• Tue. Apr 1st, 2025

24×7 Live News

Apdin News

கைதான சாமர சம்பத் எம்.பி. பிணையில் விடுவிப்பு!

Byadmin

Mar 27, 2025


இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று கைது செய்யப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற 3 ஊழல் கொடுக்கல் – வாங்கல்கள் தொடர்பில் இன்று காலை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இரண்டு அரச வங்கிகளிடமிருந்து இரண்டரை மில்லியன் ரூபா பணத்தை ஊவா மாகாண சபைக்காகப் பெற்றுக்கொண்டு அதனை சாமர சம்பத் தசநாயக்க அறக்கட்டளை வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டமை இந்தக் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

மற்றுமொரு அரச வங்கியிடமிருந்து மாகாண சபைக்காக பெற்றுக்கொண்ட ஒரு மில்லியன் ரூபா பணத்தை முதலமைச்சராக வங்கிக்கிளையிலிருந்து நேரடியாக அவர் பெற்றுக்கொண்டமை இரண்டாவது குற்றச்சாட்டாகும்.

மற்றுமொரு அரச வங்கியிடமிருந்து பணத்தைக் கோரிய போதிலும் அதனை முகாமையாளர் நிராகரித்ததன் பின்னர் மாகாண சபை நடத்திச் சென்ற அனைத்து நிலையான வைப்புகளையும் அந்த வங்கியிலிருந்து மீளப் பெற்றுக்கொண்டமையால் 23 மில்லியன் ரூபா அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியமை மூன்றாவது குற்றச்சாட்டாகும்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சாமர சம்பத் தசநாயக்க இன்று காலை 9.30 மணிக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்த நிலையில் அங்கு கைது செய்யப்பட்டார்.

அவர் இன்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டார்.

50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டார்.

வெளிநாட்டுக்குச் செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட்டதுடன் அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

By admin