சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து திமுக மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி 2026 சட்டப்பேவைத் தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், கொமதேக, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர தேமுதிக உட்பட சில கட்சிகளுடனும் திமுக பேசி வருகிறது. அதேநேரம், கூட்டணி ஆட்சிக்கான பேச்சுகள் வலுப்பதால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக விரும்புகிறது. அதற்கேற்ப கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் மற்றும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கு அதன் தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்,மதிமுக ஆகியவற்றுக்கு தலா 6, கொமதேக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு தலா 3, இதர சிறு கட்சிகளுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், மதிமுக மற்றும் சிறிய கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. இதன்மூலம் 1989-ம் ஆண்டுக்கு பின்பு திமுக அதிகபட்சமாக 188 தொகுதிகளில் தனித்து களமிறங்கியது.
அதில் 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட 46 தொகுதிகளில் 26-ல் மட்டுமே வெற்றி கிடைத்தது. ஒட்டுமொத்தமாக 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றது. இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத்தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் மற்றும் தொகுதிகள் ஒதுக்கீட்டில் திமுகதலைமை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது திமுக கூட்டணியில் உள்ளமக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை தவிர மற்ற கட்சிகள் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து சேர்ந்து பயணிக்கின்றன. இதனால் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்வதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் விரும்புகிறார்.
அதேநேரம் தேர்தல் வெற்றியில் சமரசம் செய்து கொள்வதற்கு தயாராக இல்லை. 1971-ம் ஆண்டுக்கு பின்னர் திமுக ஆட்சியானது 2-வது முறையாக தக்க வைக்கப்பட்டதில்லை. அதை நிகழ்த்திக் காட்ட வேண்டுமென்ற தீவிர முனைப்புடன் இருக்கிறார் ஸ்டாலின். அதனால் கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை குறைப்பதற்கு தலைமை முடிவெடுத்துள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 25-ல் 18, விசிக 6-ல் 4 இடங்களில் வெற்றி பெற்றன.
ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் 12-ல் 4 இடங்களில் மட்டுமே வென்றன. ஐயூஎம்எல் 3 இடங்களிலும் தோல்வி அடைந்தது. அதனால் இந்த முறை காங்கிரஸ் 20, கம்யூனிஸ்ட் கட்சிகள் 8, ஐயூஎம்எல் 1 எனசீட்கள் குறைத்து ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விசிகவுக்கு மட்டும் 8 தொகுதிகள் வழங்கப்பட இருக்கிறது. மற்ற சிறிய கட்சிகளுக்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டாலும் அவர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், விசிகவுக்கு கூடுதல் இடம் ஒதுக்கினாலும் சில தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வகையில் பேசி வருகிறோம்.
அதேநேரம் தேமுதிக உட்பட மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைந்தால் இதில் மாற்றங்கள் வரும். பெரும்பாலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்தான் வழங்கப்படும். தேர்தல் வெற்றிக்கான அனைத்து பணிகளையும் திமுக முன்நின்று மேற்கொள்ளும் என முதல்வர் உத்தரவாதம் அளித்துள்ளார். அதேபோல், கடந்தமுறை போட்டியிட்ட தொகுதிகளிலும் மாற்றம் வரும். இவ்வாறு திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.