- எழுதியவர், ஜரியா கோர்வெட்
- பதவி, பிபிசி ஃப்யூச்சர்
-
மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குவாம் தீவில், அதற்கு அருகிலுள்ள தீவுகளுடன் ஒப்பிடும்போது 40 மடங்கு அதிக சிலந்திகள் உள்ளன. மேலும் இந்தப் பகுதிக்குப் பரிச்சயமில்லாத, எப்போதும் அதிகப் பசியுடனே இருக்கக்கூடிய பாம்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இங்கு காடுகளில் வசித்த அத்தனை பறவைகளும் அந்தப் பாம்புகளுக்கு இரையாகிவிட்டன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பிலிப்பைன்ஸில் இருந்து 2,492 கி.மீ (1,548 மைல்கள்) தொலைவில், மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாம் தீவில் ஹால்ட்ரே ரோஜர்ஸ் ஒரு விருந்து நிகழ்வில் கலந்து கொண்டார். ஆனால், அந்த விருந்துக்கு வந்த அழையா விருந்தாளியால் அந்நிகழ்வு தடைப்பட்டது.
அது மாலை நேரம், ஒரு பன்றி தீயில் வாட்டப்பட்டு, பன்றி இறைச்சி தயாராகிக் கொண்டிருந்தது. அனைவரும் சிறிது நேரம் அரட்டை அடிக்கச் சென்றனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, ஒரு பழுப்பு நிற உயிரினம் பன்றியைச் சுற்றியிருந்தது. அந்த உயிரினம் பன்றியின் சதையைத் துண்டுகளாகக் கிழித்து, அவற்றை அப்படியே விழுங்கிக் கொண்டிருந்தது.
“அது ஒன்றும் 400-பவுண்டு (181 கிலோ) எடைகொண்ட மிகப்பெரிய பன்றி இல்லை, ஆனால் ஒரு பெரிய விருந்துக்குப் போதுமானதுதான்,” என ரோஜர்ஸ் கூறுகிறார். இவர் அமெரிக்காவின் வர்ஜீனியா டெக்கில் உள்ள மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் இணைப் பேராசிரியராக உள்ளார். கடந்த 22 ஆண்டுகளாக குவாம் தீவின் சூழலியல் குறித்தும் படித்து வருகிறார்.
குவாம் தீவுக்கு 1940களில் வந்த பாம்புகள்
அன்று அனுமதியின்றி விருந்துக்கு வந்த அந்த உயிரினம், ஒரு பழுப்பு மரப் பாம்பு. இந்த உயிரினம் குவாம் தீவைச் சேர்ந்தது இல்லை. 1940களில் ஏதேனும் கவனக்குறைவால் குவாமுக்கு இந்த உயிரினம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது (ஒருவேளை ஒரு சரக்கு கப்பலில் பதுங்கியிருந்த நேரத்தில், தற்செயலாகக் கடலில் பயணிக்கும் சூழல் ஏற்பட்டு, இந்தத் தீவில் நுழைந்திருக்கலாம்).
சுண்ணாம்புக் கனிமம் நிறைந்த குவாம் தீவின் காடுகளில், இந்த மரப் பாம்புகள் வருவதற்கு முன்பு, இந்தத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஏராளமான பறவைகள் வாழ்ந்தன.
ஆனால், இந்தப் பாம்பு அறிமுகமான 40 ஆண்டுகளுக்குள், அந்தத் தீவின் காடுகளில் வாழ்ந்த ஒவ்வொரு பறவையையும் வேட்டையாடப்பட்டன. 12 பறவை இனங்களில், தற்போது 10 அழிந்துவிட்டன. மீதமுள்ள இரண்டு பறவை இனங்கள், பாம்புகள் அணுக முடியாத குகைகள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழ்கின்றன.
இப்போது இத்தீவின் பறவை இனங்கள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு விட்டதால், குவாம் தீவில் உள்ள சுமார் இருபது லட்சம் பாம்புகள் (உண்மையான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது) எலிகள், மூஞ்சூறுகள், பல்லிகள் அல்லது மனிதர்கள் தூக்கியெறியும் உணவுகள் என அவற்றின் கண்ணில் படும் அனைத்தையும் உண்கின்றன.
“அதாவது, அவை எதையும் சாப்பிடும். அவ்வளவு ஏன், அவை ஒன்றையொன்றே கூடச் சாப்பிடும்” என்கிறார் ஹென்றி பொல்லாக். இவர், கொலராடோவில் உள்ள ஒரு லாப நோக்கற்ற அமைப்பான ‘தெற்கு சமவெளி நில அறக்கட்டளையின் (Southern Plains Land Trust)’ நிர்வாக இயக்குநராக உள்ளார். அவர் குவாமின் சுற்றுச்சூழலை முன்பு ஆய்வு செய்தவர்.
வேகமாக அதிகரித்து வரும் பாம்புகளின் எண்ணிக்கை, ஒரு காலத்தில் காடுகள் முழுவதும் நிறைந்திருந்து, இப்போது மறைந்துபோன பறவைகளின் ஒலிகள், அழைப்புகள் என இந்த பூமியின் மோசமான சூழலியல் அமைப்பு என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது குவாம் தீவு.
ஆனால், பறவைகள் இல்லா காடுகளைக் கொண்ட தீவு என்பதைத் தாண்டி, இந்தப் பாம்புகளின் எண்ணிக்கை பெருகுவது வேறொரு விளைவையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேறோர் உயிரினமும் பயனடைகிறது. அது எட்டு கால்கள், நிறைய கண்கள் கொண்ட சிலந்திகள்.
சிலந்திகளும் சிலந்தி வலைகளும்
சிலந்திகள் நிறைந்திருக்கும் தீவில் பணியாற்ற வேண்டிய ரோஜர்ஸ், தான் சிலந்திகளுக்கு அச்சப்படுவதில்லை என்கிறார்.
பெரும்பாலான மரியானா தீவுகளில், மழைக்காலத்தில் குறைந்தளவு சிலந்திகளே இருக்கும், வறண்ட காலத்தில் அவை அதிகரிக்கும்.
ஆனால், குவாம் தீவில் அப்படியில்லை. இத்தீவின் சுண்ணாம்புக் காடுகளில், ஆண்டு முழுவதும் பல மைல்களுக்கு நீளும் சிலந்தி வலைகளையும், அதை உருவாக்கிய சிலந்திகளையும் காணலாம்.
பிரமாண்டமான, மஞ்சள் நிற வயிற்றைக் கொண்ட வாழை சிலந்திகள் உள்ளன. அதன் வலைப்பின்னல் தங்க நிறத்தில் மின்னுவதை நீங்கள் காண முடியும்.
வேட்டையாடும் சிலந்திகள் பலவும் மனிதனின் கை அளவுக்குப் பெரியதாக இருக்கும். கூடார-வலை அமைப்பை உருவாக்கும் சிலந்திகள், மரங்களின் இடைவெளியைத் தங்களின் பரந்த பட்டுக் கூடாரத்தால் மூடிக்கொள்கின்றன.
ரோஜர்ஸ் பிந்தைய வகையை “காண்டோ” வலை (condo) என்று அழைக்கிறார். ஏனென்றால், அவை ஒவ்வொன்றும் எட்டு கால்கள் கொண்ட உயிரினங்களுக்கான பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளை ஒத்திருக்கும். மேலும், அவை பல்லாயிரக்கணக்கான சிலந்திகளின் ஒளிரும் கண்களைக் கொண்டுள்ளன.
“இந்தப் பெரிய வலையில் வெவ்வேறு அடுக்குகளில் பல பெண் சிலந்திகளும், சுற்றியுள்ள விளிம்புகளில் பல ஆண் சிலந்திகளும் இருக்கும்” என்கிறார் ரோஜர்ஸ்.
“இந்த வலைகள் சிறிய ஆர்கிரோட்ஸ் (Argyrodes) சிலந்திகளுக்கு மிகவும் பிடித்தமானவை, அவை இரையைத் திருடவும், எப்போதாவது உண்ணவும் செய்கின்றன. குவாமில் இந்த (காண்டோ) வலைகள் தரை மட்டத்தில் இருந்து, மர உச்சி வரை செல்லும். இந்தச் சிலந்தி வலைகள் அனைத்து இடங்களிலும் பரவியுள்ளன,” என்று அவர் கூறுகிறார்.
சவால்களை எதிர்கொள்ளும் ஆய்வாளர்கள்
பல நேரங்களில், முழு காடும் ஹாலோவீன் பண்டிகைக்காக செயற்கையான சிலந்தி வலையால் மூடப்பட்டு இருப்பதைப் போலக் காட்சியளிக்கும்.
“நீங்கள் நடந்து செல்லும்ம்போது, உங்களுக்கு முன்பாக இருப்பவர் ஒரு குச்சியை எடுத்து சிலந்தி வலைகளை ஒதுக்கிவிடுவது வழக்கம். இல்லையெனில் நீங்கள் சிலந்தி வலைகளால் மூடப்பட்டுவிடுவீர்கள். அது எனக்குப் பிடிக்கும் என்றாலும், அதிலிருந்து மீள்வது கடினம்” என ரோஜர்ஸ் கூறுகிறார்.
மரங்களில் எங்கு இடைவெளி இருந்தாலும், அந்த இடம் முழுவதும் நூற்றுக்கணக்கான வெவ்வேறு சிலந்திகளின் வலைகள் நிரம்பியிருக்கும். அவை அனைத்தும் வெவ்வேறு கோணங்களில் ஒளியைப் பிடிக்கும். இவற்றின் கூட்டு முயற்சியால், அளவில் ஒரு பெரிய அறையின் இடத்தைக்கூட எளிதாக ஆக்கிரமிக்க முடியும்.
“என்னுடைய நண்பர் ஒருவர் ஓடிச்சென்று இச்சிலந்தி வலையின் நடுவே வட்டமாகச் சுழன்று, ஒரு மம்மியை போல் தன்னை மாற்றிக் கொண்டார். தன்னுடன் இருந்தவர்களைப் பயமுறுத்துவதற்காக அவர் அவ்வாறு செய்தார்” என்று ரோஜர்ஸ் கூறுகிறார்.
பூர்வீக சாமோரோ மொழியில் ‘சன்ய யே’ (sånye’ye’) என்று அழைக்கப்படும் இந்தச் சிலந்திகள் இல்லாவிட்டாலும்கூட, குவாமின் சுண்ணாம்புக் காடுகள் வேறு எங்கும் இல்லாத ஒரு விசித்திரமான, விரும்பத்தகாத இடமாகவே இருக்கும்.
மேலே, உயர்ந்து நிற்கும் ரொட்டிப்பழ மரங்கள், ஜுராசிக் வடிவமான சைக்காட்களுடன் கலந்து, ஆமணக்கு மற்றும் ஸ்பைக்கி பாண்டனஸ் மரங்களுடன் சேர்ந்து, குறைந்த உயரம் கொண்ட காட்டை உருவாக்குகின்றன. இது சூறாவளியால் அடிக்கடி சிதைந்துபோகும்.
தரைப் பகுதியில், மிகக் குறைந்த அளவே மண் உள்ளது. எனவே அதற்குப் பதிலாக, தாவரங்கள் சுண்ணாம்புப் பரப்பிலிருந்து நேரடியாக வளர்ந்து, பாறையில் உள்ள சிறிய பிளவுகளுக்குள் ஊடுருவ அவற்றின் வேர்களைக் கட்டாயப்படுத்துகின்றன.
இந்தக் காடு ஒரு பழங்கால பவளப்பாறையின் மேல் உள்ளது. பல கோடி ஆண்டுகளாக இயற்கையாய் தள்ளப்பட்டு ஒரு பீடபூமியாய் உருவாகியுள்ளது. பவள முகடுகள் இன்னும் காட்டின் தரைப் பகுதி வரை பரவியுள்ளன, மேலும் பாறைகள் சிதைந்த இடங்களில் துளைகள் மற்றும் குகைகள் காணப்படுகின்றன.
“இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தக் காட்டுப் பகுதியில் நடப்பது மிகவும் கடினம். கூர்மையான பாறைகளில் நடப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். அத்தகைய அனுபவம்தான் இங்கு இருக்கும்” என்று ரோஜர்ஸ் கூறுகிறார்.
“புதிய தொழில்நுட்ப வல்லுநர்களைக் கள ஆய்வுக்கு அங்கு அழைத்துச் செல்லும்போது, அவர்கள் இந்தப் பாறை நிலத்தில் நடக்கப் பழகுவதற்கு அதிக நேரம் தேவை. ஒவ்வோர் அடியையும் எடுத்து வைத்து கவனமாக நடக்கக்கூடிய திறனை அடைந்தால்தான் இதில் நடக்க முடியும்” என்று அவர் கூறுகிறார்.
ரோஜர்ஸ் 2012இல் சிலந்திகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்ய முடிவு செய்தபோதே, இது சவாலாக இருக்கும் என்பது அவருக்குத் தெரியும்.
“குவாம் தீவு எப்போதுமே சிலந்திகளால் நிரம்பியிருக்கும் என்று வதந்திகள் இருந்து வந்தன. அவற்றைச் சாப்பிட பறவைகள் இல்லாததற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம். இருப்பினும், தீவின் மக்கள்தொகையில் சுமார் 1,80,000 பேர் மற்ற வடக்கு மரியானா தீவுகளுக்குச் செல்வது அரிதாகவே உள்ளது” என்று ரோஜர்ஸ் விளக்குகிறார்.
அந்த மக்கள் அனைவரும் சுயாட்சி கொண்ட பொதுநல நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், குவாம் தீவு அமெரிக்க பிரதேசமாகவே உள்ளது. எனவே, இவற்றை ஒப்பிடுவதற்குச் சிறிய வாய்ப்பு மட்டுமே உள்ளது. விஞ்ஞானிகளும் இதுவரை அதைச் சரிபார்க்கவில்லை.
எத்தனை வகையான சிலந்திகள் குவாமில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைத் துல்லியமாகக் கண்டறிய, ரோஜர்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் தீவிலுள்ள காடுகளில் ஆய்வு செய்யத் தொடங்கினர்.
ஆராய்ச்சியாளர்கள், கடுமையான பவளப்பாறைகளைக் கடந்து செல்லும்போது, நேர்த்தியாகக் கோடுகளை வரைய ஒரு ஃபைபர் ரோலை விரிப்பார்கள். அவர்கள் செல்லும் வழியில், அந்தக் கோட்டுக்கு ஒரு மீட்டர் அருகிலுள்ள சிலந்தி வலைகளை கவனமாக எண்ணுவார்கள். அவை கோட்டின் அருகே ஒரு மீட்டருக்குள் விழுந்தால், அதில் இன்னும் வேறு ஏதாவது பற்களுடன் கூடிய உயிரினம் இருக்கலாம் என்பதால் அதையும் கவனமாக ஆராய்ந்தனர்.
தனித்துவமான சிலந்திகளின் தொகையை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஈரமான பருவத்தில், அருகிலுள்ள ரோட்டா, டினியன் மற்றும் சைபன் தீவுகளில் இருந்ததைவிட 40 மடங்கு அதிகமான சிலந்திகள் குவாமின் காடுகளில் இருந்தன. வறண்ட காலங்களில், சிலந்திகளின் எண்ணிக்கை 2.3 மடங்கு அதிகமாக இருக்கும். குவாமில் வாழை சிலந்திகளின் வலைகளும் சுமார் 50% பெரிதாக இருந்தன.
சவாலான சுற்றுச்சூழல்
ஆண்டு முழுவதும், குவாமின் காடுகள் வலைகளால் பளபளக்கின்றன. ஈரமான மற்றும் வறண்ட பருவங்களில் முறையே ஒரு மீட்டருக்கு 1.8 மற்றும் 2.6 வலைகளை ஆய்வுக்குழு கண்டறிந்தது.
குவாமின் முழு காட்டுப் பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டால், மொத்தமாக 508 முதல் 733 மில்லியன் சிலந்திகள் வரை இருக்கும். சிலந்திகள் அவற்றின் வலைகளில் சுற்றித் திரிந்து, அவ்வலைகளில் சிக்கிய உயிரினங்களிடம் இருந்து அவற்றுக்குத் தேவையான சாறுகளை உறிஞ்சும்.
ஒரு வலைக்கு ஒரு சிலந்தி என்று இது கணக்கிடப்படுகிறது, ஆனால் அதற்கு மேலும் அவை அதிகமாக உள்ளன. தரையில் இருந்து இரண்டு மீட்டருக்குள் வாழும் சிலந்திகள் மட்டுமே கணக்கிடப்படுகின்றன.
இந்தக் காடு, 406 கோடியே 40 லட்சம் சிலந்திகளின் கண்கள் மற்றும் அதற்குச் சமமான எண்ணிக்கையிலான ரோமங்கள், மற்றும் சிலந்திகளின் கால்களைக் கொண்டுள்ளது.
ரோட்டா, டினியன் மற்றும் சைபன் ஆகிய தீவுகளில் பழுப்பு மரப் பாம்புகள் இல்லை. அதனால் அங்கு இன்னும் ஆரோக்கியமான பறவைகளின் எண்ணிக்கை இருக்கிறது.
எனவே, குவாமின் சிலந்திகளின் எண்ணிக்கை ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் இருந்திருக்கலாம். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் பறவைகள் இல்லாததால் அவை பெருகியுள்ளன என்று ஆய்வு தெரிவிக்கிறது.
பறவைகள் எட்டு கால்களுள்ள உயிரினங்களைச் சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டிருப்பதும், பறவைகள் பூச்சிகளை வேட்டையாடுவதில் சிலந்திகளுடன் போட்டியிடுவதும் இதற்குக் காரணமாக உள்ளது. மேலும், இது பஹாமாஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுடன் பொருந்துகிறது.
அந்த ஆய்வு பல்லிகள் இல்லாத சில தீவுகளில், சிலந்திகள் 10 மடங்கு அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. பழுப்பு மரப் பாம்பின் வருகையில் இருந்து, குவாமில் வாழை சிலந்திகள் மிகவும் வசதியாகப் பெருகிவிட்டன. அவை தங்கள் வலைகளில் “ஸ்டெபிலிமென்டா” (stebilimenta – சிலந்திகளில் காணப்படும் அலங்காரப் பட்டு அமைப்புகள்) சேர்ப்பதைக்கூட நிறுத்திவிட்டன.
சிலந்திகள் இந்த மர்மமான அலங்காரங்களை ஏன் சேர்க்கின்றன என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஒளி புகாதவாறு வெள்ளை நூல்களால் நெய்யப்பட்ட இந்த ஜிக்-ஜாக் வடிவங்கள் அலங்காரங்கள், பறவைகளிடம் வலையின் இருப்பைப் பற்றி எச்சரிக்கின்றன. அவை தற்செயலாக வலைகளின் மீது பறப்பதைத் தடுக்கின்றன. இத்தகைய அலங்கார வடிவங்களை பறவைகளின் எண்ணிக்கை குறைந்த பிறகு சிலந்திகள் பயன்படுத்தாமல் இருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
பிடிவாதமான ஆக்கிரமிப்பாளர்கள்
பழுப்பு மரப் பாம்புகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து குவாமின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலை மாறியதாகக் கருதப்பட்டடாலும்கூட, 40 ஆண்டுகளாக பாம்புகள் பெரும்பாலும் கண்டறியப்படவில்லை.
கடந்த 1980களின் பிற்பகுதியில், தீவின் பறவைகளை ஏதோ ஒன்று அழிப்பதாக சூழலியலாளர்கள் கவனித்தனர். ஆனால், யாருக்கும் அது என்னவென்று தெரியவில்லை.
அந்த நேரத்தில் முனைவர் பட்ட மாணவியாக இருந்த ஜூலி சாவிட்ஜ், இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க முடிவு செய்தார். அது பூச்சிக்கொல்லி அல்லது வைரஸாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அவரது ஆராய்ச்சி 1987இல் வெளியிடப்பட்டது. அந்த ஆய்வு, குவாம் தீவில் பறவைகளை அழிப்பது பாம்புகள் என்று வெளிப்படுத்தியது.
குவாம் தீவில் வாழும் பெரும்பாலான பறவைகளுக்கு எந்தப் பரிணாம வளர்ச்சியும் இல்லை. அத்தீவில் இயற்கையாக பாம்புகள் இருக்கவில்லை. எனவே, அங்கு வாழ்ந்த பறவை இனங்களுக்கு அதன் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி என்று தெரியவில்லை.
இதன் விளைவாக, வேட்டையாடிகளாக அந்தப் பாம்புகள் காட்டுக்குள் வந்தபோது, உண்பதற்கு ஏதுவாகப் பல பறவைகளைக் கண்டன. அவை விரைவில் உணவாக மாறின.
சாவிட்ஜ் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடித்த நேரத்தில், பெரும்பாலான பறவை இனங்கள் அழியத் தொடங்கியிருந்தன. ஈக்களைப் பிடித்துத் தின்னும் ஈபிடிப்பான் (Flycatcher) வகையைச் சேர்ந்த பறவைதான் கடைசியாக 1984இல் குவாம் தீவின் காடுகளில் காணப்பட்ட பறவை. பரந்த கண்களும் சிறிய சிறகுகளும் கொண்ட ஈபிடிப்பான் இப்போது குவாம் தீவில் அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கம் வரை , லூரிட் ஜிஞ்சர் மற்றும் ஒளிரும் பச்சை குவாம் மீன்கொத்தி வகைப் பறவைகள் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டன.
ஒன்பது லூரிட் ஜிஞ்சர் மற்றும் ஒளிரும் பச்சை குவாம் மீன்கொத்திகள் அவற்றின் சொந்த இருப்பிடத்தில் இருந்து சுமார் 5,879 கிமீ (3,653 மைல்) தொலைவில் உள்ள பால்மிரா அடோல் பகுதியில் தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குவாம் ரயில் என்றும், உள்நாட்டில் கோகோ என்றும் அழைக்கப்படும் பறக்க முடியாத பறவை, ஒரு காலத்தில் காடுகளில் அழிந்துவிட்டதாகப் பட்டியலிடப்பட்டது. இன்று அவை சிவப்பு-பழுப்பு நிற உடல்களில் வேட்டை நாய் போலத் தோற்றம் தரும் வயிறுகளுடன் ரோட்டா மற்றும் கோகோஸ் தீவுகளைச் சுற்றி வருவதைக் காணலாம்.
ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், பழுப்பு மரப் பாம்புகளால் எந்தளவுக்குச் சூழலியல் குழப்பம் ஏற்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறியத் தொடங்கியுள்ளனர். ஒல்லியான அப்பாம்புகள், இரவில் குவாம் காடுகள் மற்றும் புறநகர்ப் பகுதிகள் வழியாகச் சத்தமில்லாமல் நகர்கின்றன.
தற்காலிகமாகத் தங்கள் அடுத்த உணவின் வாசனையைக் கண்டறிய நாக்கினால் காற்றைச் சுவைக்கின்றன. ஆனால், அம்முயற்சிகள் வீணாகின்றன. பழுப்பு மரப் பாம்புகள் சாதாரண வேட்டையினம் அல்ல. அவை உண்ண விரும்பும் உணவு வகையில் சில வரம்புகள் உள்ளன.
அவை தமது சொந்த உடல் எடையில் 70% வரை இருக்கும் உயிரினங்களைத் தவறாமல் உண்ணும். இது 60 கிலோ எடை கொண்ட ஒரு மனிதன் ஒரு சிறிய சிவப்பு கங்காருவை ஒரே நேரத்தில் சாப்பிடுவதற்கு சமம்.
சமீபத்தில், ரோஜர்ஸ் தலைமையில் ஒரு விஞ்ஞானிகள் குழு, ஆண்டர்சன் விமானப் படைத் தளத்திற்கு அருகிலுள்ள கடும் சூழலில் உயிர் வாழும் சாலி பறவைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்கள் இளம் பறவைகளுக்கு ரேடியோ மானிட்டர்களை இணைத்து, அவற்றின் தன்மையைக் கண்காணித்தனர். அவ்வப்போது கறுப்பு மரப் பாம்புகளின் குடல்களுக்குள் அக்கருவி கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமின்றி பதற்றம் தரும் சில கண்டுபிடிப்புகளும் இருந்தன. உண்ணப்படாமலே இறந்த பறவைகளும் அதில் இருந்தன.
ஆச்சர்யம் அளிக்கும் விதமாக, பல குஞ்சுகள் பாம்புகளால் கொல்லப்படுகின்றன. அவற்றின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவை பாம்புகளின் வெள்ளி நிற எச்சிலால் மூடப்பட்டிருந்தன.
இதை அறிவியலாளர்கள் “ஸ்லைமிங்” எனப் பொதுவாகக் குறிப்பிட்டனர். அதாவது, பாம்புகள் சில நேரங்களில் தங்களால் விழுங்க முடியாத அளவுக்குப் பெரிய அளவுள்ள பறவைகளைக் கொன்றுள்ளன.
ஆனால், பழுப்பு மரப் பாம்புகள் வெறுமனே பேராசை கொண்டவை அல்ல. அவை மிகவும் திறமையானவைதான். தங்களால் அணுக முடியாத இடங்களில்கூட அவற்றால் இரையைக் கண்டுபிடிக்க முடியும்.
மீதமுள்ள சாலி பறவைகளை பழுப்பு மரப் பாம்புகளிடம் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க, பாதுகாவலர்கள் கூண்டுப் பெட்டிகளை அளித்து, அவற்றை உலோகத் தடைகள் மூலம் பலப்படுத்துகின்றனர்.
மூன்று அடி (0.9 மீ) நீளம் மற்றும் சுமார் 15 செமி (6 அங்குலம்) அகலம் கொண்ட, சரியாக ஏற முடியாதது எனக் கருதப்பட்ட வழுக்கும் உலோகத் தடைகளை அமைத்தனர். ஆனால், அந்தப் பாம்புகளின் திறமையைப் பற்றி அறிவியலாளர்கள் அறிந்திருக்கவில்லை.
கடந்த 2021ஆம் ஆண்டில், அமெரிக்காவின் கொலராடோ மாகாணப் பல்கலைக்கழகத்தில் மீன், காட்டுயிர் மற்றும் உயிரியல் பாதுகாப்புத் துறையின் பேராசிரியரான சாவிட்ஜ் தலைமையிலான ஓர் ஆராய்ச்சிக் குழு, அறிவியலுக்கு முற்றிலும் புதிய முறையான “லாசோ க்ளைம்பிங்” குறித்துக் கண்டறிந்தது.
“பழுப்பு மரப் பாம்புகள் உண்மையில் ஓர் உருளைத் தடுப்பைச் சுற்றிக் கொண்டு, தலையைச் சுற்றி வாலைக் கட்டிக்கொண்டு, தென்னை மரத்தில் ஏறும் மனிதனைப் போலப் பயணிக்கும் தன்மை கொண்டது” என்று மிகவும் ஆச்சரியமூட்டும் இந்த ஆராய்ச்சி குறித்து விவரிக்கிறார் பொல்லாக்.
மாற்ற முடியாதது
கடந்த சில பத்தாண்டுகளில், பாதுகாவலர்களும் காட்டுயிர் பாதுகாப்பு அதிகாரிகளும் குவாமில் இருந்து பழுப்பு மரப் பாம்பை அகற்றும் முயற்சியில் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தினர்.
அந்தப் பாம்புகளை வெறும் கண்ணால் தேடுதல், எரிச்சலூட்டும் பொருட்கள், பொறிகள், விஷத்தன்மை கொண்ட கொடிய ரசாயனங்களைப் பயன்படுத்துதல் போன்ற பல முயற்சிகளைச் செய்து பார்த்தனர்.
பிற காட்டுயிர்களைப் பாதிக்காமல் அந்தப் பாம்புகளை அதிக எண்ணிக்கையில் அழிக்க, பழுப்பு மரப் பாம்புகளுக்கு எதிராக உயிரியல் ஆயுதங்களாகப் பயன்படுத்தக்கூடிய வைரஸ்களை கூட ஆய்வாளர்கள் தேடினர்.
இந்த முறை, முயல்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பயன்படும் மைக்ஸோமாட்டோசிஸ் (myxomatosis) முறையைப் பின்பற்றினர். பிரான்சிலும், ஆஸ்திரேலியாவிலும் இம்முறை பயன்பாட்டில் உள்ளது. இதன் நோக்கம், முயல்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக இருந்தது. ஆனால், இது பரவலாக வேறு வகையான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாம்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்படும் நிதியானது 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால், தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும், ஒரு சில சிறிய நிலப்பரப்புகளைத் தவிர, அதிக எண்ணிக்கையில் பாம்புகளை அகற்றுவது சாத்தியமற்றது என நிரூபணமாகியுள்ளது.
குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படை தளத்தில் உள்ள வாழ்விட மேலாண்மைப் பிரிவின்படி, பரவலாகக் கிடைக்கும் அசெடமினோபென் (பாராசிடமால்), மரப் பாம்புகளுக்கு மிகவும் ஆபத்தானது. 80 மில்லிகிராம் அளவு மருந்து கொடுத்தால், மிகப் பெரிய பாம்புகள்கூட மடிந்து விடுகின்றன (மனிதர்களுக்கான 500 மில்லி கிராம் மாத்திரை ஒன்றில் காணப்படும் அளவில் ஆறில் ஒரு பங்கு).
விஷம் கலந்த உணவைக் கொண்டு அவற்றைத் தூண்டும் ஒரு விரிவான திட்டத்திற்குப் பிறகு அவை மீண்டும் குடியேறாதவாறு பாம்புகளைத் தடுக்க வேலி அமைத்த முறை, அவற்றின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்தது.
குவாமின் காடுகளில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான பழுப்பு மரப் பாம்புகளை அகற்றுவது சாத்தியமற்றது என்று பல விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஆனால், காடுகள் ஆபத்தில் இருப்பதால், இதைச் செய்ய அவசரமான சூழலும் இருக்கிறது.
குவாமின் பூர்வீக மரங்களில் ஏறத்தாழ 70% பறவைகள் தங்கள் விதைகளைப் பரவச் செய்ய நம்பியிருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், இன்று பல மரங்களில் இருந்து நேரடியாகத் தரையில் விழும் பழங்கள் அவை விழுந்த இடத்தில் அழுகிவிடும்.
சில விதைகள் முளைக்காது, மற்றவை தங்கள் தாய் மரத்தின் நிழலில் வளரப் போராடுகின்றன என்கிறார் ரோஜர்ஸ். தீவின் பழங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளை உண்ணும் பறவைகள் ஒவ்வோர் ஆண்டும் வராததால், அப்பறவைகளை நம்பியிருந்த மர இனங்கள் அழிந்து வருகின்றன.
காடுகளும் சிதையத் தொடங்கியுள்ளன. ஓர் ஆரோக்கியமான சூழலியல் அமைப்பில், ஒரு மரம் விழும்போது அதுவொரு தற்காலிக இடைவெளியை உருவாக்குகிறது. மேலும், இது உடனடியாக கடுமையான போட்டியின் தளமாக மாறும், ஏனெனில் வெவ்வேறு தாவரங்கள் அந்த இடத்தை நிரப்பத் துடிக்கின்றன.
“நியூயார்க் நகரின் நடுவில் உள்ள ஒரு கட்டடத்தை நீங்கள் அகற்றினால், அது ஒரு முதன்மையான ரியல் எஸ்டேடுக்கான இடமாக மாறும். அங்கு ஒரு கட்டடத்தை அமைக்க நிறைய பேர் விரும்புவார்கள்” என்று ரோஜர்ஸ் கூறுகிறார்.
ஆனால், குவாம் தீவில் இது நடக்காது. விதைகளைப் பரப்புவதற்குப் பறவைகள் இல்லாமல், பெரும்பாலும் தரையில் தானாக முளைக்கும் விதைகள் எதுவும் இல்லாததால் விதைகள் முளைப்பது மிகவும் தாமதமாக உள்ளது. காடுகளின் அமைப்பு மாறுகிறது, விரைவில் பழைய நிலைக்கு அது திரும்புவதற்கு எளிதான வழி இல்லாமல் போகலாம்.
இப்போதைக்கு குவாமின் பழுப்பு மரப் பாம்புகளும், அவர்கள் உருவாக்கிய சிலந்திப் படையும் பாதுகாப்பாக உள்ளன. அவற்றின் ஆட்சி இன்னும் சில காலம் நீடிக்கலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.