பட மூலாதாரம், TNFD
-
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
-
நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் கால்நடைகளை அதிகமாகக் கொன்று வந்த புலி ஒன்று, வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியுள்ளது.
இந்தப் புலியை பிடித்தது முதல் அடர்ந்த காட்டுக்குள் கொண்டு விடுவித்தது வரை ஒருமுறை கூட மயக்க ஊசி செலுத்தப்படாதது அதிக கவனம் பெற்றுள்ளது.
இந்தப் புலியை பிடிப்பதற்காக பிரத்யேக கூண்டு தயாரித்து புதிய உத்தியை பயன்படுத்தியதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.
அதே கூண்டு, தற்போது முதுமலையில் பெண்ணை அடித்துக் கொன்றதாக கருதப்படும் புலியைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. அந்த புலி சிக்குமா என்று வனத்துறையினர் கேமராக்களை வைத்துக் கண்காணித்து வருகின்றனர்.
மயக்க ஊசி செலுத்தாமலே பிடிபட்டு விடுவிக்கப்பட்ட புலி
பட மூலாதாரம், TNFD
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் முழுக்க முழுக்க மலைப்பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும். அங்குதான் முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. முதுமலையை ஒட்டியுள்ள கூடலுார் மற்றும் நீலகிரி வனக்கோட்டப் பகுதிகளிலும் புலிகள் பரவி வாழ்கின்றன.
சமீபத்தில் கூடலுார் வனக்கோட்டத்துக்குட்பட்ட தேவர் சோலையில், காட்டை ஒட்டியுள்ள கொட்டாய்மட்டம் என்ற இடத்தில் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் மாடுகளை ஒரு புலி அடித்துக்கொல்வது அதிகளவில் நடந்தது.
பிபிசி தமிழிடம் கூடலுார் வனத்துறையினர் பகிர்ந்த தகவலின்படி, கடந்த 6 மாதங்களில் அந்த புலி 20 முதல் 23 மாடுகளை கொன்றுள்ளது.
இதன் காரணமாக அந்த புலியை விரைவாகப் பிடிக்க வேண்டுமென்று பாடந்துறையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது.
புலியைப் பிடிப்பதற்காக வெவ்வேறு இடங்களில் 4 கூண்டுகளையும், கேமராக்களையும் வைத்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். 4 மாதங்களாகியும் கேமராவில் சிக்கிய புலி கூண்டில் சிக்கவில்லை. அதேநேரத்தில் கால்நடைகளை புலி அடித்துக்கொல்வது தொடர்ந்தது.
இதற்கான காரணத்தை ஆராய்ந்த வனத்துறையினர், புலியைப் பிடிப்பதற்காக பிரத்யேகமாக ஒரு பெரிய கூண்டை செய்து, கொட்டாய்மட்டம் பகுதியில் வைத்தனர்.
அதில் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி இரவு, அந்த புலி சிக்கிக்கொண்டது. அந்த புலியை மறுநாள் வேறு கூண்டுக்கு மாற்றிய வனத்துறையினர், முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அதனை விடுவித்தனர்.
கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் கூண்டு வைத்து புலிகள் பிடிக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் கூண்டுக்குள் ஒரு புலி சிக்குவது இதுவே முதல் முறை என்றார் மாவட்ட வன அலுவலர் (கூடலூர்) வெங்கடேஷ் பிரபு.
காட்டில் விடுவிக்கப்பட்ட அந்த ஆண் புலிக்கு 3 வயதே இருக்கும் என்பதால் அது காட்டுக்குள் வேட்டையாடுவதில் பிரச்னையிருக்காது என்றார் அவர்.
புலியை பிரத்யேக கூண்டு வைத்து பிடிக்க திட்டம்
புலியை கூண்டு வைத்துப் பிடிக்கும் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது எப்படி என்பதை பிபிசி தமிழிடம் வெங்கடேஷ் பிரபு விளக்கினார்.
”வழக்கமாக மயக்க ஊசி செலுத்தியே புலிகள் பிடிக்கப்படுகின்றன. எந்தவொரு காட்டுயிரையும் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கையில் அதற்கு பலவிதமான சிரமங்கள் ஏற்படலாம். இதனால் மயக்க ஊசி செலுத்தாமலே அதைப் பிடிக்க வேண்டுமென்று திட்டமிட்டோம். அதற்காக பிரமாண்டமான ஒரு கூண்டை தயார் செய்தோம். மொத்தம் 30 அடி நீளம், 10 அடி அகலம், 10 அடி உயரம் என ஒரு அறையை விட பெரிதாக அந்த கூண்டு தயார் செய்யப்பட்டது.” என்றார்.
வயநாட்டில் இதைத் தயார் செய்ததாகக் கூறிய மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, நான்கைந்து முறை அதற்காக நேரில் சென்று, வெவ்வேறு விதமான மாற்றங்களைச் செய்ததாகத் தெரிவிக்கிறார். முழுக்கமுழுக்க இரும்பினால் செய்யப்பட்ட ஒரு டன் எடையுள்ள இந்த கூண்டு, 8 பாகங்களைக் கொண்டது. அனைத்தும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, ஒன்றாக இணைக்கும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக யானை தவிர்த்த பிற காட்டுயிர்களைப் பிடிப்பதற்கு, வனத்துறையினர் பயன்படுத்தும் கூண்டு 8 அடி நீளம், 4 அடி உயரம், 4 அடி அகலம் கொண்டதாக இருக்கும்.
அந்த கூண்டில் இரண்டு பாகங்கள் இருக்கும். ஒரு பாகத்தில் கம்பிகள் கொண்ட ஒரு சிறிய அறைக்குள் ஒரு ஆடு கட்டப்பட்டிருக்கும் (கூடலூரைப் பொருத்தவரை, மூன்று நாட்களுக்கு முன்பு அந்த புலி அடித்துக் கொன்றிருந்த மாட்டின் எஞ்சிய பகுதியை அப்படியே இந்த கூண்டில் வைத்தனர்). மற்றொரு பாகத்தின் முன் கதவு திறந்திருக்கும்.
ஆட்டைப் பார்த்து அல்லது சத்தம் கேட்டு புலி, சிறுத்தை போன்றவை உள்ளே வந்து தரைதளப் பலகையில் கால் வைத்ததும் முகப்பிலுள்ள கதவு மூடுவது போல அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கூண்டில் தரைத்தளமே இல்லாத வகையில் நீளமான அறையாகத் தயார் செய்யப்பட்டது என்றும் வெங்கடேஷ் பிரபு கூறினார்.
மற்ற கூண்டுகளில் ஆடு அடைக்கப்பட்டுள்ள அறையை நோக்கி விலங்குகள் முதல் அறைக்குள் சென்றதும் அங்குள்ள பலகையில் கால் வைக்கும்போது முகப்பிலுள்ள கம்பிக்கதவு மூடிக்கொள்ளும். ஆனால் இதில் இரு அறைகளிலும் தரைதளம் இல்லாத நிலையில், கூண்டின் மூலை பாகங்கள் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று இரு அறைகளையும் இணைக்கும் பகுதியிலும் ஓர் இணைப்புப் பலகை வைத்து அதுவும் வெளியில் தெரியாத வகையில் மண்ணுக்குள் வைக்கப்படுகிறது. அதில் புலி கால் வைத்ததுமே முகப்பு கம்பிக்கதவு மூடிக்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தில் அந்த கூண்டு தயார் செய்யப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், TNFD
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை கொல்லப்பட்டுள்ள புலிகள்
நீலகிரி மாவட்டத்தில் மனிதர்களைக் கொன்றதாக சில புலிகள் வனத்துறை அனுமதியுடன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளன.
- 2014 ஆம் ஆண்டில் உதகை அருகேயுள்ள தொட்டபெட்டா பகுதியில் 3 பேரைக் கொன்ற புலி சுட்டுக்கொல்லப்பட்டது.
- 2015-ஆம் ஆண்டில் கூடலுார் பகுதியில் ஒரு பெண்ணை புலி அடித்துக்கொன்றதும் கலவரம் ஏற்பட்டு, நெலாக்கோட்டை வனச்சரக அலுவலர் அலுவலகம் சூறையாடப்பட்டது. வனத்துறை வாகனம் எரிக்கப்பட்டது. காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் தாக்கப்பட்டனர். அந்த புலியும் அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது.
- 2016 மார்ச் மாதத்தில் கூடலுார் வுட்பிரையர் எஸ்டேட் பகுதியில் மதுஓரா என்ற வடமாநிலத் தொழிலாளியை புலி அடித்துக்கொன்றது. அந்த புலியைப் பிடிக்க நடந்த முயற்சியின்போது, 2 காவலர்கள் காயமடைந்தனர். அந்த புலியையும் அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர்.
- 2021-ஆம் ஆண்டில் முதுமலையை ஒட்டியுள்ள மசினகுடி பகுதியில் அடுத்தடுத்து 4 மனிதர்களையும் 15க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் ஒரு புலி அடித்துக்கொன்றது. டி23 என்று பெயரிடப்பட்ட அந்த புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, கர்நாடகா மாநிலம் மைசூரு வன உயிரினப் பூங்காவில் தற்போது வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாகவே தற்போது கூடலுார் பகுதியில் கால்நடைகளை தொடர்ந்து கொன்று வந்த புலி பிடிக்கப்பட்டுள்ளது. மயக்க ஊசியே செலுத்தாமல் இந்த புலியை பிடித்ததை காட்டுயிர் ஆர்வலர்கள் உள்பட பல தரப்பினரும் பாராட்டுகின்றனர்.
இதுகுறித்து வகுப்பு எடுப்பதற்காக கூடலுார் மாவட்ட வனஅலுவலருக்கு தேசிய புலிகள் பாதுகாப்புத் திட்டத்திலிருந்து சிறப்பு அழைப்பு வந்திருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
பிபிசி தமிழிடம் பேசிய உலக வன உயிரின நிதியத்தில் பணியாற்றிய புலிகள் ஆராய்ச்சியாளர் கே.விஜயகுமார், ”உண்மையிலேயே இது ஒரு சிறப்பான நடவடிக்கை என்று சொல்லலாம். எந்த ஒரு காட்டுயிருக்கும் இடம்பெயர்தல் என்பது சிக்கல்தான். ஆனால் பிரச்னைக்குரிய புலிகள் உள்ளிட்ட காட்டுயிர்களை இடம் மாற்றும்போது மயக்க ஊசி செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இதில் இறுதிவரை மயக்க ஊசியே செலுத்தாமல் இடம் மாற்றியது ஒரு முன்மாதிரி நடவடிக்கை.” என்றார்.
பொதுவாக சிறுத்தைகள் இரைக்காக கூண்டிற்குள் வந்து சிக்கிக்கொள்ளும்; ஆனால் புலிகள் சிறிய கூண்டுகளை அடையாளம் கண்டு கொண்டு வராது என்பதால் இந்த பெரிய கூண்டு அதைப் பிடிக்க உதவியிருக்கும் என்று கூறிய விஜயகுமார், இந்த புலி கூண்டில் சிக்கியது ஆச்சரியத்துக்குரிய நிகழ்வுதான் என்றார்.
வனத்துறை கையாண்ட புதிய உத்தி என்ன?
இதுபற்றிய விளக்கிய வெங்கடேஷ் பிரபு, ”பிடிபட்ட புலிக்கு 3 வயதுதான் இருக்கும். தாயை விட்டுப் பிரிந்து தனியாக வேட்டையாடத் துவங்கிய நிலையில், மாட்டை அடித்துப் பழகியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு அந்த புலி அடித்திருந்த அதே மாட்டை கால், உடல் என தனித்தனியாக வெட்டாமல் அப்படியே எடுத்துவந்து அந்த கூண்டுக்குள் வைத்தோம். மனித வாடையே படக்கூடாது என்பதற்காக முழுக்க முழுக்க கையுறை பயன்படுத்தி அதைச் செய்தோம். அதனால்தான் வேட்டையாடிய இரையை மீண்டும் தேடி அதற்குள் புலி வந்து சிக்கிக்கொண்டது.” என்றார்.
பிடிபட்ட புலியை அந்த கூண்டிலிருந்து மயக்க ஊசி எதுவும் செலுத்தாமலே, அதனை வேறிடத்திற்கு கொண்டு செல்லும் (Transport cage) கூண்டிற்கும் மாற்றியுள்ளனர்.
”மயக்க ஊசி செலுத்தினால் அதை உடனே காட்டில் விட முடியாது. இதை உடனே விட வேண்டுமென்று ஒரு ஏற்பாடு செய்திருந்தோம். பெரிய கூண்டில் 4 அடி உயரத்துக்கு ஒரு சைடு கேட் வைத்திருந்தோம். அதற்கு அருகில் அதைக் கொண்டு செல்லும் கூண்டை வைத்து, இரண்டு வாயில்களையும் இணைத்து இறுக்கமாகக் கட்டிவிட்டோம். சில முறை தயங்கிய புலி, அதன்பின் இந்த கூண்டுக்குள் வந்ததும் அதை அடைத்து காட்டிற்குள் கொண்டு சென்று விட்டுவிட்டோம்.” என்றார் வெங்கடேஷ் பிரபு.
பட மூலாதாரம், TNFD
ஆண் புலிகளே இல்லாத பகுதியில் விடுவிக்கப்பட்ட புலி
பிடிபட்டது 3 வயது ஆண் புலி. மற்றொரு பலம் வாய்ந்த ஆண் புலி இருக்கும் பகுதியில் விடப்படும் பட்சத்தில் அதனால் வாழமுடியாத நிலை ஏற்படும் என்பதை வனத்துறையினர் விளக்கினர்.
முதுமலை புலிகள் காப்பகத்தின் உள் வட்டப்பகுதியில் (Core Zone) மட்டும் 27 ஆண் புலிகள் இருப்பதாக வனத்துறையினர் கணக்கிட்டுள்ளனர். ஆனால் இந்த புலிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஆண் புலி எதுவுமில்லை என்பதை உறுதி செய்த பின்பே அங்கு விடுவித்ததாகத் தெரிவிக்கின்றனர் வனத்துறையினர்.
முதுமலையில் தினமும் களப்பணிக்குச் செல்லும் வன அலுவலர்கள் நேரில் பார்ப்பது, மரங்களில் புலிகள் ஏற்படுத்திய தடங்கள், கழிவுகள், கால்தடங்கள் ஆகியவற்றை வைத்து தரவு (M Sight Data) பதிவு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் அப்பகுதியில் சில பெண் புலிகள் மட்டுமே இருப்பதை உறுதி செய்த பின்பே அந்த புலியை அப்பகுதியில் விடுவித்ததாக கூடலுார் வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
பெண்ணை அடித்துக் கொன்றதாக கருதப்படும் புலியும் சிக்குமா?
கூடலுார் வனக்கோட்டத்தில் கால்நடைகளைக் கொன்ற புலியைப் பிடிக்கும் முயற்சி நடந்து கொண்டிருந்த போதே, கடந்த நவம்பர் 24 ஆம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நாகியம்மாள் என்ற பழங்குடிப் பெண்ணை புலி ஒன்று அடித்துக்கொன்றது. அதைப் பிடிக்கவும் வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கூடலுாரில் புலியைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட கூண்டைப் போலவே, இந்த புலியைப் பிடிக்கவும் மற்றொரு பெரிய கூண்டு மைசூருவில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு கூண்டுகள் உட்பட வேறு சில கூண்டுகளும் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் டிசம்பர் 2-ஆம் தேதி வரையிலும் எந்தக் கூண்டிலும் எந்த காட்டுயிரும் சிக்கவில்லை என்று முதுமலை வனத்துறையினர் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், TNFD
பிபிசி தமிழிடம் பேசிய புலிகள் ஆராய்ச்சியாளர் விஜயகுமார், ”கூடலுாரில் கூண்டில் சிக்கிய புலி, மாடுகளை அடித்துக் கொன்று பழகியுள்ளது. அது கொன்ற அதே மாட்டை கூண்டு என்று அடையாளம் தெரியாத வகையிலுள்ள பெரிய கூண்டில் வைத்ததால்தான் அந்த புலி சிக்கியுள்ளது. முதுமலையில் பழங்குடி பெண்ணைக் கொன்ற புலி, இதுபோன்று கூண்டில் சிக்குவது எளிதில்லை.” என்றார்.
”அதேபோன்று அந்த புலியை ஆட்கொல்லி என்று இப்போதே உறுதியாகச் சொல்ல முடியாது. அந்த பெண் குனிந்து ஏதாவது பொறுக்கிக் கொண்டிருந்தபோது அல்லது அமர்ந்திருக்கும் போது இதுவும் தனக்கான ஏதோ ஓர் இரை என்று புலி அடித்திருக்கலாம். ஆனால் ஒருமுறை மனிதரைச் சுவைத்து விட்டால் அது எளிதாகக் கிடைக்கும் இரை என்று நினைத்தும், சுவையை வைத்தும் மீண்டும் ஆட்களைக் கொல்ல வாய்ப்புள்ளது. ஒரு வேளை அது வயதான, வேட்டையாட முடியாத புலியாகவும் இருக்கலாம்.” என்றார் விஜயகுமார்.
முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கூண்டுகளில் புலி ஏதாவது சிக்கினாலும் அதுதான் பழங்குடி பெண்ணை கொன்ற புலியா என்பதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதற்காகவே பல இடங்களிலும் கேமராக்களைப் பொருத்தி கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். அந்த குறிப்பிட்ட பகுதியில் ஆட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என்றும் அவர்கள் விளக்கினர்.
பிபிசி தமிழிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பக களஇயக்குநர் கிருபா சங்கர், ”கூடலுாரில் புலி பிடிபட்ட கூண்டு உட்பட 2 பெரிய கூண்டுகள் உட்பட வெவ்வேறு இடங்களில் 5 கூண்டுகள் வைத்துள்ளோம். மொத்தம் 34 இடங்களில் கேமரா வைத்து கண்காணிக்கப்படுகிறது. பழங்குடிப் பெண்ணை கொன்ற புலி ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த புலி வயதான புலி போல் தெரிவதால் விரைவில் கூண்டில் சிக்க வாய்ப்புள்ளது. அதுவரை மக்களை அப்பகுதியில் நடமாட அனுமதிப்பதில்லை.” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு