“என் இளம் வயதில் என் கிராமத்தில் உள்ள அனைவரும் ‘இவளுக்கு கண் பார்வை இல்லை, இவள் வீண்’ என்று கூறுவார்கள்,” என்கிறார் ரக்ஷிதா ராஜு.
இப்போது 24 வயதான அவர் இந்தியாவின் சிறந்த இடைநிலை (middle distance) பாரா தடகள வீரர்களில் ஒருவர் ஆவார். “இது என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது,” என்று அவர் கூறுகிறார்.
ரக்ஷிதா தென்னிந்தியாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் பார்வை மாற்றுத் திறனாளியாகப் பிறந்தார். 10 வயதுக்குள் தனது பெற்றோர் இருவரையும் அவர் இழந்துவிட்டார். கேட்கும் குறைபாடு மற்றும் பேச்சுக் குறைபாடுள்ள தனது பாட்டியால் அவர் வளர்க்கப்பட்டார்.
“நாங்கள் இருவருமே மாற்றுத் திறனாளிகள். எனவே என் பாட்டி என்னைப் புரிந்துகொண்டார். அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று அவர் கூறுவார்,” என்று ரக்ஷிதா குறிப்பிட்டார்.
ரக்ஷிதாவுக்கு சுமார் 13 வயது இருக்கும்போது அவரது பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் அவரை அழைத்து ‘ஒரு சிறந்த தடகள வீராங்கனையாக’ இருக்கும் திறன் அவருக்கு இருப்பதாகக் கூறினார்.
“எப்படி என்னால் முடியும்? நான் பார்வையற்றவள், பார்க்க முடியாத என்னால் எப்படி ஓட முடியும் என யோசித்தேன்,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.
பார்வைக் குறைபாடுள்ள ஓட்டப்பந்தய வீரர்கள் ஒரு வழிகாட்டியை வைத்துக் கொள்ளலாம். அந்த வழிகாட்டியின் உதவியுடன் ஓட முடியும் என்று அவருடைய ஆசிரியர் அவரிடம் விளக்கினார்.
அதாவது, பார்வை மாற்றுத்திறனாளி தடகள வீரரும் அவருக்கு உதவும் கைட் ரன்னரும் (ஓடுவதற்கு வழிகாட்டியாக உதவுபவர்), டிராக்கில் ஓடுவார்கள். அவர்கள் ஒரு நெகிழிக் கயிறு ஒன்றின் மூலம் இணைக்கப்படுவார்கள். அந்தக் குறுகிய கயிற்றின் இரு முனைகளிலும் இருக்கும் வளையங்களை, பாரா தடகள வீரரும் அவருக்கு உதவும் கைட் ரன்னரும் பிடித்துக் கொள்வார்கள். இது ரக்ஷிதாவுக்கு புதிதாக இருந்தது.
கேலி செய்த கிராமவாசிகளை கொண்டாட வைத்த ரக்ஷிதா
சிறிது காலம் மற்ற நபர்கள் ரக்ஷிதாவுக்கு கைட் ரன்னர்கலாக செயல்பட்டனர். பின்னர் 2016இல், தனது 15 வயதில் ரக்ஷிதா தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார். அங்கு ராகுல் பாலகிருஷ்ணா என்ற நபர் அவரைக் கண்டார்.
ராகுல் ஒரு இடைநிலை தொலைவு ஓடும் தடகள வீரர். அதற்கு முன்பு அவர்1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றவர். சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் மீண்டு வந்துகொண்டிருந்தபோது, இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் (பிசிஐ) பயிற்சியாளரால் அவருக்கு பாரா தடகளம் அறிமுகமானது.
வழிகாட்டிகள் (கைட் ரன்னர்கள்) மற்றும் பயிற்சியாளர்களின் பற்றாக்குறை இருந்ததால் ராகுல் அந்த இரண்டு பொறுப்புகளையும் தாமே ஏற்க முடிவு செய்தார். அவரது பயிற்சிப் பணிக்கான சம்பளத்தை அரசு அவருக்கு வழங்குகிறது. ஆனால் வழிகாட்டி ஓட்ட வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை.
இருப்பினும் பார்வையற்ற ஓட்டப் பந்தய வீரர் ஒருவர் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்றால், அவரது வழிகாட்டிக்கும் பதக்கம் கிடைக்கும். ராகுல் தனது சொந்த ஓட்டப் பந்தய வாழ்க்கையில் சாதிக்காத ஒன்று அது. “எனக்காகவும் என் நாட்டிற்காகவும் இதைச் செய்ய முடிந்ததில் நான் பெருமைப்பட்டேன்,” என்று அவர் கூறுகிறார்.
ரக்ஷிதாவுக்கு உதவ அவர் தனது சொந்த நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்தார். ரக்ஷிதா 2018இல் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து சிறந்த பயிற்சி வசதிகளைப் பெற உதவினார். அரசால் நடத்தப்படும் விடுதியில் ரக்ஷிதா வசிக்கிறார், ராகுலுடன் தினமும் பயிற்சி செய்கிறார்.
அவர்கள் ஓடும்போது, “சிறிய விஷயங்களே முக்கியமானவை” என்று ராகுல் கூறுகிறார். “ஒரு வளைவை நெருங்கும்போது வழிகாட்டி, தடகள வீரரை எச்சரிக்க வேண்டும். அல்லது ஒரு போட்டியாளர் முந்திச் செல்லும்போது அவர் தடகள வீரரிடம் சொல்ல வேண்டும். தடகள வீரர் இன்னும் வேகமெடுத்து ஓட முயல்வதற்கு இது உதவும்.” என்கிறார் அவர்
போட்டி விதிகளின்படி அவர்கள் கைகளைப் பிடித்துக் கொள்ள முடியாது. இறுதிக்கோட்டைக் கடக்கும் வரை அவர்களை இணைக்கு நெகிழிக் கயிற்றை மட்டுமே பிடித்துக் கொள்ள முடியும். கூடுதலாக வழிகாட்டி வீரர், பார்வைக் குறைபாடுள்ள தடகள வீரரைத் தள்ளவோ, இழுக்கவோ அல்லது உந்தவோ அனுமதியில்லை.
காலப்போக்கில் இந்த ஜோடி ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கியுள்ளது. “இப்போது நான் என்னைவிட என் வழிகாட்டியை அதிகம் நம்புகிறேன்” என்று ரக்ஷிதா கூறுகிறார்.
அவர்களின் பயிற்சி பலனளித்தது. 2018 மற்றும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர். ரக்ஷிதாவின் கிராமத்தில் அவர்களுக்கு அமர்க்களமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னைக் கேலி செய்த அதே கிராமவாசிகள் தனக்காக ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்து, ஆரவாரத்துடன் கொடிகளை அசைத்ததை விவரிக்கும்போது ரக்ஷிதாவின் முகத்தில் புன்னகை மலர்கிறது.
கைட் ரன்னரை தேர்வு செய்வதில் உள்ள சவால்கள்
ரக்ஷிதா பாராலிம்பிக்கில் 1500 மீட்டர் ஓட்டத்திற்குத் தகுதி பெற்ற முதல் பார்வையற்ற இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றார். அதோடு அவர் ராகுலுடன் இணைந்து 2024 பாரிஸ் பாராலம்பிக்கில் போட்டியிட்டார்.
பிரான்சில் அவர் பதக்கத்தைத் தவறவிட்டார். ஆனால் பாரிஸ் பாராலம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்தியாவின் மற்றொரு பார்வைக் குறைபாடுள்ள பெண் தடகள வீராங்கனையான சிம்ரன் ஷர்மா வெண்கலப் பதக்கம் வென்றார்.
சிம்ரனுக்கு ஓரளவு பார்வைக் குறைபாடு இருந்தது. அவர் தடகளத்தில் ஈடுபடத் தொடங்கியபோது தனியாகவே ஓடினார்.
ஆனால் 2021இல் சிம்ரன் டோக்கியோ பாராலிம்பிக்கில் போட்டியிட்டபோது ஓடும் பாதையில் உள்ள கோடுகளைப் பார்க்க முடியாமல் தனது பாதையை விட்டு விலகிச் சென்றார். தான் தொடர்ந்து ஓட வேண்டுமானால் தனக்கு ஒரு வழிகாட்டி தேவை என்பதை அவர் அப்போது உணர்ந்தார்.
சிம்ரன் டெல்லியில் வசித்தாலும்கூட தனக்கான கைட் ரன்னரை தேடுவது சவால் மிகுந்ததாக இருந்தது. “அவர் ஏதோவொரு விளையாட்டு வீரராக இருக்க முடியாது. நீங்கள் பங்கெடுக்கும் அதே பிரிவில் திறன் பெற்றவராகப் பொருந்தியிருக்க வேண்டும், உங்களைப் போலவே வேகமாக ஓடும் ஒருவர் உங்களுக்குத் தேவை,” என்று சிம்ரன் விளக்குகிறார்.
பட மூலாதாரம், Getty Images
சிம்ரனின் வேகம் அல்லது ஸ்டைலுடன் சரியாகப் பொருந்தாத சிலருடன் சில தவறான தொடக்கங்கள் அவருக்கு இருந்தன. ஆனால், இறுதியாக அபே குமார் என்ற இளம் தடகள வீரரைக் கண்டார். சிம்ரன் பயிற்சி பெறும் அதே இடத்தில் அபயும் பயிற்சி செய்து வந்தார்.
பல போட்டிகளில் பங்கெடுத்திருந்த, 18 வயதான அபயுக்கு , சிம்ரனுக்கு கைட் ரன்னராக இருப்பது சர்வதேச போட்டிகளின் அனுபவத்தைப் பெறும் வாய்ப்பாக அமைந்தது.
“அவர்கள் எனக்கு வீடியோக்களை அனுப்பினார்கள். நான் வேகமாகக் கற்றுக் கொள்பவன், இது எளிதாகவே இருக்கும் என்று அவற்றைப் பார்த்த பிறகு நினைத்தேன். ஆனால் நான் முதல் முறையாக ஓடியபோது அது மிகவும் கடினமாக இருந்தது,” என்கிறார் அபே.
“நான் ஒரு வளைவில் ஓடும்போது உள்பக்கமாக இருக்கும் கை குறைவாகவும், வெளிப்புறம் இருக்கும் கை அதிகமாகவும் நகரும் என்பதை உணர்ந்தேன். ஆனால் நான் அவருடன் ஓடும்போது நான் வெளிப்புறமாக இருப்பேன். அவருடைய ஓட்டத்தைத் தடுக்காமல் இருக்க அல்லது அவருடைய அசைவில் தலையிடுவதைத் தவிர்க்க என் உள்புற கை அவரது வெளிப்புறக் கையைப் போலவே நகரும் வகையில் நான் ஓடுவதைச் சரிசெய்ய வேண்டியிருந்தது,” என்று அவர் கூறினார்.
பார்வைக் குறைபாடுள்ள தடகள வீரர் தங்கள் வழிகாட்டிக்கு முன்பாக இறுதிக் கோட்டை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது வரை, என்பது போல ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களிலும் ஒத்திசைவு இருக்க வேண்டும்.
ஜப்பானில் நடந்த 2024 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிதான் சிம்ரனும் அபயும் கலந்துகொண்ட முதல் சர்வதேச போட்டி. அவர்கள் சந்தித்து சில வாரங்கள் மட்டுமே ஆகியிருந்ததால் ஒன்றாகப் பயிற்சி செய்ய அவர்களுக்கு அதிக நேரம் இருக்கவில்லை.
அனுபவம் தந்த வெற்றி
அவர்களது முதல் பந்தயமான 100 மீட்டர் ஓட்டம் படுதோல்வியில் முடிந்தது.
“எங்கள் இருவருக்கும் விதிகள் சரியாகத் தெரியாது. நான் முதலில் கோட்டைக் கடக்க ஏதுவாக அபய் ஓடுவதை நிறுத்திவிட்டார். அவர் தொடர்ந்து ஓடி என் பின்னால் கோட்டைக் கடந்திருக்க வேண்டும்,” என்றார் சிம்ரன். இதன் காரணமாக அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆனால், இந்த அனுபவத்தின் மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டதால், அவர்கள் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடியபோது தங்கம் வென்றனர். சிம்ரன் T12 பிரிவில் உலக சாம்பியன் ஆனார்.
பிறகு பாரிஸில் நடந்த பாராலிம்பிக்கிற்கும் அவர்கள் சென்றனர். அங்கு 100 மீட்டர் ஓட்டத்தில் நான்காவது இடத்தைப் பிடித்தனர். அதே நேரம் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றனர். மேலும் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பார்வைக் குறைபாடுள்ள இந்திய பெண் என்ற பெருமையை சிம்ரன் பெற்றார்.
“நாங்கள் பதக்கம் வென்றுவிட்டோம் என்று எனக்குத் தெரியாது. நாங்கள் பதக்கம் வென்றது மட்டுமல்ல, இதுவரை இல்லாத அளவுக்கு எனது குறைவான சாதனை நேரத்தில் ஓடியுள்ளேன் என்று என் வழிகாட்டி அபய் என்னிடம் கூறினார்,” என்று சொல்லியபடி சிம்ரன் புன்னகைக்கிறார்.
இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருதை சிம்ரன் பெற்றார். பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
ஆனால் 100 மீட்டர் ஓட்டத்தில் தோல்வி என்பது ஒரு வேதனையான விஷயம். மேலும் அபே தனது விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் அவர் தன்னுடைய வழிகாட்டியாக எவ்வளவு காலம் நீடிப்பார் என்றும் சிமரன் கவலைப்படுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
ஒரு ஜோடி வெற்றி பெறும்போது வழிகாட்டி ஓட்டப்பந்தய வீரர்கள் பதக்கம் பெற்றாலும்கூட, அவர்களுக்கு சம்பளம், ரொக்கப் பரிசுகள் அல்லது அவர்களின் விளையாட்டு வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்க முடியாது என்று இந்திய பாராலிம்பிக் குழு (PCI) கூறுகிறது.
“அவர்களின் உணவு, தங்குமிடம், போக்குவரத்து, பயிற்சி வசதிகள் போன்ற குறுகிய கால தேவைகளை மட்டுமே எங்களால் பூர்த்தி செய்ய முடியும்,” என்று இந்திய பாராலிம்பிக் குழுவின் தேசிய தடகளப் பயிற்சியாளர் சத்யநாராயணா கூறுகிறார்.
ரக்ஷிதா, சிம்ரன் இருவருக்குமே இப்போது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் உள்ளன. அவர்களின் பயிற்சிக்கு நிதியளிக்க அவை உதவுகின்றன. தங்கள் வழிகாட்டிகளுக்கு அவர்களே பணம் கொடுக்கிறார்கள். தாங்கள் வெல்லும் எந்தவொரு பரிசுத் தொகையிலும் ஒரு பங்கை அவர்களுக்கு வழங்குகிறார்கள்.
ஆனால் ராகுலும் அபயும் அரசிடம் இருந்து கூடுதல் ஆதரவை விரும்புகிறார்கள். விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பொதுத்துறை வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் தாங்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
அபய் உடன் தனது எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும் சிம்ரன் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற இருக்கும் அடுத்த பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். “இந்தப் பதக்கத்தின் நிறத்தை மாற்றும் வரை நான் ஓயமாட்டேன்,” என்று அவர் கூறுகிறார். அடுத்த முறை தங்கம் வெல்லும் உத்வேகத்துடன் அவர் உள்ளார்.
ராகுலுடன் சேர்ந்து அடுத்த முறை பதக்கம் வெல்லும் நம்பிக்கையில் ரக்ஷிதாவும் உள்ளார்.
“ரக்ஷிதா கண்டிப்பாக பதக்கம் வெல்ல வேண்டும். கிராமங்களில் அவரைப் போல பலர் இருக்கிறார்கள். விளையாட்டு மற்றும் வாய்ப்புகள் பற்றி அவர்களுக்குத் தெரியாது. ரக்ஷிதா அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குவார்,” என்று ராகுல் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு