கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள போக்சோ நீதிமன்றம், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக மதராஸா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், இந்தியாவில் கோவிட் தொற்றுநோய் தீவிரமாக இருந்த 2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் நடந்தது.
2018 ஆம் ஆண்டில் மற்றொரு பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 41 வயதான முகமது ரஃபி ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், இந்த மாணவியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
கேரளாவில் மதராஸா ஆசிரியருக்கு வழங்கப்பட்ட நீண்டகால சிறைத் தண்டனை தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நீண்டகால சிறைத் தண்டனை ஏன் ?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்பு படம்
மதராஸா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு குறித்து, பிபிசி இந்தியிடம் பேசிய அரசு வழக்கறிஞர் ஷெரிமோல் ஜோஸ், “இந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது, அவருக்கு 13 வயது. அந்த நேரத்தில், மாணவியின் பெற்றோர் அவரது நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்தனர். அப்பெண் படிப்பில் பின்தங்கியிருந்தார். பெற்றோர் அவரை ஒரு ஆலோசகரிடம் அழைத்துச் சென்றனர். ஆசிரியர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்போது அப்பெண் கூறினார். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் குற்றத்தை ஒன்றுக்கு மேற்பட்ட முறை செய்ததால் இந்த நீண்டகால தண்டனை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
அதற்கான காரணத்தையும் ஷெரிமோல் ஜோஸ் விளக்கினார்.
போக்சோ சட்டத்தின் பிரிவு 5(t) இன் கீழ், ஐம்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது . பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்களை ‘பாலியல் வன்கொடுமை’ செய்தவர்களுக்கு, இந்தச் சட்டம் தண்டனை வழங்குகிறது.
போக்சோ சட்டத்தின் பிரிவு 5 (f) இன் கீழ் (ஆசிரியராக நம்பிக்கை துரோகம் செய்ததற்காக) அவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை தொடர்பான இரண்டாவது குற்றத்திற்கு பிரிவு 5(l) இன் கீழ் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போக்சோ சட்டத்தின் பிரிவு 3(A) மற்றும் பிரிவு 3(D) (வாய்வழியாக உறவு கொள்ள வற்புறுத்துதல் ) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிசி பிரிவு 376 (3) இன் (16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தல்) கீழ் அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஐபிசி பிரிவு 506 (2) (மிரட்டல்) இன் கீழ் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
“இந்த தண்டனைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் செயல்படும். அதனால், ரஃபி 50 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும்” என்று ஷெரிமோல் ஜோஸ் கூறினார்.
என்ன நடந்தது?
பட மூலாதாரம், Getty Images
ரஃபி மாணவியை மிரட்டி தனது வகுப்பறைக்கு அருகில் இருந்த மற்றொரு வகுப்பறைக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜோஸ் கூறினார்.
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த ரஃபி திருமணமானவர் என்றும் கூறிய ஜோஸ், “இந்த சம்பவங்களுக்குப் பிறகு, ரஃபியின் மனைவி அவரை விவாகரத்து செய்துவிட்டார்” என்று குறிப்பிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ரஃபி மேல் முறையீடு செய்வாரா இல்லையா என்பது குறித்து அவரது வழக்கறிஞரிடமிருந்து எந்தக் கருத்தையும் பெற முடியவில்லை. தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் அவரது வழக்கறிஞரை பிபிசி இந்தி தொடர்பு கொண்டது. ஆனால் அவரது தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்பு படம்
சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன?
187 ஆண்டு கால சிறைத்தண்டனை சட்ட வல்லுநர்களையும் வழக்கறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் இந்திய தண்டனைச் சட்டத்தில் இவ்வளவு நீண்டகால சிறைத் தண்டனை விதிப்பதற்கு எந்த குறிப்பிட்ட பிரிவும் இல்லை.
இந்த வழக்கு குறித்து கர்நாடக அரசின் முன்னாள் வழக்கறிஞர் பி.டி. வெங்கடேஷ் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், “பொதுவாக, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. நீதிமன்றத்தால் மரண தண்டனையும் வழங்க முடியும். ஆனால் இந்தியா அமெரிக்கா அல்ல. அமெரிக்காவில் ஒருவரின் ஆயுளை விட அதிகமான காலத்தை தண்டனையாக விதிக்கும் ஒரு வழக்கம் உள்ளது.
முன்னதாக, ஒரு போக்சோ நீதிமன்றம் ராபின் வடக்கம்சேரி (48) என்ற பாதிரியாருக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
2016ம் ஆண்டு, 16 வயது சிறுமி தேவாலயத்திற்காக தரவுகளை உள்ளீடு செய்யும் பணியை மேற்கொண்ட போது, அச்சிறுமியை ராபின் என்ற பாதிரியார் பாலியல் வன்கொடுமை செய்தார்.
பின்னர் அந்தப் சிறுமி உள்ளூர் மருத்துவமனையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.
திருமணத்துக்கான வயதை அடைந்த பிறகு, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அப்பெண் ராபினை திருமணம் செய்து கொள்ள அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே ராபின் தேவாலயத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தார். ராபின் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார்.
குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் போது தந்தையின் பெயர் கட்டாயம் என்பதால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அந்தப் பெண், பாதிரியாரை திருமணம் செய்து கொள்ளும் வகையில், அவரது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் விரும்பினார்.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தை அடைந்தது. ஆனால் மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.