தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் 2-வது கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு மக்களவை தொகுதி மறுவரையறை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனால், மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, பிறப்பு விகிதத்தை குறைந்துள்ள தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அதன் காரணமாக இத்திட்டத்தை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக இது அமைத்துள்ளது. கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அனைவரும் மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மக்களவையி்ல் உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமல் தொகுதி மறுவரையறை நடக்கும் என தெரிவித்துள்ளனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுவரையறையால் தமிழக தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது எனக் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தெளிவுபடுத்தாமல் உள்ளது. இக்கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் மட்டும் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஜெகன்மோகன் ரெட்டி வருவதாக இருந்தது. அவராலும் வர இயலவில்லை என்றாலும், அவரது கருத்தை தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
தற்போதைக்கு ஒவ்வொரு விஷயத்துக்கும் போராட வேண்டிய சுழல் தான் உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை, தொகுதி மறுவரையறையால் யாருக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ, அம்மாநில காங்கிரஸார் போராடுகின்றனர். இக்கூட்டத்தில், 2-வது கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடத்த வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். அதை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதில் பங்கேற்பார்கள் என நம்புகிறேன். தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் எதிரானவர்கள் தான் பாஜகவினர். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தின் முடிவில் மேகேதாட்டு தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “மேகேதாட்டு திட்டத்தால் தமிழகத்துக்கு தான் அதிக பயன் கிடைக்கும். இதுதொடர்பாக தமிழக அரசுடன் பேசி வருகிறோம். இந்தக் கூட்டத்தில் இதுதொடர்பாக விரிவாக பேச விரும்பவில்லை” என்றார்.