• Thu. Feb 26th, 2026

24×7 Live News

Apdin News

குழந்தைப் போராளி | தீபச்செல்வன் – Vanakkam London

Byadmin

Feb 26, 2026


ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக
ஒரு சிறுவன்
கற்களை ஆயுதமெனக் கொண்டு எறிந்தான்

பிரிட்டிஷ்காரர்களின் நெற்றியை கிழித்த
கற்கள் வீழும் இரவு
தாவீதின் கற்களது பொழுது போலானவை

வளர்ந்தவர்களைப் போல
குழந்தைகள் கைகட்டி வேடிக்கை பார்ப்பதில்லை
ஒடுக்குமுறையைச் சகிப்பதில்லை

வளர்ந்தவர்கள் முன்னே
ஆக்கிரமிப்பாளர்களுக்கு
எதிராக தடிகளை ஏந்திச் செல்லும்
தலைமைச் சிறுவனின் கண்களில்
சுதந்திரத் தாகம்
தீயென நெஞ்சில் விடுதலை வேட்கை

பாரதியின் கவிதைகளைப் பாடி
அவன் பாடம் கற்றபடி
பள்ளிக்கூடம் செல்ல மறுத்தான்

சிறுவர் போராளி ஆகிவிட்ட சிறுவர்களின்
இரவு என்பது
தந்தையரால் தண்டிக்கப்படுதல்களால் நீளுகையில்
அவன் பிரம்பின் முன் பணிந்து நின்றான்

அதெப்படி?
இராணுவத்திற்குக் கல்லெறியும் சிறுவன்
தந்தையின் பிரம்புக்குப் பணிந்தான்?
அவன் வயதால் சிறுவன் என்றபோதும்
அறிவால் ஒழுக்கத்தால் பெரியவனல்லவா?

வேப்பிலைகளை வீட்டுக்குக் கட்டி,
மாட்டுச்சாணத்தை ஈரமாக மெழுகி
குழந்தைகளின் அழுகுரல்களை எழுப்பி
இரகசிய மொழிகளால்
விடுதலைக்குப் போரிட்ட போராளியின் பதின்மம்
சித்திரவதைகளால் ஆனவை.

தேசத்தை ஒடுக்கும் பிரட்டிஷ்காரர்களும்
சமூகத்தை அடக்கும் ஜமீன்தார்களும்
அவனுக்கு ஒன்றுதான்
எறிந்தான் சமூக விடுதலைக்குமான கற்களை.

ஏழைகளுக்கு மறுக்கப்பட்டு
பதுக்கப்பட்ட அரிசியை மீட்டுப் பகிர்ந்து
சமூக நீதிக்காயும் களமாடி
தேசச் சுதந்திரத்திற்காயும்
கற்களை வீசிப் போராடிய
அந்தச் சிறுவன் நல்லக்கண்ணு,
இன்று
குழந்தைகள் முதற்கொண்டு
அனைவருக்குமான தோழர்
எளிய தலைவன்.

தீபச்செல்வன்,
ஈழம்.

(தோழர் நல்லக்கண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு வெளியான கவிதை நூலில் இடம்பெற்ற கவிதை..)

By admin