படக்குறிப்பு, அப்டேட் செய்த பிறகான ஸ்மார்ட்போன் திரை
உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் கால் திரையில் சமீபத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருந்தால், உங்களுக்கு மட்டும் அது நிகழவில்லை. பல்வேறு பயனர்களுக்கு இது நிகழ்ந்துள்ளது, அதில் சிலர் தங்களின் போன் ஹேக் செய்யப்பட்டுவிட்டதா என்றும் அச்சப்பட்டனர்.
ஆனால் உண்மை அதுவல்ல. இந்த மாற்றங்கள் கூகுளாலே கொண்டுவரப்பட்டுள்ளது. அந்நிறுவனம் புதிய ‘மெட்டிரியல் 3 எக்ஸ்பிரஸிவ்’ டிசைனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் அதன் செயலிகளின் தோற்றம் மாறியுள்ளது.
இதனால் காலிங் திரையும் மாறியுள்ளது. அதன் இன்டர்ஃபேஸ் தற்போது முன்பைவிட வேறாக உள்ளது.
தற்போது இந்த புதிய அப்டேட் உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அல்லது அதைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறதென்றால் பழைய திரைக்கு மாற முடியுமா, இந்த மாற்றம் ஏன் நடந்தது, கூகுள் வழங்கியுள்ள புதிய அப்டேட்கள் என்பது போன்ற பல கேள்விகள் மக்கள் மனதில் உள்ளது.
இந்த மாற்றம் ஏன்?
பட மூலாதாரம், Google
படக்குறிப்பு, சில பயனர்கள் தங்கள் போன் ஹேக் செய்யப்பட்டதாக அச்சப்பட்டனர்.
இந்த ஆண்டு மே மாதம், ‘மெட்டிரியல் 3 எக்ஸ்பிரஸிவ்’ என்கிற புதிய அப்டேட்டை வெளியிடப் போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. சமீப வருடங்களில் அந்நிறுவனத்தால் மிகப்பெரிய அப்டேட்டாக இது இருக்கும் எனப் பேசப்பட்டது.
இந்த அப்டேட் போனின் மென்பொருள் மற்றும் டிஸ்ப்ளேவை பயன்படுத்த எளிமையாகவும், வேகமாகவும் ஆக்கும் என கூகுள் தெரிவித்திருந்தது.
புதிய டிஸ்ப்ளே செட்டிங்ஸில் நோட்டிஃபிகேஷன், கலர் தீம், போட்டோஸ், ஜீமெயில் மற்றும் வாட்ச் என பல விஷயங்கள் மாற்றப்படுவதாக கூகுள் கூறியிருந்தது.
ஒரே பட்டனில் பழைய காலிங் திரைக்கு மாறிவிட முடியுமா?
ஒரே பட்டனில் பழைய செட்டிங்ஸிற்கு மாறுவதற்கான வழி இல்லை. புதிய டிசைன், ஆக்சஸிபிலிட்டி மற்றும் ஃபெர்பார்மன்ஸை மேம்படுத்துவதில் கூகுள் கவனம் செலுத்தி வருகிறது.
இதற்கான சில தீர்வுகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
பழைய டயலரை மொபைலில் எங்கு தேர்வு செய்ய முடியும்?
படக்குறிப்பு, மொபைலில் செட்டிங்ஸை தேர்வு செய்து ஆப்ஸை தேர்வு செய்யுங்கள்
படக்குறிப்பு, இப்போது ஃபோன் ஆப்-ஐ தேர்வு செய்யுங்கள்
படக்குறிப்பு, திரையில் வலது பக்கத்தின் உச்சியில் உள்ள மூன்று புள்ளிகளை சொடுக்கவும், அதில் ‘அன்இன்ஸ்டால் அப்டேட்ஸை’ தேர்வு செய்ய வேண்டும்.
படக்குறிப்பு, இந்த செயலியை ஃபேக்டரி வெர்ஷனுக்கு மாற்ற வேண்டுமா என்பதில் ஓகேவை தேர்வு செய்ய வேண்டும்.
அதாவது, இந்த செயலியை நீக்கிவிட்டு பழைய ஃபேக்டரி வெர்ஷனுக்கு செல்ல வேண்டுமா எனக் கேட்கும். ஒகே என்பதை தேர்வு செய்தவுடன் புதிய அப்டேட் நீக்கப்பட்டு, ஸ்மார்ட்போனின் இயங்குதளம் (Operating System) பழைய வெர்ஷனுக்கு சென்றுவிடும்.
இவை போக நீங்கள் வேறு சில வழிகளிலும் உங்களால் மாற்ற முடியும்
மொபைலின் டிஃபால்ட் செயலி பட்டியலில் உள்ள மொபைல் செயலி மாறியிருப்பதால் தான் காலிங் திரை அடிக்கடி மாறுகிறது.
செட்டிங்கிஸ் – ஆப்ஸ் – டிஃபால்ட் ஆப்ஸ் – போன் ஆப் (Settings-Apps – Default Apps – Phone App) என்கிற செட்டிங்ஸில் சென்று உங்கள் விருப்பப்பட்ட போன் செயலியை தேர்வு செய்யலாம் என கூகுள் ஆண்ட்ராய்ட் உதவி கையேடு கூறுகிறது.
இவ்வாறு செய்வதன் மூலம் காலிங் திரை நாம் டிஃபால்ட் செயலியாக வைத்ததைப் போல இருக்கும்.
நீங்கள் போன் பை கூகுளை (Phone by Google) பயன்படுத்த விரும்பினால் அதனை செட் பை டீஃபால்ட் (set by default) என தேர்வு செய்ய வேண்டும். இதனை பின்னர் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் எந்த செயலியை வேண்டுமானாலும் டிஃபால்ட் டயலராக தேர்வு செய்யலாம், அதன் மூலம் அழைப்புகள் தொடர்பான எல்லா வேலைகளையும் செய்து கொள்ளலாம். இதனால் தான் வெவ்வேறு போன்களில் காலிங் திரைகள் வெவ்வேறாக தெரிகின்றன.
ஸ்டேபிள் சேனலுக்கு திரும்புவது
இந்த புதிய மாற்றங்கள் பெரும்பாலும் முதல் பீட்டா பில்டில் தான் வருகின்றன. உங்கள் சாதனம் பிக்சலுக்கான ஆண்ட்ராய்ட் பீட்டாவில் பதிவு செய்யப்பட்டிருந்தால் ஓடிஏ பீட்டா அப்டேட்கள் (OTA Beta update) தொடர்ந்து கிடைக்கும் என கூகுள் டெவலப்பர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேபிள் ரிலீஸ் வருகிறபோது, நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பீட்டாவிலிருந்து வெளியேறினால் உங்களால் எதிர்கால பீட்டா அப்டேட்களை நிறுத்த முடியும். உங்கள் போன் பீட்டாவில் இருந்தால் ஸ்டேபிள் சேனலுக்கு திரும்புவது இந்த இன்டர்ஃபேஸ் மாற்றங்களை தாமதமாக்கும், உங்களால் உடனடியாக புதிய டிசைனை பார்க்க முடியாது.
அப்டேட்களை கையாள்வது
உங்களால் ஆட்டோ அப்டேட் செட்டிங்ஸை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும் என கூகுள் ப்ளே ஹெல்ப் கூறுகிறது.
இந்த வழிகளில் கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது:
கூகுள் ப்ளே – புரொஃபைல் ஐகான் – செட்டிங்ஸ் – நெட்வொர்க் ப்ரிஃபரன்சஸ் – ஆட்டோ அப்டேட் ஆப்ஸ்
(Google Play – Profile Icon – Settings – Network preference – Auto update Apps)
“டோண்ட் ஆட்டோ அப்டேட் ஆப்ஸ்” (Don’t Auto update apps)என்பதை தேர்வு செய்வது செயலிகள் தானாக அப்டேட் ஆவதை தடுக்கும்.
நீங்கள் ஒவ்வொரு செயலியின் பக்கத்திற்கும் தனியாகச் சென்று “எனேபில் ஆட்டோ அப்டேட்ஸ்” (Enable auto update)என்பதை ஆன் அல்லது ஆஃப் என்பதை வலது பக்கத்தின் உச்சியில் இருக்கின்ற மெனுவில் தேர்வு செய்யலாம்.
பாதுகாப்பிற்கு அப்டேட்கள் மிகவும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே ஆட்டோ அப்டேட்களை நிறுத்தி வைத்தால் அவ்வப்போது தனிப்பட்ட முறையில் அப்டேட்கள் சரிபார்க்க வேண்டும்.
பழைய வெர்ஷனை நான் பதிவிறக்கம் செய்தால் கால் ஹிஸ்டரி அழிந்துவிடுமா?
போன் செயலியின் புதிய அப்டேட்டை நீக்கினால் அவர்களின் கால் ஹிஸ்டரியும் அழிந்துவிடும் என பலரும் அச்சப்படுகின்றனர்.
கால் லாக் தரவுகள் அழிந்துவிடுமா என்பது பற்றி கூகுளில் அதிகாரப்பூர்வ பக்கத்தில் எந்த தெளிவான தகவலும் இல்லை. எனவே போன் சிஸ்டமில் கால் ஹிஸ்டரி பாதுகாப்பாக இருக்கும் என நம்பலாம், ஆனால் கூகுள் தான் அதனை உறுதிப்படுத்த வேண்டும்.
புதிய அப்டேட்டை அன் இன்ஸ்டால் செய்த ஒரு பயனர், கால் ஹிஸ்டரியையோ அல்லது இதர தரவுகளையோ இழக்கவில்லை என்றும் அனைத்து தகவல்களும் முன்பிருப்பதைப் போல இருப்பதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.