• Sat. Feb 28th, 2026

24×7 Live News

Apdin News

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை – நம்பிக்கையின் மிதிவண்டிப் பயணம் | பத்து வருட சாதனை

Byadmin

Feb 28, 2026


“சக்கரங்கள் சுழலும் போதும், சாலை வடக்கை நோக்கி நீளும் போதும், ஒவ்வொரு மிதிவண்டியாளரும் ஒரு பெரிய கதையின் ஓர் அங்கமாக மாறுன்கிறார்கள்” –  Ride for Ceylon  

யாழ் மாணிப்பாய் வைத்தியசாலை நண்பர்களின் முன்னெடுப்பில் வருடம் தோறும் நடைபெறும் தொண்டர்களின் துவிச்சக்கரப் பயணம் இந்த ஆண்டு பத்தாவது வருடத்தினை நிறைவுசெய்யும் நோக்குடன் வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக நிதிசேகரிக்கும் துவிச்சக்கர வண்டிப் பயணத்தினை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை சுமார் 450 மைல்களை  உலகின் பல நாடுகளிலிருந்து பங்குபற்ற உள்ள சுமார் 85 பங்காளர்கள் எதிர்வரும் மார்ச் 11ம் திகதி முதல் 4 நாட்களில் நிறைவுசெய்ய உள்ளார்கள்.

2017ம் ஆண்டு ஆனந்த் ஆர்னோல்ட் தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஆரம்பித்த இந்த துவிச்சக்கரவண்டிப் பயணம் 450 மைல்களைத் தாண்டி இறுதியில் அவர் உட்பட 3 வீரர்களுடன் மாணிப்பாய் வைத்தியசாலையில் நிறைவடைந்தது. இந்த குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளில் இன்றைய பரிணாமத்தினை அடைந்ததுடன் இந்தவருடம் 84 பேர் கலந்துகொள்ள இருக்கின்றார்கள்.

எந்த நாடுகளிலிருந்து கலந்துகொள்கின்றார்கள்?

ஐக்கிய இராச்சியத்திலிருந்து 25, கனடா 11, ஆஸ்திரேலியா 13, பிரான்ஸ் 8, இலங்கை 9, தென்னாபிரிக்கா 3, அமெரிக்கா 1, இந்தியா 1, சுவிஸ்சலாந்து 1, கென்யா 1, சிங்கப்பூர் 1, உதவியாளர்கள் 9, மொத்தம் 83 பங்காளர்கள் 11 நாடுகளிலிருந்து கலந்துகொள்ள இருக்கின்றார்கள்.

ஏற்பாட்டாளர்கள் கூறுவது என்ன?

2017 ஆம் ஆண்டு, கொழும்பிலுள்ள செயிண்ட் தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர்களான ஒரு ஆர்வமுள்ள குழுவும், ஒரு சிந்தனைக்கு உயிர் கொடுத்த ஒருவரும் இணைந்து, ஒரு அபூர்வமான முயற்சியை தொடங்கினர். தங்களின் தாய்நாட்டின்மீது கொண்ட ஆழ்ந்த நேசமும், அதன் காயங்களை ஆற்ற வேண்டும் என்ற மனப்பாங்கும் அவர்களை ஒன்றிணைத்தது. இதன் பயனாக, இலங்கையை முழுவதும் கடந்து செல்லும் ஒரு நிதி திரட்டும் மிதிவண்டிப் பயணமாக Riders for Charity உருவானது. ஒரு துணிச்சலான யோசனையாக ஆரம்பித்த இந்த முயற்சி, பின்னர் Ride for Ceylon எனும் இயக்கமாக வளர்ந்து, இன்று பல கண்டங்களைத் தாண்டி, மிதிவண்டியாளர்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவிய முயற்சியாக மாறியுள்ளது. இதன் ஒரே நோக்கம் – இலங்கையின் போர் பாதித்த வட மாகாணத்தில் வாழ்வுகளை மீண்டும் கட்டியெழுப்பி, நம்பிக்கையை மீட்டெடுப்பது.

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாணிப்பாய் கிரீன் மெமோரியல் மருத்துவமனையானது (GMH) 1847 ஆம் ஆண்டு அமெரிக்க மதப்பணியாளரான டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் அவர்களால் நிறுவப்பட்டது. இந்த மருத்துவமனை, ஒருகாலத்தில் சிகிச்சையும் மருத்துவக் கல்வியும் வழங்கிய முக்கிய மையமாக திகழ்ந்தது. ஆனால் பல ஆண்டுகளாக நடைபெற்ற போரினால் அந்த மருத்துவமனை சீரழிந்து, அதன் விடுதிகள் வெறிச்சோடி, அதன் முழு திறனை பயன்படுத்த முடியாத நிலையிலும் காணப்பட்டது.

ஒரு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பாக பல்வேறு பாடசாலைகளின் பழைய மாணவர்களும், அவர்களின் உலகளாவிய நண்பர் வட்டமும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை 450 கிலோமீட்டர் நீளமான ஒரு தொண்டு மிதிவண்டிப் பயணத்தை கற்பனை செய்தனர். இது உடல் சக்திக்குச் சோதனை மட்டும் அல்ல; மீண்டும் இணைதல், உடல் ஆரோக்கிய மனப்பாங்கு, மறுமலர்ச்சி ஆகியவற்றுக்குமான பயணமாகவும் இருந்தது. மிதிவண்டியால் கடக்கப்பட்ட ஒவ்வொரு கிலோமீட்டரும், உடைந்த ஒரு பகுதியை மீளெழுப்புவதற்கும், ஒரு முக்கிய மருத்துவ நிறுவனத்தை அதன் பழைய பெருமைக்கு மீட்டெடுப்பதற்குமான ஒரு அடியாக இருந்தது.

தொடங்கியதிலிருந்து, Ride for Ceylon ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக வளர்ந்துள்ளது. உலகின் பல பகுதிகளில் இருந்து மிதிவண்டியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். திரட்டப்பட்ட நிதி, நேரடியாக மணிப்பாய் கிரீன் மெமோரியல் மருத்துவமனையின் மறுசீரமைப்பிற்கும், அதனுடன் தொடர்புடைய ஆதரவு திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சக்கரங்கள் சுழலும் போதும், சாலை வடக்கை நோக்கி நீளும் போதும், ஒவ்வொரு மிதிவண்டியாளரும் ஒரு பெரிய கதையின் ஓர் அங்கமாக மாறுகிறார் – குணமடைதல், நம்பிக்கை, மனிதநேயம் ஆகியவற்றின் கதை. மோதல்களின் பின்னர்கூட, கருணை ஒரு புதிய பாதையை அமைக்க முடியும் என்பதற்கான சான்றாக Ride for Ceylon திகழ்கிறது. ஒவ்வொரு மைலும், அந்தப் பாதை ஆரோக்கியமான, மேலும் ஒன்றுபட்ட இலங்கையை நோக்கி நம்மை இன்னும் நெருக்கமாக அழைத்துச் செல்கிறது.

எனத் தமது நோக்கினை குறிப்பிட்டுள்ளார்கள்.

கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில;

2017 ஆம் ஆண்டு

2017 ஆம் ஆண்டு நிறைவு செய்யும்போது மரங்கள் நடப்பட்டன.

 

 

 

 

 

 

 

The post கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை – நம்பிக்கையின் மிதிவண்டிப் பயணம் | பத்து வருட சாதனை appeared first on Vanakkam London.

By admin