பட மூலாதாரம், AIMS/ Gemma Molinaro
2020ஆம் ஆண்டு ‘கொரோனா ஊரடங்கு’ காலங்களில், உலகளாவிய கப்பல் போக்குவரத்து கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் கடல் ஒலி மாசு ஏறக்குறைய முற்றிலும் நின்றது. அதற்குப் பதிலாக மீன்களின் பாடல்கள் கடலில் கலந்தன.
கிராக்கிள்ஸ் (Crackles), ஸ்னாப்ஸ் (Snaps), பாப்ஸ் (pops) மற்றும் கிளிக்ஸ் (clicks) போன்ற ஒலிகள்- இவை நீருக்கடியில் இயங்கும் ஒரு செழிப்பான ஒலிச் சூழலின் அடையாளங்களாகும்.
“இந்தத் தனித்தனி ஒலிகள் அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது, அது ஓர் இசைக்குழு போல மாறுகிறது – ஆயிரக்கணக்கான வெவ்வேறு கருவிகள் ஒரே நேரத்தில் இசைப்பதைப் போன்றது,” என்கிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் கடல்சார் உயிரியலாளர் ஸ்டீவ் சிம்ப்சன்.
கடலுக்கு அடியில் நமது காதுகளால் கேட்க முடிவதை அடிப்படையாகக் கொண்டு, பல தசாப்தங்களாகப் பெருங்கடல் அமைதியானது தான் என்று பலர் நம்பினர். ஆனால் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கடலின் ஒலிகளைக் கண்காணிக்க ஹைட்ரோஃபோன்கள் (நீருக்கடியில் பயன்படுத்தப்படும் ஒலிவாங்கிகள்) அறிமுகப்படுத்தப்பட்டபோது, கடல்வாழ் உயிரினங்கள் பல்வேறு வகையான ஒலிகளைப் பயன்படுத்துவதை நாம் கண்டறிந்தோம்.
மனிதர்களால் உருவாக்கப்படும் ஒலிகள் நீருக்கடியில் அதிகமாகும்போது, தொடர்பு கொள்ளுதல், இனப்பெருக்கம் மற்றும் உணவளித்தல் போன்ற முக்கியமான விலங்கு நடத்தைகள் பாதிக்கப்படலாம். எனவே, 2010 முதல், கடல்வாழ் உயிரினங்கள் மீது ஒலியின் தாக்கத்தை ஆய்வு செய்யக் கடல்களை எப்படி அமைதிப்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் யோசித்து வந்தனர்.
அப்போதுதான் ஒரு பெருந்தொற்று ஏற்பட்டது – நமக்கு ஒரு அரிய அமைதியான தருணம் கிடைத்தது.
ஒலி மாசு இல்லாமல் கடல் எப்படி இருக்கும்?
பட மூலாதாரம், Getty Images
கப்பல் போக்குவரத்து மற்றும் வணிகப் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், மனிதர்களால் ஏற்படும் ஒலி மாசு இல்லாமல் கடல் எப்படி இருக்கும் என்பதை இறுதியாக நம்மால் கேட்க முடிந்தது. சத்தமான பெருங்கடல்கள் கடல்வாழ் உயிரினங்களை எந்தளவுக்குப் பாதிக்கின்றன என்பதை ஆய்வாளர்கள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர்.
செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் கடல் பாலூட்டி உயிரியல் பேராசிரியரான பீட்டர் தியாக், ‘சர்வதேச அமைதியான பெருங்கடல் பரிசோதனை’ (International Quiet Ocean Experiment – IQOE) என்ற ஒரு உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சி திட்டத்தின் நிறுவன உறுப்பினர் ஆவார்.
“சர்வதேச அமைதியான பெருங்கடல் பரிசோதனையின் முக்கிய நோக்கம் என்னவென்றால், சத்தங்களைச் சேர்த்து என்ன நடக்கிறது என்று பார்ப்பதை விட, சில இடங்களுக்குச் சென்று சத்தங்களைக் குறைப்பதே ஆகும்,” என்று அவர் கூறுகிறார். இருப்பினும், உலக அளவில் பெருங்கடலின் சத்தத்தைக் குறைப்பது செலவுமிக்கது மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் நிறைந்தது.
ஆனால் 2020-இல், கொரோனா பெருந்தொற்று கப்பல் போக்குவரத்து மற்றும் சுற்றுலாவைக் கட்டுப்படுத்தியது. இது உலகளாவிய கடல் வணிகத்தில் 4.1% வீழ்ச்சியை ஏற்படுத்தியது. சில பொருளாதார மண்டலங்களில், கடல் போக்குவரத்து 70% வரை குறைந்தது. கப்பல் போக்குவரத்தால் உருவாகும் இரைச்சலின் ஆற்றல் உலகளவில் 6% குறைந்ததாக மாதிரிகள் மதிப்பிடுகின்றன.
இது கடல்வாழ் உயிரினங்கள் மீது ஒலியின் தாக்கம் குறித்து உலகளாவிய அளவில் இயற்கையாகவே ஒரு பரிசோதனையை மேற்கொள்ள அனுமதித்தது.
உலகம் முழுவதும் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 200 ஹைட்ரோஃபோன்களைப் பயன்படுத்தி, ஊரடங்கிற்கு முன்னும் பின்னும் விஞ்ஞானிகள் கடலின் ஒலிகளைக் கேட்டனர்.
மார்ச் 26, 2020 அன்று நியூசிலாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, ஹௌராகி வளைகுடா கடல் பூங்காவில் படகுப் போக்குவரத்து ஏறக்குறைய முற்றிலும் நிறுத்தப்பட்டது. 12 மணி நேரத்திற்குள் நீருக்கடியிலான சத்தத்தின் அளவு சாதாரண நிலையிலிருந்து மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தது. இது மீன்கள் மற்றும் டால்பின்களின் தகவல் தொடர்பு எல்லை 65% வரை அதிகரிக்க வழிவகுத்தது.
டால்பின்களைப் பொறுத்தவரை, கப்பல் சத்தத்தால் ஏற்படும் இடையூறு இல்லாதபோது அவற்றின் அழைப்புகள் சுமார் 1.5 கி.மீ வரையிலான கூடுதல் தூரத்தை அடைந்தன.
‘கடல் விலங்குகளுக்கு ஒலியே முதன்மையான ஊடகம்’
பட மூலாதாரம், Getty Images
“கடலில் உள்ள பெரும்பாலான விலங்குகளுக்கு ஒலியே முதன்மையான ஊடகமாகும்,” என்கிறார் ஆஸ்திரேலிய கடல் அறிவியல் கழகத்தின் ஆய்வாளர் மைல்ஸ் பார்சன்ஸ்.
கடல் ஒரு சத்தம் நிறைந்த இடமாகும். கடலில் உள்ளதாக மதிப்பிடப்பட்ட 34,000 மீன் இனங்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு இனங்கள், ஒலியை உருவாக்குகின்றன என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
“ஒலி என்பது தொடர்பு கொள்ளுதல், உணவு தேடுதல், இனப்பெருக்கம், எல்லைத் தகராறுகள் எனப் பல காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது,” என்கிறார் பார்சன்ஸ். திமிங்கலங்கள் போன்ற சில விலங்குகள் ‘ஆழ்ந்த ஒலி சேனல்’ (deep sound channel) என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் அடுக்கில் செயல்படுகின்றன. அங்கு ஒலி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்குப் பயணம் செய்யக்கூடும்.
ஆல்ஃபீடே இறால் போன்ற மற்ற இனங்கள் ஆழம் குறைந்த நீரில் தொடர்பு கொள்கின்றன. ஆல்ஃபீடே இறால்கள் தங்களின் கொடுக்குகளை வேகமாக மூடி ஒரு பலமான ‘ஸ்நாப்’ (snap) ஒலியை உருவாக்குகின்றன. இது ஒரு குமிழியை உருவாக்கி, அது வெடிக்கும்போது சத்தம் உண்டாகிறது. இது இரையை மயக்கமடையச் செய்யவும் எதிரிகளை விரட்டவும் பயன்படுகிறது. இந்த ஒலியின் அளவு 210 டெசிபல்களைத் தாண்டக்கூடும். இது மிகச்சிறிய விலங்கிலிருந்து வரும் கடலின் உரத்த ஒலிகளில் ஒன்றாகும் – இது ‘நீருக்கடியிலான துப்பாக்கிச் சூடு’ போன்றது என்கிறார் பார்சன்ஸ்.
ஆனால், மனிதர்களால் ஏற்படும் ஒலிகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புயல்கள் மற்றும் கடல் பனிக்கட்டிகளின் மாற்றங்களால் பெருங்கடல் சத்தம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
மனித செயல்பாடுகளால் ஏற்படும் கடல் ஒலி பல தசாப்தங்களாக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் உலகளாவிய கப்பல் போக்குவரத்தின் வளர்ச்சியே ஆகும். நுகர்வோர் பொருட்களில் சுமார் 90% பெரிய கன்டெய்னர் கப்பல்கள் மூலம் கடல் வழியாக இரவு-பகல் பாராமல் கொண்டு செல்லப்படுகின்றன.
அதோடு, மோசமாக நிர்வகிக்கப்படும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் கடலின் உயிர்-ஒலியை (Biophony) மாற்றியுள்ளன. கடற்பாசி காடுகள் மற்றும் பவளப்பாறைகளின் இழப்பு, உருகும் பனிப்பாறைகள், மிதமிஞ்சிய மீன்பிடித்தல் மற்றும் நீருக்கடியில் சுரங்கம் தோண்டுதல் ஆகியவற்றால் கடல்வாழ் உயிரினங்களுக்கான அத்தியாவசியமான வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. இது ஒலியை உருவாக்கும் விலங்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.
பட மூலாதாரம், AIMS/ Daniel Estcourt
சிம்ப்சனின் கூற்றுப்படி, இன்றைய பெருங்கடலின் ஒலிகள் தொழில்மயமாக்கலுக்கு முந்தைய காலத்திலிருந்து மிகவும் வேறுபட்டவை. “கடல் ஒலியானது விலங்குகளின் ஒலிகள் (biophony) மற்றும் பூமி, மழை, காற்று, நீரோட்டங்களின் ஒலிகளால் (geophony) ஆனது. ஆனால் இப்போது மனித ஒலிகளும் (anthrophony) அதில் சேர்ந்துள்ளன. உதாரணமாக பவளப்பாறைகளில் மோட்டார் படகுகளின் சத்தம்,” என்கிறார் அவர்.
கப்பல்கள் அல்லது கட்டுமானப் பணிகளால் ஏற்படும் மனித ஒலி, விலங்குகளின் ஒலிகளை மறைத்து, அவை ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதைத் தடுக்கலாம். “இது ஒரு பாரில் இருப்பதைப் போன்றது,” என்று பார்சன்ஸ் விளக்குகிறார். “அந்த பாரில் வேறு யாரும் இல்லையென்றால், உங்கள் நண்பர் பேசுவதை உங்களால் கேட்க முடியும். ஆனால் பாரில் மக்கள் கூட்டமாக இருந்தால், ஒருவருக்கொருவர் பேசிக் கேட்கக்கூடிய தூரம் மிகக் குறைவாக இருக்கும்,” என்கிறார் அவர்.
ஒலியின் அதிர்வெண் அல்லது தீவிரம் மட்டுமல்ல, ஒலியின் ஆதாரம் எதிர்பாராதவிதமாக இருப்பதும் இடையூறாக இருக்கலாம். “நாம் ஒரு நகரத்தில் வசித்தால், போக்குவரத்து சத்தத்தைக் கண்டு நாம் ஆச்சரியப்பட மாட்டோம். ஆனால் நீங்கள் கடலில் வசித்து, திடீரென்று ஒரு படகு உங்கள் தலைக்கு மேலே சென்றால், நீங்கள் அதை எதிர்பார்க்க மாட்டீர்கள்,” என்கிறார் சிம்ப்சன்.
திமிங்கலங்கள் சந்திக்கும் பிரச்னைகள்
பட மூலாதாரம், Getty Images
கொலம்பிய பசிபிக் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கப்பல் இரைச்சலின் அளவு அதிகரித்தபோது, இனப்பெருக்க காலத்தில், ஹம்ப்பேக் திமிங்கலங்கள் குறைவாகவே உணவருந்துவதாகவும், கப்பல் சத்தம் அதிகரிக்கும் போது மேற்பரப்புக்கு அருகில் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளன.
ஆஸ்திரேலியாவில், புலம்பெயரும் ஹம்ப்பேக் திமிங்கலங்கள், அருகில் கப்பல்கள் இருக்கும்போது நீருக்கடியில் அதிக நேரத்தைச் செலவிடுவதையும், அவற்றின் மூழ்கும் காலத்தை நீட்டிப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். குட்டிகள் இல்லாத குழுக்களுடன் ஒப்பிடும்போது, குட்டிகள் கொண்ட திமிங்கலக் குழுக்கள் கப்பல்களின் இருப்புகளால் அதிகம் பாதிக்கப்பட்டன. அதேபோல படகுகள் அருகில் இருக்கும்போது, தாய் மற்றும் குட்டி திமிங்கலங்களின் ஓய்வு நேரம் கணிசமாகக் குறைந்தது.
கூடுதலாக, ராணுவ சோனார் தொழில்நுட்பம் – இது ஒலி சமிக்ஞைகளை வெளியிடுவதன் மூலம் நீருக்கடியில் உள்ள பொருட்களைக் கண்டறிந்து கண்காணிக்கும் தொழில்நுட்பம் – திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
ராணுவ சோனார் காரணமாகக் கரை ஒதுங்கியதாகக் கருதப்படும் திமிங்கலங்களுக்கு ‘குமிழி புண்கள்’ (bubble lesions) போன்ற காயங்கள் இருந்தன. சில திமிங்கலங்களின் காதுகள் மற்றும் மூளையைச் சுற்றி ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இது அவற்றின் கேட்கும் திறனைப் பாதித்திருக்கலாம்.
மனிதர்களைப் போலவே, அதிக ஒலி மாசு உள்ள பகுதிகள் திமிங்கலங்களின் மனநலத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இது நாள்பட்ட மன அழுத்தம் போன்ற நிலைகளுக்கு வழிவகுக்கும்.
மன அழுத்தம் மீன்களின் ஆயுட்காலத்தைக் குறைக்கலாம் மற்றும் இனப்பெருக்க விளைவுகளையும் குறைக்கலாம் என்கிறார் பார்சன்ஸ். உதாரணமாக, பவளப்பாறைகளில் ஏற்படும் சத்தம், அங்கு வசிக்கும் மீன்களின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் முட்டைகளைப் பாதுகாக்கும் திறனைக் குறைக்கிறது.
அம்போன் டாம்செல்ஃபிஷ் என்ற மீன் இனத்தில், ஆண் மீன்கள் முட்டைகளைப் பாதுகாக்கும். அவற்றில் நடத்தப்பட்ட சோதனைகளில், மோட்டார் படகு சத்தம் ஆண் மீன்களை அதிக எச்சரிக்கையுடன் இருக்கச் செய்தது தெரியவந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃபில், அவை அமைதியான நிலையில் உள்ள மீன்களை விட 34% கூடுதல் விழிப்புணர்வுடனும், 17% கூடுதல் எச்சரிக்கையுடனும் இருந்தன.
மோட்டார் படகு சத்தம், மீன்கள் தங்களது குட்டிகளை வளர்ப்பதில் ‘தீய விளைவுகளை’ ஏற்படுத்துவதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. அதாவது குட்டிகளுக்கு குறைவாக உணவளிப்பது, குறைவான தொடர்பு, மற்றும் தற்காப்பு நடத்தையில் மாற்றம்.
பட மூலாதாரம், AIMS/ Jo Hurford
‘சர்வதேச அமைதியான பெருங்கடல் பரிசோதனையின்’ ஒரு பகுதியாக 2020இல் நியூசிலாந்து கப்பல் போக்குவரத்துத் தடையின் போது சேகரிக்கப்பட்ட தரவுகள், கப்பல் சார்ந்த செயல்பாடுகளில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட நீருக்கடியிலான ஒலியைப் பெரிதும் பாதிக்கும் என்பதைக் காட்டுகின்றன. சிறிய படகுகளிலிருந்தும், பெரிய கப்பல்களிலிருந்தும் வரும் சத்தம், கடல் விலங்குகள் கேட்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் விதத்தை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.
கடல்வாழ் உயிரினங்கள் ஒலியை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்வது, கடலை மீட்டெடுப்பதற்கான ஒரு கருவியாகவும் ஒலியைப் பயன்படுத்தலாம் என்பதாகும். ஆரோக்கியமான பவளப்பாறை ஒலிகளின் பதிவுகளை நீருக்கடியில் ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிக்கச் செய்வதன் மூலம், விஞ்ஞானிகள் மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களைச் சேதமடைந்த பாறைகளுக்கு ஈர்க்க முடியும். அவை விரைவாக மீண்டு, மீண்டும் துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்புகளாக மாற இது உதவுகிறது.
“அவை செழிப்பான சுற்றுப்புறங்கள் என்று நாங்கள் பொய்யாக விளம்பரப்படுத்துகிறோம்,” என்கிறார் சிம்ப்சன்.

சர்வதேச அமைதியான பெருங்கடல் பரிசோதனையின் ஒரு விளைவாக ‘வருடாந்திர உலக கடல் செயலற்ற ஒலியியல் கண்காணிப்பு’ (World Ocean Passive Acoustics Monitoring – WOPAM) தினம் நிறுவப்பட்டது. ஜூன் 8, 2023 அன்று பார்சன்ஸ் மற்றும் சிம்ப்சன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, லண்டனின் கால்வாய்கள் முதல் பிரான்சில் உள்ள குளங்கள் வரை நீருக்கடியிலான ஒலிகளைப் பதிவு செய்கிறது.
“பல நல்ல யோசனைகளைப் போலவே, WOPAM-மும் ஜெர்மனியில் நடந்த ஒரு மாநாட்டில் தோன்றியது” என்று சிம்ப்சன் கூறினார். “2023-இல், உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் பதிவுகளை, கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் முதல் ஆண்டாக இது அமைந்தது. கடலின் ஒலிகளைக் கேட்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட தருணம் அது.”
“வேறொரு பிரபஞ்சத்தில் நடப்பதை ஒட்டுக்கேட்டு, அதை நம் உலகத்திற்கு பகிர்ந்து கொள்ளும் ஒரு மாயாஜால தருணம் போலவே இருந்தது.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு