• Sun. Aug 10th, 2025

24×7 Live News

Apdin News

குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மேடம்கள் – ரகசிய வீடியோவில் அம்பலப்படுத்திய புலனாய்வாளர்கள்

Byadmin

Aug 10, 2025


கென்யா, பெண்கள், சிறுமிகள், பாலியல் தொழில், பாலியல் வன்கொடுமை
படக்குறிப்பு, நியம்புரா (இடது) மற்றும் செப்டூ (வலது) மாய் மஹியுவில் குழந்தைகளை எவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள் என்பதை விசாரணையாளர்களிடம் தெரிவித்தனர்.

கென்யாவில் ‘மேடம்கள்’ என அழைக்கப்படும் பெண்கள், 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவது பிபிசி ஆப்ரிக்கா ஐ புலனாய்வில் அம்பலமாகியுள்ளது.

கென்யாவின் ரிஃப்ட் பள்ளத்தாக்கில் உள்ள மாய் மஹியு என்ற நகரில் இரவு, பகல் என எப்போதும் லாரிகள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். இங்கிருந்து உகாண்டா, ருவாண்டா, தெற்கு சூடான், காங்கோ ஜனநாயக குடியரசு உள்ளிட்ட நாடுகளுக்கு ஆட்கள் மற்றும் சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன.

தலைநகரில் நைரோபியில் இருந்து கிழக்கே 50 கி.மீ (31 மைல்) தொலைவில் உள்ள போக்குவரத்துக்கு மையம் பாலியல் தொழிலுக்கு பெயர் போனது. ஆனால் இது குழந்தைகள் பாலியல் ரீதியாக துண்புறத்தப்படும் இடமாகவும் உள்ளது.

‘மேடம்கள்’ பற்றி தெரிந்துகொள்ள 2 ரகசிய புலன் விசாரணையாளர்கள் பாலியல் தொழிலாளிகளைப் போல நாடகமாடி அங்கு பல மாதங்களை செலவிட்டு அந்த நகரில் நடக்கும் பாலியல் தொழிலை பற்றி விசாரித்தனர்.

இந்த ரகசிய விசாரணையில், ‘இது சட்டவிரோதமானது என எங்களுக்குத் தெரியும்’ எனக் கூறும் 2 பெண்கள் அந்த தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறுமிகளை இவர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

பிபிசி கடந்த மார்ச் மாதத்தில் கென்யா போலீசிடம் அனைத்து ஆதாரங்களையும் ஒப்படைத்தது. அதன்பின் மேடம்கள் தங்களின் இருப்பிடத்தை மாற்றியதாக பிபிசி நம்புகிறது.

நாங்கள் படம்பிடித்த பெண்கள் மற்றும் சிறுமிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் கூறுகின்றனர். இந்நாள் வரை யாரும் கைது செய்யப்படவில்லை.

கென்யாவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது மிகவும் அரிதானது. வழக்கை வெற்றிகரமாக தொடரவேண்டுமென்றால் போலீசாருக்கு சிறுமிகளிடம் இருந்து சாட்சிகள் தேவை. பாதிக்கப்பட்ட சிறுமிகள் சாட்சியம் சொல்ல அஞ்சுகின்றனர்.

இருள் சூழ்ந்த சாலையில் நின்றுகொண்டு தன்னை நியம்புரா என அறிமுகம் செய்துகொள்ளும் பெண் ஒருவர், “அவர்கள் இன்னும் குழந்தைகள்தான். இனிப்புகளை கொடுத்தே அவர்களை கவர்ந்துவிட முடியும்” என சிரித்துக் கொண்டே கூறுவது பிபிசி ஒளிப்பதிவில் பதிவாகியுள்ளது.

கென்யா, பெண்கள், சிறுமிகள், பாலியல் தொழில், பாலியல் வன்கொடுமை
படக்குறிப்பு, 50,000 மக்கள் தொகை கொண்ட இந்த நகரம் இரவில் உயிர் பெறுகிறது. பாலியல் தொழிலுக்கு அறியப்பட்ட ஒரு இடத்தில் அமைந்துள்ளது.

“மாய் மஹியுவில் பாலியல் தொழில்தான் அதிக பணம் ஈட்டும் ஒன்றாக உள்ளது. லாரி ஓட்டுநர்கள் இதற்கு தீனி போடுகின்றனர். இப்படிதான் நாங்கள் பயனடைகிறோம். மாய் மஹியுவில் இது இயல்பான ஒன்றாகிவிட்டது” எனக் கூறுகிறார் அவர்.

மேலும் தன்னிடம் 13 வயதுக்குட்பட்ட சிறுமி இருப்பதாகவும், அவர் 6 மாதங்களாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“சிறுமிகளை வைத்து தொழில் செய்வது மிகவும் கடினமான ஒன்று. அவர்களை வெளிப்படையாக வெளியே கொண்டுவர முடியாது. இரவு நேரத்தில் ரகசியமாக மட்டுமே வெளியே கொண்டுவருவேன்” என்கிறார் நியம்புரா.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் சம்மதத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவது, கென்ய தேசிய சட்டத்தின் கீழ் வெளிப்படையாக குற்றமாக கருதப்படுவதில்லை. ஆனால் பல நகராட்சிகளில் இது தடை செய்யப்பட்டுள்ளது. நகூரு கவுன்டியின் ஒரு பகுதியாக உள்ள மாய் மஹியுவில் இது தடை செய்யப்படவில்லை.

தண்டனைச் சட்டத்தின் கீழ், பாலியல் தொழிலில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் வாழ்வது சட்டவிரோதம் ஆகும். பாலியல் தொழிலாளியாகவோ, மூன்றாம் தரப்பாக செயல்பட்டு பாலியல் தொழிலை ஊக்குவித்து லாபம் ஈட்டுவதும் கூட இதில் அடங்கும்.

18 வயதுக்கு உட்பட்டவர்களை கடத்துவது அல்லது விற்பனை செய்வதற்கும் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் சிறை தண்டனை வரை விதிக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் ஆணுறை அணிவதுண்டா எனக் கேட்டதற்கு, ”பெரும்பாலும் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வேன். ஆனால் சில சமயங்களில் அது நடக்காது” என்கிறார் நியம்புரா.

“சில குழந்தைகள் அதிகம் சம்பாதிக்க விரும்புவார்கள் ( எனவே அவர்கள் பயன்படுத்துவதில்லை). சிலர் அவற்றை பயன்படுத்தாமல் இருக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்” என்றார்.

மற்றொரு முறை சந்தித்தபோது, விசாரணையாளர்களை அவர் ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள சோஃபாவில் 3 குழந்தைகளும், மற்றொருவர் நாற்காலியிலும் அமர்ந்திருந்தனர்.

விசாரணையாளர்கள் அந்த சிறுமிகளிடம் தனியாக பேச வேண்டும் என்பதற்காக நியம்புரா அந்த அறையை விட்டுச் சென்றுவிட்டார்.

தினமும் அவர்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து அவர்கள் விவரித்தனர்.

“சில சமயம் பல பேருடன் உடலுறவு கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாததை செய்யச் சொல்லி வாடிக்கையாளர் வற்புறுத்துவார்” என அங்கிருந்த ஒரு சிறுமி கூறினார்.

கென்யா, பெண்கள், சிறுமிகள், பாலியல் தொழில், பாலியல் வன்கொடுமை
படக்குறிப்பு, நகூரு கவுன்டியில் உள்ள மாய் மஹியு கென்யாவுக்கு மேற்கே உள்ள நாடுகளுக்குச் செல்லும் லாரிகள் கடந்து சொல்லும் ஒரு முக்கிய போக்குவரத்து மையம் ஆகும்.

கென்யாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுமிகளின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய தரவுகள் ஏதுமில்லை. 2012ஆம் ஆண்டு ‘கென்யாவில் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை 30,000 என மேற்கோள் காட்டியது.

இது கென்ய அரசு, தற்போது செயல்பாட்டில் இல்லாத அரசு சாரா அமைப்பான Eradicate Child Prostitution in Kenya என்கிற அமைப்பிடம் (NGO) இருந்து பெறப்பட்ட எண்ணிக்கை ஆகும்.

மற்ற ஆய்வுகள், குறிப்பாக சுற்றுலா தலங்களுக்கு பெயர்போன நாட்டின் கடற்கரையோரப் பகுதிகளில் கவனம் செலுத்தியுள்ளன. ‘நவீன அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய நிதியம்’ என்ற அமைப்பின் 2022ஆம் ஆண்டு அறிக்கை, கிளிஃபி மற்றும் குவாலே கவுண்டிளில் கிட்டத்தட்ட 2,500 குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளது.

இரண்டாவது புலன் விசாரணையாளர், செப்டூ என்ற மற்றொரு பெண்ணிடம் பழகி அவரின் நம்பிக்கையை பெற்றார். அவரைப் பலமுறை சந்தித்தார்.

சிறுமிகளை விற்பதால் அவர் சம்பாதிக்கவும், வசதியான இருக்கவும் முடியும் எனத் தெரிவிக்கிறார் அவர்

மேலும் அவர் “இதுபோன்ற தொழில் சட்டவிரோதமானது என்பதால், இதை பயங்கர ரகசியமாக செய்ய வேண்டும்” என்றார்.

செப்டூ அவரிடம் உள்ள 4 சிறுமிகளை சந்திப்பதற்காக, விசாரணையாளர்களை ஒரு கிளப்பிற்கு அழைத்துச் சென்றார். வயது குறைந்த பெண் தனக்கு 13 வயது என்றார். மற்றவர்கள் 15 வயது என்றனர்.

இதில் கிடைக்கும் வருமானம் பற்றி அவர் பேசினார். அந்த சிறுமிகள் பெறும் ஒவ்வொரு 3,000 கென்ய ஷில்லிங்கிற்கும் அவரின் பங்கு 2,500 ஷில்லிங் எனக் கூறினார்.

மற்றொரு முறை மாய் மஹியுவில் உள்ள வீட்டில் சந்தித்தபோது, விசாரணையாளரை 2 சிறுமிகளிடம் விட்டுச்சென்றார் செப்டூ.

அதில் ஒரு சிறுமி, ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆண்களுடன் உடலுறவு கொள்வதாகத் தெரிவித்தார்.

ஆணுறை இன்றி உடலுறவு கொள்ளமாட்டேன் எனக் கூறினால் என்ன நடக்கும் எனக் கேட்டதற்கு, இதை தேர்ந்தெடுக்கும் நிலையில் தான் இல்லை என்றார் அவர்.

“ஆணுறை இல்லாமல் தான் உடலுறவு கொள்ளவேண்டும் என கட்டாயப்படுத்துவார்கள். நான் ஒரு ஆதரவற்ற பெண் என்னால் எங்கும் செல்ல முடியாது” என்றார்.

கென்யா பாலியல் தொழில் கட்டமைப்பு என்பது ஆண், பெண் என இருபாலரும் இணைந்து குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் ஒரு சிக்கலான இருண்ட உலகமாகும்.

மாய் மஹியுவில் எத்தனை குழந்தைகள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் சுமார் 50,000 மக்கள் வசிக்கும் இந்த சிறிய நகரத்தில் அவர்களைக் கண்டுபிடிப்பது எளிதுதான்.

‘பேபி கேர்ள்’ எனப்படும் முன்னாள் பாலியல் தொழிலாளி, தற்போது பாலியல் தொழிலில் இருந்து தப்பி வருபவர்களுக்கு மாய் மஹியுவில் அடைக்கலம் கொடுத்து வருகிறார்.

61 வயதாகும் இவர், 40 ஆண்டுகளாக பாலியல் துறையில் வேலை பார்த்துள்ளார். தனது இருபதுகளின் ஆரம்பத்தில், கர்ப்பமாகவும் மூன்று சிறிய குழந்தைகளுடன் இருந்தபோது கணவரின் கொடுமை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி பாலியல் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார்

தனது வீட்டின் முன் உள்ள ஒரு பிரகாசமான பார்லரில் குழந்தைகளாக இருந்தபோது மாய் மஹியுவில் மேடம்களால் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட 4 இளம் பெண்களை பிபிசிக்கு அறிமுகப்படுத்தினார்.

ஒவ்வொரு சிறுமியும் வீட்டில் நடந்த துன்புறுத்தல் பற்றி ஒரே மாதிரியான கதையைதான் பகிர்ந்துகொண்டனர்.

அதில் இருந்து தப்பித்து மாய் மஹியுவிற்கு வந்து மீண்டும் அதைவிட கொடுமையான துன்பறுத்தலில் சிக்கிக்கொண்டனர்.

12 வயதில் ஹச்ஐவியால் தனது பெற்றோரை இழந்து, தெருக்களில் விரட்டி அடிக்கப்பட்ட தனது கதையை விவரித்தார் மிஷேல். அங்கு மிஷேல் சந்தித்த நபர் அவருக்கு வாழ ஒரு இடத்தைக் கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மிஷேலை ஒரு பெண் அணுகியுள்ளார். அவர்தான் மாய் மஹியுவின் ‘மேடம்’. அவரைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சிறுவயதிலேயே தனது பெற்றோரை இழந்த லிலயனுக்கு தற்போது 19 வயது. இவருக்கு ஒரு மாமா இருந்துள்ளார். இவர் குளிக்கும்போது அதை படம்பிடித்து நண்பர்களிடம் விற்றுள்ளார். இது பிற்காலத்தில் பாலியல் வன்கொடுமையாக மாறியது.

“அது எனது மோசமான நாள். எனக்கு அப்போது 12 வயது”

அங்கிருந்து தப்பியபோது மாய் மஹியுவிற்கு அழைத்துச் சென்ற லாரி ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இங்குதான் மிஷேலைப் போலவே இவரையும் ஒரு பெண் அணுகி கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளார்.

இந்த சிறுமிகளின் பெண்களின் வாழ்க்கை வன்முறை, புறக்கணிப்பு மற்றும் துன்புறுத்தலால் நிறைந்தவை.

இப்போது பேபி கேர்ள் உடன் தங்கி, புதிய திறன்களை கற்கின்றனர். 2 பேர் புகைப்பட ஸ்டூடியோவிலும், 2 பேர் அழகு நிலையத்திலும் வேலைப் பார்க்கின்றனர்.

பேபி கேர்ள், அவரின் சமூகத்தில் செய்துவரும் நலத்திட்ட பணிகளுக்கும் உதவியாக இருந்து வருகின்றனர்.

கென்யாவிலேயே நகூரு கவுன்டி பகுதியில்தான் அதிக எண்ணிக்கையில் ஹச்ஐவி தொற்று ஏற்படுகிறது. அமெரிக்க அமைப்பான USAID உடன் இணைந்து பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளவதன் விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் பேபி கேர்ள்.

நைவாஷா ஏரி அருகே உள்ள கராகிட்டா சமூக சுகாதார மையத்தில் தனக்கென அலுவலகம் வைத்துள்ளார். அங்கு ஆணுறைகளை வழங்கி அறிவுரை கூறி வருகிறார்.

எனினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் USAID நிதியை திரும்பப் பெற முடிவு செய்ததால், அவரது நலத்திட்டங்களும் நிறுத்தப்பட உள்ளன.

கென்யா, பெண்கள், சிறுமிகள், பாலியல் தொழில், பாலியல் வன்கொடுமை
படக்குறிப்பு, தனது நலத்திட்ட பணிகளின் ஒரு பகுதியாக பேபி கேர்ள் நகூரு கவுண்டியில் நைவாஷா ஏரிக்கு அருகே உள்ள தெருக்களில் ஆணுறைகளை விநியோகம் செய்கிறார்.

“செப்டம்பர் மாதம் முதல் நாங்கள் வேலையை இழக்கப்போகிறோம்” என பிபிசி உலக சேவையிடம் அவர் தெரிவித்தார். அவரை நம்பி வாழும் சிறுமிகள் மற்றும் பெண்களை நினைத்து பெரிதும் கவலைகொண்டார்.

“இந்த குழந்தைகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளனர் என பார்க்கிறீர்கள்தானே. இவர்கள் எப்படி தானாக வாழ முடியும்? இப்போதும் அவர்கள் மீண்டுகொண்டுதான் இருக்கின்றனர்” என்றார்.

நலத்திட்டங்களுக்கான நிதியை நிறுத்துவது தொடர்பாக கேட்டபோது அமெரிக்க அரசு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. USAID கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது.

தற்போது லிலியன், புகைப்படம் பற்றி கற்றுக்கொண்டு தனக்கு நடந்த துன்புறுத்தலில் இருந்து மீண்டு வருகிறார்.

“எனக்கு இனி எந்த பயமும் இல்லை. ஏனென்றால் என்னுடன் பேபி கேர்ள் இருக்கிறார்” என்றார். மேலும் “அவர் எங்களின் கடந்த காலத்தை மறக்க உதவுகிறார்” என்றும் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin