சென்னை: கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காக்க கோயில்களில் கீற்று பந்தல், தேங்காய் நார் விரிப்புகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கோதண்ட ராமர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 2,911 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இன்றையதினம் மட்டும் 31 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. வரும் ஜூலை மாதத்துக்குள் 3,000 கும்பாபிஷேகங்களை நிச்சயம் எட்டுவோம். மேலும், இதுவரை கோயில்களுக்கு சொந்தமான ரூ.7,665.61 கோடி மதிப்பிலான 7,546.33 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
மாநில வல்லுநர் குழுவால் 11,808 கோயில்களுக்கு திருப்பணி அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5,917.11 கோடி மதிப்பிலான 25,150 திருப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றிலே இல்லாத அளவிற்கு இந்து சமய அறநிலைத்துறையின் கோயில்களுக்கு உபயதாரர்கள் ரூ. 1,323.77 கோடி மதிப்பிலான 10,414 திருப்பணிகளை செய்து தந்துள்ளனர்.
குறிப்பாக, 459 பெருமாள் கோயில்கள், 42 ஆஞ்சநேயர் கோயில்கள், 41 கிருஷ்ணர் கோயில்கள், 28 ராமர் கோயில்கள் என 570 வைணவ கோயில்களுக்கு இதுவரையில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. ஒரு ராமர் கோயிலுக்கே கொண்டாட்டம் போடுகின்ற காலங்களில் 28 ராமர் கோயில்களுக்கு கும்பாபிஷேகங்களை நடத்தியுள்ளோம்.
கோடை வெயிலின் தாக்தத்திலிருந்து பக்தர்களை காத்திடும் வகையில் கோயில்களில் தற்காலிக கீற்றுப் பந்தல்கள் அமைத்தல், கோயில் பிரகாரங்களின் நடைபாதைகளில் தேங்காய் நார் விரிப்புகள், வெப்பத்தை தடுக்கின்ற வெள்ளை நிற பெயிண்ட் அடித்தல், நடைபாதைகளில் வெப்பத்தை குறைத்திடும் வகையில் அவ்வபோது தண்ணீர் பீச்சி அடிப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஒரு சில இடங்களில் நீர்மோர், எலுமிச்சை பானகம் போன்றவை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.