நூருல் அமின் தனது சகோதரனுடன் கடைசியாக மே 9 அன்று பேசினார். அந்த அழைப்பு சுருக்கமாக இருந்தாலும், செய்தி மனதை உலுக்குவதாக இருந்தது.
அவரது சகோதரர் கைருல் மற்றும் நான்கு உறவினர்கள் உட்பட 40 ரோஹிஞ்சா அகதிகள், இந்திய அரசால் மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டதாக அவர் அறிந்துகொண்டார். இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பயத்துடன் மியான்மரில் இருந்து தப்பி வந்தவர்கள்.
மியான்மர் 2021 இல் ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவ ஆட்சியாளர்களுக்கும் இனப் படைகள் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களுக்கும் இடையே ஒரு கொடூரமான உள்நாட்டுப் போரில் உள்ளது,
அமின் தனது குடும்பத்தை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.
“எனது பெற்றோரும் மற்றவர்களும் எதிர்கொள்ளும் துன்பத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை,” என்று 24 வயதான அமின் டெல்லியில் பிபிசியிடம் கூறினார்.
இந்தியத் தலைநகரில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, மியான்மரில் உள்ள அகதிகளைத் பிபிசியால்தொடர்பு கொள்ள முடிந்தது. பெரும்பாலானோர் நாட்டின் தென்மேற்கில் ராணுவத்திற்கு எதிராகப் போராடும் எதிர்ப்பு குழுவான பா ஹ்டூ ஆர்மி (BHA) உடன் தங்கியுள்ளனர்.
“மியான்மரில் நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை. இந்த இடம் முழுமையான போர்க்களமாக உள்ளது,” என்று பா ஹ்டூ ஆர்மி உறுப்பினரின் தொலைபேசி மூலம் வீடியோ அழைப்பில் சோயேட் நூர் கூறினார். அவர் மரத்தாலான ஒரு தங்குமிடத்தில் ஆறு அகதிகளுடன் பேசினார்.
பிபிசி அகதிகளின் சாட்சியங்களையும், டெல்லியில் உள்ள உறவினர்களின் கூற்றையும் சேகரித்து, இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நிபுணர்களுடன் பேசி, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஒன்றிணைத்தது.
அவர்கள் டெல்லியில் இருந்து வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தீவுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் ஒரு கடற்படைக் கப்பலில் ஏற்றப்பட்டு, இறுதியாக ஆழ்கடலில் உயிர்காக்கும் மிதவைகளுடன் விடப்பட்டனர் என அறிகிறோம். பின்னர் அவர்கள் கரைக்கு நீந்தி சென்று, இப்போது மியான்மரில் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். முஸ்லிம் பெரும்பான்மையான இந்த ரோஹிஞ்சா சமூகம், துன்புறுத்தல்களைத் தவிர்க்க பல ஆண்டுகளாக மியான்மரில் இருந்து பெருமளவில் தப்பி வந்தது.
“எங்கள் கைகளைக் கட்டி, முகங்களை மூடி, எங்களை கைதிகளைப் போல [படகில்] கொண்டு சென்றனர். பின்னர் எங்களை கடலில் எறிந்தனர்,” என்று கரைக்கு வந்த பிறகு குழுவில் இருந்த ஜான் என்ற நபர் தனது சகோதரனிடம் தொலைபேசியில் கூறினார்.
“மனிதர்களை எப்படி ஒருவர் கடலில் எறிய முடியும்?” என்று அமின் கேட்டார். “உலகில் மனிதநேயம் உயிர்ப்புடன் உள்ளது, ஆனால் இந்திய அரசாங்கத்தில் எந்த மனிதநேயத்தையும் நான் பார்க்கவில்லை.”
மியான்மரில் மனித உரிமைகள் குறித்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் தாமஸ் ஆண்ட்ரூஸ், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் “கணிசமான ஆதாரங்கள்” உள்ளதாகக் கூறுகிறார். இவற்றை அவர் ஜெனீவாவில் உள்ள இந்திய தூதரிடம் சமர்ப்பித்தார், ஆனால் இதுவரை பதில் வரவில்லை.
இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தை பிபிசி பல முறை தொடர்பு கொண்டது, ஆனால் வெளியீடு நேரம் வரை பதில் கிடைக்கவில்லை.
இந்தியாவில் ரோஹிஞ்சாக்களின் நிலை நிலையற்றது என்று செயற்பாட்டாளர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியா ரோஹிஞ்சாக்களை அகதிகளாக அங்கீகரிக்கவில்லை, மாறாக, நாட்டின் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் சட்டவிரோத குடியேறிகளாகக் கருதுகிறது.
இந்தியாவில் கணிசமான ரோஹிஞ்சா அகதிகள் உள்ளனர், இருந்தாலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழும் வங்கதேசத்தில்தான் மிக அதிக எண்ணிக்கை இருக்கிறது. பெரும்பாலானோர் 2017 இல் மியான்மர் ராணுவத்தின் கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு தப்பி வந்தனர். பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த போதிலும், ரோஹிஞ்சாக்கள் மியான்மரில் குடிமக்களாக அங்கீகரிக்கப்படவில்லை.
ஐ.நா.வின் அகதிகள் அமைப்பான யுஎன்ஹெச்சிஆர் -ல் 23,800 ரோஹிஞ்சா அகதிகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் மதிப்பீட்டின்படி, உண்மையான எண்ணிக்கை 40,000-ஐ தாண்டலாம்.
பட மூலாதாரம், Noorul Amin
மே 6 அன்று, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த யுஎன்ஹெச்சிஆர் அகதி அடையாள அட்டைகளை வைத்திருந்த 40 ரோஹிஞ்சா அகதிகள், உயிரி தரவு (பயோமெட்ரிக்) சேகரிக்கப்படுவதாகக் கூறி உள்ளூர் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது ஆண்டுதோறும் செய்யவேண்டிய நடைமுறையாக இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதில் ரோஹிஞ்சா அகதிகள் புகைப்படம் எடுக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்படுகிறது. பல மணி நேரங்களுக்குப் பிறகு, அவர்கள் நகரில் உள்ள இந்தர்லோக் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பிபிசியிடம் கூறினர்.
அவரது சகோதரர் அப்போது தன்னைஅழைத்து, தாங்கள் மியான்மருக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறி, ஒரு வழக்கறிஞரை அமர்த்தி யென்ஹெச்சிஆர்-ஐ எச்சரிக்குமாறு கேட்டுக்கொண்டார் என அமின் கூறினார்.
மே 7 அன்று, அகதிகள் டெல்லிக்கு கிழக்கே உள்ள ஹிண்டன் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, வங்காள விரிகுடாவில் உள்ள இந்தியப் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு செல்லும் விமானங்களில் ஏற்றப்பட்டதாகக் கூறினர்.
“விமானத்தில் இருந்து இறங்கியவுடன், எங்களை அழைத்துச் செல்ல இரண்டு பேருந்துகள் வந்திருந்ததைப் பார்த்தோம்,” என்று சோயேட் நூர் வீடியோ அழைப்பில் கூறினார். பேருந்துகளின் பக்கவாட்டில் “பாரதிய நௌசேனா” என்று எழுதப்பட்டிருந்ததாகவும், இது இந்திய கடற்படையைக் குறிக்கும் இந்தி சொல் என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
“பேருந்தில் ஏறியவுடன், எங்கள் கைகளை பிளாஸ்டிக் பொருளால் கட்டி, கருப்பு மஸ்லின் துணியால் எங்கள் முகங்களை மூடினர்,” என்று அவர் கூறினார்.
பேருந்தில் இருந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்தாவிட்டாலும், அவர்கள் ராணுவ உடைகள் அணிந்து இந்தியில் பேசினர்.
குறுகிய பேருந்து பயணத்திற்குப் பிறகு, குழு வங்காள விரிகுடாவில் ஒரு கடற்படைக் கப்பலில் ஏற்றப்பட்டது, இது கைகட்டுகள் அவிழ்க்கப்பட்டு முகங்களை மூடியிருந்த துணிகள் நீக்கப்பட்ட பிறகு தான் தெரிந்ததாக சோயேட் நூர் கூறினார்.
அவர்கள் இருந்த கப்பலை இரண்டு தளங்களுடன் கூடிய, குறைந்தது 150 மீட்டர் (490 அடி) நீளமுள்ள பெரிய போர்க்கப்பலாக விவரித்தனர்.
“(கப்பலில் இருந்த) பலர் டி-ஷர்ட்கள், கருப்பு நிற பேன்ட்கள் மற்றும் கருப்பு ராணுவ காலணிகள் அணிந்திருந்தனர்,” என்று சோயேட் நூருடான அழைப்பில் மொகமது சஜ்ஜாத் இருந்தவர் கூறினார். “அனைவரும் ஒரே உடையில் இல்லை – சிலர் கருப்பு, சிலர் பழுப்பு நிற உடைகளில் இருந்தனர்.”
குழு 14 மணி நேரம் கடற்படைக் கப்பலில் இருந்ததாக சோயேட் நூர் கூறினார். அவர்களுக்கு அரிசி சோறு, பருப்பு மற்றும் பனீர் (பாலாடைக்கட்டி) போன்ற பாரம்பரிய இந்திய உணவு சரியான நேர்த்தில் வழங்கப்பட்டது.
கப்பலில் வன்முறை மற்றும் அவமானத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சில ஆண்கள் கூறுகின்றனர்.
“நாங்கள் மிக மோசமாக நடத்தப்பட்டோம்,” என்று சோயேட் நூர் கூறினார். “சிலர் மிகவும் கடுமையாக அடிக்கப்பட்டனர். பல முறை கன்னத்தில் அறையப்பட்டனர்.”
ஃபோயாஸ் உல்லா தனது வலது மணிக்கட்டில் உள்ள காயங்களை வீடியோ அழைப்பில் காட்டினார், மேலும் மீண்டும் மீண்டும் குத்தப்பட்டு, முதுகிலும் முகத்திலும் அறையப்பட்டு, மூங்கில் குச்சியால் குத்தப்பட்டதாக விவரித்தார்.
“நீங்கள் ஏன் இந்தியாவில் சட்டவிரோதமாக இருக்கிறீர்கள், ஏன் இங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டனர்?”
பட மூலாதாரம், Getty Images
ரோஹிஞ்சாக்கள் முஸ்லிம் இன சமூகம், ஆனால் மே மாதம் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்ட 40 பேரில் 15 பேர் கிறிஸ்தவர்கள்.
அவர்களை டெல்லியில் இருந்து பயணத்தில் தடுத்து வைத்தவர்கள், “‘நீங்கள் ஏன் இந்துவாக மாறவில்லை? இஸ்லாமில் இருந்து கிறிஸ்தவத்திற்கு ஏன் மாறினீர்கள்?’ என்று கூட கேட்டனர்,” என்று சோயேட் நூர் கூறினார். “எங்களை உடலில் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களா என்று பார்க்க எங்கள் பேன்ட்களைக் கீழே இறக்கச் செய்தனர்.”
மற்றொரு அகதி, இமான் உசைன், ராணுவப் பணியாளர்கள் தன்னை ஏப்ரல் 22 அன்று காஷ்மீரில் 26 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பகல்காம் படுகொலைக்கு தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டியதாகக் கூறினார்.
இந்திய அரசு இந்தத் தாக்குதல்களை பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டதாக மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது, இதை இஸ்லாமாபாத் மறுக்கிறது. ரோஹிஞ்சாக்களுக்கு இந்தத் துப்பாக்கிச் சூடுகளுடன் எந்தத் தொடர்பும் இருப்பதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை.
அடுத்த நாள், மே 8 அன்று, உள்ளூர் நேரப்படி மாலை 7:00 மணியளவில் (12:30 GMT), அகதிகள் கடற்படைக் கப்பலின் பக்கவாட்டில் உள்ள ஒரு ஏணி வழியாக கீழே இறங்கச் சொல்லப்பட்டனர். கீழே, கருப்பு நிறத்தில் ரப்பரால் செய்யப்பட்ட நான்கு சிறிய மீட்பு படகுகளை பார்த்ததாக அவர்கள் விவரித்தனர்.
அகதிகள் இரண்டு படகுகளில் ஏற்றப்பட்டனர், ஒவ்வொரு படகிலும் 20 பேர், மற்றும் அவர்களை அழைத்துச் சென்றவர்களில் சிலர் உடன் இருந்தனர். முன்னால் சென்ற மற்ற இரண்டு படகுகளில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்தனர். ஏழு மணி நேரத்திற்கும் மேலாக, அவர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் பயணித்தனர்.
“ராணுவப் பணியாளர்களுடன் ஒரு படகு கரைக்கு சென்று, ஒரு மரத்தில் ஒரு நீண்ட கயிற்றைக் கட்டியது. அந்தக் கயிறு பின்னர் படகுகளுக்கு கொண்டுவரப்பட்டது,” என்று சோயேட் நூர் கூறினார்.
அவர்களுக்கு உயிர்காக்கும் மிதவை உடைகள் வழங்கப்பட்டு, கைகள் அவிழ்க்கப்பட்டு, நீரில் குதிக்கச் சொல்லப்பட்டனர். “நாங்கள் கயிற்றைப் பிடித்து 100 மீட்டருக்கும் மேல் நீந்தி கரைக்கு வந்தோம்,” என்று அவர் கூறினார், மேலும் அவர்கள் இந்தோனீசியாவை அடைந்ததாகச் சொல்லப்பட்டதாகவும் கூறினார்.
பின்னர் அவர்களை அங்கு கொண்டு சென்றவர்கள் புறப்பட்டு சென்றனர்.
பிபிசி இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய அரசிடமும் இந்திய கடற்படையிடமும் முன்வைத்தது, ஆனால் பதில் கிடைக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
மே 9 அதிகாலையில், உள்ளூர் மீனவர்கள் இந்தக் குழுவைக் கண்டு, அவர்கள் மியான்மரில் இருப்பதாகக் கூறினர். அவர்கள் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள உறவினர்களை அழைக்க அகதிகளை அனுமதித்தனர்.
மூன்று மாதங்களுக்கும் மேலாக, மியான்மரின் தனிந்தாரி பகுதியில் பா ஹ்டூ ஆர்மி தங்குமிடமற்ற அகதிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கி உதவி வருகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள அவர்களின் குடும்பங்கள் மியான்மரில் அவர்களின் நிலைமை குறித்து பயப்படுகின்றனர்.
இந்திய அதிகாரிகள் ரோஹிஞ்சாஅகதிகளை ஆழ்கடலில் வலுக்கட்டாயமாக விடுவித்ததன்மூலம், அவர்களின் உயிர்கள் “மிகப்பெரிய ஆபத்திற்கு உட்படுத்தப்பட்டதாக” ஐநா தெரிவித்துள்ளது.
“மிகவும் கவலைதரும் இந்த விவகாரத்தை நானே நேரடியாக ஆராய்ந்து வருகிறேன்,” என்று தாமஸ் ஆண்ட்ரூஸ் கூறினார். அவர் பகிரக்கூடிய தகவல்களின் அளவு குறைவு என்பதை அவர் ஏற்றுக்கொண்டார், ஆனால் “சாட்சிகளுடன் பேசி, அவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தி, அவை உண்மையை அடிப்படையாகக் கொண்டவை என்பதை நிறுவ முடிந்தது” என்று கூறினார்.
மே 17 அன்று, அமின் மற்றும் அகற்றப்பட்ட அகதிகளின் மற்றொரு குடும்ப உறுப்பினர், இந்திய உச்சநீதிமன்றத்தில் அவர்களை மீண்டும் டெல்லிக்கு அழைத்து வரவும், இதுபோன்ற நாடு கடத்தல்களை உடனடியாக நிறுத்தவும், 40 பேருக்கும் இழப்பீடு வழங்கவும் வேண்டி மனு தாக்கல் செய்தனர்.
“இது ரோஹிஞ்சா நாடு கடத்தலின் கொடுமையை நாட்டிற்கு வெளிப்படுத்தியது,” என்று மனுதாரர்களுக்காக வாதிடும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கோலின் கோன்சால்வஸ் கூறினார்.
“ஒரு நபரை உயிர்காக்கும் மிதவை உடையுடன் போர் நடக்கும் பகுதியில் உள்ள கடலில் விடலாம் என்பது இயல்பாகவே மக்கள் நம்ப மறுக்கும் ஒன்று,” என்று கோன்சால்வஸ் கூறினார்.
வழக்கை விசாரிக்கும் இரு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் ஒரு நீதிபதி இந்தக் குற்றச்சாட்டுகளை “கற்பனையான கருத்துக்கள்” என்று அழைத்தார். மேலும், வழக்குத் தொடுப்பவர்கள் தங்கள் கூற்றுக்களை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்களை வழங்கவில்லை என்றும் கூறினார்.
அதற்கு பிறகு, ரோஹிஞ்சாக்களை அகதிகளாக கருதலாமா அல்லது சட்டவிரோத குடியேறிகளாகக் கருதி நாடு கடத்தலுக்கு உட்படுத்தலாமா என்பதை முடிவு செய்ய செப்டம்பர் 29 அன்று வாதங்களைக் கேட்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சா அகதிகள் வாழ்ந்து வருவதைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த 40 பேரை நாடு கடத்துவதற்கு ஏன் இவ்வளவு முயற்சி எடுக்கப்பட்டது என்பது தெளிவாகவில்லை.
“முஸ்லிம்களுக்கு எதிரான வன்மத்தை தவிர இதை ஏன் செய்தார்கள் என்று இந்தியாவில் இருக்கும் யாருக்கும் புரியவில்லை” என்று கோன்சால்வஸ் கூறினார்.
அகதிகள் நடத்தப்பட்ட விதம் இந்தியாவில் உள்ள ரோஹிஞ்சா சமூகத்தில் ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு ஆண்டில், இந்திய அதிகாரிகளால் நாடு கடத்தல்கள் அதிகரித்துள்ளதாக ரோஹிஞ்சா சமூக உறுப்பினர்கள் கூறுகின்றனர். இதை உறுதிப்படுத்த உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் இல்லை.
சிலர் தலைமறைவாக வாழ்கின்றனர். அமின் போன்றவர்கள் வீட்டில் தூங்குவதில்லை. அவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை வேறு இடத்திற்கு அனுப்பியுள்ளார்.
“என் இதயத்தில் இந்திய அரசாங்கம் எங்களையும் எந்த நேரத்திலும் தூக்கி கடலில் எறிந்துவிடும் என்ற பயம் மட்டுமே உள்ளது. இப்போது எங்கள் வீட்டை விட்டு வெளியேறவே பயப்படுகிறோம்,” என்று அமின் கூறினார்.
“இவர்கள் இந்தியாவில் இருக்க விரும்பி இங்கு இருப்பவர்களில்லை,” என்று ஐ.நா.வின் ஆண்ட்ரூஸ் கூறினார்.
“மியான்மரில் நடக்கும் பயங்கரமான வன்முறை காரணமாக இவர்கள் இங்கு உள்ளனர். அவர்கள் உண்மையில் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓடி வந்தவர்கள்.”
கூடுதல் தகவல் சேகரிப்பு டெல்லியிலிருந்து சார்லோட் ஸ்கார்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு