2
மலை இடுக்குகளில் வழியும் சுனைகளின்
நடுவே கதிரவனின் கதிர்கள்
புதிதாய் சிவந்தது
தகர கொட்டகைக்குள் எழும் சண்டை எந்த குடும்பத்தின்
புலம்பல் என்றியாது விழிகள் பிதுங்கியது
லயம் காக்கும் நாய்கள்
அதற்கும் எஜமான்கள் அதிகம் தான்
நன்றிகள் மிகையானதால்
விசும்பின் அசைவில் மூடு பனியால்
மேவித் தத்தளித்தது வெள்ளை பூக்களும்
அதிகாலை ஊதுபத்திகளின் சுகந்தம்
சுற்றுவட்டாரத்தை ஆசுவாசப்படுத்தியது
கொட்டும் பனியில் நனைந்த கிழவனும் கிழவியும்
குழந்தையை ஆரவாரப்படுத்தினர்
உச்சிமேட்டில் பள்ளியை நோக்கி ஏறினர்
மாணவர் குழாம்
கொழுவிய புத்தப்பைகளை நிரந்தரமாய் காண
தாயவளும் கொழுந்துகூடையை சுமக்க தயாரானாள்
கூடை நிரம்புவதற்குள் குழந்தை வந்துவிடுவான்
ஒருநேர கூலியும் இருநேர சாப்பாட்டுக்கே முடிந்துவிடும்
இரவானால் அடுத்தவனின் அந்தரங்கம் அயலவனுக்கே
தெரிந்திடுமாபோல் லயத்து வீடுகள்
ஓட்டு வாங்கிய அரசுக்கு ஒரு நேரம் படியளக்கக்கூட
பாவம் பணமில்லை போலும்
கட்டுப்படியாகவில்லை கடன் வாங்கிய தொகையும்
கொடுத்தவன் தொண்டையை நெரிக்க
ஓடி ஒழிய முடியவில்லை
மானம் கப்பல் இருக்கிறது கடன்
கொடுத்தோன் கூச்சலில்
வாங்கிய கடனுக்கு மேல் கட்டிய வட்டிக்கு
கொழுந்து பிடுங்கிய விரல்களும் சுருங்கியது
சம்பளம் கூடினால் கொடுத்துவிடலாமெனும்
நப்பாசைக்கு பரிகாரம் கிட்டவில்லை
கொழுந்து கூடைகளுக்கு.
கேசுதன்