• Thu. Mar 6th, 2025

24×7 Live News

Apdin News

கொசு தொல்லையால் அவதிக்குள்ளாகும் சென்னை மக்கள்! | Chennai people Suffers from mosquito explained

Byadmin

Mar 5, 2025


சென்னை​யில் ஒழிக்கவே முடியாத பிரச்​சினையாக கொசு தொல்லை உள்ளது. சென்னை மாநகரில் கூவம், அடையாறு, பக்கிங்​ஹாம் கால்​வாய், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 30-க்​கும் மேற்​பட்ட நீர்​வழித் தடங்கள் உள்ளன. இவற்றி​லும், பெரும்​பாலான மழைநீர் வடிகால்​களி​லும் 365 நாட்​களும் கழிவுநீர் தேங்​கு​வ​தால், அவற்றில் கொசு உற்பத்​தி​யாகி, ஆண்டு முழு​வதும் கொசுத்​தொல்​லை​யால் மக்கள் அவதிப்​பட்டு வருகின்​றனர். குறிப்பாக பிப்​ர​வரி- மார்ச், ஆகஸ்ட்​-செப்​டம்பர் மாதங்​களில் கொசுத்​தொல்லை அதிகமாக உள்ளது.

சென்னை மாநகரம் முழு​வதும் கடந்த ஒரு மாதமாக கொசுத்​தொல்லை அதிகமாக உள்ளது. வீடு​களுக்குள் கொசு வலை அமைத்​திருந்​தா​லும், வாயில் கதவை திறக்​கும்​போது, கொசுக்கள் உள்ளே வந்து​விடு​கின்றன. படுத்து உறங்​கும்​போது, வலைகள் மீது படும் கை, கால்​களை​யும் கொசுக்கள் பதம்​பார்த்து​ விடு​கின்றன. ரத்தத்தை உறிஞ்சிய கொசுக்கள் பறக்க முடி​யாமல் தரையில் விழுந்து கிடக்​கின்றன. தூங்கி எழும் மக்கள் அதை மிதித்து வீடெங்​கும் ரத்த கறையாக காட்​சி​யளிக்​கிறது. கொசுத் தொல்​லை​யால் குறிப்பாக வட சென்னை மக்கள் இரவில் தூக்​கத்தை தொலைத்து வருகின்​றனர்.

இதுதொடர்பாக சென்னை​வாழ் மக்கள் கூறிய​தாவது: இரவில் எங்களால் தூங்க முடிய​வில்லை. மாநக​ராட்சி சார்​பில் புகை பரப்பு​வதையே பிரதான பணியாக மேற்​கொள்​கின்​றனர். கொசு உற்பத்தி ஆதாரங்களை தேடுவதே இல்லை. மாநக​ராட்சி மன்ற கூட்​டத்​தில் கொசு தொல்லை தொடர்பாக பேசும் கவுன்​சிலர்கள் புகை பரப்பும் இயந்​திரத்தை அனுப்பவே கோரு​கின்​றனர்.

கொசுவை சாகடிக்காத ஒரு முறையை எதற்காக பயன்​படுத்து​கின்​றனர் என்றே தெரிய​வில்லை. உண்மை​யில் சென்னை​யில் கொசு சாகிறது என்றால், அது கொசுபேட்​டால் மட்டுமே சாத்​தி​ய​மாகிறது. இப்போது அதிகரித்​திருக்​கும் கொசுக்​களால் அந்த பேட்டுகளே செயலிழக்​கும் நிலை ஏற்பட்​டுள்​ளது. குறைந்தது 100-க்​கும் மேற்​பட்ட கொசுக்களை பேட் மூலம் கொன்று வருகிறோம். அந்த அளவுக்கு கொசு பல்கி பெரு​கி​ உள்​ளது.

உயரதி​காரி​களிடம் புகார் கூறினால், சென்னை​யில் ஏராளமான ஆறுகளும், கால்​வாய்​களும், மழைநீர் வடிகால்​களும் உள்ளன. அதில் விதிகளை மீறி கழிவுநீர் விடப்​படு​கிறது. இதை தடுக்க வேண்டிய சென்னை குடிநீர் வாரி​யத்தை மாநக​ராட்சி கட்டுப்​படுத்த முடி​யாது. அதனால் கொசு ஒழிப்பு சாத்​தி​யமில்லை என கை விரிக்​கின்​றனர்.

அறிவியல் ரீதியிலான நடைமுறை இல்லாத​தால், நீர்​நிலைகளில் கொசுப்பு​ழுக்களை அழிக்க எம்எல்ஓ எண்ணெய்களை ஊற்றி இயற்​கை​யாக, கொசுப்பு​ழுக்களை உண்ணும் உயிரினங்​களான டிப்​லோனிகஸ் இன்டிகஸ் போன்ற​வற்றை மாநக​ராட்சி அழித்து​விட்​டது. மாலை நேர கொசுக்களை அழிக்க, காலை​யில் புகை பரப்​பப்​படு​கிறது.

காற்று பலமாக வீசும் கடலோர நகரமான சென்னையில் புகை பரப்புதல் பயனளிக்​காது. ஆறுகள், கால்​வாய்கள் தவிர்த்து, குடி​யிருப்பு பகுதி​களில் மறைந்​திருக்​கும் கொசுப்புழு உற்பத்தி ஆதாரங்களை கண்டறிய முற்​படு​வ​தில்லை. இதனால் தான் கொசுக்களை ஒழிக்க முடிய​வில்லை. மாநக​ராட்சி நிர்​வாகம் புகை பரப்பு

வதை முற்றி​லுமாக நிறுத்​தி​விட்டு, கொசு புழு உற்பத்தி ஆதாரங்களை அழிக்க நடவடிக்கை எடுத்​தால் தான் கொசுக்களை ஒழிக்க முடி​யும். இதுகுறித்து மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள், மேயர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி​களுக்கு மாநக​ராட்சி நிர்​வாகம் பயிற்சி அளிக்க வேண்​டும். சரியான நடைமுறையை கடைப்பிடித்​தால்மாதம் ரூ.15 கோடி மாநக​ராட்​சிக்கு மிச்​ச​மாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கூறிய​தாவது: எம்பிபிஎஸ் மற்றும் டிபிஎச் முடித்​தவர்களை தான் மண்டல சுகாதார அலுவலர்​களாக நியமிக்க வேண்​டும். ஆனால் ஆள் இல்லை எனக்​கூறி எம்பிபிஎஸ் மட்டும் முடித்த, மருத்துவ சிகிச்​சை​யில் அனுபவம் பெற்​றவர்​களை, பொது சுகாதார நடவடிக்கை​யில் ஈடுபடுத்து​கின்​றனர். அவர்​களுக்கு கொசு உள்ளிட்ட பூச்​சி​யியல் குறித்து போதிய அனுபவம் இல்லை.

அதனால் புகை பரப்பு​வதையே பிரதான கொசு ஒழிப்பு பணியாக மேற்​கொள்ள எங்களை வலியுறுத்து​கின்​றனர். இந்த பணிகளை பூச்​சி​யியல் வல்லுநர்​களால் மட்டுமே திறம்பட செய்ய முடி​யும். ஆனால் பூச்​சி​யியல் வல்லுநர்​கள், மருத்​துவர்​களின் கீழ் வேலை செய்​வ​தால், அவர்களை மீறி செயல்பட முடிய​வில்லை. கொசுக்​களும் ஒழிய​வில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பி.தன்​ராஜ்

சென்னை​யில் கொசுக்களை ஒழிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாநக​ராட்​சி​யின் முன்​னாள் தலைமை நோய்க்​கடத்தி கட்டுப்​பாட்டு அலுவலர் மற்றும் பூச்​சி​யியல் வல்லுநர் பி.தன்​ராஜ் கூறிய​தாவது: நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தை செயல்​படுத்துவது மாநக​ராட்​சி​யின் கடமை. மற்ற துறை சார்ந்த அனைத்து விதி​களை​யும் மாநக​ராட்சி செயல்​படுத்திய நிலை​யில், சுகா​தா​ரத்​துறை விதிகளை மட்டும் இத்தனை மாதங்​களாக செயல்​படுத்​தாதது ஏன்? சென்னை​யில் கொசு ஒழிப்பு பணியை, மாநகரின் புவி​யியல் அமைப்பு, உலக சுகாதார நிறுவன வழிகாட்டு​தல், வானிலை மற்றும் கடல் அலை நிலவரம், மாநகரின் நிதி​நிலை இவற்றின் அடிப்​படை​யில் திட்டமிட வேண்​டும்.

உலக சுகாதார நிறுவன வழிகாட்டு​தலில், கொசுத் தொல்லை மற்றும் கொசுவால் பரவும் நோய்களை கட்டுப்​படுத்த முதலில் கொசுப்புழு ஒழிப்​புக்கு முக்​கி​யத்துவம் கொடுக்க வேண்​டும். புகை பரப்புவது அபாயகர​மானது. அது மனிதர்​களின் உடல் நலனை பாதிக்​கும். மாநக​ராட்​சிக்கு செலவும் அதிகம். கொசுவால் பரவும் நோய் கட்டுக்​கடங்​காமல் செல்​லும் பட்சத்​தில், கடைசி வாய்ப்பாக மட்டுமே முதிர் கொசுக்களை அழிக்க புகை மருந்​துகளை பரப்ப வேண்​டும் என்று அறிவுறுத்​தி​யுள்​ளது.

புகை பரப்புவது அன்றாட கொசு ஒழிப்புபணியாக மேற்​கொள்ளவே கூடாது. ஆனால் சென்னை மாநக​ராட்சி மட்டுமல்​லாது நாட்​டின் பெரும்​பாலான நகர்ப்பு​றங்​களில் கொசுவை ஒழிக்க முதல் மற்றும் கடைசி தீர்வாக புகை பரப்புவதை மட்டுமே செய்​கின்​றனர். தொடர்ந்து புகை பரப்​பினால், கொசுக்​களுக்கு எதிர்ப்​பாற்றல் அதிகரிக்​கும். அப்போது இந்த மருந்​துக்கு கட்டுப்​படாது.

மருந்​தின் அடர்த்தியை கூட்​டி​னால், மனிதர்களை கடுமையாக பாதிக்​கும். சென்னை மாநகரம் கடலோரப் பகுதி. எப்போதும் கடல் காற்று வீசிக்​கொண்​டிருக்​கும். இங்கு புகை பரப்பும்​போது, புகை மருந்து காற்றில் சிதைந்​து​விடும். முதிர் கொசுக்களை அழிக்​காது. மாநக​ராட்​சி​யில் பயன்​படுத்​தப்​படும் மாலத்​தி​யான், நாளடை​வில் மனிதர்​களுக்​கும், குறிப்பாக ஆஸ்துமா போன்ற சுவாசக்​கோளாறு உள்ளவர்​களுக்​கும் கடும் பாதிப்பை ஏற்படுத்​தக்​கூடியது.

அதை சென்னை போன்ற வெயில் அதிகம் உள்ள நகரங்​களில் வெளிப்பு​றங்​களில் பயன்​படுத்​தக்​கூடாது. சென்னை​யில் கொசு பு​ழுக்களை ஒழிக்​கும் பணிகளை மட்டுமே மேற்​கொள்ள வேண்​டும். கூவம், அடையாறு போன்ற​வற்றின் முகத்து​வாரங்களை திறந்து, கடல் நீர் ஆற்றுக்​குள் வந்து சென்​றாலே கொசுத்​தொல்லை கட்டுக்​குள் வந்து​விடும்.

எனவே மாநக​ராட்சி நிர்​வாகம், புகை பரப்புதல் இல்லாத கொசு ஒழிப்பு கொள்​கையை அறிவித்து செயல்​படுத்த வேண்​டும். கொசுக்​களுக்கு எந்த அளவுக்கு புகை மருந்து எதிர்ப்பு திறன் உள்ளது என ஒரு ஆய்வை​யும் நடத்த வேண்​டும்.

ஒரு காலத்​தில் நோய்க்​கடத்தி கட்டுப்​பாட்டு அலுவலர், கொசு ஒழிப்பு மூலம் மலேரியா தடுப்பு பணியை மட்டுமே மேற்​கொண்டு வநதார். அதன் பின்னர் மலேரியா ஒழிந்து டெங்கு அதிகரித்து, ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்​தி​யது. அதன் தொடர்ச்​சியாக லெப்டோ பைரோசிஸ் போன்ற எலிக்​காய்ச்​சல்​களும் நகர்ப்பு​றங்​களில் அதிகரித்​தது. அதை அரசு ஒப்புக்​கொள்​வ​தில் பல்வேறு அரசி​யல்கள் உள்ளன.

இந்த நிலை​யில் தான் தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சி விதிகளை கடந்த ஆண்டு வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, மாநகர சுகா​தா​ரத்​துறை மருத்​துவம், சுகா​தா​ரம், பொது சுகா​தாரம் என பிரிக்​கப்​பட்​டுள்​ளது. மாநகர மருத்துவ அலுவலர் தலைமை​யில் மருத்​துவ​மும், தலைமை நோய்க்​கடத்தி கட்டுப்​பாட்டு அலுவலர் தலைமை​யில் சுகா​தா​ர​மும், மாநகர நல அலுவலர் தலைமை​யில் பொது சுகா​தா​ர​மும் செயல்பட வேண்​டும் என தெளிவாக வரையறுத்​துள்ளது. தலைமை நோய்க்​கடத்தி கட்டுப்​பாட்டு அலுவலருக்கு அதிக அதிகாரம் வழங்​கி​யுள்​ளது.

இந்த விதிகளை பல்வேறு ஐஏஎஸ் அதிகாரி​கள், துறை சார்ந்த வல்லுநர்கள் தயாரித்​துள்ளனர். அரசிதழில் வெளிவந்து, அமலிலும் இருக்​கிறது. ஆனால் சென்னை ​மாநக​ராட்​சி​யில் இதுவரை செயல்​பாட்டுக்கு வர​வில்லை. இவ்​வாறு அவர் கூறினார். இது தொடர்பாக ​மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரனிடம் கேட்​ட​போது, “இது சீரியசான பிரச்​சினை. ​கொசுக்களை ஒழிப்​ப​தற்கான ​மாற்று ​திட்​டம்​ குறித்​து ஆலோசிக்​கப்​படும்​” என்​றார்​.



By admin