-
- எழுதியவர், சையத் மோஜிஸ் இமாம்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
“நாங்கள் மசாலா அரைத்துக் கொண்டிருக்கும்போது, எனது மகன் தன் சகோதரியின் மடியில் அமர்ந்து கொண்டிருந்தான் . அப்போது இரண்டு ஓநாய்கள் வந்து அவனை இழுத்துச் சென்றன. நாங்கள் ஒருபுறம் பிடித்துக் கொண்டிருந்தோம், ஆனால் மற்றொரு ஓநாய் எங்கள் மீது பாய்ந்த போது என் மகன் எங்கள் கைகளிலிருந்து நழுவினான் ” என்று அனிதா விவரிக்கிறார்.
செப்டம்பர் 20 ஆம் தேதி காலை, தனது மூன்று வயது மகனை வீட்டின் முற்றத்தில் இருந்து ஓநாய் ஒன்று திடீரென இழுத்துச் சென்ற சம்பவத்தை அனிதா நடுங்கும் குரலில் விவரிக்கிறார்.
அன்றிலிருந்து குழந்தையை காணவில்லை. அனிதாவின் முழு குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளது.
லக்னோவிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தின் கைசர்கஞ்ச் தாலுகாவில் சில கிராமங்கள் தற்போது கடும் பயத்தில் வாழ்கின்றன. காரணம், இரவும் பகலும் தாக்கும் ஓநாய்கள்.
“ஓநாய் தான் இப்படி தாக்குகிறது. இது எங்கள் டிரோன் கேமராவில் பதிவாகியுள்ளது. கிராமவாசிகள் வீடியோவும் எடுத்துள்ளனர்” என்று பஹ்ரைச் துணை நிதி அதிகாரி ராம் சிங் யாதவ் பிபிசியிடம் தெரிவித்தார்.
செப்டம்பர் 23-ஆம் தேதி பிபிசி குழு அனிதாவின் வீட்டிற்கு வந்தபோது, அருகிலுள்ள பாபா பங்களா கிராமத்தில் (வெறும் 300 மீட்டர் தொலைவில்) திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் அலறிக் கொண்டிருந்தனர், பெண்கள் அழுது கொண்டிருந்தனர்.
இந்தப் பகுதியிலும் ஒரு ஓநாய் மதியம் 1 மணியளவில் தாயின் கைகளில் இருந்து மூன்று வயது குழந்தையைப் பறித்துச் சென்றுள்ளது.
உடனடியாக கிராம மக்கள் தைரியமாக ஓநாயை விரட்டியுள்ளனர்.
இதனால், ஓநாய் குழந்தையை விட்டுவிட்டு ஓடியுள்ளது.
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை, ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 24 அன்று, அருகிலுள்ள பாபா படாவ் கிராமத்தில் ஒரு சிறுமி தாக்கப்பட்டுள்ளார்.
இங்கும், கிராமவாசிகள் ஓநாயை விரட்டிச் சென்று சிறுமியை மீட்டுள்ளனர், ஆனால் பலத்த காயமடைந்த சிறுமி இறந்துவிட்டார்.
கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வரும் ஓநாய் தாக்குதல்கள் செப்டம்பர் 9-ஆம் தேதி பராக் பூர்வா கிராமத்தில் தொடங்கியது. ஒருநாள் இரவு 8 மணியளவில் தனது தாத்தா முன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மூன்று வயது சிறுமியை ஓநாய் இழுத்துச் சென்றது. மறுநாள் காலை அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது, அச்சிறுமியின் உடலில் பாதியைக் காணவில்லை.
இதுகுறித்துப் பேசிய பஹ்ரைச் மாவட்ட ஆட்சியர் அக்ஷய் திரிபாதி, “மூன்று குழந்தைகள் இறந்துவிட்டனர்” என்று கூறினார்.
அனிதாவின் குழந்தை இறந்ததாக நிர்வாகம் இன்னும் கருதவில்லை, ஏனென்றால் குழந்தையின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு, 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில், பஹ்ரைச்சில் இப்படியான சம்பவங்கள் நடந்தன. அப்போது, வனத்துறை 10 குழந்தைகள் இறந்துவிட்டனர் என உறுதிப்படுத்தியது.
ஆனால், இப்போது தாக்குதல் முறை முற்றிலும் மாறிவிட்டது.
கடந்த ஆண்டு, பெரும்பாலான தாக்குதல்கள் இரவில் நடந்தன. ஆனால் இப்போது அவை இரவும் பகலும் தொடர்ச்சியாக நடக்கின்றன. பகலில் தாக்குதல் நடப்பதைப் போலவே மற்றொரு புது முறையிலும் தாக்குதல் நடப்பதாக மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்தத் தாக்குதல்களை நேரில் பார்த்த கிராமவாசிகள் இரண்டு ஓநாய்கள் ஒன்றாக வருவதாகக் கூறுகிறார்கள்.
“அவை மிகவும் ஆரோக்கியமாகத் தெரிகின்றன,” என்று ஓநாயைத் துரத்திச் சென்ற சாலிக் ராம் கூறினார்.
கடந்த ஆண்டு, ஓநாய் தாக்குதல்களின் மையமாக மஹ்சி தாலுகா இருந்தது, ஆனால் இந்த முறை கைசர்கஞ்ச் தாலுகாவின் மஞ்ச்ரா தௌக்லி பகுதி மையமாக உள்ளது.
இந்த கிராமத்தில் சுமார் 45,000 மக்கள் வசிக்கின்றனர் என்று கூறும் கிராமத் தலைவர் தீப் நாராயண், இந்த முழுப் பகுதியும் இந்த ஆண்டு தாக்குதல்களின் மையமாக உள்ளது என்றும் இது காக்ரா நதிக்கு அருகில் அமைந்துள்ளது என்றும் விளக்குகிறார்.
மழைக்காலத்தில், நீர் அணையை அடைகிறது.
கிராமத்தில் கான்கிரீட் வீடுகள் குறைவாகவும், கூரை வீடுகள் அதிகமாகவும் உள்ளன. இப்பகுதி முழுவதும் கரும்பு பயிரிடப்படுகிறது, ஆங்காங்கு நெல் வயல்களும் கால்நடைகளும் உள்ளன.
“இதுவரை மூன்று குழந்தைகள் இறந்துள்ளனர், ஒருவரைக் காணவில்லை. ஏழு பேர் காயமடைந்துள்ளனர்” என்று பஹ்ரைச் டி.எஃப்.ஓ. ராம் சிங் யாதவ் தெரிவித்தார்.
தனது குழு உட்பட 32 குழுக்கள் மற்ற மூன்று டிஎஃப்ஓக்களின் வழிகாட்டுதலின் கீழ் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“இரண்டு ஆபரேட்டர்களால் இயக்கப்படும் நான்கு டிரோன் கேமராக்கள் உள்ளன. இவற்றில் ஓநாய் தென்பட்டது. இன்றும் கூட, எங்கள் ஊழியர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் ஒரு ஓநாய் இருப்பதைக் கண்டனர்” என்று அதிகாரி ராம் சிங் யாதவ் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஓநாய் நடமாட்டத்தை கண்டுபிடிக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்குப் பிறகும், கிராமத்தில் சிறு குழந்தைகள் சுற்றித் திரிவது சோகமான விஷயம். தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என்று அவர்களிடம் தொடர்ந்து கூறப்படுகிறது,” என்று கூறினார்.
பயத்தில் வாழும் கிராம மக்கள்
சுமார் 45,000 மக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் யாரும் பாதுகாப்பாக உணரவில்லை. இரவில் மாறிமாறி இந்தப் பகுதியைக் காவல் காத்த கிராமவாசிகள், இப்போது பகலில் கூட குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்ல முடியவில்லை எனக் கூறுகிறார்கள்.
இதனால் கிராம மக்கள் மிகவும் பயந்து போயுள்ளனர், நிரந்தர வீடுகள் இல்லாத பலர் தற்காலிகமாக உயரமான பலகைகள் அமைத்து தூங்குகிறார்கள். சிலர் மரங்களின் மேலும், சிலர் தள்ளுவண்டிகளிலும், வீட்டுக்குள் மூங்கில் கம்புகளைப் பயன்படுத்தியும் உயரமான மேடை போன்ற அமைப்புகளை உருவாக்கியுள்ளனர்.
“ஓநாய்கள் மீதான பயம் அதிகரித்துள்ளதால், நாங்கள் கம்புகளை வைத்து ஒரு மேடை கட்டியுள்ளோம். ஆனால் பகலில் அதன் மீது உட்கார முடியாது, அதனால் இரவில் அதன் மீது தூங்குகிறோம். முன்பு, ஓநாய் இரவில் எங்களைத் தாக்கும், எனவே பகலில் விவசாய வேலைகளை எளிதாகச் செய்ய முடிந்தது, ஆனால் இப்போது பகலில் வயல்களுக்குச் செல்லக் கூட எங்களுக்கு பயமாக உள்ளது” என்று ஜமீல் என்பவர் பிபிசியிடம் கூறினார்.
பாதிக்கப்படும் முதியவர்கள்
கிராமத்தில், குழந்தைகள் மட்டுமல்ல, முதியவர்களும் ஓநாய் தாக்குதல்களுக்கு இரையாகி வருகின்றனர். சமீபத்தில், ஒரே இரவில் ஐந்து பேர் ஓநாய்களால் தாக்கப்பட்டனர். அவர்கள் உயிர் பிழைத்தாலும், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 60 வயதுடைய சீதாபி, ஒரு ஓலைக் கூரையின் கீழ் தூங்கிக் கொண்டிருந்தார். இரவில் அங்கு வந்த ஒரு ஓநாய் அவரைத் தாக்கியது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அது என் காலைக் கடித்தபோது, அது ஒரு விலங்கு என்பதை உணர்ந்தேன். அது என்னை இழுத்துச் சென்றது, ஆனால் கொசு வலை இருந்ததால், நான் தரையில் விழுந்தேன். உடனே சத்தமாக கத்தினேன், அக்கம்பக்கத்தினரும் குடும்பத்தினரும் வந்தனர், ஓநாய் ஓடிவிட்டது”என்றார்.
அன்று இரவு சாந்தி தேவி என்ற பெண்ணும் தாக்கப்பட்டுள்ளார் . 80 வயதான சாந்தி தேவி தனது வீட்டின் வராண்டாவில் படுத்துக் கொண்டிருந்தார். அதிகாலை 1 மணியளவில் ஓநாய் அவரைத் தாக்கியுள்ளது.
“அவை என் தலையைப் பிடித்தன . நான் கத்தினேன், குடும்பத்தினர் இரும்புத் தட்டை வைத்து அடிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவை ஓடவில்லை. பின்னர் அதிகமானோர் கூடியபோது, அவை ஓடிவிட்டன. அங்கு இரண்டு ஓநாய்கள் இருந்தன. அவற்றின் கண்கள் கண்ணாடி போல பிரகாசித்தன”என்கிறார் சாந்தி தேவி.
பகலில் தாக்குதல்கள் நடக்கத் தொடங்கியதிலிருந்து தங்கள் கவலைகள் அதிகரித்துள்ளதாக கிராமவாசிகள் கூறுகின்றனர். குழந்தைகளும் முதியவர்களும் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தப் பகுதியில் வசிக்கும் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் விஜய் சிங் இதுகுறித்துக் கூறுகையில், “மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இவ்வளவு பெரிய சம்பவத்திற்குப் பிறகும், வனத்துறை டிரோன்கள் மற்றும் கூண்டுகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது”என்கிறார்.
தாக்குதல் முறைகளில் மாற்றம்
இரவில் அதிக ஆபத்து இருந்தாலும், இதுபோன்ற தாக்குதல்கள் பகலிலும் அதிகம் நிகழ்கின்றன, இதனால் அச்சம் அதிகரித்துள்ளது.
குழந்தைகள் மீது சிறப்பு கண்காணிப்பு உள்ளபோதிலும், ஓநாய்கள் தாக்குகின்றன.
ஓநாய்கள் பகலில் தாக்குவது குறித்து, டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டர் ஷஹீர் கான் கூறுகையில், “அறிவியல் ரீதியாக, பகலில் ஓநாய்கள் தாக்குவதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. இது பஹ்ரைச்சில் நடக்கிறது என்றால், அது புதிய மற்றும் தனித்துவமான சம்பவம். இது குறித்து விசாரிக்க வேண்டும்” என்றார்.
இந்த முறை ஓநாய் தாக்குதல்கள் வித்தியாசமாக நிகழ்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு, இதுபோன்ற சம்பவங்கள் இரவில் மட்டுமே நடந்தன, அதிலும் குறிப்பாக ஒரு ஓநாய் மட்டுமே தாக்குதலில் ஈடுபட்டது.
ஆனால் இந்த முறை, இரண்டு ஓநாய்கள் ஒரே நேரத்தில் தாக்குகின்றன, பகலில் கூட அவை சுறுசுறுப்பாக உள்ளன.
“மழைக்குப் பிறகு, ஓநாய்களின் குகைகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்க வேண்டும். அதனால்தான் அவை புதிய இடங்களையும் உணவையும் தேடிப் புறப்பட்டிருக்க வேண்டும்” என்கிறார் வனவிலங்கு நிபுணர் அபிஷேக்.
ஓநாய்களின் வாழ்க்கை முறைகள் மாறிவிட்டன என்பதை டிஎஃப்ஓ ராம் சிங் யாதவும் ஒப்புக்கொள்கிறார்.
“காலப்போக்கில் அவை தங்கள் வழிமுறைகளை மாற்றிக் கொள்கின்றன. இதனால்தான் அவற்றைப் பிடிப்பது கடினமாகி வருகிறது” என்று அவர் கூறுகிறார்.
வனத்துறை முன்னுள்ள சவால்களும், உத்திகளும்
ஓநாய்களின் அச்சுறுத்தல் காரணமாக நிர்வாகம் இப்பகுதியை கண்காணித்து வருவதாக பஹ்ரைச் கோட்ட வன அதிகாரி(DFO) ராம் சிங் யாதவ் குறிப்பிட்டார்.
“நாங்கள் டிரோன் கேமராக்கள் மூலம் அவற்றைக் கண்காணித்து வருகிறோம், கூண்டுகள் மற்றும் பொறிகள் நிறுவப்பட்டுள்ளன, ஆனால் இந்த பகுதியின் பரப்பளவு மிகப் பெரியது” என்கிறார் ராம் சிங் யாதவ்.
இதுகுறித்து முன்னாள் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் விஜய் சிங் கூறுகையில், “மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இவ்வளவு பெரிய சம்பவத்திற்குப் பிறகும், அரசாங்கம் டிரோன்கள் மற்றும் கூண்டுகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது. எங்களுக்கு உடனடி பாதுகாப்பு தேவை” என்றார்.
குழந்தைகள் தனியாக வெளியே செல்வதைத் தவிர்க்கவும், இரவில் குழுக்களாக இருக்கவும் மக்களை வனத்துறை வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களிடையே இந்த பயம் மிகவும் அதிகமாக இருப்பதால், பகலில் கூட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரத் தயங்குகிறார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு