பட மூலாதாரம், Getty Images
நடுஇரவில் தடதடவென்று கதவைத் தட்டும் ஓசை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த டாக்டர் ஹென்ரிச் கீஸ்லர் பதறி விழித்தார். பெர்லின் பல்கலைக்கழக அறுவைசிகிச்சை கிளினிக்கின் குழந்தைகள் பிரிவின் மருத்துவரான அவர், டாக்டர் வான் பெர்க்மேனின் மேற்பார்வையின் கீழ் பணிபுரிந்தார்.
தேதி டிசம்பர் 20, 1891. கடும் குளிர் காற்று வீசிய அந்த இரவில், எப்போதையும் மீறிய பனிப்பொழிவு நகரை மூடிக் கொண்டிருந்தது. நாள் முழுவதும் குழந்தைகள் வார்டில் சேவையாற்றிய அவர், சில மணிநேரங்களுக்கு முன்புதான் வீடு திரும்பி, சோர்வாகத் தூங்கியிருந்தார்.
கதவைத் தட்டும் ஓசை தொடர்ந்தது. ‘இந்த நள்ளிரவில் யாராக இருக்கும்?’ என எண்ணி, எழுவதற்கு மனமில்லாமல், படுக்கையிலிருந்து எழுந்தார். கதவைத் திறந்து பார்த்த அவரது கண்கள், அதிர்ச்சியில் விரிந்தன.
கண்ணீரும் கம்பலையுமாக, முகம் வெளிறி நின்ற ஒரு இளம் தாய். அவரைத் தொடர்ந்து வந்த மருத்துவமனை செவிலியர், அவளுக்கு ஆதரவாக நின்றார்.
“டாக்டர், என் குழந்தைக்குக் டிப்தீரியா (தொண்டை அடைப்பான் நோய்)’ முற்றுகிறது, ” என்று விம்மினாள் அந்தத் தாய். “மூச்சுவிட முடியாமல் திணறுகிறது. உங்களிடம் ஒரு புது மருந்து இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை! என் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுங்கள். உங்களைத் தவிர, எனக்கு வேறு வழியே தெரியவில்லை!”
அந்தச் செவிலியரும், குரலில் அவசரத்தைக் கலந்து, “டாக்டர், அந்தச் சிறு குழந்தையின் நிலை பார்க்கச் சகிக்கவில்லை. வயது வெறும் எட்டுதான். தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்,” என்று கெஞ்சினார். “பேராசிரியர் பெஹ்ரிங்கும், டாக்டர் வெர்னிக்கேவும், நீங்களும் இந்த அற்புத மருந்து குறித்து மருத்துவமனையில் பேசிக்கொண்டதை நான் கேட்டேன். அதனால்தான் இவர்களை உங்களிடம் அழைத்து வந்தேன்.”
டாக்டர் கீஸ்லரின் முகம் வாட்டமடைந்தது. “அம்மா, நாங்கள் ஒரு புதிய சிகிச்சை முறையைப் பரிசோதனை செய்து வருகிறோம்,” என்று பரிதாபத்தோடு கூறினார், கைகளைப் பிசைந்தவாறு. “இப்போதுவரை விலங்குகளில் மட்டுமே அதைச் சோதித்துள்ளோம். போதுமான வெற்றி கிடைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஒரு பரிசோதனையில், சோதனைக்காகப் பயன்படுத்திய முயல்கள் அனைத்தும் இறந்துவிட்டன. அதனால் தான், இதைக் குழந்தைகளுக்குப் பயன்படுத்த டாக்டர் வான் பெர்க்மேன் கண்டிப்பாகத் தடை விதித்துள்ளார்.”
“எப்படியிருந்தாலும், இந்த மூச்சுத் திணறலில் என் குழந்தை இன்றோ நாளையோ மூச்சுவிட முடியாமல், வலியால் துடித்துத் துடித்து இறந்துவிடும்!” என்று கதறினாள் தாய். “இந்த ஒன்றையாவது முயற்சித்துப் பார்ப்போமே என்றுதான் உங்களை நம்பி வந்தேன்.”
அந்தத் தாயின் நம்பிக்கையை அவரால் மறுக்க முடியவில்லை. உடனே உடையை மாற்றிக்கொண்டு, மருத்துவமனை நோக்கி விரைந்தார்.
இந்தச் சம்பவம், வருங்காலத்தில் உலகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்களுக்கு ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும் வரலாற்று நிகழ்வாக மாறப்போகிறது என்பதை, அந்த இரவில் அங்கிருந்த யாருக்குமே தெரியாது. மேலும், இந்த மரணத் தறுவாயில் இருந்த குழந்தைக்கு அளிக்கப்படவிருந்த பரிசோதனை மருந்தே, பத்து ஆண்டுகள கழித்து முதல் மருத்துவ நோபல் பரிசைப் பெறும் என்பதும், அவர்கள் அறியாத ஒரு உண்மையாகவே இருந்தது.
கழுத்தை நெரிக்கும் டிப்தீரியா
பட மூலாதாரம், Getty Images
டிப்தீரியா தொற்று, தொடக்கத்தில் ஒரு சாதாரண காய்ச்சல் போலத் தோன்றும். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே தொண்டையில் கடும் வலியும், வீக்கமும் தோன்றும். விரைவில், தொண்டையிலும் மூக்கிலும் ஒரு சாம்பல்-பழுப்பு நிறப் படலம் பரவத் தொடங்கும். நாளுக்கு நாள் இந்தப் படலம் கனத்து, தடிமன் அடைந்து கொண்டே வரும். இறுதியில், விழுங்குவதும் சுவாசிப்பதும் சாத்தியமற்றுப்போகும். நோய் முற்றிய நிலையில், அடுத்த சில நாட்களில் மூச்சுத் திணறல் மூலம் மரணம் நிகழும். இந்தக் கொடிய தன்மைக்காகவே, இந்நோயை ‘தொண்டை அடைப்பான்’ என்று அழைத்தனர்.
இந்த அழிவின் பின்னணியில் ‘கோரினேபாக்டீரியம் டிப்தீரியா’ (Corynebacterium diphtheriae) என்ற பாக்டீரியா உள்ளது. இந்த நுண்ணுயிர் உமிழும் ஒரு வகைக் கிருமிநச்சு துகள்கள், ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பரவுகிறது. இந்த நச்சுத்துகள்கள், குறிப்பாக வாய், தொண்டை மற்றும் மூச்சுக் குழாய்களைக் தாக்கும். அப்பகுதி உயிரணுக்களை அழிக்கத் தொடங்கும். இந்த அழிந்த உயிரணுக்களின் துகள்கள்தான், தொண்டையைப் படர்ந்து மூச்சுத் தடையை உருவாக்கும் பழுப்புநிறப் படலமாக மாறுகின்றன. இந்தக் கிருமி பெரியவர்களையும் தாக்கினாலும், சிறுவயது குழந்தைகளின் மூச்சுக் குழாய்கள் சிறியவையாக இருப்பதால், அவர்களில் மூச்சடைப்பு விரைவாகவும் கடுமையாகவும் அமைகிறது.
டிப்தீரியாவுக்கு எதிராக அப்போது மருத்துவர்களிடம் இருந்த சிகிச்சை வழிமுறைகள், மிகவும் வலுவற்றதாக இருந்தன. நோயாளியின் வலியைத் தணிக்க ஆபின் போன்ற மயக்க மருந்துகளைக் கொடுத்து, கடைசி நாட்களில் அவர்கள் மூச்சுத் திணறி இறப்பதைக் கண்ணால் காண்வதுதான் ஒரு வழி.
இறுதி முயற்சியாக, தொண்டைப் பகுதியில் நேரடியாக மூச்சுக் குழாயில் ஒரு சிறு துளையிட்டு (Tracheostomy) மூச்சுவிட வழி செய்வது, அல்லது ஒரு குழலைத் தொண்டை வழியாக நுரையீரலுக்குள் செருகி மூச்சுப் பாதையைத் திறப்பது போன்ற முறைகள் கடைசி நம்பிக்கையாகத் தங்கியிருந்தன. ஆனால் தொற்று ஆழமாக வேரோடி இருந்தால், இந்த முறைகள் சில நாட்கள் வாழ்வை நீட்டிப்பதே தவிர, மரணத்தைத் தடுக்க முடியாது.
பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், இளம் குழந்தைகளின் உயிரைக் குடிக்கும் கொடிய நோய்களில் டிப்தீரியா முன்னணியில் நின்றது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில், 10 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரையிலான குழந்தைகள் உயிரிழந்தனர். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி, இந்த நோய் அனைத்துக் குழந்தைகளுக்குமே ஒரு தந்திரமான பிளேகாக அச்சமூட்டியது.
இந்த நோயின் கொடுமையை விளங்கிக்கொள்ள, சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணி விக்டோரியாவின் குடும்பமே ஒரு சான்று. ராணியின் இரண்டாவது மகள், இளவரசி ஆலிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் 1878-ல் டிப்தீரியாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்தத் தொற்றில், இளவரசி ஆலிஸ் மற்றும் அவரது நான்கு வயது மகள் இளவரசி மேரி ஆகியோர் உயிரிழந்தனர். 1900 களில் பிரிட்டனில், ஒவ்வோர் ஏழு குழந்தை மரணங்களில் ஒன்று, டிப்தீரியாவினாலேயே ஏற்படும் மரணமாக அமைந்தது என்றால் இதன் தீவிரத்தை புரிந்துக்கொள்ளலாம். இதே கால கட்டத்தில் ஜெர்மனியில் ஆண்டுக்கு 50,000 குழந்தை மரணம் டிப்தீரியாவினால் ஏற்பட்டது.
முள்ளை முள்ளால் எடுக்கும் திறன்
பட மூலாதாரம், Getty Images
டிப்தீரியா நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பது 1883-ம் ஆண்டுவரை ஒரு புதிராகவே இருந்தது. அந்த ஆண்டு, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நோயியல் நிபுணர் எட்வின் கிளெப்ஸ், நோயால் மரணமடைந்தவர்களின் உடலைப் பரிசோதித்து, இந்த நோயை ஒரு வகை நுண்ணுயிர்க் கிருமிதான் ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து, ஓராண்டு கழித்து, ஜெர்மன் நுண்ணுயிரியாளர் ஃபிரெட்ரிக் லோஃப்லர் ஆய்வகத்தில் இந்தக் கிருமியைச் செயற்கையாக வளர்க்கும் முறையைக் கண்டுபிடித்தார். இதன் மூலம், இந்தக் கிருமி குறித்த ஆய்வுகள் வேகம் பெற்றன. ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட கிருமியைக் கொண்டு கினி-எலிகள், முயல்கள், குதிரைகள் மற்றும் நாய்களில் தொற்று ஏற்படுத்த முடிந்தது.
முக்கியமான திருப்பம் ஒன்று நிகழ்ந்தது. ஆய்வாளர்கள், டிப்தீரியா கிருமி வளர்ந்த ஊட்டத் திரவத்தை மட்டும் வடிகட்டி எடுத்து, அதனை விலங்குகளில் செலுத்தினர். கிருமிகள் இல்லாத அந்தத் திரவமும் நோயை ஏற்படுத்தியது! இந்தக் கண்டுபிடிப்பின் வழியாக, கிருமி அல்ல, கிருமி உமிழும் நச்சுப் பொருள்களே (Toxin) டிப்தீரியா நோயின் உண்மையான காரணம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த திசையில், 1889-1890 ஆம் ஆண்டுகளில், பாரிஸில் உள்ள பாஸ்டியர் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் எமில் ரூக்ஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரே யெர்சின் ஆகியோர் கிருமி உமிழும் நச்சுப்பொருளை வடிகட்டித் தனிமைப்படுத்தும் முக்கிய பணியையும் மேற்கொண்டனர்.
இந்த அறிவியல் பின்னணியில்தான், 1890-ஆம் ஆண்டில், எமில் வான் பெஹ்ரிங் தனது ஜப்பானிய ஆய்வுக்கூட்டாளர் டாக்டர் ஷிபாசபுரோ கிடாசாடோவுடன் இணைந்து, டிப்தீரியா கிருமிகுறித்த ஆய்வுகளைத் தீவிரப்படுத்தினார்.
அவர்கள் மேற்கொண்ட சோதனையில், டிப்தீரியா கிருமி நச்சுத் திரவத்தைக் கினி-எலிகளுக்கு அளித்தனர். எதிர்ப்பாத்ததுபோல, நச்சு தீண்டிய எலிகளில் தொற்று ஏற்பட்டு, பல மரணமடைந்தன. எனினும், சில எலிகள் தப்பிப் பிழைத்தன. இதிலிருந்து ஒரு முக்கியமான ஊகத்திற்கு வந்தனர்: நோய்த் தொற்று ஏற்பட்ட விலங்குகளில், நச்சை எதிர்த்து அழிக்கும் ‘நச்சுநீக்கி’ (Antitoxin) துகள்கள் உருவாகின்றன. அதன் காரணமாகவே சில விலங்குகள் பிழைக்கின்றன; சிலவற்றில் இந்த ‘நச்சுநீக்கி’ போதிய அளவு சுரக்காததால், அவை இறக்கின்றன.
இந்த ஊகத்தைச் சோதிக்க, அவர்கள் அடுத்த சோதனையைத் திட்டமிட்டனர். முதலில், கிருமி நச்சை வெப்பத்துக்கு உட்படுத்தி, அதன் கொடிய தன்மையை நீக்கி செயலிழக்க செய்தனர். இந்தப் பலமிழந்த நச்சை ஒரு விலங்குக்குச் செலுத்தினால், அதன் உடல் நோய்க்கிருமி தாக்கியதாகத் தவறாகப் புரிந்துகொண்டு, ஒரு சிறு நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் காட்டும். இதன் விளைவாக, அந்த விலங்கின் ரத்தப் பிளாஸ்மாவில் ‘நச்சுநீக்கி’ துகள்கள் சுரக்கத் தொடங்கும்.
இந்த ‘நச்சுநீக்கி’ துகள்கள் நிறைந்த ரத்தப் பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து, நோய்த்தொற்று ஏற்பட்ட மற்றொரு விலங்குக்குச் செலுத்தி ஆய்வு செய்தனர். அங்கு நிகழ்ந்தது ஒரு வியப்பு!
செலுத்தப்பட்ட பிளாஸ்மாவில் இருந்த ‘நச்சுநீக்கிகள்’, நோய்வாய்ப்பட்ட விலங்கின் உடலில் உள்ள நச்சுகளை எதிர்த்து அழித்தன. தண்ணீரில் மூழ்கித் தத்தளிப்பவருக்கு உதவிக்கரம் நீட்டுவது போல, இந்த சிகிச்சை நோயாளியின் எதிர்ப்புச் சக்திக்கு வலுசேர்த்து, அந்த விலங்கை விரைவாகக் குணமடையச் செய்தது; தொற்று நோய் முற்றிலுமாக அகன்றது.
பட மூலாதாரம், Getty Images
இந்த அடிப்படை வழிமுறையைப் பின்பற்றியே, கோவிட்-19 தொற்றுக் காலத்தில், முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, கிருமித் தொற்றிலிருந்து குணமடைந்த ஒருவரின் ரத்தத்தை எடுத்து, அதை மற்றொரு கோவிட் நோயாளிக்கு அளிக்கும் ‘நலமடைந்தோர் பிளாஸ்மா சிகிச்சை’ (Convalescent Plasma Therapy) பரிசோதிக்கப்பட்டது. கோவிட் நோய்க்கு இது போதிய பலனைத் தரவில்லை என்றாலும், அடிப்படையில் இரு சிகிச்சைகளும் ஒரே வழிமுறையைச் சேர்ந்தவையே.
எலியைக் குணப்படுத்த ஒரு சிறுதுளி நச்சுநீக்கி செறிவான பிளாஸ்மாவே போதுமானது. ஆனால் மனிதர்களுக்கு அளிக்க, கூடுதலான அளவிலும், அதிக செறிவும் கொண்ட ‘நச்சுநீக்கி’ பிளாஸ்மா தேவைப்பட்டது.
இந்தச் சவாலைச் சந்திக்க, பெஹ்ரிங் தனது சக மருத்துவர் எரிச் வெர்னிக்கேவுடன் இணைந்து, போதிய அளவு ‘நச்சுநீக்கி’ தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டார். முதலில், அவர்கள் பணிபுரிந்த ஆய்வு நிறுவனத்தின் அல்ஜீரிய செம்மறி ஆட்டைப் பயன்படுத்த முயன்றனர். வெர்னிக்கே வீரியமான கிருமி நச்சை அந்த ஆட்டிற்குச் செலுத்தினார். துரதிர்ஷ்டவசமாக, அடுத்த பன்னிரண்டு மணி நேரத்திற்குள், துடித்துத் துடித்து அந்த ஆடு உயிரிழந்தது.
இந்தத் தோல்வி பெஹ்ரிங்கைத் தளரடிக்கவில்லை. தனது சொந்தச் செலவில் மூன்று ஆடுகளை வாங்கி சோதனைகளைத் தொடர முடிவு செய்தார். எந்த அளவு செயலிழக்கச் செய்த நச்சு, போதிய ‘நச்சுநீக்கி’ சுரப்பைத் தூண்டும் என்பதைக் கண்டறியும் ஆய்வுகளில் ஈடுபட்டார். மற்றொரு ஆய்வுக் கூட்டாளியான பால் எர்லிச்சின் உதவியோடு, போதிய அளவு ‘நச்சுநீக்கி’ சுரக்கச் செய்யும் உகந்த வழிமுறையை வடிவமைத்தனர்.
ஃப்ரீட்பெர்க் நகருக்கு அருகே உள்ள வெர்னிக்கேவின் பண்ணையில் இரு விஞ்ஞானிகளும் தங்கள் ஆய்வுகளை முன்னெடுத்தனர். ஆடுகளில் வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகு, பெருமளவில் பிளாஸ்மா பெற, குதிரைகளில் ஆய்வுகளைத் தொடங்கினர். இந்த ஆய்வு விலங்குகளைப் பராமரிப்பதில், வெர்னிக்கேவின் காதலி மெட்டா ஃப்யூத் முக்கியப் பங்கு வகித்தார். வெர்னிக்கேவின் வழிகாட்டுதல்படி, செயலிழக்கச் செய்யப்பட்ட கிருமியைக் கொண்டு ‘நச்சுநீக்கி’ சுரக்கச் செய்து, ரத்த மாதிரிகள் சேகரிப்பதில் மெட்டா ஒரு அர்ப்பணிப்பான ஆய்வு உதவியாளராகச் செயல்பட்டார்.
அற்புதம் செய்யும் அறிவியல்
பட மூலாதாரம், Getty Images
காசநோய், காலரா மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற கொடிய தொற்றுநோய்களின் மூலக்காரணத்தைக் கண்டறிந்தவரும், நவீன நுண்ணுயிரியலின் முக்கிய நிறுவனர்களில் ஒருவருமான ஜெர்மன் மருத்துவர் ஹென்ரிச் ஹெர்மன் ராபர்ட் கோச் தான் பெஹ்ரிங் மற்றும் வெர்னிக்கே ஆகியோர் பணிபுரிந்த தொற்றுநோய் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.
டிசம்பர் 1891-ஆம் ஆண்டில், ராபர்ட் கோச் ஒரு முக்கியமான பரிந்துரையை முன்வைத்தார்: “விலங்குகளில் போதிய அளவு ஆய்வுகள் முடிந்துவிட்டன; இனி மனித நோயாளிகளிடம் இந்தச் சிகிச்சையைப் பரிசோதிக்கலாம்.” இந்த அடிப்படையில், எர்ன்ஸ்ட் வான் பெர்க்மேனின் தலைமையில் இயங்கிய சிறார் மருத்துவமனையில் குழந்தை நோயாளிகளிடம் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், இந்த முன்மொழிவில் போதிய நம்பிக்கை கொள்ளாத பெர்க்மேன், தனது மேற்பார்வையில் மீண்டும் விலங்குகளில் மேலும் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டார். இந்தக் கட்டளையின் பேரில், வெர்னிக்கே மற்றும் அவரது குழுவினர் நச்சுநீக்கி செறிவு மிக்க பிளாஸ்மாவைத் தயாரிக்க முனைந்தனர்.
இந்தப் புதிய சீரத்தை, நோய்த்தொற்று கண்ட முயல்களில் செலுத்திச் சோதனை மேற்கொண்டனர். சில நாட்களில் நோய் அகன்று முயல்கள் துள்ளிக்குதிக்கும் என எதிர்பார்த்த அவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து முயல்களும் இறந்துவிட்டன. பின்னர் கண்டுபிடிப்பது என்னவென்றால், சீரத்தைப் பாதுகாக்கும்போது தவறுதலாக அதிக வெப்பம் அளித்துவிட்டதால், அதில் இருந்த நச்சுநீக்கித் துகள்கள் செயலிழந்துவிட்டன.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு இந்த நச்சுநீக்கிச் சீரம் அளிக்கும் சோதனையைப் பெர்க்மேன் முற்றிலும் மறுத்துவிட்டார். பெஹ்ரிங்கும் வெர்னிக்கேவும் மனம் உடைந்த நிலையில் கைப்பிசைந்து நின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் தான், கண்ணீரும் கம்பலையுமாக அந்த அபலைத் தாய், டாக்டர் ஹென்ரிச் கீஸ்லரின் வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டிருந்தாள்.
நள்ளிரவில், பனிபோர்த்தப்பட்ட தெருக்கள் வழியே, பெர்லின் நகரின் விளிம்பில் இருந்த தனது வீட்டிலிருந்து நகர மையத்தில் அமைந்திருந்த மருத்துவமனைக்குக் கீஸ்லர் விரைந்தார்.
இதற்கிடையில், வெர்னிக்கேவும் நச்சுநீக்கி செறிவு மிக்க பிளாஸ்மாவை எடுத்துக்கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்தார். டாக்டர் ஹென்ரிச் கீஸ்லரின் மேற்பார்வையில், 1891-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி, அந்தக் குழந்தைக்கு 50cc சீரம் ஊசி மூலம் செலுத்தப்பட்டது. அடுத்த சில நாட்களில் இன்னொரு குழந்தைக்கும் இதே சிகிச்சை அளிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ் தினம்.
பெர்லின் நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது.
நச்சுநீக்கிச் சீரம் கொடுத்து முதன்முறையாகக் குணப்படுத்தப்பட்ட அந்தக் குழந்தை, தன் வீட்டில் பெற்றோருடன் மகிழ்ச்சியாகக் கிறிஸ்துமஸ் கொண்டாடியது. அந்தக் கிறிஸ்துமஸ் தினத்தில் நிகழ்ந்த அறிவியல் அற்புதத்தை, உலகம் வியப்புடன் பார்த்து நின்றது.
அடுத்த ஆண்டான 1892-இல், முறையான மனித சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உண்மையில், போதிய அளவு நச்சுநீக்கிச் செறிவு மிக்க பிளாஸ்மா அளிக்கப்பட்டால், அதுவரை மரணம் உறுதியெனக் கருதப்பட்ட டிப்தீரியாவைக் குணப்படுத்த முடியும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர். இந்தச் சிகிச்சையின் விளைவாக, ஐரோப்பாவில் அடுத்த சில ஆண்டுகளில் டிப்தீரியாவால் ஏற்பட்ட மரணங்கள் வெகுவாகக் குறைந்தன.
“நோயெதிர்ப்பு சீரம் சிகிச்சைத் துறையில் அவர் ஆற்றிய பணிக்காகவும், குறிப்பாக டிப்தீரியாவை எதிர்க்க அதைப் பயன்படுத்திய முறைக்காகவும் இப்பரிசு வழங்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவ அறிவியலில் ஒரு புதிய பாதையை உருவாக்கியதோடு, நோய் மற்றும் மரணத்திற்கெதிரான ஒரு பேராயுதத்தை மருத்துவர்களின் கையில் அளித்துள்ளது” என்ற பாராட்டு பத்திரத்துடன் உடலியல் மற்றும் மருத்துவத் துறைக்கான முதல் நோபல் பரிசு, 1901-ஆம் ஆண்டில், எமில் அடால்ஃப் வான் பெஹ்ரிங்கிற்கு வழங்கப்பட்டது.
மரணத்தின் வியாபாரி: மனித மனங்களில் இடம்பிடித்த கதை
பட மூலாதாரம், Getty Images
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நோபல் பரிசு உருவானது எப்படி என்பதை பார்க்கலாம். தாம் இறப்பதற்கு முன்னர் மூன்றாவது முறையாக உயிலை மாற்றி எழுதினார் சுவீடனைச் சேர்ந்த ஆல்ஃபிரட் நோபல்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் உலகிலும், உலக அமைதி, இலக்கியம் மற்றும் பொருளாதாரத் துறையில் சிறப்புமிக்க பங்களிப்பு செய்தவர்களைக் கௌரவிக்கும் நோபல் பரிசுக்கு இந்த உயிலே வித்திட்டது.
ஆல்ஃபிரட் நோபல் திறமை மிகுந்த வேதியாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர். அவர் தனது திறனைக் கொண்டு பல்வேறு வெடிமருந்துகளையும், போரில் பயன்படும் ஆயுதங்களையும் உருவாக்கினார்; போஃபர்ஸ் (Bofors) என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்தை இயக்கி வந்தார். அவரது கண்டுபிடிப்புகளில் பிரபலமானது டைனமைட்.
ஆயுதத் தயாரிப்பாளராகவும் வியாபாரியாகவும் மாறினார். செல்வம் கொட்டாகக் கொட்டாகக் குவிந்தது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரானார்.
1888 ஆம் ஆண்டில், அவரது சகோதரர் லுட்விக் நோபல் மரணம் அடைந்தார். ஆல்ஃபிரட் நோபல் தான் மரணம் அடைந்துவிட்டார் என தவறாகக் கருதிய ஒரு பிரஞ்சு நாளிதழ், அவருக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டது.
பட மூலாதாரம், Getty Images
இரங்கல் செய்தியின் தலைப்பு ஆல்ஃபிரட் நோபெலை நிலைகுலையச் செய்தது. “மரணத்தின் வியாபாரி இறந்துவிட்டார்” (Le marchand de la mort est mort) என்று அந்த இரங்கல் செய்தித் தலைப்பிட்டிருந்தது. அப்போது அவருக்கு வெறும் 55 வயது தான்; 355 காப்புரிமைகளை வைத்திருந்தார். வெறும் எளிய இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி செய்து வந்த போஃபர்ஸ் நிறுவனத்தை, ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனமாக மாற்றியது அவர்தான்.
தன்னை “மரணத்தின் வியாபாரி” என்று வர்ணிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். முதலில் மூக்குக்கு மேலே கோபம் தலைக்கு ஏறினாலும், பின்னர் பொறுமையாக அந்தக் கட்டுரையை வாசித்த அவருக்கு, தன்னை ஏன் “மரணத்தின் வியாபாரி” என்கிறார்கள் என்பது விளங்கியது. தான் தயாரித்த வெடிமருந்து, ஆயுதங்கள் உலகெங்கும் அழிவையும் இறப்புக்களையும் ஏற்படுத்துகின்றன என விளங்கிக்கொண்டார்.
தன் மரணத்துக்குப் பிறகு தன்னை எப்படி உலகம் நினைவுகூர வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதுவரை தான் வாழ்ந்த வாழ்கையைச் சீர்தூக்கிப் பார்த்தால், “மரணத்தின் வியாபாரி” என்ற அடைமொழி பொருத்தம்தான் என அறிந்தார்.
இருக்கும் தனது வாழ்கையை மாற்றி வாழ வேண்டும் என்று முடிவு செய்தார். வெளிப்படையாக யாருக்கும் சொல்லாமல், ரகசியமாக தனது உயிலை மாற்றி எழுதினார்.
தனது சொத்துக்களையும், அதிலிருந்து வரும் வருமானத்தையும் பயன்படுத்தி, ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் ஐந்து நோபல் பரிசுகள் வழங்க வேண்டும் என்று உயிலில் எழுதிவைத்தார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு ஏழு ஆண்டுகள் கடந்த பின்னர், 1896இல் டிசம்பர் 10 அன்று அவர் மறைந்தார். உயிலைத் திறந்து படித்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது சொத்து அனைத்தையும் அறக்கட்டளைக்கு அளித்துவிட்டார். அன்று அதன் மதிப்பு 31 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர். இன்று அந்தச் சொத்து வளர்ந்து சுமார் $472 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
முதலில் அவரது குடும்பத்தினர் இந்த உயிலை ஏற்க மறுத்தனர். சச்சரவு செய்தனர். சொத்தில் பெரும்பகுதி பிரான்ஸில் இருந்தது; எனவே பிரெஞ்சு அரசு பெரும் தொகையை வரியாகக் கேட்டது. இவற்றைச் சமாளித்து அறக்கட்டளை இயங்க நான்கு ஆண்டுகள் ஆயின. எனவேதான் அவரது நினைவு நாளான டிசம்பர் 10, 1901இல் முதல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு