக்கும்.
சுமார் கால் நூற்றாண்டிற்கும் மேலாக இந்தக் குப்பைக் கிடங்கை தங்கள் பகுதியில் இருந்து அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரி வரும் நிலையில், இந்தக் குப்பைகளை எரித்து மின்சாரமாக்க சென்னை மாநகராட்சி வகுத்துள்ள திட்டத்திற்கு இந்தப் பகுதி மக்களிடம் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில்தான், இதுபோன்ற திட்டங்களுக்கு முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற வேண்டியதில்லை என்ற மத்திய அரசின் வரைவு அறிவிப்பு கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் ‘குப்பைகளில் மின்சார உற்பத்தி’ திட்டம்
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 6,150 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவிக்கிறது. சென்னை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இரண்டு குப்பை கொட்டும் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சென்னையின் மத்தியப் பகுதியிலும் தென் பகுதியிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் சுமார் 200 ஏக்கர் பரப்பளவுள்ள பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்திலும், வடபகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் 269 ஏக்கர் பரப்புள்ள கொடுங்கையூர் வளாகத்திலும் கொட்டப்படுகின்றன. இவ்விரண்டு இடங்களுமே சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
இந்த இரு வளாகங்களை ஒட்டியுமே குடியிருப்புகள் இருக்கின்றன. இருந்தாலும், பெருங்குடியுடன் ஒப்பிட்டால், கொடுங்கையூரில்தான் குப்பை வளாகத்திற்கு மிக அருகிலேயே குடியிருப்புகள் அமைந்துள்ளன.
இந்த இரு குப்பை வளாகங்களிலுமே குப்பைகள் மலை போலக் குவிந்திருந்த நிலையில், பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த 2021ஆம் ஆண்டு பயோமைனிங் திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போல கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிலும் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பயோமைனிங் நடைபெற்று வருகிறது. 2027ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்தத் திட்டம் முடிவுக்கு வரும்போது கொடுங்கையூர் குப்பைக் கிடங்கின் பெருமளவு நிலம் மீட்கப்பட்டு நகர்ப்புற காடுகள் உருவாக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், 2040ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையின் அளவு நாளுக்கு 11,793 மெட்ரிக் டன்னாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டது. அதாவது தற்போதைய அளவைப் போல் இரு மடங்கு.
இந்த நிலையில்தான், கொடுங்கையூரில் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் தினமும் 2,100 டன் குப்பைகளை எரிப்பதன் மூலம் 31 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

ஆனால், இதற்கு வடசென்னையைச் சேர்ந்த மக்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். கோலங்கள் மூலம் எதிர்ப்பு, மனிதச் சங்கிலி போராட்டம், மேயரை சந்தித்து மாற்றுத் திட்டங்களை யோசிக்க வேண்டுகோள் என அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் அவர்களுக்கு ஆதரவான இயக்கங்களும் செயல்படத் தொடங்கினர்.
இந்தத் திட்டம் அமலானால், வடசென்னை முழுவதும் ஒரு விஷ நகரமாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது என்கிறார் வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே. சண்முகம்.
“இந்தத் திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை அரசும் மாநகராட்சியும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 2,100 டன் கழிவுகளை கொடுங்கையூரில் போட்டு எரிப்போம் என்கிறார்கள். இதை யூகத்தின் அடிப்படையிலோ, கற்பனை அடிப்படையிலோ சொல்லவில்லை” என்றார்.
ஏற்கெனவே மணலியின் இதுபோன்ற எரிஉலையால் ஏற்பட்ட பிரச்னைகளையும் அவர் மேற்கோள் காட்டுகிறார். “மணலி அருகே சின்ன மாத்தூரில் 10 டன் குப்பையை எரிப்பதற்கான எரிஉலை அமைக்கப்பட்டது. நாங்கள் அங்கே சென்று பார்த்தோம். அந்த உலையில், குப்பைகளை எரிப்பதால் உருவான சாம்பலின் மாதிரியை எடுத்து ஐஐடி-யில் பரிசோதித்தோம். அதில் உலக சுகாதார நிறுவனம் வகுத்திருந்த வரையறைகளைப் பல மடங்கு தாண்டி கன உலோகங்களின் அளவுகள் இருந்தன.” என்றார். இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம், அந்த ஆலை மூடப்பட்டது.
“இப்போது கொடுங்கையூரில் எரிஉலை அமைக்கவிருக்கும் நிறுவனம் ஹைதராபாதில் ஓர் எரிஉலையை நடத்தி வருகிறது. வடசென்னை கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ஓர் அணியாக அந்த ஹைதராபாத் ஆலைக்குச் சென்றோம். அந்தத் தருணத்தில் ஹைதராபாதின் சிவில் சொசைட்டி அமைப்புகள் அந்த ஆலையால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாகக் கூறினார்கள்” என்றும் தெரிவித்தார்.

‘சமைத்த உணவை சாப்பிட முடியவில்லை’
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்கு வெகு அருகில் உள்ள எழில் நகரைச் சேர்ந்த மக்களைப் பொறுத்தவரை, ஏற்கெனவே குப்பைக் கிடங்கில் இருந்து எழும் துர்நாற்றத்தால் வாழ்க்கையே நரகமாகியுள்ள நிலையில், எரிஉலையும் இங்கேயே வர வேண்டுமா என அலறுகிறார்கள்.
“விடிந்தால் கதவைத் திறக்க முடியாது. திறந்தால் அந்த நாற்றத்தால் அடி வயிற்றில் இருந்து குமட்டிக்கொண்டு வாந்தி வரும். சிறு குழந்தைகளை வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. எந்தப் பருவநிலையும் எங்களுக்கு ஒத்து வருவதில்லை. இந்த நாற்றத்தையே எங்களால் சகிக்க முடியவில்லை.
இனி எரி உலையையும் வைத்தால் அந்த நாற்றத்தையும் புகையையும் சுவாசித்துக்கொண்டு எப்படி வாழ முடியும்? எழில் நகரை மொத்தமாகக் காலி செய்துகொண்டு எங்காவது செல்ல வேண்டியதுதான். அதனால், இந்த எரிஉலை இங்கே வரவே கூடாது,” என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த செல்வி.
குப்பைக் கிடங்கிலிருந்து குப்பை பொறுக்குவது நிறுத்தப்பட்ட பிறகும் துர்நாற்றம் தொடர்வதாகக் குறிக்கிறார் செல்வி.
“இந்த குப்பைக் கிடங்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு, சில குப்பை பொறுக்குவோர் குப்பைகளுக்குத் தீ வைத்து அதிலிருந்து உலோகங்களை எடுப்பதாகப் புகார் வந்தது. இந்தத் தீயிலிருந்து எழும் புகையால் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இது தொடர்பான புகார்களுக்குப் பிறகு, குப்பைக் கிடங்கிற்குள் குப்பை பொறுக்குவோர் யாரையும் அனுமதிப்பதில்லை. அதனால் தீ வைப்பு சம்பவங்கள் நின்று போயின. இது இந்தப் பகுதிவாசிகளுக்கு சற்று ஆசுவாசம் அளித்தது” என்றார் செல்வி.
ஆனால், பயோமைனிங் பணிகள் துவங்கிய பிறகு, பழைய குப்பைகள் ஜேசிபி போன்ற இயந்திரங்களால் அள்ளப்படும்போது மிகக் கடுமையான, தாங்க முடியாத துர்நாற்றம் அடிப்பதாகவும் தெரிவித்தார்.
“இயந்திரங்களால் கிளறும்போது கீழே இருக்கும் குப்பை மேலே வருகிறது. இதனால் சொல்ல முடியாத சித்திரவதையை, நரக வேதனையை அனுபவிக்கிறோம். சமைத்த உணவை சாப்பிட முடியவில்லை. பேரன் – பேத்திகள் வேறு எங்காவது சென்றுவிடலாம் என்கிறார்கள். ஆனால், 40, 50 ஆண்டுகளாக இங்கே இருக்கிறோம். இந்த நாற்றத்திற்குப் பயந்து எங்கே செல்ல முடியும்?” என்கிறார் செல்வி.

‘வாழ நல்ல இடமாக இருந்த கொடுங்கையூர்’
கடந்த 1980களின் மத்திய காலகட்டதிற்கு முன்பாக, கொடுங்கையூர் வாழ்வதற்கு நல்ல இடமாகவே இருந்தது. ‘மாடுகளுக்கும் சென்னை உயிரியல் பூங்காவில் இருந்த விலங்குகளுக்கும் புல் வளர்க்கும் பண்ணையாக இந்த இடம் இருந்தது’ என நினைவுகூர்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த என்.எஸ். ராமச்சந்திர ராவ். இவர் எவர் விஜிலன்ட் சிடிசன்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
“நாங்கள் இங்கே குடிவரும்போது குப்பை மேடே கிடையாது. புல் பண்ணைதான் இருந்தது. 1985க்குப் பிறகுதான் குப்பைகளைக் கொட்ட ஆரம்பித்தார்கள். நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோம். சென்னை நகரத்தின் மாஸ்டர் பிளானில், இந்தப் பகுதி ‘இன்ஸ்டிடியூஷன்களுக்கான’ பகுதி எனக் குறிப்பிட்டுள்ளது. அப்படிக் குறிப்பிடப்பட்ட இடத்தில் மருத்துவமனை, கல்லூரிகளைக் கட்ட வேண்டும் என்று சொன்னோம். ஆனால், குப்பைகளைக் கொட்டுவது தொடர்ந்தது” என்கிறார் என்.எஸ். ராமச்சந்திர ராவ்.
ஏற்கெனவே கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்குள் சிறிய அளவிலான ஓர் எரி உலை செயல்பட்டு வருகிறது. சென்னை நகரில் மாநகராட்சி நேரடியாகச் சேகரிக்கும் மெத்தை, கட்டில் போன்ற பெரிய பொருட்கள் அந்த எரிஉலையில் எரிக்கப்படுகின்றன.
“இதனால் அருகில் வசிப்பவர்கள் ஒரு துணியை வெளியில் காயப் போட முடியவில்லை. 60 வயதுக்கு மேலே இருக்கும் இருபாலருக்குமே சுவாசப் பிரச்னைகள், தோல் பிரச்னைகள் வருகின்றன. இந்தப் பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் சர்வே எடுத்தாலே, இங்கிருக்கும் நிலவரம் புரியும்” என்கிறார் எழில் நகரைச் சேர்ந்த சரவணன்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிரவைத்த வரைவு அறிக்கை
இந்த நிலையில்தான் மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வரைவு அறிக்கை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர வைத்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகமானது கடந்த அக்டோபர் மாதம், குப்பை எரிவுலைகள் உள்ளிட்ட ‘பொது உள்ளாட்சி திடக்கழிவு மேலாண்மை வசதி (Common Municipal Solid Waste Management Facility, CMSWMF) எனப்படும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பான வரைவு அறிவிப்புதான் அது.
அதன்படி திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களை அத்தியாவசிய சுற்றுச்சூழல் சேவைகளாகக் கருதி (EES) ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க இந்த வரைவு உத்தேசித்துள்ளது.
மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பில் குப்பை எரிஉலைகள் பற்றிய தனி குறிப்பில்லை. ஆனால் அத்தியாவசிய சுற்றுச்சூழல் சேவைகள் (Environmental Essential Services) என்பதில் குப்பை எரிஉலைகளும் அடங்கும் என மத்திய அரசால் முன்னரே வரையறுக்கப்பட்டு இருப்பதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதன் மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்பு, சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பீடு செய்வது போன்ற எந்தப் பணிகளும் இல்லாமல் உத்தேசிக்கப்பட்டுள்ள எரி உலை வந்துவிடுமோ என்ற அச்சம் கொடுங்கையூர் பகுதி மக்களுக்கு இருக்கிறது. ஆனால், அப்படிச் செய்தால் இதை நாங்கள் விடமாட்டோம் என்கிறார் என்.எஸ். ராமச்சந்திரராவ்.
“இதை எதிர்த்து நாங்கள் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு செல்லப் போகிறோம். மாஸ்டர் பிளான் 1, 2 ஆகிய இரண்டிலுமே இந்த இடத்தை ‘இன்ஸ்டிடியூஷன்’ என்று குறிப்பிட்டுவிட்டு, அதற்கு மாறாகச் செய்கிறார்கள். நாங்கள் ஏற்க மாட்டோம். இதை நகரத்திற்கு வெளியில் எடுத்துச் செல்லுங்கள். வெளியில் நிறைய நிலம் இருக்கிறது. அங்கே கொண்டு போய்ச் செய்யுங்கள். இங்கே வேண்டாம். இப்போது இது நகரின் மையப் பகுதியாகிவிட்டது” என்கிறார் என்.எஸ். ராமச்சந்திரராவ்.

இதற்கிடையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவிருக்கும் நிறுவனம் ஏற்கெனவே ஹைதராபாதில் செயல்படுத்தி வரும் எரிஉலையை சென்னை மாநாகராட்சியின் பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டு வந்துள்ளனர்.
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு அமைந்துள்ள வார்டுகளில் ஒன்றான 37வது வார்டின் கவுன்சிலரான காங்கிரசை சேர்ந்த தில்லி பாபுவும் இவர்களில் ஒருவர். இவரைப் பொறுத்தவரை, குப்பைகளை நிர்வகிக்க இதை ஒரு தீர்வாகக் கருதுகிறார்.
“தற்போது பயோமைனிங் நடந்து வருகிறது. இரண்டரை ஆண்டுகளில் அது முடிந்த பிறகு புதிதாக வரக்கூடிய குப்பைகளை என்ன செய்வது? இதை எதிர்கொள்ள வேண்டுமென்றால் சென்னை மாநகராட்சி கொண்டு வரும் எரி உலைத் திட்டம் வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஆனால், இந்த உலை சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே, ஐந்து கி.மீ. சுற்றளவுக்கு மக்கள் இல்லாத இடத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
இப்போது குப்பைக் கிடங்கிற்கு பின் பகுதியில்தான் இதற்கான இடத்தைத் தேர்வு செய்துள்ளார்கள். அந்தப் பகுதியிலும் மக்கள் வசிக்கிறார்கள். அதனால், ஆந்திரா – தமிழ்நாடு எல்லையில் இதை வைக்கலாம். போக்குவரத்திற்கு கொஞ்சம் செலவாகும். ஆனால், பல விஷயங்களுக்கு செலவு செய்யும் தமிழக அரசும் மாநகராட்சியும் கூடுதல் செலவே ஏற்கலாம்,” என்கிறார் தில்லி பாபு.

ஆனால், இதற்குப் பதிலாக வேறு மாற்றுத் திட்டங்களை யோசிக்க வேண்டும் என்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. குப்பை எரிக்கும் இயந்திரங்கள் இயல்பிலேயே நச்சுப் பொருட்களை வெளியிடக் கூடியவை என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ. சுந்தர்ராஜன்.
“குப்பையை மொத்தமாக எரிக்கும்போது, அதிலுள்ள பல்வேறு பொருட்கள் எரியும்போது, பல நச்சு வாயுக்கள் வெளியேறும். குப்பை எரிவுலைகள் உள்ள எல்லா நகரங்களிலுமே இந்த நச்சுத் தன்மை கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் அமையவுள்ள எரிவுலை, பல ஆயிரக்கணக்கான கார்கள் வெளியிடும் அளவுக்கான மாசுபாட்டை, கரிம வாயுவை உமிழும். இவ்வளவு சிக்கலை வைத்துக்கொண்டு இந்தக் குப்பை எரிவுலையை ஏன் அமைக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
சில மாற்று யோசனைகளையும் அவர் முன்வைத்தார். “இதற்கு மாற்றாக, குப்பை உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்துவிட வேண்டும். மக்கிப் போகக்கூடிய குப்பைகளை ஆங்காங்கே சிறிய குப்பைக் கிடங்குகளை வைத்து உரமாக மாற்ற வேண்டும்.
கிட்டத்தட்ட 60 சதவிகித குப்பைகள் மக்கிப் போகக்கூடியவைதான். மீதமுள்ள 40 சதவிகித குப்பைகளையும் பிரித்து, மறுசுழற்சிக்கான பொருட்களையும் பிரித்தெடுக்கலாம். மீதம் பத்து சதவிகித குப்பை எஞ்சலாம். அதற்கான ஏற்பாட்டைச் செய்யலாம். மாறாக, 100 சதவிகித குப்பையையும் எரிப்பது சரியானதல்ல” என்று விளக்கினார்.
இதற்கிடையில், குப்பை மேலாண்மைத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பான மத்திய அரசின் வரைவு அறிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் பல சுற்றுச்சூழல் அமைப்புகள் பிரசாரங்களைத் துவக்கியுள்ளன.

சென்னை மாநகராட்சியின் துணை மேயரான எம். மகேஷ் குமார் இந்த எரி உலைத் திட்டம் அத்தியாவசியமானது என்கிறார்.
“கொடுங்கையூரில் சுமார் 30 ஆண்டு காலம் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படாமல் இருந்தது. 250 ஏக்கர் நிலப்பரப்பு அது. அங்கே மழை பெய்து, மழை நீர் குப்பையின் உள்ளே இறங்குவதால் நிலத்தடி நீரும் மாசுபட்டு வருகிறது. இப்போது 25 ஏக்கரை பயோமைனிங்கில் மீட்டெடுத்து இருக்கிறோம். ஆனால், இப்போது புதிதாக பல லட்சம் டன் குப்பை சேர்ந்துள்ளது.
திரும்பவும் பயோ மைனிங் ஆரம்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தரமான தீர்வு தேவை எனும்போது இதைத் தவிர்க்க முடியாது. பொது மக்களின் பயம் நியாயமானதுதான். அதைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதற்காக திட்ட வல்லுநர்களோடு பேசி இறுதி முடிவுக்கு வருவோம். பொது மக்களின் கருத்துக் கேட்பில், அவர்களிடம் விளக்கமாகப் பேசுவோம்” என்கிறார் எம். மகேஷ் குமார்.
ஹைதராபாத் எரி உலையில் மாசு அதிகம் இருப்பதாக குடியிருப்போர் நலச் சங்கங்கள் குற்றம் சாட்டுவது குறித்து அவரிடம் கேட்டபோது, “சாம்பலில் பிரச்னைகள் இருக்கலாம். ஒரு நாள்தான் அங்கு சென்று போர்த்தோம். அதிலேயே எல்லாவற்றையும் கண்டுபிடித்ததாகச் சொல்ல முடியாது. இந்தத் திட்டத்திற்கு இன்னும் பல படிகள் இருக்கின்றன. அங்கு இருப்பதைவிட உயர்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு வரவிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு