பட மூலாதாரம், Reuters
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் நியூயார்க்கின் தடுப்பு மையத்தில் இருந்து மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மதுரோ சிறைச்சாலை சீருடை போன்ற ஆடைகளை அணிந்து, சற்று தளர்வாக நடந்து செல்வதைக் காண முடிந்தது.
மதுரோவும் அவரது மனைவியும் இப்போது அமெரிக்க நீதிமன்றத்தில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக விசாரிக்கப்படுவார்கள். இது மதுரோ பலமுறை மறுத்து வரும் குற்றச்சாட்டுகள்.
இந்த சூழ்நிலையில், வெனிசுவேலாவின் புதிய தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ்க்கு டிரம்ப் விடுத்துள்ள செய்தி மற்றும் ஜனநாயக கட்சியினரின் கருத்துக்கள் பற்றி பிபிசியின் கிரேஸ் எலிசா குட்வின் எழுதியுள்ள கட்டுரை இது.
பட மூலாதாரம், Kyle Mazza-CNP/Shutterstock
வெனிசுவேலாவின் புதிய தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ் “சரியானதைச் செய்யவில்லை” என்றால், அவர் “மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும், அநேகமாக மதுரோவை விடவும் பெரிய விலையாக இருக்கலாம்” என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க இதழான ‘தி அட்லாண்டிகிடம் அவர் கூறிய இந்தக் கருத்துக்கள், பதவியிறக்கப்பட்ட அதிபர் நிக்கோலஸ் மதுரோ நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராகவிருக்கும் நிலையில் வெளிவந்துள்ளன.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மதுரோ, ஒரு “போதைப்பொருள்-பயங்கரவாத” ஆட்சியை நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது; இக்குற்றச்சாட்டை அவர் மறுக்கிறார்.
பட மூலாதாரம், Reuters
மதுரோவின் கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய ரோட்ரிக்ஸ், ஞாயிற்றுக்கிழமை நடந்த தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கமான தொனியை வெளிப்படுத்தினார், மேலும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க முன்வந்தார்.
”சர்வதேச சட்டத்தின் கட்டமைப்புக்குள், ஒத்துழைப்பு அடிப்படையிலான ஒரு செயல்திட்டத்தில் எங்களுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா முன்வர வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வெனிசுவேலாவின் உச்ச நீதிமன்றம் மற்றும் ராணுவத்தின் ஆதரவுடன், அவர் திங்களன்று உள்ளூர் நேரப்படி காலை 08:00 மணிக்கு (12:00 GMT) கராகஸில் அதிபராகப் பதவியேற்க உள்ளார்.
சனிக்கிழமை கராகஸில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, மதுரோவும் அவரது மனைவியும் காவலில் எடுக்கப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அமெரிக்கா வெனிசுவேலாவுடன் போரில் ஈடுபடவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.
சில ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கை ஒரு “போர் நடவடிக்கை” என்று கூறியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ‘தி அட்லாண்டிக்’ இதழுக்கு அளித்த பேட்டியில், ரோட்ரிக்ஸ் பற்றி டிரம்ப் கூறுகையில்: “அவர் சரியானதைச் செய்யவில்லை என்றால், அவர் ஒரு மிகப்பெரிய விலையைக் கொடுக்கப் போகிறார், அநேகமாக மதுரோவை விடவும் பெரிய விலையாக இருக்கலாம்,” என்றார்.
வெனிசுவேலாவைப் பொறுத்தவரை, “ஆட்சி மாற்றம், நீங்கள் அதை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், அது இப்போது உங்களிடம் இருப்பதை விட சிறந்ததாக இருக்கும். இதை விட மோசமாக எதுவும் அமைந்துவிட முடியாது,” என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Donald Trump
சனிக்கிழமையன்று, “பாதுகாப்பான, முறையான மற்றும் விவேகமான அதிகார மாற்றம்” சாத்தியமாகும் வரை அமெரிக்கா அந்த நாட்டை “நிர்வகிக்கும்” என்று டிரம்ப் உறுதி அளித்தார்.
மேலும், உள்கட்டமைப்பைச் சரிசெய்து “நாட்டிற்காகப் பணம் சம்பாதிக்கத் தொடங்க” அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் அந்த நாட்டிற்குள் நுழையும் என்றும் டிரம்ப் வாக்குறுதி அளித்தார்.
அமெரிக்க அதிபரின் கூற்றுக்கள் ஒருபுறம் இருக்க, மதுரோவின் கூட்டாளிகளே இன்னும் அதிகாரத்தில் உள்ளனர்.
அமெரிக்கப் படைகள் மதுரோவையும் அவரது மனைவியையும் தாக்கிப் பிடித்தபோது, 32 “வீரமிக்க கியூபா போராளிகள்” உயிரிழந்ததாக கியூபா அரசாங்கம் தெரிவித்துள்ளது. மதுரோவின் நீண்டகால சோசலிச கூட்டாளியான கியூபா, இரண்டு நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை பல தொலைக்காட்சிப் பேட்டிகளில், வெனிசுவேலாவில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை ரூபியோ நியாயப்படுத்தினார். இந்த நடவடிக்கையால் தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவுடன் அமெரிக்கா போரில் ஈடுபட்டுள்ளது என்று அர்த்தமல்ல என்று அவர் அழுத்தமாகக் கூறினார்.
“நாங்கள் போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ளோம். அது வெனிசுவேலாவிற்கு எதிரான போர் அல்ல,” என்று ரூபியோ ஞாயிற்றுக்கிழமை காலை என்பிசியின் ‘மீட் தி பிரஸ்’ நிகழ்ச்சியில் கூறினார்.
வெனிசுவேலா “சரியான முடிவுகளை” எடுக்கவில்லை என்றால், “எங்கள் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அமெரிக்கா பலவிதமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும்” என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் சிபெஸிடம் தெரிவித்தார்.
அமெரிக்கா வெனிசுவேலாவின் எண்ணெய் மீது விதித்துள்ள “தனிமைப்படுத்துதல்” நடவடிக்கையும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
“அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வைத்து நாங்கள் அனைத்தையும் தீர்மானிப்போம், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் பார்ப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வெனிசுவேலாவின் அண்டை நாடான கொலம்பியாவிற்கும் அச்சுறுத்தல் விடுத்தார்.
கொலம்பியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை அவர் நிராகரிக்கவில்லை, “அது எனக்கு நல்ல நடவடிக்கையாகவே தோன்றுகிறது” என்று கூறிய அவர், கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை “ஒரு நோயாளி” என்று அழைத்தார்.
“கொலம்பியாவும் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளது, கொக்கைன் தயாரித்து அமெரிக்காவிற்கு விற்பனை செய்ய விரும்பும் ஒரு நோயாளியால் அது நடத்தப்படுகிறது, அவர் அதை இன்னும் நீண்ட காலத்திற்குச் செய்யப் போவதில்லை,” என்று டிரம்ப் கூறினார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
வெனிசுவேலாவின் ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவராகவும், 2013 முதல் அதிகாரத்திலும் இருக்கும் மதுரோவின் மீது வெனிசுவேலாவில் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதாகவும், சில நேரங்களில் வன்முறையைப் பயன்படுத்தி எதிர்ப்புக் குரல்களை மௌனமாக்குவதாகவும் அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வெனிசுவேலாவின் 2024 தேர்தலில் அவர் முறையற்ற வகையில் வெற்றி பெற்றதாக அவரது நாட்டு எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டு அரசாங்கங்களும் பரவலாகக் கருதுகின்றன.
சனிக்கிழமை அதிகாலையில் நடத்தப்பட்ட சிறப்புப் படை நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெனிசுவேலாவின் இடதுசாரித் தலைவரான மதுரோவும்அவரது மனைவி சிலியா புளோரஸும் அவர்களது வளாகத்தில் வைத்துப் பிடிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இதே நடவடிக்கையில் ராணுவத் தளங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அந்தத் தம்பதியினர் மீது ஆயுத மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, திங்களன்று நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
தான் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் என்ற குற்றச்சாட்டை மதுரோ மறுத்துள்ளார். தன்னை பதவியிறக்கவும், வெனிசுவேலாவின் எண்ணெயைக் கைப்பற்றவும் அமெரிக்கா “போதைப்பொருள் மீதான போரை” ஒரு சாக்காகப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் யாரும் காயமடையவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தாலும், மதுரோவின் பாதுகாப்புப் பிரிவின் “பெரும் பகுதி” மற்றும் “வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள்” அமெரிக்க நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக வெனிசுவேலா பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பத்ரினோ தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலாவில் அமெரிக்க நடவடிக்கைக்கு முன்னதாக அமெரிக்க நாடாளுமன்ற அனுமதி ஏன் கோரப்படவில்லை என்று கேட்டபோது, “இது ஒரு ஆக்கிரமிப்பு அல்ல என்பதால் அதற்கு தேவையிருக்கவில்லை” என்று ரூபியோ ஏபிசியிடம் கூறினார்.
இது போன்ற ஒரு நடவடிக்கை பற்றி நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்க முடியாது, ஏனெனில் “தகவல் கசிந்துவிடும்” என்று அவர் மேலும் கூறினார்.
அமெரிக்க ஊடகங்களிடம் பேசிய ரூபியோவிடம், ரோட்ரிக்ஸை வெனிசுலாவின் சட்டபூர்வமான அதிபராக அமெரிக்கா அங்கீகரிக்கிறதா என்று கேட்கப்பட்டது.
“இது சட்டபூர்வமான அதிபரைப் பற்றியது அல்ல”, ஏனெனில் இந்த ஆட்சியைச் சட்டபூர்வமானதாக அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என்று அவர் பதிலளித்தார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
சில ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிர்வாகத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளனர்.
நாடாளுமன்ற அனுமதி இன்றி நடத்தப்பட்ட இந்த ரகசிய ராணுவ நடவடிக்கை, “வெறுமனே போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை அல்ல” என்று சபையின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெப்ரீஸ் கூறினார்.
“இது ஒரு போர் நடவடிக்கை,” என்று என்பிசியின் ‘மீட் தி பிரஸ்’ நிகழ்ச்சியில் ஜெப்ரீஸ் கூறினார்.
“இது டெல்டா போர்ஸ் மற்றும் ராணுவம் சம்பந்தப்பட்ட ஒரு ராணுவ நடவடிக்கை; இதில் ஆயிரக்கணக்கான துருப்புக்கள், குறைந்தது 150 ராணுவ விமானங்கள் மற்றும் வெனிசுவேலா மற்றும் தென் அமெரிக்கக் கடற்கரையோரம் டஜன் கணக்கான கப்பல்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.”
ஏபிசியின் ‘திஸ் வீக்’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர் அமெரிக்க நடவடிக்கையின் சட்டபூர்வ தன்மையைக் கேள்வி எழுப்பினார்.

மதுரோ ஒரு மோசமான நபர் என்று தான் நம்பினாலும், “ஒரு சட்டமீறலை மற்றொரு சட்டமீறலைக் கொண்டு நீங்கள் எதிர்கொள்ளக் கூடாது” என்று ஷுமர் கூறினார்.
“அமெரிக்கா இது போன்ற முறையில் ஆட்சி மாற்றம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபடும்போது, அமெரிக்க மக்கள் அதற்கான விலையை தங்கள் ரத்தம் மற்றும் பணமாக கொடுக்கிறார்கள் என்பதை நாம் பல ஆண்டுகளாகக் கற்றுக் கொண்டுள்ளோம்,” என்று ஷுமர் கூறினார்.
ஷுமர் மற்றும் ஜெஃப்ரீஸ் இருவரும் ஒரு தீர்மானத்தை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளனர். அந்தத் தீர்மானம் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் வெனிசுவேலாவில் டிரம்ப் மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தடை விதிக்கப்படும்.
பிரேசில், சிலி, கொலம்பியா, மெக்சிகோ, உருகுவே மற்றும் ஸ்பெயின் அரசாங்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் “அமைதி மற்றும் பிராந்திய பாதுகாப்பிற்கு மிகவும் ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகின்றன மற்றும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன” என்று கூறியுள்ளன.
கூடுதல் தகவல்கள்: லாரன்ஸ் பீட்டர்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு