பட மூலாதாரம், Getty Images
உலகம் முழுவதுமே கொடிகள் என்பவை நாடுகளாலும் சமூகங்களாலும் அமைப்புகளாலும் அடையாளத்தைக் குறிக்கும் விதமாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படி கொடிகளை உருவாக்கிப் பயன்படுத்துவது எப்படித் துவங்கியது?
கொடிகள் எப்படி உருவாயின?
கொடிகள் எப்படி உருவாயின என்பதற்கு தெளிவில்லாத வரலாறுகளே உள்ளன. ஆகவே, கொடி என்பது எதனை அர்த்தப்படுத்துகிறது, எப்படி உருவானது என்பதிலிருந்து இதனைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். ஜே.இ. சிர்லாட் தொகுத்த A DICTIONARY OF SYMBOLS என்ற ‘குறியீடுகளின் அகராதி’, கொடிகளின் அர்த்தத்தை விளக்குகிறது.
“வரலாற்றுப் பார்வையில், கொடி அல்லது பதாகை என்பது பண்டைய எகிப்திலும் மேலும் பல நாடுகளிலும் காணப்படும் புனித அடையாளங்களிலிருந்து (totem) உருவானது. பாரசீகர்கள் நீண்ட கம்பிகளின் மீது விரித்திருக்கும் சிறகுகளுடன் கூடிய தங்கப் பருந்துகளை தம் அடையாளமாக எடுத்துச் சென்றனர்; மீடியர்கள் (பழங்கால இரானியர்கள்) மூன்று கிரீடங்களை அடையாளமாக வைத்திருந்தனர்; பார்தியர்கள் (வரலாற்று துவக்க கால இரானியர்கள்) ஒரு வாள் முனையை தம் அடையாளமாக வைத்திருந்தனர்; கிரேக்கரும் ரோமரும்கூட தங்களுக்கான இலச்சினைகள், முத்திரைகள், பதாகைகளை வைத்திருந்தனர்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உயர்ந்த இடத்தில் உருவங்களை வைக்கும் பழக்கம்
“எந்த உருவம் பயன்படுத்தப்பட்டது என்பது இதில் முக்கியமல்ல, ஆனால் அந்தச் சின்னம் எப்போதும் ஒரு தூண் அல்லது கம்பியின் உச்சியில் வைத்திருக்கப்பட்டிருந்தது என்பதுதான் முக்கியமானது. இப்படி உயர்ந்த நிலையில் ஒரு உருவத்தை வைப்பது, ஒரு வகையான அதிகார உணர்வையும், அந்த உருவம் அல்லது விலங்கின் உள்ளார்ந்த அர்த்தத்தை உயர்த்தும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. இதிலிருந்தே வெற்றியையும் தன்னம்பிக்கையையும் குறிக்கும் சின்னமாக பதாகை வளர்ந்தது” என்கிறது அந்த அகராதி. அ