• Mon. May 12th, 2025

24×7 Live News

Apdin News

கூவாகம் திருவிழா 2025: தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை’ ஆக தேர்வு | Sakthi from Thoothukudi selected as Miss Transgender

Byadmin

May 12, 2025


விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று (மே 11) இரவு நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார்.

தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ‘கூவாகம் திருவிழா – 2025’ விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நேற்று (மே 11) இரவு நடைபெற்றது. முன்னிஜி நாயக் தலைமை வகித்தார். முன்னாள் நகராட்சி சேர்மன் ஜனகராஜ் முன்னிலை வகித்தார். குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, “ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விழாக்கள் சிறப்பாக நடைபெறும். அதேபோன்று ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெற்றது. மாவட்டம் பிரிந்த பிறகும், தொடர்ந்து நடைபெறுவது விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கிறது.

பிற மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ள திருநங்கையர்களை அன்புடன் வரவேற்கிறோம். மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்று கூத்தாண்டவர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வாழ்த்துகள்” என்றார். பின்னர் அவர், திருநங்கைகள் சார்பில் விழுப்புரம் நகராட்சி முன்னாள் சேர்மன் ஜனகராஜுக்கு ‘மக்கள் தொண்டன்’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார். இதையடுத்து, திருநங்கைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக அரசின் சிறந்த திருநங்கை விருது பெற்ற பொன்னி தலைமையிலான குழுவினர் பரதநாட்டியம் ஆடினர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மருத்துவம், கல்வி, காவல், நாடகம், மருத்துவம், சுயதொழில், நடனம், ஆட்டோ ஓட்டுநர் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 22 திருநங்கைகளுக்கு பரிசு மற்றும் வெகுமதி வழங்கி ஆட்சியர் கவுரவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் சுபப்பிரியா என்ற சாதனை திருநங்கை பேசும் போது, ‘விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் திருநங்கை ஒருவரை ஓட்டுநர் பணிக்கு நியமிக்க வேண்டும்’ என ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமானுக்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும் திருநங்கைகள் பேசும்போது, ‘கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கினால் சாதனை புரிய பல திருநங்கைகள் காத்திருக்கின்றனர். எனவே, திருநங்கைகளுக்கு தன இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பேசிய திருநங்கைகள், ‘நடிகர் சங்கத்தில் திருநங்கைகளை உறுப்பினராக்க வேண்டும்’ என நடிகர் விஷாலிடம் கேட்டுக்கொண்டனர்.

‘திருநங்கை என அழைத்தவர் கருணாநிதி’: சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசும்போது, “திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக திருநங்கைகள் நலவாரியத்தை தொடங்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது. கைபேசி செயலி மூலம் 9,381 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு நல்லது செய்யும் அரசு, திராவிட மாடல் அரசு.

கல்விதான் முக்கியம். கல்வி இருந்தால் சாதிக்கலாம். திருநங்கைகளின் கல்விக்கு பல உதவிகளை திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது. திருநங்கை என பெயர் வைத்தவர் கருணாநிதி. மாநகராட்சி பதவியில் இரு திருநங்கைகள் உறுப்பினர்களாக உள்ளனர்” என்றார். மேலும் அவர், திருநங்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் செய்து வரும் நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.

சட்டப்பேரவையில் அமர வேண்டும்: சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் பேசும்போது, “திருநங்கைகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்பது, மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு பெயருக்கு முன்னாள் திரு என தனியாக எழுதி மரியாதைக்கு போடப்படும். ஆனால், உங்கள் பெயரிலேயே (திருநங்கை) மரியாதை உள்ளது. இதற்காக பெருமை கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில், உங்கள் சார்பாக ஒருவர், தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அமர வேண்டும் என்பது எனது ஆசையாகும். உங்களுக்கு குரல் கொடுக்கும் நபர், உங்களில் ஒருவராக சட்டப்பேரவையில் இருக்க வேண்டும். திருநங்கைகளின் மனது அழகு. உங்களுக்கு ஒரு சகோதரனாக நான், இருக்கிறேன் என நீங்கள் பெருமையாக கூறலாம்” என்றார்.

இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக, ‘மிஸ் திருநங்கை’பட்டத்துக்கான போட்டி தொடங்கியது. 14 திருநங்கைகள் பங்கேற்றனர். இரண்டு சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது. பட்டு புடவை மற்றும் நாகரிக உடைகளை உடுத்திக் கொண்டு ஒய்யார நடை நடந்து திருநங்கைகள் அசத்தினர். இதில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி பெற்றார். இரண்டாவது இடத்தை சென்னையைச் சேர்ந்த ஜோதா, 3-வது இடத்துக்கு சென்னையைச் சேர்ந்த விபாஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றி பெற்றவர்களை அறிவிக்கும்போது, பல நூறு திருநங்கைகள் கலந்துகொண்டு, கைகளை தட்டி ஆராவரம் செய்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல் மூன்று இடங்களை பிடித்த திருநங்கைகளுக்கு முறையே ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டன.

வாழ்வில் முன்னேற கல்வி அவசியம்: மிஸ் திருநங்கை பட்டம் வென்ற சக்தி கூறும்போது, “முதல் முறையாக பங்கேற்ற அழகி போட்டியில் பட்டம் வென்றுள்ளது மகிழ்ச்சி. நாங்களும் போராடி வளர்ச்சி பெற்று வருகிறோம். எங்களை ஒதுக்கி வைத்திருந்த பெற்றோர் இனிமேல் எங்களை ஏற்பார்கள் என்று நம்புகிறோம். பெற்றோர் ஏற்றுக் கொண்டால், எங்களால் நிறைய சாதிக்க முடியும்.

திருநங்கைகள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், கல்வி கற்க வேண்டும். திருநங்கைகள் அனைவருமே வாழ்க்கையில் முன்னேற நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும். கல்வி என்ற ஆயுதம் இருந்தால் சாதிக்கலாம். கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்றார்.

2-ம் பரிசு பெற்ற ஜோதா கூறும்போது, “நான் நடனக் கலைஞர். நான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே கூத்தாண்டவரின் புண்ணியத்தால் 2-ம் பரிசை பெற்றிருப்பது மகிழ்ச்சி. என்னுடைய தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை அனைத்து திருநங்கைகளுக்கும் சமர்ப்பிக்கிறேன். கல்விக்கு ஏற்ப, திருநங்கைகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கல் உடைப்பு முதல் கணினி தொழில் வரை திருநங்கைகள் சாதித்து வருகின்றனர். ஆதரவற்ற நிலையில் இருக்கும் 4 திருநங்கைகளை தத்தெடுத்து படிக்க வைப்பேன்” என்றார்.

3-ம் பரிசு பெற்ற விபாஷா கூறுகையில், “மிஸ் திருநங்கை பட்டம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. இருப்பினும் கடவுள் கொடுத்த 3-ம் பரிசை நான் ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய வளர்ச்சிக்கு காரணமான தாய், சகோதரிக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறேன். திருநங்கைகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. எல்லோரையும் விட ஒரு படி உயர்ந்தவர்கள். தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் எளிதில் வெற்றி பெறலாம். கல்வி ஒன்று மட்டும் நம்மிடம் இருந்தால் சாதிக்கலாம். எய்ட்ஸ் நோயால் பாதித்த குழந்தைகள் மற்றும் திருநங்கைகளுக்கு ஒரு காப்பகம் அமைக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும்” என்றார்.

மயங்கி விழுந்த நடிகர் விஷால்: இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் விஷால் இரவு 9.15 மணிக்கு பங்கேற்றார். முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியதும், நடிகர் விஷால் சுமார் 8 நிமிடம் பேசினார். பின்னர் அவர் இருக்கைக்கு திரும்பியதும், திருநங்கைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரது கைகளில் நடுக்கம் ஏற்பட்டது. அவரது கை மற்றும் கால்களை உதவியாளர்கள் தேய்த்துவிட்டனர். மேடையில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கூடியதால் காற்றோட்டம் குறைந்ததே, நடிகர் விஷால் உடல்நிலை பாதிப்புக்கு காரணம் என மேடையில் இருந்த திருநங்கைகள் கூறினர்.

மேடையில் ஒளிர்ந்த விளக்குகள் நிறுத்தப்பட்டன. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். இதனால் திருநங்கைகள் அதிருப்தி அடைந்தனர். அதன்பிறகு, கூடுதல் எண்ணிக்கையில் போலீஸார் மேடைக்கு விரைந்தனர். பின்னர் மயக்கம் தெளிந்ததும் இரவு 9.50 மணிக்கு அவரது காருக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவர், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி உதவியாக இருந்தார். முன்னதாக 108 ஆம்புலன்ஸூம் வரவழைக்கப்பட்டது. விஷால் மயங்கி விழுந்ததால், மிஸ் திருநங்கை விழா 20 நிமிடம் தடைப்பட்டு, இரவு 9.50 மணிக்கு மீண்டும் தொடங்கியது. இதனால் விழா மேடையில் பரபரப்பு நிலவியது.



By admin