• Sat. Apr 25th, 2026

24×7 Live News

Apdin News

கோகுலேஸ்வரன்: தமிழ்நாடு தேர்தலில் 40 வயதில் முதல்முறை வாக்களித்த இலங்கை தமிழர் – ‘ஒரு வார்த்தை’ விடுபட்டதால் பாஸ்போர்ட் கிடைக்கவில்லையா?

Byadmin

Apr 25, 2026


நீதிமன்ற உத்தரவுப்படி வாக்குரிமை பெற்ற இலங்கை அகதி கோகுலேஸ்வரன்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, நீதிமன்ற உத்தரவுப்படி வாக்குரிமை பெற்ற கோகுலேஸ்வரன்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

”எல்லோரும் 18 லிருந்து 20 வயதுக்குள் முதல் முறையாக வாக்களிப்பார்கள். நான் 40 வயதில் முதல் முறையாக வாக்களித்திருக்கிறேன். இது மிகவும் போராடிப் பெற்ற உரிமை என்பதால் மற்றவர்களை விட இந்தத் தேர்தலில் பங்கேற்றதில் அதிக மகிழ்ச்சி அடைந்தவன் நான்தான். அதையும் விட இனிமேல் இந்த உரிமை என் மூலமாக எனக்கும் என் மனைவிக்கும் கிடைக்குமென்பது அதை விட மகிழ்ச்சி தருவதாகவுள்ளது!”.

திருச்சி கோட்டபட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் கோகுலேஸ்வரன் பிபிசியிடம் இவ்வாறு தெரிவித்தார்.

பெரும் சட்டப்போராட்டம் நடத்தி இவர் இந்த உரிமையைப் பெற்றுள்ளார். இவரைப் போலவே இதே முகாமில் வசிக்கும் நளினி கிருபாகரன் என்ற பெண்ணும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாக்களித்துள்ளார்.

பாஸ்போர்ட் பெறுவதற்காக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அதில் கிடைத்த உத்தரவின் அடிப்படையில், வாக்குரிமை பெற்றுள்ள கோகுலேஸ்வரனுக்கு, இப்போது வரை பாஸ்போர்ட் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு நவம்பரில் 8 வாரங்களுக்குள் இவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டநிலையில், நீதிமன்ற தீர்ப்பை டைப் செய்யும்போது ‘நோ பெண்டிங் கேஸ்’ என்பதில் ‘நோ’ என்ற வார்த்தை விடுபட்டதால் பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அகதிகளுக்காக வாதாடி வரும் வழக்கறிஞர் ரோமியோ ராய், அவருக்கு விரைவில் பாஸ்போர்ட் கிடைக்குமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

உயர்நீதிமன்ற உத்தரவால் 40 வயதில் கிடைத்தது வாக்குரிமை!

தமிழக அரசின் வெளிநாடு தமிழர்களின் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம் 2023-ஆம் ஆண்டில் வெளியிட்ட தரவுகளின்படி, 105 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 19,300 குடும்பங்களைச் சேர்ந்த 58,357 இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களும் இருக்கின்றனர்.

இவர்களைத் தவிர்த்து, இந்த முகாம்களுக்கு வெளியே 13,400 குடும்பங்களைச் சேர்ந்த 33,479 இலங்கைத் தமிழர்கள், அருகாமையிலுள்ள காவல்நிலையங்களில் பெயர்களைப் பதிவு செய்து, பொதுக்குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களின் நலன் மற்றும் தீர்வுகளுக்காக 2021-ம் ஆண்டில் தமிழக அரசால் ஓர் ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, இந்திய குடியுரிமைச் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்த 1987-ஆம் ஆண்டுக்கு பின்பு, பெற்றோர் இருவரும் இலங்கைத் தமிழர்களாக இருக்கும் குடும்பங்களில் 22,058 பேர் இந்தியாவில் பிறந்தவர்கள் என்று தனது இடைக்கால அறிக்கையில் தெரிவித்தது.

கடந்த 2026 பிப்ரவரி 15 அன்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோதிக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 1983 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் ஏற்பட்ட இனமோதல்கள் காரணமாக தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இங்கு வந்த இலங்கைத்தமிழர்கள் 89 ஆயிரம் பேர் தமிழகத்தில் வசித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அவர்களில் கணிசமானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிப்பவர்கள் என்றும், 40 சதவீதம் பேர் இந்தியாவில் பிறந்தவர்கள் என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும், நீண்டகால விசா வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

தமிழக அரசின் இந்த கோரிக்கை, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள நிலையில், முகாம்களில் உள்ள பலரும் தங்களுடைய உரிமைக்காக தனித்தனியாக சட்டரீதியாகப் போராடி உரிமைகளை பெற்று வருகின்றனர்.

திருச்சி கோட்டபட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்து வரும் கோகுலேஸ்வரன் மற்றும் நளினி ஆகியோர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வாக்குரிமை பெற்று, சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இவர்களில் நளினி கிருபாகரன், கடந்த 2024 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே முதல் இலங்கைத் தமிழராக வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3 ன்படி, 1956 ஜனவரி 26 லிருந்து 1986 ஜூலை 1 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்பதை தங்களின் கோரிக்கையாக முன் வைத்து, இவர்கள் இருவரும் உயர்நீதிமன்றத்தில் இந்தியக் குடிமகன் என்ற உரிமையை உறுதி செய்து பாஸ்போர்ட் பெறுவதற்கு உத்தரவு பெற்றிருந்தனர்.

இவர்களில் கோகுலேஸ்வரன், தனக்கு பாஸ்போர்ட் வேண்டுமென்று விண்ணப்பித்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், கடந்த 2025 நவம்பர் 14 அன்று, இவருக்கு 8 வாரங்களுக்குள் பாஸ்போர்ட் வழங்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை வைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்ததில், அவருடைய பெயர் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோகுலேஸ்வரன், ”என்னுடைய தாத்தா, பாட்டி சோழிங்கநல்லூரைச் சேர்ந்தவர்கள்தான். எனது தாத்தா காலத்தில் இலங்கை சென்று நுவரேலியாவில் இருந்தனர். கடந்த 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் துவங்கியபோது, இங்கே வந்துள்ளனர். நான் 1986 பிப்ரவரி 9 அன்று திருச்சி அரசு மருத்துவமனையில்தான் பிறந்தேன். இங்கேயே பிறந்தவன் என்ற அடிப்படையில்தான் எனக்கு இந்த உரிமையை உயர்நீதிமன்றம் வழங்கியது.” என்றார்.

அவர் பகிர்ந்த தகவலின்படி, கோகுலேஸ்வரனின் தாயார் சரோஜா தேவி, தந்தை ரங்கராஜ் ஆகியோர், கடந்த 1983 ஆம் ஆண்டில் இலங்கை அரசால் வழங்கப்பட்ட அவசர கால பாஸ்போர்ட் (ரெட் பாஸ்போர்ட்) பெற்று, திருவனந்தபுரம் வழியாக தமிழகத்தில் திருச்சிக்கு வந்துள்ளனர்.

கோகுலேஸ்வரனின் மனைவி, இவர்களின் மகன், மகள் ஆகியோர் தமிழகத்தில்தான் பிறந்துள்ளனர். இவர்களின் குழந்தைகள், கோகுலேஸ்வரனின் பெற்றோர், மனைவியின் பெற்றோர் ஆகியோரும் இதே முகாமில்தான் உள்ளனர். கோகுலேஸ்வரன், எம்எஸ்சி (பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ்) முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

கோகுலேஸ்வரன், நளினியைப் போலவே மேலும் 15 பேருக்கு, தனித்தனியாக உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்து அந்த உரிமையைப் பெற்றுத் தந்துள்ளதாகச் சொல்கிறார் வழக்கறிஞர் ரோமியோ ராய்.

இவர்களில் பலரும் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். கோகுலேஸ்வரனுக்கு தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வாக்குரிமை கிடைத்துவிட்டாலும் இன்னும் அவருக்கு பாஸ்போர்ட் கிடைக்கவில்லை.

”இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி, 1987 க்கு முன்பு இந்தியாவில் பிறந்த இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டுமென்ற உத்தரவின்படி, நான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தேன். அது நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். எனக்கு பாஸ்போர்ட் வழங்குமாறு, கடந்த 2025 நவம்பர் 14 அன்று உத்தரவு வழங்கியது. ஆனால் இதுவரையிலும் எனக்கு பாஸ்போர்ட் கிடைக்கவில்லை.” என்றார் கோகுலேஸ்வரன்.

இந்தியாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட் (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட் (கோப்புப்படம்)

ஒரு வார்த்தை விடுபட்டதால் மறுக்கப்பட்டது பாஸ்போர்ட்?

இதற்கான காரணத்தை விளக்கிய அவர், நீதிமன்ற உத்தரவை டைப் செய்யும்போது ஏற்பட்ட பிழையால்தான் தனது பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

திருச்சி கோட்டபட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இவர் மீது எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என்று அந்தப் பகுதியிலுள்ள கேகே நகர் காவல் நிலையத்திலிருந்து இவருடைய பெயருக்கு சான்றிதழ் தரப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய வழக்கறிஞர் ரோமியோ ராய், ”இந்தியாவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு வந்த நிலையில், 1986ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அது 1987 ஜூலை 1 ல்தான் அமலுக்கு வந்தது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் கோகுலேஸ்வரன் பிறந்தார். அதை வைத்தே நாங்கள் வாதாடி அவருக்கு இந்த உத்தரவை பெற்றுத் தந்தோம். ஆனால் பாஸ்போர்ட் மறுக்கப்பட்டதற்கு காரணம் வேறு.” என்றார்.

அதுபற்றி விளக்கிய அவர், ”அந்த வழக்கில் நாங்கள் தாக்கல் செய்த பதில் மனுவிலேயே, அவர் மீது எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என்பதற்கான காவல்துறை தந்த சான்று ஆதாரத்தை சமர்ப்பித்தோம். ஆனால் நீதிமன்ற தீர்ப்பை டைப் செய்யும்போது ‘நோ கிரிமினல் கேஸ் பெண்டிங்’ என்பதில் ‘நோ’ என்பது விடுபட்டுவிட்டது. அது முழுக்க முழுக்க தட்டச்சு பிழைதான். ” என்றார்.

கோகுலேஸ்வரனுக்கு கேகே நகர் காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட சான்றிதழ், நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவு அனைத்தையும் பிபிசியிடம் அவர்கள் பகிர்ந்தனர்.

”அவர் அகதிகள் முகாமில் இருப்பதால் பாஸ்போர்ட் ஆணையத்தின் விசாரணை நடைமுறைகள் தீவிரமாகவுள்ளன. இதுபற்றி பாஸ்போர்ட் ஆணையம் கேட்ட விளக்கத்தை நாங்கள் தெளிவாக அனுப்பிவிட்டோம். காவல்துறையிடமும் பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து மறு விசாரணைக்கு தபால் அனுப்பியுள்ளனர். இவை கிடைத்தபின்பு பாஸ்போர்ட் கிடைத்துவிடும்” என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய்.

இவரைப் போலவே பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்து ஏராளமானவர்கள் காத்திருப்பதாகக் கூறுகிறார் கோட்டபட்டு முகாமில் வசிக்கும் மாலினி.

பிபிசியிடம் பேசிய அவர், ”எங்களுக்கு இப்போது முகாம்களில் நிறைய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. தமிழக அரசு பல வித உதவிகளைச் செய்து வருகிறது. ஆனால் இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை வேண்டுமென்பதுதான் இங்குள்ள 80 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.” என்றார்.

இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி, 1987 ஜூலை 1 அல்லது அதற்குப் பின் இந்தியாவில் பிறந்த ஒருவரது பெற்றோரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்தால் மட்டுமே, அவர் இந்திய குடியுரிமை பெறமுடியும். மேலும், பெற்றோர் இருவரும் ‘சட்டவிரோத குடியேறிகளாக’ இருக்கக் கூடாது. இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வசித்து வந்தாலும் அவர்கள் ‘சட்டவிரோத குடியேறிகளாகவே’ கருதப்படுகின்றனர்.

இந்திய குடியுரிமை சட்டம் 1955 பிரிவு 2(1) (b) நாடற்றவர்களையும், அகதிகளையும் ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று வரையறுக்கிறது.

முகாமில் உள்ள இலங்கை அகதிகள் (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கை அகதிகள் (கோப்புப்படம்)

ஆவணங்கள் இல்லாததால் இந்திய குடியுரிமை பெறுவதில் சிக்கல்!

சென்னையைச் சேர்ந்த பகிசன் என்பவர், இலங்கைத் தமிழர்களான பெற்றோருக்குப் பிறந்தவர். கடந்த 2024 ஆம் ஆண்டில் அவர் பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். அதன்பின் இலங்கை சென்று அங்குள்ள பெண்ணை திருமணம் செய்து, அவருடைய பெயரை இணைக்க விண்ணப்பித்துள்ளார்.

அதைச் சேர்த்த பின்பு, அவர் பாஸ்போர்ட் பெற்றது சட்டவிரோதமானது என்று கூறி, பாஸ்போர்ட் சட்டம் 1967-ன் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியேவந்தார். இதன் மூலமாக அவர் ‘நாடற்றவர்’ என்று அறிவிக்கப்பட்டார். அவர் தற்போது குடியுரிமை சட்டம் 1955, பிரிவு 6- ன் கீழ் ‘naturalization’ (இயல்புப்படுத்துதல்) அடிப்படையில் இந்திய குடியுரிமை கோரி சட்டரீதியாக போராடி வருகிறார்.

இந்த பிரிவின்படி, குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன், ஓராண்டு காலம் தொடர்ந்தும், அதற்கு முன்பு 14 ஆண்டுகளும் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். ஆனால் குடியுரிமைச் சட்டத்தின்படி, இலங்கை அகதிகளுக்கு எந்த உரிமைகளும் கிடையாது என்பதே சட்ட நிபுணர்களின் கருத்தாகவுள்ளது.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இலங்கைத் தமிழர்களுக்கு, அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆவணங்கள் இல்லாதது, குடியுரிமை பெறுவதற்கு பெரும் தடையாகவுள்ளது.

இதை ஒப்புக்கொள்ளும் கோகுலேஸ்வரன், ”எங்கள் முன்னோர் சோழிங்கநல்லூரைச் சேர்ந்தவர்கள். இப்போதும் எங்கள் உறவினர்கள் இங்கு உள்ளனர். என் பெற்றோர் இலங்கையில் பிறந்திருந்தாலும் அவர்கள் இங்கே 1983ல் வந்தபோது, அப்போதிருந்த துணை ஆட்சியர், எங்களின் பூர்வீகம் தமிழகம் என்பதால் இவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என்று சான்று வழங்கியுள்ளார். ஆனால் அப்போது இலங்கை அரசு வழங்கிய ரெட் பாஸ்போர்ட் இல்லை. அதில் இவர்கள் இந்தியர்கள் என்றுதான் இருக்கும். அதைக் காணவில்லை.” என்றார்.

”எனக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிட்டால் அடுத்து ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். முகாமை விட்டு வெளியே சென்று சொத்து வாங்கவும் உரிமை பெறலாம். நான் படித்து அரசு வேலைக்குப் போக முடியாவிட்டாலும் எனது குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். இப்போது வாக்களித்திருப்பதை விட பாஸ்போர்ட் கிடைப்பதே எனக்கு முக்கியம். கிடைத்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.” என்றார் அவர்.

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென்பதே பொதுவான இவர்களின் பொதுக்கோரிக்கையாகவுள்ளது.

இந்தத் தேர்தலிலும் திமுக அந்த வாக்குறுதியைத் தந்திருந்தாலும் மத்திய அரசு அதை ஏற்றுக் கொள்ளுமா என்பதே இவர்களின் கேள்வியாகவுள்ளது.

இந்தியாவில் அகதிகளுக்கான தனிச்சட்டம் இல்லாதே இந்த பாகுபாட்டுக்கும், குழப்பத்திற்கும் காரணமென்கிறார் வழக்கறிஞர் ரோமியோ ராய்.

”இது மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் முடிவெடுக்க வேண்டிய விஷயம். அதில் உறுதியான ஒரு முடிவை எடுக்காத வரையிலும், கோகுலேஸ்வரன், நளினியைப் போன்று இந்தியாவில் பிறந்த இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் ஆதாரங்களைச் சமர்ப்பித்தே குடியுரிமை பெறமுடியும். குடியுரிமை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இதில் பொதுநலமனு தாக்கல் செய்ய முடியாது.” என்றார் ரோமியோ ராய்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin