கூலி – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்
நடிகர்கள் : ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன், காளி வெங்கட், அமீர்கான் மற்றும் பலர்.
இயக்கம் : லோகேஷ் கனகராஜ்
மதிப்பீடு: 2.5/5
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘கூலி’ – உலகம் முழுவதும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி இருக்கிறது. அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தேவா என்கிற தேவராஜ் ( ரஜினிகாந்த்) சென்னையில் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். ஒருநாள் விசாகப்பட்டினத்திலுள்ள இவரது நண்பர் ராஜசேகர் ( சத்யராஜ்) இறந்து விட்டார் என செய்தி கிடைக்கிறது.
அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு செல்கிறார் தேவா. ராஜசேகரின் மரணம் இயற்கையானது அல்ல என்ற தகவலை பெறுகிறார் தேவா. அவரை யார் கொலை செய்திருப்பார்கள்? என்ற உண்மையை ஆராய முற்படுகிறார்.
அத்துடன் ராஜசேகரின் மூன்று பெண் வாரிசுகளுக்கு ஆதரவாக இருக்கவும் தீர்மானிக்கிறார். அதனைத் தொடர்ந்து தனது நண்பர் ராஜசேகரை கொலை செய்தவர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? அவர்களை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் சைமன் ( நாகார்ஜுனா) கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். இவருக்கு உதவியாக தயாளன் ( சௌபின் சாகிர்) செயல்படுகிறார். இவர்கள் தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை ஈவிரக்கமின்றி கொல்கிறார்கள்.
கொன்றவர்களின் உடலை எரிப்பதற்காக மாற்று வழியை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில் மாசற்ற நடமாடும் தகன முறை ஒன்றை ராஜசேகர் கண்டுபிடிக்கிறார். இதற்கு இந்திய அரசின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இந்த தகவலை சைமன் மற்றும் தயாளன் குழுவினர் தங்களுடைய சட்ட விரோத காரியங்களுக்காக பாவித்துக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் ராஜசேகர் மற்றும் அவரது மூத்த மகள் ப்ரீத்தி இருவரும் சைமனின் சட்ட விரோத செயலுக்கு உடந்தையாக செயல்படுகிறார்கள். இதில் ஒரு கட்டத்தில் தயாளன் – ராஜசேகரை கொன்று விடுகிறார்.
அந்த தருணத்தில் ராஜசேகர் தன்னுடைய நண்பரை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மௌனித்து வைத்திருப்பதாகவும்… அவனை எப்போதாவது சந்தித்தால்.. சங்கேத வார்த்தை ஒன்றை சொல் அவர் உன்னை பத்திரமாக அனுப்பி வைப்பார் என சொல்கிறார்.
இப்படி செல்லும் திரைக்கதை ரசிகர்களை ஓரளவு கட்டி வைத்தாலும்… உச்சகட்ட காட்சி ரசிகர்களின் யூகத்தின் படி பயணிப்பதால் வியப்பை ஏற்படுத்தாமல் இயல்பாக கடந்து செல்கிறது.
தேவராஜ் என்கிற தேவா கேரக்டரில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் இளமையாக ரசிகர்களை தன் ஸ்டைலான நடிப்பால் கவர்கிறார். குறிப்பாக நடன காட்சிகளிலும்.. அதிரடி எக்சன் காட்சிகளிலும் தன் மாஸான ஸ்டைலை காண்பித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.
சைமன் எனும் கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா தன்னுடைய ஸ்டைலான நடிப்பை காண்பித்து ரசிகர்களை கவர்கிறார்.
பிரபு- தயாளன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சௌபின் சாகிர் இயக்குநர் சொன்னதை எல்லாம் செய்து ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார்.
ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் – வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தாலும் கதை நெடுக பயணிக்கும் கதாபாத்திரத்தில் தோன்றுவதால் ரசிகர்களின் மனதில் நிறைகிறார்.
ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ருதிஹாசன் ஆங்காங்கே சில உணர்வுபூர்வமான காட்சிகளில் தன் தனித்துவமான நடிப்புத் திறமையை காண்பித்து ரசிகர்களை கவர்கிறார்.
இவர்களைக் கடந்து சிறப்பு தோற்றத்தில் திரையில் தோன்றும் உபேந்திரா, அமீர்கான், பூஜா ஹெக்டே ஆகியோரும் ரசிகர்களை கவர தவறவில்லை. இருந்தாலும் எல் சி யு – எதிர்பார்த்ததை விட சற்று குறைவான ஒளியையே அளித்தது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ரஜினிகாந்த் இளமையாக தோன்றுவது ரசிக்கும் வகையில் இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏதேனும் ஒரு பெண் கதாபாத்திரம் வித்தியாசமான கவனத்தை ஈர்க்கும் ‘விக்ரம்’ படத்தில் ஏஜென்ட் டீனா போல்… இந்த படத்தில் கன்னட நடிகை ரக்ஷிதா ராம் வில்லியாக நடித்து ரசிகர்களை கவனிக்க வைக்கிறார்.
சுப்பர்ஸ்டாரின் திரை ஆளுமை இருந்தாலும்… ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தின் பங்களிப்பும் இல்லை என்றால் கூலி நிறைவை அளித்திருக்காது.
தேவாவிற்கு தன் மகள் உயிருடன் இருப்பது தெரிந்த பிறகு… அவள் யார் என்று தெரிந்த பிறகும்… அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் காட்சிப்படுத்தி இருப்பது எல் சி யு டச்.
இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தி இருப்பதும் ரசிக்க வைக்கிறது.
கூலி – ரஜினி & லோகேஷ் டீம் மேஜிக்.
The post கூலி – திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.