பட மூலாதாரம், Getty Images
வெளிநாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்காக ஒரு புதிய விசா திட்டத்தை சீனா ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்தது. அப்போது அது பெரிதாக கவனிக்கப்படவில்லை.
ஆனால் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்த கே விசா, கடந்த வாரம் திடீரென பேசுபொருளானது.
காரணம், ஒரு இந்திய ஊடகம் அதனை “சீனாவின் ஹெச்-1பி ” என்று குறிப்பிட்டது. அமெரிக்காவின் ஹெச்-1பி விசா திறன்மிகு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கானது. கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அதற்கான கட்டணத்தை உயர்த்தியது
இந்த விசாவை அதிகம் பயன்படுத்துபவர்களாக இந்தியர்கள் உள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் இந்த விசா பெற்றவர்களில் 70% க்கும் அதிகமானோர் இந்தியர்கள் தான்.
இந்திய ஊடகம் வெளியிட்ட அச்செய்தி, சீன ஊடகங்களில் பரவியதும், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை தூண்டியது.
வெளிநாட்டினருக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுவதாக இருந்தால், ஏற்கனவே சிரமத்தை எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பு சந்தையில் போட்டி இன்னும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இதுவரை வெளிநாட்டு நிபுணர்கள் குடியேறுவதற்கான முக்கிய இலக்காக சீனா இருந்ததில்லை. ஆனால் இந்த விவகாரம், பொதுமக்களிடையே குழப்பத்தையும், சிலரிடம் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இந்த கே விசா வெளிநாட்டினர் சீனாவில் வேலை செய்ய அனுமதிக்குமா, இல்லை நாட்டிற்குள் எளிதாக நுழைய மட்டும் வாய்ப்பு தருமா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஆனாலும், சீனாவின் சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கானோர் இந்த திட்டத்தை எதிர்த்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
“இங்கே ஏற்கனவே இளங்கலைப் பட்டதாரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதைவிட அதிகமானோர் முதுகலை, முனைவர் பட்டங்களுடன் உள்ளனர். நம்மிடம் உள்ளூர் திறமைகள் போதுமான அளவில் உள்ள நிலையில், இப்போது ஏன் வெளிநாட்டு பட்டதாரிகளை கொண்டு வருகிறீர்கள்?” என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.
“பல புதிய திட்டங்கள் மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டியிடும்படி செய்கின்றன. ஆனால் இறுதியில், வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவருக்கே அதிக மதிப்பு உள்ளது.” என்று சமூக வலைதளமான வெய்போவில் மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
அதிகாரிகளால் உண்மையாகவே திறமையான நிபுணர்களை கொண்டு வர முடியுமா என்று சிலர் கேள்வி எழுப்பினர். அதேபோல் , மொழி சார்ந்த தடைகளும், கடுமையான அரசியல் கட்டுப்பாடுகளும் இருப்பதால், வெளிநாட்டினரால் சீனாவில் வாழ முடியுமா என்றும் கேள்வி எழுப்பினர்.
சில கருத்துகளில் வெளிநாட்டினர் மீதான விரோதமும், இனவெறியும் காணப்பட்டது – குறிப்பாக இந்த கருத்துக்கள் இந்தியர்களை குறிவைத்தது
எதிர்வினை அதிகரித்ததால், அரசு ஊடகங்கள் இந்த கூச்சலை அமைதிப்படுத்த முயற்சித்தன.
திங்களன்று, குளோபல் டைம்ஸ் இந்த திட்டத்தை ஆதரித்து ஒரு கட்டுரை வெளியிட்டது. அதில், “இது புதிய காலத்தில், சீனா தன்னம்பிக்கையுடன், திறந்த மனப்பான்மையுடன் இருப்பதை உலகுக்கு காட்டும் நல்ல வாய்ப்பு” என்று குறிப்பிட்டிருந்தது.
செவ்வாயன்று பீப்பிள்ஸ் டெய்லி “கே விசாவை தவறாக சித்தரிப்பது பொதுமக்களைத் தான் தவறாக வழிநடத்தும்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டது.
“சீனா உலக அரங்கில் முன்னேறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், திறமைகளுக்கான தேவை முன்பை விட அதிகரித்துள்ளது,” என்றும் அந்த கட்டுரை கூறியது.
பட மூலாதாரம், Cheng Xin/Getty Images
கே விசா என்றால் என்ன?
இந்தத் திட்டத்தில் முழுமையாக என்னென்ன அடங்கும் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற (STEM) துறைகளில் பணிபுரிபவர்களுக்கானது என்று சீன அரசு கூறியுள்ளது.
“கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாசாரம், தொழில்முனைவோர் மற்றும் வணிக நடவடிக்கைகள் தொடர்பான பரிமாற்றங்களுக்கான விசா” என்று அதிகாரிகள் இதை விவரித்துள்ளனர்.
“சீனா அல்லது வெளிநாடுகளில் உள்ள நன்கு அறியப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களில் STEM துறையில் இளங்கலை அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்றவர்கள் அல்லது அந்த நிறுவனங்களில் கற்பிப்பவர்கள் அல்லது ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்பவர்கள்” இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட ஊடகக் குறிப்பில் அரசாங்கம் கூறியது.
ஆனால் இந்த விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு குறித்தோ, இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெறும் பல்கலைக்கழகங்கள் குறித்தோ எந்த விபரங்களும் இன்னும் வழங்கப்படவில்லை.
குறிப்பிடத்தக்க வகையில், வெளிநாட்டு நிபுணர்கள் இந்த விசா பெற ஒரு சீன நிறுவனத்தில் வேலை பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
சீனாவுக்குள் எத்தனை முறை நுழையலாம், எவ்வளவு காலம் விசா செல்லுபடியாகும், எவ்வளவு நாள் தங்கலாம் போன்றவற்றில் அவர்களுக்கு தளர்வு கிடைக்கும்.
பட மூலாதாரம், Getty Images
பொதுமக்களின் பதற்றத்தைக் குறைக்க அரசு ஊடகங்கள் முயன்றாலும், கே விசாவின் செயல்பாடுகள் குறித்து தெளிவான விளக்கத்தை அரசு இன்னும் வழங்கவில்லை. தகுதி பெற்ற வெளிநாட்டினர் சீனாவில் வேலை செய்ய இந்த விசா அனுமதிக்குமா? போன்று பலரின் மனதிலும் உள்ள முக்கியக் கேள்விக்கும் இன்னும் பதில் கிடைக்கவில்லை.
இந்த வாரம் வெளியான கட்டுரையில் குளோபல் டைம்ஸ், கே விசா ஹெச்-1பிக்கு ஒப்பானது அல்ல என்றும், இது “வெறுமனே பணி புரிய அனுமதிக்கும் விசா மட்டும் அல்ல” என்றும் கூறியது.
அதே சமயம், இந்த விசா “சீனாவில் வேலை செய்து வாழ்வதற்கு இளம் வெளிநாட்டு அறிவியல், தொழில்நுட்ப நிபுணர்களுக்கு வசதியாக இருக்கும்” என பீப்பிள்ஸ் டெய்லி குறிப்பிட்டது. ஆனால், அதை “குடியேற்றத்துடன் (immigration) ஒப்பிடக்கூடாது” என்றும் வலியுறுத்தியது.
இந்த விசா குறித்து கூடுதல் விபரங்களை வெளிநாடுகளில் உள்ள சீன தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் வெளியிடும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
பட மூலாதாரம், Getty Images
சீனாவின் லட்சியங்களும் வரம்புகளும்
அமெரிக்கா சர்வதேச திறமையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான முக்கிய இடமாக இருந்து வந்த நிலையில், தற்போது அந்த இடத்தில் இருந்து பின்வாங்கி வருகிறது. இதை பயன்படுத்தி சீனா முன்னேற முயற்சி செய்கிறது.
சீனாவின் கே விசாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பே நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், டிரம்ப் நிர்வாகம் H-1B விசா கட்டணங்களை அதிகரித்த அதே நேரத்தில் சீனாவின் அறிவிப்பும் வந்தது
இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு திறமையான தொழிலாளர்களை வழங்கும் இரண்டு பெரிய நாடுகளான இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா, கல்வி மற்றும் வணிகம் போன்ற பல துறைகளில் வெளிநாட்டினரை ஈர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் சீனாவின் சமீபத்திய முயற்சிதான் இந்த திட்டம்.
ஜூலை மாதம் வரை, சீனா 75 நாடுகளுடன் விசா விலக்கு ஒப்பந்தங்களை செய்துள்ளது. இதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சீனாவிற்கு எளிதாகச் செல்ல முடிகிறது.
உலகின் தலைசிறந்த அறிஞர்களை ஈர்க்கும் சீனாவின் முயற்சியால், சில புகழ்பெற்ற அறிஞர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறி, சீன பல்கலைக்கழகங்களில் இணைந்துவிட்டனர்.
“சில நாடுகள் வெளிநாட்டினரை ஒதுக்க முயற்சி செய்யும் நேரத்தில், சீனா இந்த முக்கியமான வாய்ப்பை தீவிரமாகப் பயன்படுத்தி, உடனடியாக அதற்கேற்ற கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது”என பீப்பிள்ஸ் டெய்லி கூறுகிறது.
ஆனால் இந்த முயற்சிக்கும் சில வரம்புகள் உள்ளன என்கிறார்கள் நிபுணர்கள்.
”சீனாவில் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு சலுகை கொடுக்கப்படுகிறது என்ற எண்ணம் எழும்போதெல்லாம், அதைப் பற்றி பொதுமக்கள் இணையத்தில் எதிர்ப்பு தெரிவித்து, கடுமையாக விமர்சிப்பது வழக்கமாகி வருகிறது” என்கிறார் ஆசியா ப்ரீஃபிங்கின் ஆசிரியரான கியுலியா இன்டெரெஸ்.
சமூக ஊடகங்களில் நடக்கும் விவாதங்கள் மக்களின் முழு உணர்வையும் பிரதிபலிக்காமல் இருக்கலாம்.
ஆனால் “கொள்கைகளை செயல்படுத்துவது என்பது வெறும் சட்ட ரீதியான வடிவமைப்பு மட்டுமல்ல, பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதும், உள்நாட்டில் ஒரு ஒருமித்த கருத்தை உருவாக்குவதும் கூட,” என்பதை இந்த சர்ச்சை வெளிப்படுத்துகிறது என்கிறார் கியுலியா.
மொழியும் ஒரு பெரிய தடையாக இருக்கிறது. சமீப ஆண்டுகளில் அமெரிக்காவை விட்டு சீனாவுக்கு சென்ற பல ஆராய்ச்சியாளர்களும் கல்வியாளர்களும் சீன இனத்தவர்கள். அவர்கள் மாண்டரின் மொழியில் சரளமாகப் பேசக்கூடியவர்களும் கூட. ஆனால், பொதுவாக திறன்மிக்க வெளிநாட்டு மக்களுக்கு, சக சீன ஊழியர்களுடன் பேசுவது இன்னும் சவாலாகவே இருக்கிறது. இந்த சிக்கலுக்கு நிறுவனங்களும் ஊழியர்களும் சேர்ந்து விடை கண்டறிய வேண்டும்.
ஆனால், சீனாவின் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட அரசியல் சூழலை வெளிநாட்டு அறிவியல், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற பெரிய கவலை ஒன்று உள்ளது என சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஸ்டெபானி காம் சுட்டிக்காட்டுகிறார்.
“அமெரிக்காவிலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் வெளிப்படையான, தாராளமான சூழல் இருப்பதால் படைப்பாற்றலும் புதுமையும் வளர்கின்றன. ஆனால், சீனாவின் தற்போதைய பாதையை பார்த்தால், அதற்கு நேர்மாறாக இருக்கிறது,” என்று அவர் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.
இந்த சூழலில் சீனாவிற்கு செல்வது குறித்து பரிசீலித்து வரும் வெளிநாட்டு வல்லுநர்களுக்கு, “அங்கு தங்களது படைப்பாற்றலை வளர்க்கும் இடம் கிடைக்குமா” என்பது ஒரு முக்கியக் கேள்வியாகவே உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.