பட மூலாதாரம், Getty Images
கொலாஜென் இணை மருந்துகள் உங்களுடைய சருமத்தை மேலும் நெகிழ்வுத் தன்மையுடையதாக மாற்றக்கூடும் – ஆனால் இதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை.
கொலாஜென் குறித்த மிகையான கருத்துகள் உள்ளன. சருமம் மற்றும் மூட்டுகளின் கட்டமைப்புக்கு அவசியமான புரதச்சத்தான கொலாஜென், சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் முதல் தூக்கமின்மை வரை அனைத்தையும் குணப்படுத்தக்கூடிய அற்புத புரதமாக முன்வைக்கப்படுகிறது.
சூரியனிடம் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்தாலும், இல்லாவிட்டாலும், உடலில் அதிகம் காணப்படும் புரதமான கொலாஜென் உற்பத்தியாகும் அளவு, வயதாக ஆக இயல்பாகவே குறையத் தொடங்குகிறது.
இதை ஈடு செய்வதற்காக கொலாஜென்னை இணை மருந்தாக எடுத்துக்கொள்வது பெரும் தொழிலாக உருவெடுத்து வருகிறது. இதில் ஆர்வம் கொண்ட தொழில்நுட்ப தொழில்முனைவோரான பிரயன் ஜான்சன் உங்கள் வாழ்நாளை நீடிப்பது எப்படி என்ற ஒருநபர் பரிசோதனையாக மாறியிருக்கிறார். இவர் தினமும் 25 கிராம் (0.9 அவுன்ஸ்) கொலாஜென் புரதங்கள் கொண்ட இணை மருந்துகளை உட்கொள்வதாக சொல்கிறார்.
ஆனால், கொலாஜென் இன்னும் நன்கு புரிந்துகொள்ளப்படவில்லை. இந்த இணை மருந்துகளை உட்கொண்டால் பலன் இருப்பதாக சில ஆதாரங்கள் இருந்தாலும், ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. இதை தினமும் உட்கொள்வதில் முக்கிய அபாயமே பணம் வீணடிக்கப்படுகிறது என்பதாகத்தான் இருக்கும். ஏனென்றால், வேறு பக்கவிளைவுகளும் அதிகம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், விளம்பரங்களில் சொல்லப்படும் வாக்குறுதிகளுக்கு இணையாக அறிவியல் ஆய்வுகள் இருக்கின்றனவா?
கொலாஜென் ஏன் குழப்பத்தை ஏற்படுத்துகிறது?
பட மூலாதாரம், Getty Images
இனிப்புகள், ஜெல்லிகள் மற்றும் மருந்துகளுக்கான காப்ஸ்யூல்கள் தயாரிக்கப் பயன்படும் ஜெலட்டின், கொலாஜெனின் ஒரு வடிவமாகும்.
அடிப்படையிலிருந்து தொடங்குவதென்றால், “கொலாஜென் விலங்குகளின் இணைப்புத் திசுகளில் மட்டும் காணப்படுகிறது”, என்கிறார் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் பதிவுபெற்ற ஊட்டச்சத்து நிபுணர் ஆன்ட்ரியா சோரெஸ். இவர் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊட்டச்சத்து நிபுணர்களுடன் தொடர்புகொள்வதற்கு உதவும் உட்டச்சத்து அமைப்பு ஒன்றின் அங்கமாக உள்ளார்.
மாடுகள், கோழிகள் மற்றும் மீன்கள் என பலவகையான விலங்குகளிடம் இருந்து கொலாஜென் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இனிப்புகள், ஜெல்லி, மருந்துகளில் பயன்படுத்தப்படும் காப்சூல்கள் தயாரிப்பதிலும் பயன்படும் ஜெலட்டின், கொலாஜெனின் ஒரு வகையாகும்.
“சில தாவரம் சார்ந்த மாத்திரைகள், ‘வீகன் கொலாஜென்’ என்ற பெயரில் அறியப்பட்டாலும் அவை நமது உடலில் கொலாஜென் உற்பத்தியாவதில் உதவியாக இருக்கும் விட்டமின் சி, அமினோ அமிலங்கள் மற்றும் தாதுக்களை மேம்படுத்துகிறது,” என்கிறார் சோரெஸ். “நீங்கள் சைவமாக இருந்தால் நல்ல உணவை சாப்பிட பணத்தை செலவழியுங்கள், அதை விட்டுவிட்டு கொலாஜென் இல்லாத மாத்திரைகளை கொலாஜென் என்று நினைத்து சாப்பிடாதீர்கள்.”
வெவ்வேறு விதமான கொலாஜென்கள் வெவ்வேறு விதமாக செயல்படுவதாக தோன்றுகிறது. ஹைட்ரோலைஸ்ட் கொலாஜென் என்பவை சிறு அமினோ அமில சங்கிலிகளாக உடைக்கப்பட்ட பெப்டைட்ஸ் என்ற கொலாஜென் ஆகும், உடலின் செரிமான மண்டலத்தில் இவை பயணிக்கும்போது இன்னும் சிறியதாக இது உடைபடுகின்றன. இயல்பு மாற்றம் செய்யப்படாத (undenatured – raw) type II கொலாஜென் என்பது மூட்டுகளை சுற்றியுள்ள செறிவான இணைப்புத்திசுவில் இருக்கக்கூடிய ஒரு மூலப் பொருளாகும்.
கோட்பாடு அடிப்படையில் இவை மூட்டுகளை சுற்றியுள்ள கொலாஜெனை மீண்டும் உருவாக்குவதில் உதவலாம் என்று கூறுகிறார், சிட்னி பல்கலைக்கழகத்தில் வாதம் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சியாளராக உள்ள டேவிட் ஹண்டர். வகை II கொலாஜென்னும் வயிற்றில் அமினோ அமிலங்களாக உடைபடும். ஆனால், ஹைட்ரோலைஸ்ட் கொலாஜென், உடலால் மேலும் எளிதாக உறிஞ்சக்கூடியதாக உள்ளது.
பல்வேறு மூலங்களிலிருந்து கிடைக்கும் பல விதமான கொலாஜென்கள், (இனிப்பு) பார் வடிவம் முதல் பானம் வரை பல வகைகளில் பேக் செய்யப்படுகிறது. “பொடி மற்றும்,திரவ வடிவில் கிடைக்கும் கொலாஜெனை விட மாத்திரை மற்றும் கம்மீஸ்களில் கொலாஜென் குறைந்த அளவே காணப்படுகிறது. அதில் அதிகமான சர்க்கரையும் சேர்க்கப்படலாம்,” என்கிறார் சோரெஸ்.
புரதச்சத்து மற்றும் விட்டமின் சி இருக்கும் உணவுகளை உட்கொண்டால் நமது உடலில் கொலாஜென் உருவாக உதவியாக இருக்கும். கொலாஜெனை உட்கொள்பவர்கள் பொடி அல்லது திரவ வடிவில் ஒருவேளைக்கான மருந்தாக 5 முதல் 10 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறார் அவர்.
விற்பனைக்காக கொலாஜெனைப் பற்றி விளம்பரங்களில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால் அவை உண்மையல்ல என்றே தெரிகிறது. ஐரோப்பாவின் உணவு பாதுக்காப்பு ஆணையத்தின் மனித ஊட்டச்சத்துக்கான மூத்த அறிவியல் அதிகாரியாக இருக்கும் லெங் ஹெங் கூறுகையில், “கொலாஜெனை உட்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும் என்ற எந்தவொரு கூற்றுக்கும் ஒப்புதல் வழங்கப்படவில்லை,” என்றார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் உணவுகளில் உள்ள அபாயங்களை ஆய்வு செய்வதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முகமைதான் ஐரோப்பாவின் உணவு பாதுக்காப்பு ஆணையம். இந்த ஆணையம் கொலாஜெனைப் பற்றி ஆய்வு செய்தபோது அதன் பயன்களாக கூறப்படுபவற்றை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளது.
“அவை சரியாக வரையறுக்கப்படவில்லை, மனிதர்களிடம் ஆராய்ச்சிகள் நடத்தப்படவில்லை அல்லது விலங்குகள் மற்றும் ஆராய்ச்சிக்கூடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளை ஆதாரமாக கொண்டிருந்தன. இந்த ஆய்வுகள் மனிதர்களிடம் ஏற்படும் விளைவுகளை கணிக்க முடியாது,” என்கிறார் ஹெங்.
அதாவது, கொலாஜெனை உட்கொண்டால் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க முடியும், மூட்டுகளின் செயல்பாடுகள் மேம்படும் போன்ற கூற்றுகள் அறிவியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.
ஆய்வுகளின் நம்பகத்தன்மையை முடிவு செய்வதில் தொடர்புடைய தொழில்துறையின் தலையீடு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்கிறார் ஹண்டர். கொலாஜென் குறித்த ஆய்வுகளுள் ஒன்று, கொலாஜெனை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் நிதி மூலம் மேற்கொள்ளப்படுகிறது அல்லது அந்த நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மூலமாக எழுதப்படுகின்றன.
பொதுவாக ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ‘கான்ஃபிளிக்ட் ஆஃப் இண்ட்ரெஸ்ட்’ எனப்படும் ஆதாய முரண்கள் குறிப்பிடப்படவேண்டும். ஆனால், எல்லா இடத்திலும் இது நடப்பதில்லை. உதாரணமாக ஒரு ஆய்வறிக்கையை தயாரித்த ஐந்து முதல் ஏழு பேர், கொலாஜெனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனால் இதைப்பற்றிய கூடுதல் தகவல்கள் ஏதும் ஆதாய முரண் பகுதியில் குறிப்பிடப்படவில்லை. (இது தொடர்பாக இந்த ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்ட elsevier நிறுவனத்திடம் பிபிசி கேட்ட கேள்விக்கு, இந்த ஆய்வு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளது.)
பட மூலாதாரம், Getty Images
“கொலாஜென் தொடர்பான ஆய்வுகளில், முழுமையாக தொழில்துறையை சாராமல் நடத்தப்பட்ட ஆய்வுகளை காண்பது அரிது.” என்கிறார் ஹண்டர்.
சில சமயங்களில் தரமற்ற ஆய்வுகளை மேற்கோள் காட்டி இன்ஃபுளூயென்சர்கள் சில நேரங்களில் சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிக அளவிலான கொலாஜெனை உட்கொள்ள அறிவுறுத்தக்கூடும்.
தவறான முடிவுகளை அளித்த பல்வேறு ஆய்வுககளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் மெட்டா அனலைசஸ் எனப்படும் முறையான மறு ஆய்வுகள் கூட தவறான முடிவை எட்டும் அபாயம் உள்ளது. ஹண்டரும் அவரது இணை ஆசிரியர்களும் இதுபோன்ற ஆய்வுகளில் தொழில்துறையின் தலையீடு உள்ளிட்ட பாரபட்சங்களை கண்டறிகின்றனர்.
ஆனால், கொலாஜென் போன்றவற்றில் போதிய சார்பற்ற பரிசோதனைகள் இல்லாத நிலையில், சார்பு நிலையை முடிவு செய்வது கடினமானது என்கிறார் அவர்.
இதை உட்கொள்வதல் மனித உடலில் ஏற்படும் பின்விளைவுகள் குறைவாக இருந்தாலும், கொலாஜென் தயாரிப்பால் வேறு மாதிரியான விளைவுகள் ஏற்படலாம். உதாரணமாக, பிரேசில் நாட்டில் மாடுகளில் இருந்து எடுக்கக்கூடிய கொலாஜென் காடுகள் அழிப்புடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொலாஜென் அல்லது ஜெலட்டின் மூலம் தொற்றக்கூடிய ஸ்பஞ்சிஃபார்ம் என்சிபேலோபதி என்ற புதிய நோய் பரவும் சாத்தியக்கூறு குறித்து ஐரோப்பிய ஆணையம் ஆய்வு ஒன்றை தொடங்கியது. மிக மோசமான சூழ்நிலையில் தொற்று உள்ள ஜெலட்டினை வாய்வழியாக உட்கொள்வதால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கணக்கிட்ட ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம், மிகக்குறைவான அபாயம் இருப்பதாக கண்டறிந்தது.
தோல், மூட்டுகள் மற்றும் திசுக்களுக்கான கொலாஜென்
பட மூலாதாரம், Getty Images
கொலாஜெனின் பலன்கள் என சொல்லப்படுபவற்றின் ஒரு முக்கியப் பிரச்னை, அந்த முலக்கூறு உட்கொள்ளப்படும் போது என்ன நடக்கிறது என்பதுதான். 2019 ஆம் ஆண்டு பிபிசியிடம் பேசிய பிரிட்டனை சேர்ந்த தோல் மருத்துவரான அஞ்சலி மாஹ்டோ இது பற்றி கூறுகையில், “நீங்கள் உட்கொள்ளும் கொலாஜென் செரிக்காமல், ரத்தத்தில் பயணித்து உங்கள் தோலை அடையும் என்பதற்கு உரிய ஆதாரம் இல்லை,” என்றார்.
வயிற்றுப் பகுதியை அடையும் கொலாஜென் உள்ளிட்ட எந்த ஒரு புரதச்சத்தும், அமினோ அமிலங்களாக மாற்றப்படும். பிறகு அந்த குறிப்பிட்ட நேரத்தில் உடலுக்கு எந்த புரதம் தேவைப்படுகிறதோ அந்த புரதமாக மாற்றப்படுகிறது. ஒருவேளை கொலாஜென் தேவைப்பட்டால் அந்த அமினோ அமிலங்கள் கொலாஜென்னாக கூட மாற்றப்படலாம், ஆனால் அதற்கு எந்த உறுதியும் சொல்ல முடியாது.
மற்றொரு பிரச்னை கொலாஜென் இணை உணவுகளின் உள்ளடக்கம். கொலாஜென் பொருட்கள் தொடர்பான தோல் மருத்துவ ஆய்வுகளில், அந்த பொருட்களில் சரும ஆரோக்கியத்துக்கு பயனளிக்கும், மேலும் சில மூலப் பொருட்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதனால் அதில் கொலாஜெனின் பயனை மட்டும் தனித்து அளவிடுவது கடினமாகிறது.
இருப்பினும், தங்கள் சருமத்தை கொலாஜென் பொலிவுறச் செய்துள்ளதாக நுகர்வோர் பலர் உறுதியாக தெரிவிக்கின்றனர். ஒரு முறையான பகுப்பாய்வு மற்றும் மெட்டா- ஆய்வின் படி ஹைட்ரோலைஸ்ட் கொலாஜென், சருமதத்தின் நீர்ச்சத்தை அதிகரிப்பது, நெகிழ்வுத்தன்மை போன்ற பயன்கள் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இதை உறுதிசெய்ய மேலும் ஆய்வுகள் தேவைப்படுவதாக ஆய்வாசிரியர்கள் முடிவை எட்டியிருந்தனர்.
அதிக கொலாஜென் புரதங்களான புரோலைல்ஹைட்ராக்ஸிபுரோலைன் மற்றும் ஹைட்ராக்ஸிபுரோலைல்கிளைசின் கொண்ட மருந்துகளை உட்கொள்வது சருமத்தின் நீர் அளவையும் தோற்றத்தையும் மேம்படுத்த முடியும் என மற்ற (தொழில்துறையால் நிதி அளிக்கப்பட்ட) ஆய்வுகள் கூறுகின்றன. “இதில் முக்கியமானது தொடர்ச்சியாக பயன்படுத்துவதுதான்.” என்கிறார் சோரெஸ்.
கொலாஜென் இணை உணவுகளை உட்கொள்ளும்போது அதன் நன்மைகளை அதிகரிக்க சில வழிமுறைகள் உள்ளன. லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் உடலியல் துறையில் இருக்கும் ராபர்ட் எர்ஸ்கைன், உடலில் உள்ள திசுக்களில் கொலாஜென் உற்பத்தி அதிகரிக்க உடற்பயிற்சி உதவக்கூடும் என்கிறார். இதனால் டென்டன் எனப்படும் தசை மற்றும் எலும்புகளை இணைக்கும் திசுக்கள் வலுவடைந்து, ஒருவர் வேகமாக நகரமுடிவதுடன், கீழே விழும் வாய்ப்புகளும் குறையக்கூடும்.
ஆய்வு ஒன்றில் எர்ஸ்கின் மற்றும் பிரிட்டன் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அவரின் சகாக்கள், ஹைட்ரோலைஸ்ட் கொலாஜென்னை உட்கொண்ட பின்னர் உயர் அழுத்த உடற்பயிற்சி மேற்கொண்டால், கொலாஜெனின் உற்பத்தி அதிகரிக்கிறதா என்று சோதனை செய்தனர்.
சிறிய அளவிலான ஆய்வில் நல்ல அரோக்கியத்துடன் இருக்கும் இளம் ஆண்கள், வைட்டமின் சி மற்றும் 30 கிராம் ஹைட்ரோலைஸ்ட் கொலாஜென் கலந்த பானத்தை உட்கொண்ட பின்னர், உடற்பயிற்சி மேற்கொண்டபோது, பொதுவாக உடலில் உருவாகும் கொலாஜெனை விட அதிகமாக கொலாஜென் உற்பத்தியானது. இந்த பரிசோதனையில் இதற்கு முன் செய்யப்பட்ட பரிசோதனைகள் மற்றும் பொதுவாக நுகர்வோருக்கு விற்கப்படும் கொலாஜென் அளவை விட அதிக அளவு கொலாஜென் பயன்படுத்தப்பட்டது.
எர்ஸ்கின் இடம்பெற்ற மற்றொரு ஆராய்ச்சியில் இதே ஆய்வை ஆரோக்கியமான நடுத்தர வயது ஆண்களைக் கொண்டு மேற்கொண்டனர். அப்போதும் கொலாஜென் இணை உணவை உட்கொள்வதால் தாக்கம் சற்று குறைந்த அளவில் இருந்தது. அதனால் கொலாஜென் உற்பத்தியில் வயது மற்றும் பாலினம் முக்கிய காரணிகளாக உள்ளன. உதாரணமாக, ஈஸ்ட்ரஜன் மற்றும் கொலாஜென் உற்பத்திக்கும் தொடர்புள்ளது.
“விளையாட்டு வீரர்கள் முக்கியமாக பெண் விளையாட்டு வீராங்கனைகளின் உடல்நலத்தையும் செயல் திறனையும் எப்படி மேம்படுத்த முடியும் என்பதை ஆய்வு செய்ய ஆவலாக இருக்கின்றேன்,” என்கின்றார் எர்ஸ்கின்.
“அவர்களுடைய செயல்பாட்டை மேம்படுத்துவது மட்டுமின்றி காயம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதிலும் கொலாஜென் பெரிய பங்காற்றும் என நான் நினைக்கிறேன். இதைப்போன்ற ஆய்வுகள் புதியது மற்றும் சிறிய அளவிலானது என்றாலும், முன்னணி வீரர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்கெனவே சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்துகளை கூறும் அளவு ஆதாரங்கள் வலுவானவை என நான் நினைக்கிறேன்,” என்கிறார் அவர்.
பொதுவாக கொலாஜென் இணை உணவுகள் இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது அழகில் அக்கறை கொண்டவர்களுடன் தொடர்புப்படுத்தப்பட்டாலும், வயது முதிர்வோடு தொடர்புடைய நாள்பட்ட நோய்களுக்கு ஒரு சிகிச்சையாக பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உதாரணமாக, முடக்குவாத அறிகுறிகள் தொடர்பாக கொலாஜென் உதவுகிறதா என்பது குறித்து கலவையான ஆதாரங்கள் உள்ளன. இந்த குறிப்பிட்ட துறையில் நடத்தப்படும் ஆய்வுகளின் தரம் குறைவாக இருப்பதால், கொலாஜென் இணை உணவுகள் உதவுகின்றனவா என கூறமுடியாது என அண்மையில் நடத்தப்பட்ட மெட்டா ஆய்வு முடிவு செய்தது. அதேநேரம், சில ஆய்வுகளில் மோசமான பக்கவிளைவுகள் இருப்பதாக இந்த மெட்டா ஆய்வின் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மூட்டழற்சி தொடர்பான ஆய்வுகளை மதிப்பாய்வு செய்த ஹண்டர் மற்றும் அவரது சகாக்கள் கொலாஜென் இணை உணவுகளை எடுத்துக்கொள்வதால் மூட்டழற்சியினால் ஏற்படும் வலியை குறுகிய காலத்துக்கு குறைத்ததாக கண்டறிந்தார்.
ஆனால், இதற்கான ஆதாரம் மிகவும் குறைவு என ஹண்டர் வலியுறுத்துகிறார். அவரது எடுத்துக்கொண்ட கொலாஜென் பற்றிய ஆய்வுகளில் மாதிரிகளின் அளவு மற்றும் தரம் குறைவாக இருந்தது. அதனால்தான் மூட்டழற்சிக்கு உதவக்கூடியவையாக கருதப்படும் இணை மருந்துகளான பைன் பட்டை சாறு, போஸ்வெலியா செராட்டா சாறு மற்றும் குர்குமின் போன்றவற்றின் வரிசையில் கொலாஜெனை அவர்கள் இணைக்கவில்லை.
நீங்கள் கொலாஜெனை எடுத்துக்கொள்ள வேண்டுமா?
எந்த இணை மருந்துகளும் மக்கள் ஏற்கெனவே எடுத்துக்கொள்ளும் மருந்துகளுடன் இணைந்து விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது, எனவே புதிதாக இணை மருந்துகளை உட்கொள்ள நினைப்பவர்கள் முதலில் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம் என ஆலோசனை வழங்குகிறார் ஹண்டர்.
அதிகளவில் கொலாஜென் போன்ற புரதங்களை எடுத்துக்கொள்வது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு பிரச்னையளிக்கும் விஷயமாக இருக்கலாம் என்கிறார் எர்ஸ்கின்.
ஹண்டரிடம் வரும் பல நோயாளிகள், இணை உணவுகள் குறித்து விளம்பரங்கள், ஊடகம் அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களிடமிருந்து தெரிந்துகொண்டு அவற்றில் ஆர்வம் காட்டுவதாக அவர் சொல்கிறார். தன்னுடைய சொந்த அனுபவத்தை பகிர்ந்த ஹண்டர், அவரிடம் ஆலோசனை பெற வரும் நபர்கள், இணை மருந்துகள் எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டினால் சில மருந்துகள் மூன்று அல்லது நான்கு வாரங்கள் உட்கொள்வது ஒன்றும் தவறில்லை என்று கூறுவதாக அவர் தெரிவித்தார்.
“இது குறித்து பேசுவதற்கு மக்கள் குறிப்பாக சுகாதார வல்லுநர்கள் தயாராக இருக்க வேண்டியது முக்கியம்,” என்கிறார் அவர். “நீங்கள் அதை போகிறப்போக்கில் விலக்கிவிட்டு சென்றால், அந்த நோயாளிகள் அதன் பின்னர் அம்மருந்துகளை உட்கொள்வதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.”
அவரது சொந்த தொழிலிலும், இணை உணவுகளில் ஆர்வம் காட்டும் நோயாளிகளிடம் அவற்றில் சிலவற்றை மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முயற்சி செய்யலாம் என அறிவுறுத்துவதாக சொல்கிறார் ஹண்டர். சரும தோற்றத்தைப் போலவே, மூட்டுகளின் மீது இணை உணவுகளின் தாக்கம் தெரிவதற்கு இரண்டு மூன்று மாதங்கள் ஆகும் என சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், மூட்டழற்சியுடன் உள்ள பலரும், பலன்கள் தெரியாவிட்டால் எந்தவொரு இணை உணவையும் ஒரு மாதத்துக்கு மேல் பயன்படுத்துவது அரிது என்கிறார் ஹண்டர்.
கொலாஜெனை பயன்படுத்த ஒருவருக்கு பல காரணங்கள் இருக்கும் சூழலில், ஒரு கொலாஜென் இணை உணவு பயனுள்ளதுதானா என்பதற்கு ஒற்றை பதில் இல்லை. அதை எதற்காக உட்கொள்ள விரும்புகிறீர்கள், எத்தனை நாட்களுக்கு உங்களால் எடுத்துக்கொள்ள முடியும்? அதன் விலை வாங்கக்கூடியதாக இருக்கிறதா? அந்த கொலாஜென்னில் வேறு எந்த மூலப் பொருட்களும் கலந்துள்ளதா? மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அது வேறு எவ்விதம் தாக்கத்தை ஏற்படுத்தும் போன்ற பல காரணிகளை சார்ந்தே அதன் பயன் அமையும். “அனைவரிடமும் கொலாஜென் இணை உணவு ஒரே மாதிரியான விளைவை தராது,” என்கிறார் எர்ஸ்கின்.
கொலாஜெனுக்கு செலவு செய்யும் பணத்தை ஊட்டசத்துள்ள உணவுக்கு செலவு செய்தால் அது உடல் ஆரோக்கியத்தை பல வகைகளில் முன்னேற்றும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். நல்ல சத்துள்ள விதவிதமான உணவோடு, சரியான உடற்பயிற்சி, உறக்கம் மற்றும் சன்ஸ்கிரீன் ஆகியவை சரும பொலிவு மற்றும் ஆரோக்கியத்துக்கு தரும் நன்மைகள் நன்கு அறியப்பட்டவை. இது சலிப்பளிப்பதக தோன்றலாம், ஆனால் இது நீண்ட கால அடிப்படையில் பெரிய அளவில் பணத்தை சேமிக்க உங்களுக்கு உதவக்கூடும்.
*இந்த செய்தியில் உள்ளவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மட்டுமே, இதை மருத்துவ ஆலோசனைக்கோ அல்லது மருத்துவருக்கோ மாற்றாக கருதப்படக்கூடாது. இந்த இணையதளத்தில் அடிப்படையில் பயனர் எடுக்கும் எந்த முடிவுக்கும் பிபிசி பொறுப்பாகாது. குறிப்பிடப்பட்டுள்ள எந்த இணையதளத்தில் இருக்கும் தகவலுக்கும் பிபிசி பொறுப்பல்ல, அந்த தளங்களில் கூறப்பட்டுள்ள அல்லது அறிவுறுத்தப்பட்டுள்ள எந்த ஒரு வணிக ரீதியான பொருட்களையோ, சேவைகளையோ பிபிசி அங்கீகரிக்கவில்லை. உங்களுடைய ஆரோக்கியம் குறித்து நீங்கள் எந்த வகையிலாவது கவலை கொண்டிருந்தால் உங்களது பொது மருத்துவரிடம் ஆலோசனை நடத்துங்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு