தீவின் முதல் பெண் அரசியும்
வனர் தலைவியுமான
அவளோ…
அரசை ஏமாற்றிக் காவுகொண்ட
விஜயரைப் பழித்தாள்!
இணையிலா…
பதியைத் துறந்தாள்…
விழிகளில் தீ சுமந்த
அவளது மரவுரி ஆடையில்
தீப் புகை எழுந்தது…!
அவளோ…
ஒரு கண்ணீர்த் துளியை
அதிலே பெய்தவாறே கதறினாள்…!
அதுவோ…
வானை முட்டியிடித்து
சூரியனைக் கழற்றி
கீழே கொண்டு வந்தது!
மானகந்தானீர் ஊற்றில்
தனது கூந்தலை விரித்தாள்…
அதுவோ நீண்டு
வடக்கிருத்தலானது…!
நொந்து நொந்து
நொந்தவாறே
தொலையத் தொடங்கினாள்…!
நீரோர் பெருவளையமாய்ச்
சுழன்று மேலெழுமாறு
தன் கூந்தலைக்
கோபத்துடன் இழுத்தாள்…
கையெட்டிய அதனையோ
இறுக இழுத்து
பிசைந்து நீட்டி…
வாரிச் சுருட்டி…
நான்காய்ப் பிய்த்தாள்…!
மேகம் இடித்து முழங்கியது!
வானத்துக் கற்களோ
கீழே விழுந்தன!
பாறைகள் நொருங்கின!
கை தாங்கிய
கூந்தல் துண்டுகளை
நான்கு திசைகளிலுமே வீசினாள்…!
உடனே…
கடல் வரண்டது!
பின்னர் ஊறிப்
பெருவயிறு கொண்டது!
‘அறமில்லா அரசுக்கு
கூந்தலே பரிசு’
என்று கூவினாள்…
தீ பரந்தது…
நீர் படர்ந்தது…
வளி அலைந்தது…
வெளி உலைந்தது…
நிலம் இருண்டது…
தீவே அவளின்
அவலக் கூவலாய்…
கூவியது…!
கூவிக்கொண்டே இருக்கிறது…!
லஹரி
The post குவேனி | லஹரி appeared first on Vanakkam London.