கொடைக்கானல்: கொடைக்கானலில் நள்ளிரவு குளிரில் (14 டிகிரி செல்சியஸ்) புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர். தனியார் ஹோட்டல்கள் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன.
கொடைக்கானலுக்கு கோடை சீசன் மட்டுமல்லாது வார விடுமுறை நாட்கள், தொடர் விடுமுறை காலங்களில் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் பலரும் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். புதன்கிழமை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கொடைக்கானலில் உள்ள தனியார் ஹோட்டல்கள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன.
கொடைக்கானலில் நிலவும் குளுமையான காலநிலையில் புத்தாண்டை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்து சுற்றுலாபயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
நள்ளிரவு 12 மணிவரை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீஸார் அனுமதி வழங்கியுள்ளதால், கொடைக்கானலில் நள்ளிரவு நிலவும் குறைந்தபட்ச வெப்பநிலையான 14 டிகிரி செல்சியஸ் குளிரில் புத்தாண்டை கொண்டாட சுற்றுலாபயணிகள் ஆவலுடன் உள்ளனர். இதனால் கொடைக்கானலில் ஹோட்டல் அறைகள் முன்னதாகவே நிரம்பிவருகிறது.
அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் பலர் முன்னதாகவே கொடைக்கானல் வந்துவிட்டனர். இதனால் கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாத்தலங்களில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கொடைக்கானலுக்கு புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் புத்தாண்டு அன்று இரவில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.