• Tue. Aug 5th, 2025

24×7 Live News

Apdin News

கூட்டணி பற்றி தொலைக்காட்சிகளில் கருத்து தெரிவித்தால்… – நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை | Avoid comments on political alliances OPS appeals to administrators

Byadmin

Aug 3, 2025


சென்னை: அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்டெடுப்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஏற்படுத்தி நாம் போராடி வருகிறோம்.

இதில் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை நாம் எதிர் கொள்ளும் வகையில், எம்.ஜி.ஆரால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், ஜெயலலிதாவால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் பட்தொட்டி எங்கு எடுத்துச் செல்லவும், தி.மு.க. ஆட்சியில் தற்போது மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்படுவதை மக்களுக்கு எடுத்துக் காட்டவும் பொதுக் கூட்டங்களை கழக நிர்வாகிகள் ஆங்காங்கே நடத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தித் தொடர்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். இதனை மீறிச் செயல்படுபவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கூட்டணி குறித்த முடிவு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தினைக் கேட்டு, கள நிலவரத்தை ஆராய்ந்து, அதற்கேற்ப தக்க நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்



By admin