கொட்டாவி விட்ட பிறகு வாயை மூட முடியாவிட்டால் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்வது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் கேரள மாநிலம் கொச்சியில் பணியாற்றி வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அதுல் பிஸ்வாசுக்கு இந்த அனுபவம் நேர்ந்தது.
கன்னியாகுமரி–திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அந்த 24 வயது இளைஞருக்கு, பாலக்காடு சந்திப்பில் இந்த பிரச்னை ஏற்பட்டபோது, அதிகாலை 2 மணி. உடன் பயணம் செய்தவர்கள், டிக்கெட் பரிசோதகரிடம் இதைப் பற்றிக் கூறியுள்ளனர். அவர் அங்கிருந்த ரயில்வே மருத்துவமனை அதிகாரிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். உடனே பாலக்காடு ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்த ரயில்வே மருத்துவ அலுவலர் ஜிதின், அந்த இளைஞருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். அடுத்த நிமிடமே வாய் மூடிவிட்டது. அதே ரயிலில் அந்த இளைஞர் தன் தீபாவளி பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.
ஐந்தே நிமிடங்களில் சிகிச்சை முடிந்து எல்லாம் சரியாகிவிட்டாலும் ரயிலில் பயணம் செய்யும்போது இளைஞருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு, ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது. சமூக ஊடகங்களிலும் அந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டது.
இயற்கையாக உடலில் நிகழும் கொட்டாவியின்போது இப்படி ஒரு பிரச்னை ஏற்படுவதற்குக் காரணமென்ன?
“பெரிதாக வாயை திறக்கும்போது ஏற்படும் பிரச்னை”
படக்குறிப்பு, ரயில்வே மருத்துவ அலுவலர் ஜிதின், அந்த இளைஞருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்.
அந்த இளைஞருக்கு ஏற்பட்ட பாதிப்பை டெம்போரோமாண்டிபுலர் மூட்டுகள் இடப்பெயர்வு (Temporomandibular Joints Dislocation) என விவரிக்கிறார் மருத்துவர் ஜிதின்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய அவர், ”நான் அடிப்படையில் காது, மூக்கு, தொண்டை நிபுணர். அன்றைய தினம் காலையில் பாலக்காடு ரயில்வே மருத்துவமனையில் பணியில் இருந்தேன். அதிகாலை 2:15 மணிக்கு எனக்குத் தகவல் வந்ததும், நான் அங்கே விரைந்து சென்றேன். அதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு அந்த இளைஞர் கொட்டாவி விட்டபோது மீண்டும் வாயை மூடமுடியவில்லை. இந்தத் தகவலைக் கேட்டதும் இது ‘டிஎம்ஜே’ ஆகத்தான் இருக்கும் என்று கணித்துவிட்டேன். அதற்கான ஏற்பாட்டுடன் நான் ரயில்வே நடைமேடைக்குச் சென்றேன்.” என்றார்.
”அந்த இளைஞர் முன்பதிவு பெட்டியில்தான் இருந்தார். அவரை அங்கிருந்து இறக்கி, நடைமேடையிலுள்ள இருக்கையில் வைத்தே சிகிச்சை அளித்தேன். கையில் கிளவுஸ் அணிந்து, கீழ்தாடையின் பந்து மூட்டில் ஏற்பட்டிருந்த ‘லாக்’கை விரலை வைத்து விடுவித்தேன். ஐந்தே நிமிடங்களில் அந்த இளைஞர் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார். அதற்கு முன் அந்த இளைஞர் தனக்கு வாய் மற்றும் முகப்பகுதியில் வலி இருந்ததாகத் தெரிவித்தார். இது அவருக்கு முதல்முறை ஏற்பட்டுள்ளது என்று தெரிந்தது” என்கிறார் மருத்துவர் ஜிதின்.
திருச்சூர் ரயில் நிலையத்தைத் தாண்டும்போது இந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும், அடுத்த ரயில் நிலையமான பாலக்காட்டில் அவருக்கு இது சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட இளைஞருக்கு 24 வயது தான் என்பதால், எலும்புகள் மற்றும் தசைப்பகுதிகள் பலமாக இருந்ததால் வலியும் அதிகமாக இருந்திருக்கும் என்ற மருத்துவர் ஜிதின், இத்தகைய நிலை ஏற்படும்போது பெரும்பாலும் சில நிமிடங்களில் சரி செய்துவிட முடியும், அரிதாக சிலருக்கு மட்டுமே சர்ஜரி தேவைப்படலாம் என்றும் கூறினார்.
அதேநேரத்தில், எல்லோருக்கும் இதனால் வலி ஏற்படுமென்று கூறமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
இந்த தாடை விலகல் பற்றி பிபிசி தமிழிடம் விரிவாக விளக்கிய பல் சீரமைப்பு நிபுணர் மருத்துவர் பாலச்சந்தர், ”முகத்தில் இரு காதுக்கும் கீழேயிருக்கும் இணைப்புகள்தான் ‘டெம்போரோமாண்டிபுலர் இணைப்பு’ எனப்படுகின்றன. இந்த இணைப்புக்கு மேலே ஒரு எலும்பு (Temporal bone) கீழே ஒரு எலும்பு (condyle of the mandible) இந்த இரண்டுக்கும் நடுவில் ஒரு டிஸ்க் இருக்கும். இது மூன்றும் சேர்ந்துதான் ‘டெம்போரோமாண்டிபுலர் ஜாய்ன்ட்ஸ் ப்ளஸ் லெக்மென்ட்ஸ்’ ஆகக் குறிக்கப்படுகிறது” என்று அந்த அமைப்பை விளக்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”வாயை மெதுவாகத் திறக்கும்போது, கீழ் தாடை மட்டும் லேசாக சுழலும். சற்று பெரிதாக வாய் திறக்கும்போது, இந்த கீழ் எலும்பும், டிஸ்க்கும் சேர்ந்து சற்று முன்னே நகர்ந்துவரும். எமினென்ஸ் எனப்படும் ஸ்டாப்பருடன் அது நின்று விடும். சிலருக்கு சில நேரங்களில் கீழ் எலும்பும், டிஸ்க்கும் ஸ்டாப்பரைத் தாண்டி வந்துவிடும். திரும்பவும் உள்ளே போகாது. அதைத்தான் டெம்போரோமாண்டிபுலர் மூட்டுகள் இடப்பெயர்வு என்கிறோம். இது இரு பக்கமும் நிகழும். காரணம், வாயை அளவுக்கு அதிகமாகத் திறப்பதுதான்.” என்றார் பாலச்சந்தர்.
படக்குறிப்பு, பல் சீரமைப்பு நிபுணர் மருத்துவர் பாலச்சந்தர்
மருத்துவர்களால் தரப்படும் சிகிச்சை முறை என்ன?
இதுபோன்று பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு தரப்படும் சிகிச்சை முறையை விளக்கும் மருத்துவர் பாலச்சந்தர், ”இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு , திறந்திருக்கும் வாய்ப் பகுதியில் பற்களுக்கு இடையில் காஸ் (Gauze- மெல்லிய துணி) வைத்து, பற்களை இறுகப் பற்றிக் கொள்ளச்செய்து, நாடியை சற்று மேலே துாக்கி இணைக்கும்போது சரியாகிவிடும். சிலருக்கு மருத்துவர்கள் கைவிரல்களில் காஸ் சுற்றிக்கொண்டு, அந்த தாடை கீழ் எலும்பையும், டிஸ்க்கையும் ஒரு அழுத்து அழுத்தி பழைய நிலைக்குக் கொண்டு வருவோம்.” என்று விளக்கினார்.
ஆனால் உடலில் ஏற்படும் பலவிதமான உறுப்பு இடப்பெயர்வுகளில் இந்த கீழ்தாடை விலகல் (டிஎம்ஜே) என்பது மிகமிகக் குறைவான சதவீதமே என்கிறார் எலும்பு முறிவு சிகிச்சை நிபணர் கார்த்திக். லண்டனில் எலும்பு முறிவு சிகிச்சைக்கான முதுகலைப்பட்டம் (F.R.C.S.) படித்துள்ள இவர், பிரிட்டன், அமெரிக்கா, நியூஸிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 18 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றியிருக்கிறார்.
”இந்த இடப்பெயர்வில் அதிகளவு பாதிப்புக்குள்ளாவது தோள்பட்டைதான். அடுத்ததாக முழங்கை இணைப்பிலும் (elbow joint) விரல் இணைப்புகளிலும் அதிக பாதிப்பு ஏற்படும். இவற்றில் டிஎம்ஜே தவிர, மற்றவை விபத்துகளின் போது அல்லது விளையாடும் போது ஏற்பட வாய்ப்பு அதிகம்.” என்கிறார் மருத்துவர் கார்த்திக்.
இதேபோன்ற மற்றொரு சம்பவத்தை விளக்கிய அவர், ”முழு போண்டாவை ஒரே வாயில் சாப்பிட முயன்ற ஒருவர், இதேபோன்று வாயை மூடமுடியாமல் என்னிடம் வந்தார். அவருக்கு ஒரே நிமிடத்தில் வாய்க்குள் கையை வைத்து கீழ் தாடை எலும்பு நகர்வை சரி செய்ததும் மீண்டும் நார்மலுக்கு வந்துவிட்டார். இத்தகைய பாதிப்பு அரிதிலும் அரிதாகவே நடக்கிறது. ஆனால் இது இயற்கையாக திடீரென நடப்பதால் புதிதாகப் பாதிக்கப்படுவோர்க்கு அச்சம் ஏற்படும்,” என்கிறார்.
படக்குறிப்பு, உடலில் ஏற்படும் பலவிதமான உறுப்பு இடப்பெயர்வுகளில் கீழ்தாடை விலகல் (டிஎம்ஜே) என்பது குறைவான சதவீதமே என்கிறார் எலும்பு முறிவு சிகிச்சை நிபணர் கார்த்திக்.
மருத்துவர் இல்லாத இடத்தில் செய்ய வேண்டியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ‘இத்தகைய பாதிப்பு ஏற்படுபவர்கள் வாயை அதிகம் திறக்காமல் இருக்க வேண்டும்’ (சித்தரிப்புப் படம்)
இத்தகைய பாதிப்பு ஏற்படுபவர்கள், வழக்கமாக கொட்டாவி, தும்மல் ஏற்படும்போது, தாடையின் கீழ் பகுதியை லேசாகப் பிடித்துக் கொண்டு, வாயை அதிகம் திறக்காமல் இருக்க வேண்டும் என்று கூறும் பல் சீரமைப்பு மருத்துவர் பாலச்சந்தர், புல்லாங்குழல், சாக்ஸஃபோன் போன்றவற்றை வாசிப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது அவசியம் என்கிறார்.
அதேநேரத்தில், “இது ஒரு பெரிய பிரச்னையில்லை. அடிக்கடி ஏற்பட்டால், உங்களுக்குத் தெரிந்த பல் மருத்துவரை அணுகினால் அவர்கள் இதைச் சரி செய்ய உரிய ஆலோசனை வழங்குவார்கள்.” என்றும் கூறுகிறார்.
“ஒருவேளை மருத்துவரை எளிதில் அணுக முடியாத போது இந்த பாதிப்பு ஏற்பட்டால், இரு கட்டை விரல்களையும் கீழ் தாடையின் மீதும், மற்ற விரல்களை நாடிப்பகுதியிலும் வைத்து கட்டை விரலை மேலேயிருந்து கீழே இழுத்தால் சரியாகிவிடும். இதனால் சிலர் பதற்றமாவதால் மூச்சுத்திணறல் ஏற்படும். அதனால் இதற்காக பதற்றமே அடையக்கூடாது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அடிக்கடி இது ஏற்படும் பட்சத்தில், இதற்கு மேல் சிகிச்சை தர வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.” என்றார் பாலச்சந்தர்.
இயற்கையாக ஏற்படும் இந்த உறுப்பு இடப்பெயர்வை தவிர, மற்ற அனைத்துமே விபத்துகளின் போதும், விளையாடும் போதும் மட்டுமே ஏற்படும் என்கிறார் மருத்துவர் கார்த்திக்.
இளம்பெண்களுக்கு கால்களில் பெட்டாலா இடப்பெயர்வு (Betala dislocation) அதிகளவில் ஏற்படுவதாகக் கூறும் அவர், குண்டாக இருக்கும் சில பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் பெரிதாக இருப்பதால் முழங்கால் மூட்டுக்கு மேலே இருக்கும் சிப் கழன்று விடுவதே இந்த பாதிப்பு என்று விளக்கினார்.
”உடற்பயிற்சி செய்யாமலிருக்கும் குண்டான பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படும். ஆனால் பலருக்கு தானாகவே சரியாகிவிடும். அந்த நேரத்தில் ஒரு வலி ஏற்படும். இதேபோன்று பாதம், இடுப்பு, தோள்பட்டை போன்ற இடங்களில் ஏற்படும் இடப்பெயர்வுகளுக்கு மயக்க மருந்து கொடுத்தே சரி செய்ய வேண்டியிருக்கும். சில நேரங்களில் விரல்களில் ஏற்படும் இடப்பெயர்வுக்கு அந்த இடத்தில் மட்டும் உணர்வற்ற நிலையை ஏற்படுத்தும் மயக்க மருந்து தரவேண்டியிருக்கும். அதற்குப் போடப்படும் ஊசியின் வலியை விட, அந்த விரலை சரி செய்யும்போது ஏற்படும் வலியே குறைவாகத்தான் இருக்கும்.” என்றார் மருத்துவர் கார்த்திக்.