உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, தனது நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியாக, ஜனவரி 1 முதல் கருத்தடை சாதனங்களுக்கு 13% விற்பனை வரி விதித்துள்ளது. அதே வேளையில், குழந்தைப் பராமரிப்பு சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்ட வரி சீர்திருத்தத்தின்படி, 1994ஆம் ஆண்டு முதல் (சீனா ‘ஒற்றைக் குழந்தை’ கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்திய காலம்) நடைமுறையில் இருந்த பல வரி விலக்குகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
திருமணம் தொடர்பான சேவைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளுக்கு மதிப்புக்கூட்டு வரியிலிருந்து (VAT) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது, பெற்றோர் விடுப்பு காலத்தை நீட்டிப்பது மற்றும் ரொக்க உதவித் தொகைகள் வழங்குவது உள்ளிட்ட பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
அதிகரிக்கும் முதியோர் மக்கள் தொகை மற்றும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ள சீனா, அதிகமான இளைஞர்களை திருமணம் செய்து கொள்ளவும், தம்பதிகளை குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிக்க கடுமையாக முயன்று வருகிறது.
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சுருங்கி வருகிறது, 2024ஆம் ஆண்டில் வெறும் 9.54 மில்லியன் குழந்தைகளே பிறந்துள்ளன.
இது பத்து ஆண்டுகளுக்கு முன்பு பதிவான பிறப்புகளின் எண்ணிக்கையில் பாதி மட்டுமே. அப்போதுதான் மக்கள் எத்தனை குழந்தைகளைப் பெறலாம் என்ற விதிகளில் சீனா தளர்வுகளை அறிவிக்கத் தொடங்கியது.
கேலிக்கு உள்ளாகும் நடவடிக்கை
எனினும், ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருவிகள் உள்ளிட்ட கருத்தடைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வரி, தேவையற்ற கர்ப்பங்கள் மற்றும் எச்ஐவி பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த நடவடிக்கை கேலிகளைச் சந்தித்து வருகிறது.
தங்களை குழந்தைகளைப் பெற வைக்க விலையுயர்ந்த ஆணுறைகளைவிட இன்னும் அதிகமான மாற்றங்கள் தேவைப்படும் என்று சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
விலை உயர்வுக்கு முன்னதாகவே பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளுமாறு ஒரு சில்லறை விற்பனையாளர் நுகர்வோரை வலியுறுத்திய நிலையில், சமூக ஊடக பயனர் ஒருவர், “நான் இப்போதே வாழ்நாள் முழுமைக்கும் தேவையான ஆணுறைகளை வாங்கி விடுவேன்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
ஒரு ஆணுறையின் விலைக்கும், ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான செலவுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்களால் சொல்ல முடியும் என்று மற்றொருவர் பதிவிட்டார்.
செலவு மிகுந்த நாடு
பெய்ஜிங்கில் உள்ள யுவா (YuWa) மக்கள் தொகை ஆராய்ச்சி நிறுவனத்தின் 2024ஆம் ஆண்டு அறிக்கைப்படி, குழந்தையை வளர்ப்பதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளில் ஒன்றாக சீனா உள்ளது.
கல்வி ரீதியாக அதிக போட்டி நிலவும் சூழலில் பள்ளிக் கட்டணங்கள் அதிகமாக இருப்பதாகவும் வேலைக்கும் சென்று குழந்தைகளையும் பராமரிக்கும் சவாலை பெண்கள் எதிர்கொள்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
பொருளாதார மந்தநிலைக்கு ரியல் எஸ்டேட் நெருக்கடியும் ஒரு காரணமாக அமைந்துள்ள நிலையில், இது மக்களின் சேமிப்பைப் பாதித்துள்ளது. பொருளாதார மந்தநிலை குடும்பங்களை, குறிப்பாக இளைஞர்களை அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்று, நம்பிக்கை குறைவாக உணர வைத்துள்ளது.
“எனக்கு ஒரு குழந்தை உள்ளது, எனக்கு இனிமேல் வேண்டாம்,” என்று கிழக்கு மாகாணமான ஹெனானில் வசிக்கும் 36 வயதான டேனியல் லுவோ கூறுகிறார்.
”இது மெட்ரோ கட்டணம் உயர்வதைப் போலத்தான். ஒரு யுவான் அல்லது இரண்டு யுவான் உயர்ந்தாலும், மெட்ரோவில் பயணம் செய்பவர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். மெட்ரோவில் தொடர்ந்து பயணிப்பீர்கள்தானே?”
இந்த விலை உயர்வு குறித்து தமக்கு கவலை இல்லை என்றும் அவர் தெரிவிக்கிறார். “ஒரு பெட்டி ஆணுறைக்கு கூடுதலாக ஐந்து யுவான், அதிகபட்சம் 10 அல்லது 20 யுவான் கூடுதலாக இருக்கலாம். ஓர் ஆண்டுக்கு கணக்கிட்டால் அது சில நூறு யுவான்கள்தான். முழுமையாகச் சமாளிக்கக்கூடிய செலவே,” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, குழந்தைப் பராமரிப்பு சேவைகளுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மற்றவர்களுக்கு இந்த விலை உயர்வு ஒரு பிரச்னையாக இருக்கலாம், அதுதான் மத்திய சீனாவின் ஷியான் நகரில் வசிக்கும் ரோஸி ஜாவோவை கவலையடையச் செய்கிறது.
அவசியமான ஒன்றான கருத்தடை சாதனங்களின் விலையை உயர்த்துவது, மாணவர்கள் அல்லது நிதி நெருக்கடியில் இருப்பவர்கள் “ஆபத்தை எதிர்கொள்ளும்” நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று அவர் கூறுகிறார்.
மேலும், இதுவே இந்தக் கொள்கையின் “மிகவும் ஆபத்தான விளைவாக” இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த வரி சீர்திருத்தத்தின் நோக்கம் குறித்து ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
ஆணுறைகள் மீதான வரி உயர்வு , பிறப்பு விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் “மிகையாக யோசிப்பதாகும்” என்று விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மக்கள் தொகையியல் நிபுணர் யி ஃபுக்சியன் கூறுகிறார்.
ரியல் எஸ்டேட் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் தேசிய கடனை சீனா எதிர்கொண்டு வரும் நிலையில், “முடிந்த வகையில் எல்லாம்” வரிகளை வசூலிக்க சீனா ஆர்வமாக உள்ளதாகக் கருதுகிறார் அவர்.
ஆணுறைகளுக்கு வரி விதிக்கும் நடவடிக்கை “அடையாளபூர்வமானது” மற்றும் சீனாவின் “மிகவும் குறைந்த” கருவுறுதல் எண்ணிக்கையை உயர்த்த, மக்களை ஊக்குவிக்கும் சீனாவின் முயற்சிகளை இது பிரதிபலிக்கிறது என்று உத்தி சார் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தைச் சேர்ந்த ஹென்றிட் லெவின் கூறினார்.
மேலும், இந்த முயற்சிகளை தடுமாறச் செய்வது என்னவென்றால், பல கொள்கைகள் மற்றும் மானியங்கள் கடன் சுமையில் உள்ள மாகாண அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருப்பதாகவும், அதற்குத் தேவையான போதுமான நிதியை அவர்களால் ஒதுக்க முடியுமா என்பது தெளிவில்லாமல் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மக்களை வற்புறுத்தும் சீனாவின் அணுகுமுறை, ஆழமான தனிப்பட்ட விருப்பத்தில் அரசாங்கம் “அதிகமாகத் தலையிடுவதாக” மக்கள் உணர்ந்தால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
சமீபகாலமாக சில மாகாணங்களில் உள்ள பெண்களிடம், அவர்களின் மாதவிடாய் சுழற்சி மற்றும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் குறித்து உள்ளூர் அதிகாரிகள் தொலைபேசியில் அழைத்துக் கேட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
கர்ப்பிணி தாய்மார்களைக் கண்டறிய இத்தகைய தரவுகள் தேவைப்படுவதாக யுனான் மாகாணத்தின் உள்ளூர் சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இந்தப் பிரச்னை சீனாவில் மட்டுமே இல்லை
சீனாவுக்கு மட்டும் உரித்தானவை அல்லாத, இந்தப் பரந்த மாற்றங்களின் பின்னணியில் உள்ள சமூக மாற்றங்களை, அந்நாட்டின் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் தலைமைத்துவத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று ஆய்வாளர்களும் பெண்களும் கூறுகின்றனர்.
மேற்கத்திய நாடுகளும், தென்கொரியா, ஜப்பான் போன்ற பிராந்திய நாடுகளும்கூட, தங்கள் மக்கள் தொகை வயதாகி வருவதால் பிறப்பு விகிதத்தை உயர்த்தப் போராடி வருகின்றன.
குழந்தை வளர்ப்புச் சுமை சமமற்ற முறையில் பெண்கள் மீது விழுவது இதற்கான காரணத்தின் ஒரு பகுதி என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
ஆனால் திருமணங்கள் மற்றும் டேட்டிங் மீதான ஈடுபாடு குறைதல் போன்ற பிற மாற்றங்களும் இதில் பங்கு வகிக்கின்றன.
இன்றைய இளைஞர்கள் ஒருவருடன் ஒருவர் பழகும் முறை உண்மையான மனித உறவுகளை அதிகமாகத் தவிர்க்கும் வகையில் மாறி வருவதே உண்மையான சிக்கல் என்றும், சீனா எடுத்து வரும் நடவடிக்கைகள் உண்மையான பிரச்னையைத் தவறவிடுவதாகவும் ஹெனானில் வசிக்கும் லுவோ கூறுகிறார்.
சீனாவில் பாலியல் பொம்மைகளின் விற்பனை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டும் அவர், “மற்றொரு நபருடன் பழகுவது ஒரு சுமையாக மாறிவிட்டதால்”, “மக்கள் தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள்” என்பதற்கான அறிகுறி இது என்று அவர் கருதுகிறார்.
“அழுத்தம் உண்மையானது” என்பதால், இணையத்தில் இருப்பது எளிதாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்களைவிட இன்றைய இளைஞர்கள் சமூகத்தில் இருந்து அதிக அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். நிச்சயமாக, அவர்கள் பொருளாதார ரீதியாக வசதியாக உள்ளனர், ஆனால் அவர்கள் மீது வைக்கப்படும் எதிர்பார்ப்புகள் மிக அதிகம். அனைவரும் மிகவும் சோர்வடைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.