பட மூலாதாரம், Getty Images
-
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளில் தமிழர் ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பது தேவிகுளம் (மூணாறு) தொகுதியில் மட்டுமே. அங்கு வாழும் லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களுக்கு, வாக்காளர் பட்டியலில் கேரளாவாசி என்றும், ரேஷன் கார்டுகளில் ‘கேரளாவில் வசிக்காதவர்’ (Non-Resident Kerala) என்றும் குறியிடப்படுவதால் நிலம் உள்ளிட்ட பல உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கூறுகின்றனர் அங்குள்ள தமிழர்கள்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலம் மற்றும் வீடு வழங்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தொடர்ச்சியாக இந்தத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக இருந்தும் இந்த பிரச்னைகளைத் தீர்க்கவில்லை என்பது இவர்களின் புகாராக உள்ளது.
கேரளத்தை 10 ஆண்டுகளாக ஆளும் இடது ஐக்கிய முன்னணி அரசின் மீது, காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் குற்றம் சாட்டும் நிலையில், இதுதொடர்பான கேள்விகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தற்போது தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினராகவும், இந்தத் தேர்தலின் வேட்பாளராகவும் உள்ள ஏ.ராஜா பதிலளிக்க மறுத்துவிட்டார்.
கேரள சட்டசபையில் ஒரேயொரு தமிழர் பிரதிநிதி
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள எல்லையோரப் பகுதிகளில் தமிழர்கள் பரவலாக வசித்து வருகின்றனர். கேரள தமிழ் பாதுகாப்பு இயக்கம் பகிர்ந்த தகவலின்படி, இடுக்கி மற்றும் பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்ட தேவிகுளம் (மூணாறு), பீர்மேடு, நெம்மாரா, மன்னார்காடு, மலம்புழா ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்ற அளவுக்கு கணிசமாக தமிழர்கள் வசிக்கின்றனர்.
மாநிலத்திலுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளில், இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம் (தனி) தொகுதியில் தமிழர்கள் பலமுறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏ.ராஜா இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளாக இத்தொகுதியை இந்த கட்சிதான் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் 2026 இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தேவிகுளம் தொகுதியில் 1,69,309 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்றும், அவர்களில் கிட்டத்தட்ட 90% பேர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்” என்றும் கூறுகிறார் மூணாறு பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் பிரபாஹரன். இவர், கொழிஞ்சாம்பாறை அரசு கலைக் கல்லூரி கெளரவ பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
மூணாறு மலைப் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தமிழர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து, ‘மலங்காடு’ என்ற நாவலை இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் எழுதியுள்ளார். காஞ்சிபுரம், வந்தவாசி, திருச்சி, திருநெல்வேலி, கோவை போன்ற பகுதிகளில் இருந்து 1880கள் முதல் ஆங்கிலேயர்களால் அழைத்து வரப்பட்ட தமிழர்களைக் கொண்டே 1900 ஆண்டுகளில் மாபெரும் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, 1910ஆம் ஆண்டில் ஒரு சிறிய நகரமாக மூணாறு உருவாக்கப்பட்டதாகக் கூறுகிறது ‘மலங்காடு’ நூல்.

தேயிலைத் தோட்டங்கள், கேரளாவின் முதல் நீர் மின் உற்பத்தித் திட்டமான பள்ளிவாசல் நீர்மின் திட்டம் மற்றும் மூணாறு நகரம் முழுவதையும் உருவாக்கிய தமிழர்களுக்கு, 5 தலைமுறை கடந்த பின்னும் ரேஷன் கார்டுகளில் என்ஆர்கே (Non-Resident Kerala) என்றே அடையாளம் தரப்படுகிறது என்கிறார் அவர்.
இதற்கான ஆதாரங்களையும் பிபிசியிடம் பகிர்ந்த எழுத்தாளர் பிரபாஹரன், ”என்ஆர்கே என்ற குறிப்பால்தான், சமூக நலத் திட்டங்களில் தமிழர்கள் பயன்பெற முடியவில்லை. இன்று வரை வீட்டுமனை கிடைக்காததற்கும் இதுதான் காரணம். ஆனால் வாக்காளர் பட்டியலில் மட்டும் கேரளாவாசி என்றுள்ளது. அதாவது வாக்காளராக நாங்கள் கேரளாவாசி. உரிமை என்று வரும்போது வெளியூர்வாசி” என்றார்.
தேவிகுளம் தொகுதியில் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தமிழர்கள் என்று கூறும் இடுக்கி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் முல்லை முருகன், இவர்கள் அனைவரும் தேயிலைத் தோட்டங்களில் உள்ள 120 டிவிஷன்களில் வசதிகளற்ற லேன் குடியிருப்புகளில் வசிப்பதாகக் கூறுகிறார். இவர்கள் யாருக்குமே, தமிழகத்தில் பூர்வீகத்துடன் எந்தத் தொடர்புகளும் இல்லாத நிலையில், 5 தலைமுறையாக வாழ்ந்த பிறகும் பலவிதமான உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர் கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய முல்லை முருகன், ”இங்கே இருக்கும் 50 ஆயிரம் தமிழ்க் குடும்பங்களில் பெரும்பாலானோர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்தான். மறையூர், காந்தலூர், வட்டமடை, கோவிலூர், தேவிகுளம், மூணாறு, பள்ளிவாசல், மாங்குளம், சின்னக்கடை ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களும் தமிழர்கள்தான். ஆனால் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிமைகளை இவர்கள் யாரும் பெற்றுத் தர முன்வருவதில்லை. குறைந்தபட்சம் என்ஆர்கே என்பதை நீக்கக்கூட நடவடிக்கை இல்லை” என்றார்.

நில உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு
லேன் வீடுகளில் ஒரு அறை மட்டுமே உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலம், வீடு, ஊதிய உயர்வு கோரி ”பொம்பிளை உரிமை” என்ற போராட்டம் வெடித்து அகில இந்திய அளவில் கவனம் ஈர்த்தது. அதன்பின் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, ஒரே ஒரு அறையுள்ள லேன் வீடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அந்த வீடுகளை இரு அறையுடையதாக விரிவாக்கம் செய்து தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆனால் ஊதிய உயர்வு தவிர, வேறு எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை என்கின்றனர் மூணாறு பகுதி தமிழ் மக்கள் பிரதிநிதிகள்.
”வனத்துறை, மின்சார வாரியத்திடம் உள்ள நிலம் தவிர, இங்குள்ள பெரும்பான்மை நிலங்கள், தேயிலைத் தோட்ட நிறுவனங்களின் குத்தகை நிலமாக இருப்பதால் இங்கே யாருக்கும் நிலமும் கிடைப்பதில்லை, வீடும் கட்ட முடிவதில்லை. தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் வரை ஓர் அறையுள்ள வீட்டில் இருக்கலாம். ஓய்வு பெற்றுவிட்டால் அதையும் விட்டுவிட்டு வெளியேற வேண்டியதுதான். ஐந்து தலைமுறைகளாக இருந்தும் ஒரு அடி நிலம்கூட கிடைக்காத அவலநிலை தொடர்கிறது” என்றார் முல்லை முருகன்.
கடந்த 2020 ஆகஸ்ட் 6 அன்று, மூணாறு பகுதியிலுள்ள பெட்டிமுடியில் நடந்த நிலச்சரிவில் 24 குடியிருப்புகள் சிதிலமடைந்து 70 பேர் உயிரிழந்தனர். இந்தக் குடியிருப்புகள் தொடர்பாக ஆய்வு செய்த நீதிபதி கிருஷ்ணன் ஆணையம், அந்தக் குடியிருப்புகள் குடியிருக்கவே தகுதியற்றதாக இருப்பதாகக் கூறி, அங்கு இருப்பவர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிலங்களை தோட்ட நிறுவனம் ஒதுக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தது. அந்த மக்களுக்கு நிலம் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கைப் பற்றி பிபிசி தமிழிடம் விவரித்தார், கேரள ஐபிஎஸ் அதிகாரியும், திருச்சூர் போலீஸ் அகாடமியின் இயக்குநருமான சேதுராமன். இவரது பெற்றோர், முன்னோர் அனைவரும் மூணாறு தேயிலை தோட்டத் தொழிலாளர்களாக இருந்தவர்கள். இவர் தற்போது கெளரவ செயலாளராகவுள்ள கண்ணன் தேவன் மலை மேம்பாடு மற்றும் நலச்சங்கம் (KDHDWS), இந்த வழக்கை தாக்கல் செய்த 9 தேயிலை தோட்டத் தொழிலாளர்களுடன் 10வது மனுதாரராக இணைந்துள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய சேதுராமன், ”ஜமீன் ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் கேரளத்தில் 1963ஆம் ஆண்டில் நிலச் சீர்திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் 1971ஆம் ஆண்டில், மூணாறு மலைப் பகுதிக்கென்றே கண்ணன் தேவன் மலை சீர்திருத்தச் சட்டம் பிரத்தியேகமாகக் கொண்டு வரப்பட்டது. அப்போது இங்கிருந்த ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசு எடுத்துக் கொண்டு, 58,769 ஏக்கர் நிலத்தை தோட்ட நிறுவனத்திடம் ஒப்படைத்தது. ஆனால் தொழிலாளர்களுக்கு ஒரு சென்ட் நிலம்கூட தரப்படவில்லை” என்றார்.
இப்போதும் கேரளத்தில் 129 தோட்ட நிறுவனங்களிடம் 5 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள், தேயிலை, காஃபி மற்றும் ரப்பர் தோட்டங்களாக மாற்றப்பட்டு, குத்தகை என்ற பெயரில் அனுபவிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். ஆனால் 5 தலைமுறையாக அங்கு தொழிலாளர்களாகப் பணியாற்றும் மக்களுக்கு வீடு கட்ட ஒரு சென்ட் இடம்கூட கிடைக்கவில்லை என்றும் அவர் விளக்கினார்.
”பெட்டிமுடி நிலச்சரிவில் 70 பேர் உயிரிழந்த பின், நிலம் வழங்குமாறு நிறுவனத்திடம் பேசினோம். அரசிடம் கோரினோம். எதுவும் ஏற்கப்படாததால்தான் சட்டப்பூர்வ தீர்வுக்காக இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. குத்தகை ஒப்பந்தப்படி மாங்குளம் பகுதியில் நிலமற்ற பிற மக்களுக்குக் கிடைத்த இடம்கூட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை. நிலம், வீடு எதுவுமின்றி அவர்கள் தோட்ட நிறுவனங்களிடம் பணியாற்றுகின்றனர்” என்றார் சேதுராமன்.
நிலச் சீர்திருத்த சட்டத்தில், தேயிலைத் தோட்ட நிறுவனங்களுக்கு விலக்கு கொடுத்துள்ள கேரள அரசு, பெட்டிமுடி போன்ற ஊர்களை உருவாக்கி, 5 தலைமுறையாக அங்கு வசிக்கும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு குத்தகை ஒப்பந்தப்படி வீடுகள் கட்ட நிலம் தர வேண்டுமென்பதுதான் இவர்கள் தொடுத்துள்ள மனுவின் கோரிக்கை.
பிபிசியிடம் பகிரப்பட்ட அந்த மனுவில் விரிவான தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இதற்குப் பின்பும் ஏராளமான தரவுகளை மனுதாரர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மிகவும் மெதுவாக நடந்து வருகிறது என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
கொத்துத்கொத்தாக இடம் பெயரும் தமிழர் குடும்பங்கள்
நிலம், வீடு இல்லாத காரணத்தால்தான் மக்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்ததால், மூணாறு பகுதியில் 1981 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது 78 ஆயிரமாக இருந்த தமிழர்களின் மக்கள் தொகை, 2011 கணக்கெடுப்பில் 20 ஆயிரமாகக் குறைந்துவிட்டது என்கிறார் சேதுராமன்.
தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கு போதிய அரசு கல்வி நிறுவனங்கள் இல்லை, அரசுப் பணி, அரசுத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு உதவும் வகையில், அலுவல் மொழியாகவுள்ள மலையாளத்தை தமிழ்க் குழந்தைகளைப் படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்படவில்லை, சாலை, பேருந்து வசதிகள் இல்லை, தோட்ட நிறுவனத்தின் மருத்துவமனை தவிர்த்து, வேறு அரசு சார்பிலான மருத்துவமனைகள் இல்லை என்று அங்குள்ள மக்களின் கோரிக்கை பட்டியல் நீள்கிறது.
ஆனால் தேவிகுளம் தொகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி, கேரளத்தில் வசிக்கும் ஒட்டு மொத்த தமிழர்களும் சுட்டிக்காட்டும் ஒரு பிரச்னை, புலம்பெயர் சான்று. கேரளத்தில் வசிக்கும் தமிழர்கள், உயர்கல்வி, வேலை வாய்ப்புக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றுக்கு (OBC) விண்ணப்பித்தால், அவர்களின் முன்னோர் 1950க்கு முன்பாக கேரளத்தில் வசித்ததற்கான சான்றை (Migration Certificate) சமர்ப்பிக்க வேண்டும் என்பதே அது.
”கடந்த 1950க்கு முன்பு, இங்கே இருந்த யாரும் படித்தவர்கள் இல்லை. அதனால் அவர்களுக்கு கல்விச்சான்றுகூட இருக்க வாய்ப்பில்லை. அதனால் தோட்ட நிறுவனத்திடம் சான்று வாங்கச் சொல்கின்றனர். அவர்கள் தர மறுக்கின்றனர். அதனால் பல ஆயிரம் தமிழ்க் குடும்பங்கள் இடம் பெயர வேண்டியுள்ளது. இது வேறு எங்குமே இல்லாத அநீதி” என்றார் எழுத்தாளர் பிரபாஹரன்.
கடந்த 5 ஆண்டுகளாகத்தான் இந்தச் சான்று கட்டாயமாகக் கேட்கப்படுவதாக, பிபிசியிடம் பேசிய பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகளும் தெரிவித்தனர்.

தேவிகுளம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 1991இல் இருந்து 2005 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே.மணியிடம் இதுகுறித்து பிபிசி பேசியது.
அவர், ”நான் எம்எல்ஏ-வாக இருந்தபோது, இந்த என்ஆர்கே குறியீடு போன்ற பிரச்னைகள் ஏதுமில்லை. நான் 15 ஆண்டுகள் எம்எல்ஏ-வாக இருந்தபோது, வெவ்வேறு திட்டங்களில் 5 ஆயிரம் தமிழ்க் குடும்பங்களுக்கு நிலம் வாங்கித் தந்திருக்கிறேன்” என்றார்.
”நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படியே, மாநில எல்லைகளில் வாழும் மொழிவாரி சிறுபான்மையினரிடம் இதுபோன்ற சான்று சமீபமாகக் கேட்கப்படுகிறது. அதைத் தவிர்க்க முடியாது என்றாலும் திருத்தலாம். தற்போது 1950 என்று நிர்ணயித்துள்ள காலத்தை 1980 அல்லது 2000 என்று மாற்றி, கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நாடாளுமன்றத்திற்கு அனுப்பலாம். அதைத் தற்போதுள்ள மக்கள் பிரதிநிதிகள் யாரும் செய்வதில்லை என்பதுதான் இந்த பிரச்னைக்குக் காரணம்” என்றார் ஏ.கே.மணி.
இதே தேவிகுளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2006இல் இருந்து 2021 வரை, 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் எஸ்.ராஜேந்திரன். மிகச் சமீபத்தில் பாஜகவில் இணைந்த இவர்தான், தற்போது தேவிகுளம் சட்டமன்றத் தொகுதிக்கான பாஜக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரிடமும் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணாதது பற்றி பிபிசி கேள்விகளை எழுப்பியது.
அதற்குப் பதிலளித்த அவர், ”கிறிஸ்தவரான தேவிகுளம் எம்எல்ஏ ராஜா, இந்து என்று கூறி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று சான்று வாங்கியது தொடர்பான வழக்கில்தான் அரசியலமைப்புச் சட்டப்படி 1950க்கு முன்பு முன்னோர் இங்கே இருந்தனர் என்பதற்கான சான்று பெற வேண்டுமென்று கட்டாயமாக்கப்பட்டது. அவர் எம்எல்ஏ என்பதால் சான்று வாங்கிவிட முடியும், மற்றவர்களுக்குத்தான் பாதிப்பு. அதேபோன்று ரேஷன் கார்டில் என்ஆர்கே என்பதும் கடந்த 5 ஆண்டாக இருக்கும் பிரச்னைதான். நான் எம்எல்ஏ-வாக இருந்தபோது அப்படியில்லை” என்றார்.
”நான் எம்எல்ஏ-வாக இருந்த 15 ஆண்டுகளில், 75 ஆயிரம் தமிழர்களுக்கு வீடுகள் கிடைக்கவும், 25 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுக்கவும் நடவடிக்கை எடுத்தேன். கடந்த 2008ஆம் ஆண்டில் 4,800 பேருக்கு இலவச நிலம் வழங்கப்பட்டது. ஆனால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் சட்டப்படி நிலம் கொடுக்க வாய்ப்பில்லை” என்றார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்.

கேரள தமிழ் அமைப்புகள் ஒன்றுபட்டு போராடுவதில்லையா?
ரேஷன் கார்டில் என்.ஆர்.கே என்று குறிப்பிடப்பட்டு இருப்பதால்தான், நிலம், வீடு உரிமை எதுவும் கிடைக்கவில்லை என்று கூறும் பலரும், தற்போதுள்ள தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ராஜாவுக்கும் இதே நிலைதான் என்கின்றனர்.
அதனால்தான் அவருக்கும் சொந்த வீடு இல்லை என்று கூறும் பலர், அவருக்கு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற சாதிச் சான்று வழங்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் கட்சி அவருக்குச் சாதகமாக இருந்ததால் இதுபற்றி அவர் பேசுவதில்லை என்கின்றனர்.
தற்போது தேவிகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள ஏ.ராஜா, மீண்டும் இந்தத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக் காலத்திலும், கடந்த 5 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக பணியாற்றும்போதும் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாதது குறித்துப் பல கேள்விகளையும் அவரிடம் பிபிசி தமிழ் முன்வைத்தது.

அதற்குப் பிறகு பதில் தருவதாகக் கூறிய அவர், அதன்பின் பல முறை தொடர்பு கொண்டபோதும் பதிலளிக்கவே இல்லை. அக்கட்சியின் சார்பில் பேசிய மூணாறு பகுதி நிர்வாகிகள், கேரளத்தில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கு முன்னேறிய சமுதாயத்தினர் (Forward Community) என்ற சான்று வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தருவது போலவே, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் (OBC) சான்று வழங்கப்படுகிறது என்று கூறி சில ஆதாரங்களையும் பகிர்ந்தனர்.
மூணாறு பகுதியில் பல்நோக்கு அரசு மருத்துவமனை அமைப்பதற்கு, கேரள அரசின் சுகாதாரத் துறை ரூ.68.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினர். ஆனால் கேரள அரசின் Life Mission திட்டத்தில் மாநிலம் முழுவதும் 4 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில், இங்குள்ள தமிழர்களுக்கு நிலம் இல்லாததால் 4 ஆயிரம் பேருக்குக்கூட வீடு கிடைக்கவில்லை என்கின்றனர் தமிழர் பிரதிநிதிகள். நிலம் இருந்தால் இந்தத் திட்டத்தில் அல்லது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடு கட்டியிருப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.

இந்தக் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாததற்கு, கேரள தமிழ் அமைப்புகளிடம் ஒற்றுமை இல்லாததையும் ஒரு காரணமாகச் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். இதை ஒப்புக்கொண்ட கேரள தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேச்சிமுத்து, ”மற்ற பிரச்னைகளைவிட, 1950க்கு முன்பு இங்கிருந்தவர்கள் என்பதை நிரூபித்தால்தான் சாதிச் சான்று என்பதுதான் தமிழர்களை மிகவும் பாதிக்கும் பிரச்னை” என்றார்.
”தமிழக எல்லைப் பகுதியான பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் வசிக்கும் கேரள மக்களுக்கு இதுபோன்ற எந்தவித கட்டுப்பாடும் இன்றி, அவர்கள் கோரும்படி சாதிச்சான்று வழங்கப்படுகிறது. அதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வாங்கி, கேரள அரசிடம் கொடுத்தும் இதுவரை இதற்குத் தீர்வு காணப்படவில்லை” என்றார் பேச்சிமுத்து.
இவர் கேரள அரசின் மொழிவாரி சிறுபான்மையினர் நல மாநிலக் குழு உறுப்பினராகவும் உள்ளார். கேரளத்திலுள்ள தமிழ் அமைப்புகளும், படித்த நல்ல நிலையிலுள்ள கேரள தமிழர்களும் ஒன்றுபட்டுத் தொடர்ந்து போராடினால் மட்டுமே இந்த கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்பது அவரின் கருத்தாக உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு