மதுரை: “கோடநாடு வழக்கில் பழனிசாமி ஏ1 குற்றவாளியாக இருந்தால் பிடித்து உள்ளே போடுங்கள்; யார் வேண்டாம் என்றது? திமுக ஆட்சிதானே நடக்கிறது” என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசமாக கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்கக் கவசத்தை குருபூஜை விழாவுக்காக மதுரை வங்கி பெட்டகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டது. தற்போது விழா நிறைவுற்றதை தொடர்ந்து தங்க கவசத்தை மீண்டும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள், மதுரை வங்கியில் இன்று ஒப்படைத்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன், கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறுகையில், “அதிமுக ஆட்சியை இழந்தது வெறும் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான். இந்த வாக்குகளை இழந்ததற்கு தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்தான் காரணம். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டிடிவி தினகரன் ஒரு துரோகி. அவர் தினமும் 4 முறை பத்திரிகையாளர்களை சந்தித்து பொய்யாக பேசுகிறார்” என்று கூறினார்.
அதன்பின், செய்தியாளர்கள் கோடநாடு வழக்கில் கே.பழனிசாமி ஏ-1 குற்றவாளி என்று செங்கோட்டையன் கூறுகிறாரே என்ற கேள்விக்கு, அவர், “ஏன் பிடித்து உள்ளே போடுங்கள், யார் வேண்டாம் என்றது? சட்டப்படி அவர் ஏ-1 குற்றவாளியாக இருந்தால் உள்ளே போடுங்கள். திமுக ஆட்சிதானே நடக்கிறது. நான்கரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதற்கு முன்புதானே கோடநாடு வழக்கு நடந்தது. உண்மையிலே திராணி இருந்து, சட்டப்படி குற்றவாளியாக இருந்தால் பிடித்து ஏன் ஜெயிலில் போடாமல் உள்ளார்கள்? ஏன் இவரிடம் ஆதாரம் இருந்தால் கொடுக்க வேண்டியதுதானே?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.