”வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் வந்ததும், வீட்டிலிருந்து நடந்து சென்றுதான் அதில் ஏறினார். அங்கே நடந்த பரிசோதனையில்தான் இந்த தொற்று பாதிப்பு தெரியவந்தது. பல நாட்கள் நினைவு திரும்பாமலே இருந்த அவர் அங்கேயே இறந்து விட்டார். நடந்து சென்றவரை சடலமாகத்தான் திரும்பக் கொண்டுவந்தோம்!”
அதற்கு மேல் பேசமுடியாமல் வெடித்து அழத்தொடங்கினார் பிந்து. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று பாதிப்பால் செப்டம்பர் 10-ஆம் தேதி இறந்துபோன 48 வயது கூலித்தொழிலாளி ஷாஜியின் மனைவி அவர். கடந்த ஆண்டில் அமீபா தொற்று பாதிப்புக்கு 39 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் இறந்தநிலையில், இந்த ஆண்டில் 9 மாதங்களுக்குள் (செப்டெம்பர் 30 வரை) 80 பேர் பாதிப்புக்குள்ளாகி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
நீர்நிலைகளில் உருவாகும் இந்த ஒற்றை அணு உயிரியான அமீபா, அசுத்தமான நீரைப்பயன்படுத்தும்போது மூக்கின் வழியாக உடலில் நுழைந்து, மூளையைத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர். இதுதொடர்பாக கேரளாவில் பிபிசி களஆய்வு செய்ததில், இந்த தொற்று பாதித்ததை உடனடியாக அறியாத காரணத்தால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தொற்று பாதிப்பைத் தடுக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய தொற்று பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை வேகப்படுத்தி உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
உலகில் இதுவரை சுமார் 400 வகையான அமீபாக்களை கண்டறிந்துள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதில் ஆறு வகைகள் மட்டுமே மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றில் நேக்ளீரியா ஃபவ்லெரி மற்றும் எகாந்தாமீபா என்கிற இரண்டும் மூளைத்தொற்றை உண்டாக்கக் கூடியவை என்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள்.
மூளையை தின்னும் நேக்ளீரியா ஃபவ்லெரி அமீபா –ஒரு விளக்கம்!
பிபிசி தமிழிடம் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் பகிர்ந்த தகவலின்படி, நேக்ளீரியா ஃபவ்லெரி (Naegleria fowleri), எகாந்தாமீபா (Acanthamoeba), சாப்பினியா (Sappinia), பாலமுத்தியா (Balamuthia), வெர்மீபா (Vermeeba) என 5 வகையான அமீபா பாதிப்புகள் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் நேக்ளீரியா ஃபவ்லெரி எனப்படும் அமீபாதான், உயிரிழப்பை அதிகமாக ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டில் கேரளாவில் 39 பேருக்கு இந்தத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு 9 பேர் இறந்தனர். உயிரிழப்பு விகிதம் 23 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் செப்டம்பர் 30 வரை, 80 பேர் இந்த தொற்று பாதிப்புக்குள்ளானதில் 21 பேர் இறந்துள்ளதாக பிபிசி தமிழிடம் கேரள சுகாதாரத்துறை தகவல் தந்துள்ளது.
உயிரிழப்பு விகிதம் 25 சதவீதம் என்ற அளவிலேயே இருப்பினும், நீர்நிலைகள் சார்ந்த இந்த அமீபா தொற்று பாதிப்பும், அதனால் ஏற்படும் மரணங்களும் உலகளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்த ஆண்டு எகாந்தாமீபா பாதிப்பு தான் அதிகமாக உள்ள நிலையில் நேக்ளீரியா ஃபவ்லெரி தொற்று ஏற்பட்டவர்களில் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிபிசி கள ஆய்வில் தெரிய வந்தது என்ன?
இந்நிலையில் கேரளாவில் இந்த தொற்று நோயின் பாதிப்பு குறித்து அறிவதற்காக பிபிசி தமிழ் களஆய்வு மேற்கொண்டது. மலப்புரம், கோழிக்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் இந்த தொற்று காரணமாக இறந்தவர்கள் மற்றும் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசியது.
கேரளாவில் 14 மாவட்டங்கள் இருக்கும் நிலையில், மலப்புரம் மாவட்டத்தில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கு இதுவரை 17 பேர் இந்த தொற்று பாதிப்புக்கு உள்ளானதில் 5 பேர் மரணமடைந்திருப்பதாக மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் ரேணுகா தெரிவித்தார். அவர்களில் ஒருவர்தான் மலப்புரம் மாவட்டம் கண்ணமங்கலம் கிராம ஊராட்சிக்குட்பட்ட வேங்கரா என்ற பகுதியைச் சேர்ந்த ரம்லா (வயது 52).
பிபிசி தமிழிடம் பேசிய ரம்லாவின் மகள் ரெஹானத், ”அம்மாவுக்கு தலைவலி, ஜலதோஷம் அதிகமாக இருந்தது. காய்ச்சலும் வந்தது. முதலில் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடமும், அதன்பின் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றோம். ஜலதோஷம் குறையாததால் கோழிக்கோடு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்குப் பரிந்துரைத்தனர்.” என்றார்.
”ஆகஸ்ட் 5 அன்று அங்கு சேர்த்தோம். தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்து ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என பல பரிசோதனைகள் எடுத்தனர். ஆனால் சிஎஸ்எஃப் டெஸ்ட் எடுத்த பின்பே இது உறுதி செய்யப்பட்டது. தொற்று நீக்க மருந்தை உட்கொண்டதும் அவருக்கு வாந்தி, நடுக்கம் ஏற்பட்டதால் மருந்து நிறுத்தப்பட்டது. மீண்டும் சிஎஸ்எஃப் டெஸ்ட் எடுத்து, மருந்தைத் தொடர்ந்தனர். ஆனால் கடைசி பாட்டில் மருந்து ஏறும்போதே இதயத்துடிப்பு அதிகமாகி, ஆகஸ்ட் 30 அன்று இரவு உயிரிழந்து விட்டார்.” என்றார்.
ரம்லாவுக்கு லேசான இதய பாதிப்பு இருந்ததையும், வீட்டிற்கு அருகிலுள்ள குளத்தில் குளிப்பது, துவைப்பது போன்ற செயல்களில் அன்றாடம் ஈடுபட்டு வந்ததையும் அவருடைய குடும்பத்தினர் உறுதி செய்தனர். காப்பில் குளம் என்ற அந்த குளத்தை பிபிசி தமிழ் நேரில் பார்த்தபோது, அங்கு கண்ணமங்கலம் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் ஓர் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது.
அதில், ”மூக்கின் வழியாக உடலுக்குள் சென்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அமீபா இக்குளத்தில் இருப்பதாக சுகாதாரக்குழு கண்டறிந்துள்ளது. அதனால் இங்கே குளிப்பது, முகம் கழுவுவது, மீன் பிடிப்பது, வாகனம் கழுவுவது, கால்நடைகளை குளிக்க வைப்பது போன்ற செயல்களைத் தவிர்க்கவும். அப்படிச் செய்தால் உடலுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு, மயக்கநிலை போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகவும்.” என்று கூறப்பட்டுள்ளது.
”அச்சமும் வேண்டாம்; அஜாக்கிரதையும் வேண்டாம்!”
அச்சம் வேண்டாமென்றும் அதே நேரத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்றும் மக்களுக்கு அந்த அறிவிப்பு அறிவுறுத்தியுள்ளது. ரம்லாவுக்கு மூளை தின்னும் அமீபா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்பே, அந்த எச்சரிக்கை வைக்கப்பட்டதாக தெரிவித்த கிராமத்தினர், அதற்கு முன்பு வரையிலும் அதில்தான் எல்லோரும் குளித்து, துவைத்து வந்ததையும் வீடியோக்களுடன் பகிர்ந்தனர்.
பிபிசி தமிழிடம் பேசிய ரம்லாவின் கணவர் முகம்மது பஷீர், ”நாங்கள் சிறுபிள்ளையாக இருக்கும் காலத்திலிருந்து இந்த குளத்து நீரைத்தான் எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி வந்தோம். இரவு வரையிலும் அங்கே குழந்தைகள் குளிப்பார்கள். எனது மனைவி அந்த குளத்திலும், குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்காலிலும் துணி துவைப்பார். அவருக்கு மட்டும் இந்த அமீபா தொற்று பாதிப்பு எப்படி வந்தது என்பதை எங்களால் அறியமுடியவில்லை.” என்றார்.
இந்த உயிரிழப்புகளால் கேரளா முழுவதும் நீர்நிலைகள் மீதான அரசின் கவனம் திரும்பியுள்ளது. அரபிக்கடலும், மேற்குத் தொடர்ச்சி மலையும் பின்னிப் பிணைந்துள்ள அழகான இயற்கை அமைப்பைக் கொண்டுள்ள கேரளாவிலுள்ள குளங்களும், கிணறுகளும் பெரும்பான்மையான கேரள மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகமுக்கிய அங்கம் வகிக்கின்றன.
மொத்தம் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ள கேரளாவில் 55 ஆயிரம் குளங்களும், 55 லட்சம் கிணறுகளும் இருக்கின்றன. குளிப்பது, துவைப்பது, மீன் பிடிப்பது என லட்சக்கணக்கான மக்கள் இவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இவற்றில் பல இடங்களில் உள்ள நீர்நிலைகள் மாசடைந்திருப்பதால் இத்தகைய அமீபாக்கள் தோன்றுவதாகக் கூறப்பட்டாலும் இவையனைத்தையும் ‘ஆபத்தான நீர்நிலைகள்’ என்று தடை செய்வது சாத்தியமில்லை என்றனர் பிபிசியிடம் பேசிய கேரள உள்ளாட்சிப் பிரதிநிதிகள்.
இருப்பினும் ஆகஸ்ட் மாதத்தில் 27 லட்சம் கிணறுகள் குளோரின் மூலமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. பொது சுகாதாரச் சட்டத்தின்படி நீச்சல் குளங்கள், வாட்டர் தீம் பார்க் மற்றும் மேல்நிலை நீர்த்தொட்டிகளை குளோரினேஷன் செய்வதற்கும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் குளங்களில் மீன்கள் இருப்பதால் குளோரினேஷன் தவிர்க்கப்படுகிறது.
கேரளாவில் 5 வகையான அமீபாக்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மண்ணிலும் இருக்கும் எகாந்தாமீபா தொற்று பாதிப்பே அதிகமிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
”தேங்கிய அசுத்தமான தண்ணீரில்தான் இந்த அமீபா உற்பத்தியாகிறது. அதில் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் இந்த அமீபா மூக்கின் வழியே மூளைக்குள் சென்று உயிருடன் இருந்து மூளையிலுள்ள திசுக்களை அழிக்கிறது. கிணற்றில் குளித்தவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சிலருக்கு முகத்தில் வேகமாகத் தண்ணீரை அடித்துக்கழுவும் பழக்கம் உள்ளது. அதேபோன்று மாற்று மருத்துவமுறையில் மூக்கின் ஒருபுறத்தில் உப்புத்தண்ணீரை ஊற்றி மறுபுறத்தில் வெளியேற்றி சுத்தம் செய்வதும் வழக்கமாகவுள்ளது. இவையிரண்டுமே ஆபத்தானவை.” என்றார் மாவட்ட மருத்துவ அலுவலர் ரேணுகா.
மூளையை தின்னும் அமீபா தொற்று பாதிப்பின் அறிகுறிகள்!
பிபிசி தமிழிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அலுவலர்கள் பலரும், இதுவரை காதின் வழியாக இத்தகைய அமீபா உடலுக்குள் சென்றதாக எந்தத் தகவலும் இல்லை என்றனர். அதேபோன்று இந்த அமீபா தொற்று பாதிப்பின் அறிகுறிகளையும் அவர்கள் விளக்கினர். இந்த தொற்று பாதித்த 5லிருந்து 10 நாட்களுக்குள் இத்தகைய அறிகுறிகள் ஏற்படுமென்கின்றனர்.
- கடுமையான தலைவலி ஏற்படும்; கழுத்தைத் திருப்பவே முடியாது. வெளிச்சத்தைப் பார்க்கமுடியாது.
- வாந்தி, காய்ச்சல் வரும். உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.
- வலிப்பு, நடுக்கம் சிலருக்கு ஏற்படும்.
- இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளால் சாப்பிடவே இயலாது.
குளம், கிணறுகளில் மட்டுமின்றி அசுத்தமான நீர் எங்கிருந்தாலும் அது அமீபா ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார் தொற்றுநோய் நிபுணர் அனீஷ். மலப்புரம் மாவட்டம், சேலேம்பரா புள்ளிப்பரம்பாவைச் சேர்ந்த ஷாஜி (48) என்ற கூலித் தொழிலாளியும் இதே அமீபா தொற்று பாதிப்பால் கடந்த செப்டம்பர் 10 அன்று மரணமடைந்துள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய ஷாஜியின் மனைவி பிந்து, ”ஆகஸ்ட் 9 அன்று அவருக்கு வலிப்பு வந்தது. ஆம்புலன்ஸ் வந்தபோது, அவரே நடந்து சென்று ஏறினார். கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்த பின் அவருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பின் சிஎஸ்எஃப் டெஸ்ட்டில் அமீபா தொற்று உறுதியானது. நினைவிழந்த நிலையில் ஆகஸ்ட் 14 அன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு இறுதிவரை நினைவு திரும்பவேயில்லை.” என்றார்.
ஷாஜியின் தாயார் விஜயகுமாரி, தன் மகனுக்கு இந்த தொற்று பாதிப்பு எப்படி வந்தது என்பதே தெரியவில்லை என்கிறார். கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்தான் இந்த நோய்க்கான சிகிச்சை வசதிகள் அதிகமிருப்பதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அந்த மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். அங்கு அமீபா தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு வார்டு (எண்:43) செயல்படுவதை பிபிசி தமிழ் நேரில் கண்டறிந்தது. அந்த வார்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீபா தொற்று பாதிப்பை கண்டறியும் சிஎஸ்எஃப் பரிசோதனை!
மூளையை தின்னும் அமீபாவான நேக்ளீரியா ஃபவ்லெரியைக் கண்டறிவதற்கு, சிஎஸ்ஃஎப் எனப்படும் பரிசோதனை முறை ((CSF-Cerebrospinal fluid) கையாளப்படுகிறது. இதில் தண்டுவடத்திலுள்ள நீரை மாதிரியாக எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. திரூரில் உள்ள ஷிகாப்தங்கள் கூட்டுறவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கண்காணிப்பாளர் மற்றும் அவசர மருந்துகள் பிரிவின் தலைவர் அல்தாப் கன்னத், இதைப்பற்றி பிபிசியிடம் விளக்கினார்.
”தண்டுவடத்திலுள்ள நீர் மாதிரியை எடுத்து அதிலிருந்து பல்வேறு உடற்கூறு பாதிப்புகளை அறியமுடியும். இந்த தொற்று பாதித்தவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும். குளுக்கோஸ் அளவு குறையும். சிலருக்கு புரோட்டீன் அளவு அதிகரிக்கும். இந்த பாதிப்பு வந்ததும் 5 நாட்களுக்குள் வந்து விட்டால் சிகிச்சையை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.” என்றும் மேலும் விளக்கினார் மருத்துவர் அல்தாப் கன்னத்.
”இந்த அமீபா, கேரளாவில் அதிகமாகவுள்ள குளங்கள், கிணறுகள், ஆறுகள் போன்ற இடங்களில் வெப்பம் நிறைந்த தேங்கிய நீரில்தான் உற்பத்தியாகிறது. குறிப்பாக குழந்தைகளையும், இளம் மற்றும் நடுத்தர வயதினரை இது அதிகம் பாதிக்கிறது. இந்த தொற்று பாதித்தால் 97 சதவீதம் மரணம் சம்பவிக்க வாய்ப்புள்ளதால் வருமுன் இதைத்தடுப்பதே சிறந்தது. தொற்று பாதிப்பில் 3 கட்டங்கள் உள்ளன. அதில் முதற்கட்டத்தில் கண்டறிந்து விட்டால் சிகிச்சையளித்து காப்பாற்ற முடியும்.” என்றார் மருத்துவர் அல்தாப்.
பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியைச் சேர்ந்த 28 வயது சிவில் இன்ஜினியர் ஸ்ரீஹரிக்கு, இந்த தொற்று பாதிப்பு தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சிஎஸ்எஃப் பரிசோதனையில் உடனே கண்டறியப்பட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு உடனே இதற்கான சிகிச்சையைத் துவக்கியதால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீஹரியின் சகோதரர் கோபாலகிருஷ்ணன், ”எனது தம்பிக்கு ஒரு நாள் கடுமையான தலைவலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்குச் சென்று மாத்திரை சாப்பிட்டதும் வலி குறைந்தது. மறுநாளும் தலைவலித்தது. மறுநாளும் அதே மருந்து எடுக்கப்பட்டது. மூன்றாவது நாளில் தலைவலியுடன் வாந்தியும் வந்தது. உடனே வாணியம்குளத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கே இந்த அமீபா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின் கோழிக்கோடு மருத்துவமனையில் உடனே சேர்த்து சிகிச்சை அளித்ததில் அவர் தற்போது நலமாக இருக்கிறார்.” என்றார் கோபாலகிருஷ்ணன்.
இதுவரை இந்த தொற்று பாதிப்பால் 21 பேர் இறந்திருந்தாலும், கேரளா மக்களிடம் பரவலாக இதுகுறித்த அச்சமும், விழிப்புணர்வும் இல்லை என்பது, பல்வேறு பகுதி மக்களிடமும் பேசியதில் தெரியவந்தது. கோழிக்கோடு ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், மக்களுக்கு இதைப்பற்றி எதுவும் தெரிவதுமில்லை, அச்சமும் இல்லை என்றனர்.
திரூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரியாஸ், ”டிவி செய்திகளில் பார்த்தே மக்கள் இதைப்பற்றித் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் மக்களுக்கு இதுபற்றி விழிப்புணர்வு எதுவுமில்லை.” என்றார்.
அமீபா தொற்று பாதிப்பும் கேரள அமைச்சரின் பதிலும்!
மூளையை தின்னும் அமீபா தொற்று பாதிப்பைக் கண்டறியும் வழிமுறை, இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான சிகிச்சை நெறிமுறைகள், விரைவாக தொற்று பாதிப்பைக் கண்டறிவதில் உள்ள சவால்கள், அமீபா உற்பத்தியாகும் இடங்களைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜிடம் சில கேள்விகளை பிபிசி முன் வைத்தது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் வீணா ஜார்ஜ், ”கடந்த 2 ஆண்டுகளில் கேரளாவில் 115 பேருக்கு அமீபா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டதில் 11 பேருக்கு மட்டுமே நேக்ளீரியா ஃபவ்லேரி அமீபா காரணமாக இருந்தது. மற்றவர்களுக்கு எக்காந்தாமீபாவே காரணமாயிருந்தது. நேக்ளீரீயா ஃபவ்லெரி ஊடுருவும் காலம் (incubation) 7லிருந்து 14 நாட்களுக்குள் என்பதால் இந்த பாதிப்பை விரைவாகக் கண்டறியமுடியும்.” என்றார்.
”கடந்த 2024 ஜூலை மாதம் கேரள அரசு வெளியிட்ட அமீபிக் மென்னிங்கோஎன்செப்லைடிஸ் (Amoebic meningoencephalitis) நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை தொழில்நுட்ப வழிகாட்டுதலின் அடிப்படையில் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவாக தொற்று பாதிப்பைக் கண்டறிந்து உடனே சிகிச்சையைத் துவங்குவதே இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் முக்கிய அம்சமாகவுள்ளது.” என்றும் அவர் மேலும் விளக்கினார்.
கடந்த ஆண்டில் அரசுக்குக் கிடைத்த தரவுகளின்படி, அனைத்து அமீபா தொற்று நோயாளிகளுக்கும் குளம் போன்ற நீர்நிலைகளில் நீந்திய அனுபவமில்லை என்று தெரியவந்ததால், வழக்கமான ஆபத்து அறிகுறிகள் இல்லாவிடினும் அமீபா தொற்று பாதிப்பு சந்தேகத்துக்கிடமாகவுள்ள அனைத்து நோயாளிகளுக்கும் அமீபா பரிசோதனை கட்டாயமாக்கும் முறையில் மாநில வழிகாட்டுதல் நெறிமுறைகள் திருத்தப்பட்டதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
மாநிலத்திலுள்ள சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் சிகிச்சைக் கண்காணிப்பு முறை (active surveillance) சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், ”சிஎஸ்எஃப் பரிசோதனையில் மூளைச்சுரப்பியில் உயிருடன் ஒற்றை உயிரணு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், மூலக்கூறு பரிசோதனைகள் (molecular methods) மூலம் அதன் வகைத்தன்மை உறுதி செய்யப்பட்டு, அதற்கேற்ப சிகிச்சை திட்டம் மாற்றப்படுகிறது.” என்றார்.
கோவிட், நிஃபா, பறவைக்காய்ச்சல், அமீபா என அடுத்தடுத்து தாக்குதலுக்குள்ளாகும் கேரளா இவற்றை எப்படி எதிர்கொள்கிறது என்ற கேள்விக்கு, ”கேரளாவின் பலம், சுகாதாரத்துறையின் செயல்திட்டங்களில் உள்ள கண்காணிப்பும் (proactive surveillance) புதிய தொற்றுகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் திறனும் சுகாதாரக் கட்டமைப்பும்தான்.” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு