உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் நடந்த கார் தொடர்பாக நான்கு பொதுப் பணித் துறை அதிகாரிகள் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அளிக்கப்பட்ட புகாரில் கூகுள் மேப்ஸின் மண்டல மேலாளரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கவனக் குறைவின் காரணமாக மூன்று இளைஞர்கள் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தனர்.
இவர்கள் கூகிள் மேப்ஸின் வழிக்கட்டுதல்களின் படி அங்குள்ள பாலத்தின் மீது காரை ஓட்டிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. அந்த பாலம் முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லை. இதனால் அதில் சென்று கொண்டிருந்த அந்த கார் கீழே விழுந்தது.
இந்த சம்பவத்தில் கூகிள் மேப்ஸின் மண்டல மேலாளர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.மேலும் இந்த வழக்கு விசாரணையில் தங்களது முழு ஆதரவையும் வழங்குவதாக கூகிள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் உறுதியளித்துள்ளார்.
புகாரின் படி, அஜீத், நிதின், அமித் ஆகிய மூன்று நபர்களும் பதாயுனில் இருந்து பரேலியில் உள்ள ஃபரித்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
இந்த பயணத்தில் அவர்கள் ராம்கங்கா ஆற்றின் மேல் கட்டப்பட்டு வரும் பாலத்தின் மீது சென்றுள்ளனர். அந்த பாலம் இன்னும் கட்டி முடிக்கப்படாததால், அவர்கள் சென்ற கார் பாலத்தின் மேலிருந்து கிழே விழுந்தது. இதில் மூவரும் உயிரிழந்தனர்.
கூகிள் மேப்ஸ் மீது புகார்
பொதுப் பணித் துறையின் துணை பொறியாளர்களான அபிஷேக் குமார் மற்றும் முகமத் ஆரிப் ஆகியோர் மீதும், இளநிலை பொறியாளர்களான மகாராஜ் சிங் மற்றும் அஜய் கங்வார் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் அந்த பாலத்தின் அருகில் எந்த விதமான தடுப்போ அல்லது எச்சரிக்கை பலகைகளையோ நிறுவவில்லை. மேலும் இந்த பாலம் முழுவதும் கட்டப்படவில்லை என்பதை குறிக்க எந்த வித அறிவிப்பும் வைக்கவில்லை” என புகார்தாரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்த பாலத்தின் ஏற்றத்தில் இருந்த மெல்லிய சுவர் அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது என்றும் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
இந்த வழியை கூகிள் மேப்ஸில் தேடினால், இங்கு எந்த தடையும் இல்லை என்றும், இது வாகனங்கள் செல்லக்கூடிய பாதைதான் என்றும் காட்டியதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கூகிள் மேப்ஸ் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை கூகிள் நிர்வாகிகளின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை”, என்று ததாகஞ்ச் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் கௌரவ் விஷனோய் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.
கூகிள் நிறுவனம் கூறியதென்ன?
இந்த சம்பவத்திற்கு பிறகு கூகிள் மேப்ஸுக்கு பிபிசி ஹிந்தி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது.
“இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விஷயத்தில் தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறோம்” என்று கூகிள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் பதில் அளித்துள்ளார்.
இதில் உயிரிழந்தவர்கள் நிதின் குமார்(30) மற்றும் அவரது சகோதரர்களான அமித் குமார் மற்றும் அஜீத் குமார் ஆவார்.
நிதின் மற்றும் அமித் ஆகிய இருவரும் ஃபரூகாபாத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் தூரத்து உறவினர்தான் அஜீத். நிதினும் அஜித்தும் குருகிராமில் ஓட்டுநாராக வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் மூவரும் தங்களது குடும்பத் திருமணத்தில் பங்கேற்க ஃபரித்பூர் சென்றுகொண்டிருந்தனர்.
குருகிராமில் இருந்து கிளம்பிய இவர்கள், பதாயுனில் உள்ள ததாகஞ்ச் வழியாக ராம்கங்கா பாலத்தில் ஏறியுள்ளனர்.
இவர்கள் மூவரும் திருமண நிகழ்ச்சிக்காக எனது வீட்டிற்கு காரில் வந்துகொண்டிருந்தனர். மொபைலில் மேப் மூலமாக வழி தேடி வந்துக்கொண்டிருந்த இவர்களின் கார், ராம்கங்கா பாலம் அருகே வந்தபோது கிழே விழுந்துள்ளது” என்கிறார் நித்தினின் மாமா ராஜேஷ் குமார்.
ராம்கங்கா பாலத்தருகே வரும்பொழுது எந்த வித எச்சரிக்கை அறிவிப்பையும் மேப் வழங்கவில்லை என அவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இந்த விபத்திற்கு பிறகு அங்கு கூடி இருந்த மக்கள் மேப்பில் பாலத்தருகே எந்த தடையையும் காட்டவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
விபத்து எப்படி நடந்தது? இதற்கு யார் பொறுப்பு?
ஃபரித்பூர் துணை காவல் கண்காணிப்பாளரான அஷுதோஷ் ஷிவம், சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
அந்த பாலம் முழுமையாக கட்டப்படவில்லை. மேலும் அங்கு எச்சரிக்கை பலகைகள் எதுவும் வைக்கப்படவில்லை. கார் மிகுந்த வேகத்தில் வந்ததால் கீழே விழுந்துள்ளது என்றார் அவர.
இந்த பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தால் இடிந்து விழுந்தது, அதன் பிறகு இதனை மக்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. பாலத்தில் எந்த வித எச்சரிக்கைப் பலகையும் இடம்பெறவில்லை என்ற பிடிஐ வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்களும் 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது என்று கூறுகின்றனர்.
“இந்த பாலம் உத்தர பிரதேசத்தின் மாநில பாலம் கார்ப்பரேஷனால் கட்டப்பட்டது. கட்டுமானப்பணி முடியாத பாலத்தின் ஒரு பக்கத்தின் வழி மூடப்படாமல் இருந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஃபரித்புர் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் குலாப் சிங் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அதிகாலையில் நடந்த இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் காலை 9.30 மணி அளவில்தான் தங்களுக்கு தகவல் வழங்கியதாக காவல்துறை தெரிவித்தது.
அந்த பாலத்தில் எந்த பாதுகாப்பு எச்சரிக்கையும் இல்லை என்றும் அந்த நேரத்தில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள்,நிர்வாகத்தின் அலட்சியமே இவர்களின் மரணத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டினர்.
“அவர்களுடைய மொபைலில் எந்த மேப் சேவை பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை”, என்று ஃபரித்புர் காவல் நிலைய ஆய்வாளர் ராகுல் சிங் பிபிசியிடம் கூறினார்.
மறுபுறம், விபத்தில் உயிரிழந்தவர்களின் மொபைலில் மேப் சேவை பயன்பாட்டில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அங்குள்ள அனைத்து சாலைகள் மற்றும் பாலங்களை ஆய்வு செய்ய பொதுப் பணித்துறைக்கு பதாயுன் மாவட்ட ஆட்சியர் நிதி ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார்.