• Mon. Sep 1st, 2025

24×7 Live News

Apdin News

கோட்மார் மேளா: கல் வீசி சண்டை போடும் கிராம மக்கள் – ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா

Byadmin

Aug 31, 2025


கற்களுடன் இரு தரப்பினர் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தும் காட்சி

பட மூலாதாரம், Rohit Lohia/BBC

படக்குறிப்பு, மத்தியப் பிரதேசத்தில் கல்வீச்சு திருவிழா

ஒரு நபர் நதியின் நடுவில் உள்ள பலாஷ் மரத்தை வெட்ட முயற்சிக்கிறார். அவருக்குப் பின்னால் சிலர் தகரக் கவசத்தை ஏந்தியபடி நிற்கின்றனர். மரத்தை வெட்ட முயல்பவரின் மீது தொடர்ந்து கற்கள் வீசப்படுகின்றன.

சில வினாடிகளில் பல கற்கள் அவரை தாக்க, அவர் மரத்தை வெட்டுவதை நிறுத்திவிட்டு, தனது உயிரைக் காக்க தகரக் கவசத்தின் பின்னால் ஓடுகிறார்.

ஆயிரக்கணக்கான மக்கள் இந்தக் காட்சியை ரசித்து கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.

மத்தியப் பிரதேசத்தின் பாண்டுர்ணா மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை இப்படியொரு காட்சி காணப்படுகிறது, இது எவரையும் வியப்பில் ஆழ்த்தும். ஜாம் நதியின் இரு கரைகளிலும் கூடியிருக்கும் மக்கள் கூட்டத்திலிருந்து “ஹூ…ஹா…அடி…” போன்ற குரல்கள் எதிரொலிக்கின்றன.

இரண்டு தரப்பினர் இடையே நடைபெறும் கல்வீச்சு

பட மூலாதாரம், Rohit Lohia/BBC

படக்குறிப்பு, இந்த ஆபத்தான விளையாட்டை நிறுத்துவதற்கான நிர்வாகத்தின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன

விழிகள் எங்கு பார்ப்பது, எதைப் பார்ப்பது என்று திணறுகின்றன. கற்களை வீசுபவர்களைப் பார்க்கவா, அல்லது எங்கிருந்து வேண்டுமானாலும் கற்கள் உங்கள் மீது விழுந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் வானத்தை நோக்கி பார்க்கவா என தெரியாத நிலை.

இதற்கிடையில், மொபைலில் வீடியோ எடுக்கும் சில இளைஞர்களிடம், “கொஞ்சம் தள்ளி நில்லுங்கள், கற்களுக்கு கண்கள் இல்லை,” என ஒரு முதியவர் சொல்கிறார்.

திடீரென கூட்டத்தின் ஆரவாரம் அதிகரிக்கிறது. அந்தப் பகுதி முழுவதும் குழப்பமான சத்தம் எழுகிறது, சில வினாடிகளில் கூட்டத்தைப் விலக்கிக் கொண்டு, இருவர் காயமடைந்த ஒருவரை தூக்கிக்கொண்டு ஓடுகின்றனர்.

விழிகள் மீண்டும் ஜாம் நதியை நோக்கி திரும்புகின்றன, அதன் ஒரு கரையில் பாண்டுர்ணாவும், மறு கரையில் சாவர்காவும் உள்ளன. நதியின் நடுவில் நிற்கும் பலாஷ் மரம் இரு தரப்பு மக்களுக்கும் வெற்றியின் அடையாளமாக உள்ளது.

இதற்காகவே காலை 9 மணி முதல் இங்கு கற்களால் தாக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

கல்வீச்சு திருவிழாவை காணவந்த சில பெண்கள்

பட மூலாதாரம், Rohit Lohia/BBC

படக்குறிப்பு, கல்வீச்சு திருவிழாவைப் பார்க்க தொலைதூர இடங்களில் இருந்து மக்கள் வருகின்றனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வு ‘கோட்மார் மேளா’ என்று அழைக்கப்படுகிறது. இது பெயரளவில் மேளாவாக இருந்தாலும், உண்மையில் இது ஒரு ஆபத்தான விளையாட்டு.

ஒவ்வொரு ஆண்டும் இதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைகின்றனர், பலர் நிரந்தரமாக ஊனமுற்று விடுகின்றனர், சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

மாலை வரை சுமார் 1,000 பேர் காயமடைந்திருந்தனர்.

பிபிசியிடம் பேசிய பாண்டுர்ணா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுந்தர் சிங் கனேஷ், “ஒவ்வொரு ஆண்டும் 500-600 பேர் காயமடைகின்றனர். இதை நிறுத்த நிர்வாகம் முயற்சித்தது, ஆனால் இதை ஒரு பாரம்பரியமாகக் கருதும் உள்ளூர் மக்களின் நிலைப்பாடு எங்கள் முயற்சிகளைத் தோல்வியடையச் செய்திருக்கிறது.”

அதிகாரிகள் அந்த பகுதியிலுள்ள உயரமான கட்டடங்களில் இருந்து நிகழ்ச்சியை கண்காணித்து வந்தனர். நதியை நோக்கி பார்த்தால், வானம் கற்களால் நிரம்பியிருப்பது போலத் தோன்றுகிறது.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்களிடையே ‘கற் போர்’

ஜாம் நதியின் நடுவில் பலாஷ் மரம் கொடியாக நடப்பட்டுள்ள காட்சி

பட மூலாதாரம், Rohit Lohia/BBC

படக்குறிப்பு, ஜாம் நதியின் நடுவில் பலாஷ் மரம் கொடியாக நடப்படுகிறது

விவசாயிகளின் பொலா பண்டிகை பாத்ரபத மாதத்தில் (இந்து நாட்காட்டியில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் வரும் ஒரு மாதம்) அமாவாசையன்று வருகிறது. இது கரீஃப் பயிரின் இரண்டாம் கட்டமான களையெடுத்தல் பணி முடிந்த பிறகு தொடங்குகிறது.

இந்தப் பண்டிகை விவசாயிகளுக்கு முக்கியமானது. பொலாவின் இரண்டாம் நாளில், ஜாம் நதியின் நடுவில் பலாஷ் மரம் கொடியாக நடப்பட்டு, பின்னர் இரு கிராம மக்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்த நிகழ்வில் கிராமவாசிகள் மட்டுமல்ல, அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பார்வையாளர்களாக வருகின்றனர். மக்கள் உற்சாகத்துடன் கோஷங்கள் எழுப்புகின்றனர், காயமடைந்த வீரர்களைப் பார்க்கின்றனர், மேலும் பல சமயங்களில் இந்தக் காட்சிகள் பொழுதுபோக்காக கேமராவில் பதிவு செய்யப்படுகின்றன.

பாண்டுர்ணாவைச் சேர்ந்த 43 வயதான அரவிந்த் தோம்ரே கூறுகிறார், “நான் சிறு வயதிலிருந்தே இதில் பங்கேற்று வருகிறேன். எங்களைப் பொறுத்தவரை இது வெறும் விளையாட்டு அல்ல, கிராமத்தின் கௌரவம். காயம் ஏற்படுவது சகஜம், ஆனால் வெற்றியால் கிடைக்கும் மகிழ்ச்சி அதைவிடப் பெரியது.”

இந்த விளையாட்டில் தனது தலை உடைந்ததாகவும், முகத்தில் காயம் ஏற்பட்டதாகவும், மூக்கு உடைந்ததாகவும், வலது கால் எலும்பு முறிந்ததாகவும் அரவிந்த் கூறுகிறார்.

அவருக்கு அருகில் நிற்கும் கோபால் பால்பாண்டே, “எங்களுக்கு இது உயிரைவிடப் பெரிய பண்டிகை,” என கூறுகிறார்.

கோபாலும் கடந்த 16 ஆண்டுகளாக இந்த விளையாட்டில் பங்கேற்று வருகிறார், அவரது உடலில் இதன் அடையாளங்கள் உள்ளன.

அரவிந்த் மற்றும் கோபால் ஆகியோரைச் சுற்றி நிற்கும் பல இளைஞர்கள் கோட்மார் மேளாவை தங்கள் ‘வீரத்தையும் தைரியத்தையும்’ காட்டும் மேடையாகக் கருதுகின்றனர்.

300 ஆண்டுகள் பழமையான வரலாறு, ஆனால் எந்த ஆதாரமும் இல்லை

நதியின் நடுவில் மரம் நடப்பட்டுள்ளதை பதிவு செய்யும் புகைப்படம்

பட மூலாதாரம், Rohit Lohia/BBC

படக்குறிப்பு, கோட்மார் மேளாவைப் பார்க்க உள்ளூர் மக்கள் மட்டுமல்ல, அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பார்வையாளர்களாக வருகின்றனர்

உள்ளூரில் சொல்லப்படும் கதைகளின்படி, நூற்றாண்டுகளுக்கு முன்பு சாவர்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பாண்டுர்ணாவைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும் இடையேயான காதல் காரணமாக இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. அந்தப் பெண்ணை மீட்க நடந்த போராட்டம் படிப்படியாக ஒரு பாரம்பரியமாக மாறியது.

இன்று இந்தப் பாரம்பரியம் ஒவ்வொரு ஆண்டும் பலாஷ் மரத்தை மையமாகக் கொண்டு நிறைவேற்றப்படுகிறது.

உள்ளூர் முதியவர்களின் கூற்றுப்படி, கோட்மார் மேளாவைப் பற்றிய குறிப்பு சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

சாவர்காவின் காவ்லே குடும்பத்தினரால் மேளா தொடங்கப்படுகிறது, அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பலாஷ் மரத்தை வெட்டி ஜாம் நதியின் நடுவில் நடுகின்றனர். இதற்கு பூஜை செய்யப்பட்ட பிறகு, காலை 8-9 மணி முதல் கற்களால் தாக்கும் நிகழ்வு தொடங்குகிறது.

பலாஷ் மரத்தை நட்ட சுபாஷ் காவ்லே கூறுகிறார், “இந்தக் கற்களால் தாக்கும் நிகழ்வு ஏன் நடக்கிறது என்பதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. எங்கள் முன்னோர்களும் இந்த மரத்தை ஒரு கொடியைப் போல் நதியில் நட்டனர். நாங்களும் அதே பாரம்பரியத்தைப் பின்பற்றி வருகிறோம்.”

பாரம்பரியத்தின் விலை: உடைந்த எலும்புகள், சிதறிய கனவுகள்

கல்வீச்சு திருவிழாவில் உயிரிழந்தவரின் மனைவியின் புகைப்படம்

பட மூலாதாரம், Rohit Lohia/BBC

படக்குறிப்பு, சாக்ஷி (மாற்றப்பட்ட பெயர்) என்ற பெண்ணின் கணவர் அமித் (மாற்றப்பட்ட பெயர்) கல்வீச்சு விளையாட்டில் காயமடைந்து இறந்தார்

கோட்மார் மேளாவில் பங்கேற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கதை உள்ளது. கல்வீச்சில் யாரோ ஒருவரின் மகன் உயிரிழந்திருகிறார், வேறு ஒருவர் ஊனமுற்றிருக்கிறார்.

மாவட்ட நிர்வாகத்தின் கூற்றுப்படி, இந்தக் கற்களை வீசித் தாக்கும் விளையாட்டில் 1955 முதல் இதுவரை ஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்பு கோட்மார் மேளாவில் இப்பகுதியைச் சேர்ந்த அமித் (பாதுகாப்பு காரணங்களால் பெயர் மாற்றப்பட்டது) இறந்தார்.

அமித் நான்கு குழந்தைகளையும் மனைவியையும் விட்டுச் சென்றார்.

அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர், “என் அப்பா கோட்மார் விளையாட சென்றார். இங்குள்ளவர்கள் அவர் ஒரு பெரிய வீரர் என்று கூறுகின்றனர், ஆனால் ஒரு முறை அவரது தலையில் கல் தாக்கியது. அப்போது நாங்கள் மிகவும் சிறியவர்களாக இருந்தோம். என் அப்பா மேளாவிலேயே இறந்தார்,” என சொல்கிறார்.

கல்வீச்சு திருவிழாவிற்காக கற்கள் குவிக்கப்பட்டுள்ள காட்சி

பட மூலாதாரம், Rohit Lohia/BBC

படக்குறிப்பு, உள்ளூர் மக்கள் கூற்றுப்படி 1955 முதல் இதுவரை இந்தக் கல்வீச்சு விளையாட்டில் ஒரு டஜன் பேர் இறந்துள்ளனர்

அமித்தின் குடும்பத்திற்கு கடந்த 10 ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்தன. குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவரின் மரணம் அவர்களின் குழந்தைகளுக்கு பெரும் சிரமத்தை உருவாக்கியது.

அவரது உறவினர்கள் இந்தக் கற்களை வீசி தாக்கும் விளையாட்டுக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தி, “ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பண்டிகையின் போது பழைய நினைவுகள் மனதில் வருகின்றன… சில சமயங்களில், அவர் இருந்திருந்தால் இப்படி இருந்திருக்கும், அப்படி இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. இப்போது இந்தப் பண்டிகையை நினைத்தால் பயம் ஏற்படுகிறது. அவரது முகம் கூட எனக்கு நினைவில்லை. என்னிடம் அவரது ஒரு புகைப்படம் மட்டுமே உள்ளது,” என்று கூறுகின்றனர்.

“என் சகோதரனின் உயிர் போய்விட்டது. கிராமவாசிகள் இது பாரம்பரியம் என்று கூறுகின்றனர், ஆனால் எங்கள் அம்மாவின் கண்ணீர் ஒருபோதும் வறண்டு போகாது, அதற்காக ஒருவரின் மகனை பலிகொடுக்கும் அளவு பாரம்பரியம் முக்கியமானதா?,” என பெயர் வெளியிடவேண்டாம் என்ற நிபந்தனையுடம் மற்றொரு கிராமவாசி தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் இதை மேலும் பிரபலமாக்கின

கல்வீச்சு திருவிழாவில் மற்றொரு காட்சி

பட மூலாதாரம், Rohit Lohia/BBC

படக்குறிப்பு, சமூக ஊடகங்கள் இந்தப் பாரம்பரியத்தை வீரத்துடன் இணைத்துவிட்டன

கடந்த சில ஆண்டுகளில், மேளாவின் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப், மற்றும் பேஸ்புக்கில் வைரலாகி வருகின்றன. மக்கள் இவற்றை பொழுதுபோக்காகப் பகிர்கின்றனர்.

“கூட்டம் அதிகரித்துள்ளது. இளைஞர்கள் இதை வீரமாகக் கருதுகின்றனர், ஆனால் இது சமூகத்திற்கு அவமானகரமானது, ” என்கிறார் பாண்டுர்ணாவைச் சேர்ந்த தர்மேஷ் ஹிம்மத்பாய் போபட்.

காவல்துறையினர், சமூக ஊடகங்கள் இதை ஒரு வைரல் நிகழ்வாக மாற்றிவிட்டன, ஆனால் வன்முறை மேலும் அதிகரித்துவிட்டது என்று கூறுகின்றனர்.

மகாராஷ்டிராவின் அமராவதியில் இருந்து முதல் முறையாக தனது மாமியார் வீட்டிற்கு வந்த மயூர் சவுத்ரி, யூடியூப்பில் கோட்மார் மேளாவைப் பார்த்திருந்தார். இந்த முறை அவர் நேரில் இந்த மேளாவைப் பார்க்க வந்திருந்தார்.

மேளாவுக்குப் பிறகு, “இந்த விளையாட்டு மிகவும் ஆபத்தானது. எத்தனை பேரின் ரத்தம் சிந்துகிறது. நான் என் கண்களால் பார்த்தபோது, இது நிறுத்தப்பட வேண்டும் என்று தோன்றியது. இதை மூடநம்பிக்கை என்றும் கூறலாம், ஆனால் இங்குள்ள மக்கள் இதை தங்கள் பாரம்பரியத்துடன் தொடர்புபடுத்துகின்றனர்,” என அவர் கூறினார்.

இத்தனை வன்முறை இருந்தும் இந்த விளையாட்டு ஏன் நிறுத்தப்படவில்லை?

 தலையில் காயத்துடன் விழாவில் தொடர்ந்து பங்கேற்கும் இளைஞர் ஒருவரின் புகைப்படம்

பட மூலாதாரம், Rohit Lohia/BBC

படக்குறிப்பு, இறப்புகளும், காயங்கள் இருந்தாலும், கோட்மார் மேளா இன்றும் அதே உற்சாகத்துடன் நடைபெறுகிறது

இந்த நிகழ்வு காரணமாக நூற்றுக்கணக்கானோரின் வாழ்க்கை அழிந்துவிட்டது என்று உள்ளூர் அளவில் பலர் கூறுகின்றனர். எத்தனையோ குடும்பங்கள் தங்கள் வீட்டின் ஒரே வருமானம் ஈட்டுபவர் ஊனமாவதை பார்த்துள்ளனர்.

எல்லோரும் இந்த வன்முறையான பாரம்பரியத்தை ஆதரிப்பவர்கள் அல்ல. சாவர்காவைச் சேர்ந்த 73 வயது முதியவர் விட்டல் பாங்கே, “என்னைப் பொறுத்தவரை இது நிறுத்தப்பட வேண்டும். இதில் ஏழை மக்களே பங்கேற்கின்றனர். அவர்களின் கைகால்கள் உடையும்போது அல்லது இறக்கும்போது, குடும்பம் அழிந்துவிடுகிறது,” என கைகள் குப்பி சொல்கிறார்

“இந்த மேளாவால் சூதாட்டம் மற்றும் பந்தயம் நடத்துபவர்களின் வணிகம் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் நன்கொடையாக சேகரிக்கப்படுகிறது. சிலர் இதை பயன்படுத்திக்கொண்டு தங்கள் பகையைத் தீர்த்துக்கொள்கின்றனர். இப்படியிருக்க, இதற்கு எப்படி தடை விதிக்க முடியும்?” என உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர், பெயர் வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் தெரிவித்தார்.

சாவர்காவைச் சேர்ந்த இஸ்மாயில் கானின் வீடு நதியின் முகத்துவாரத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது வீட்டில் கோட்மார் கற்களின் தடங்கள் பதிகின்றன. இளமையில் தானும் கோட்மார் விளையாடியதாக அவர் கூறுகிறார்.

“கிராமத்தினர் அனைவரும் விளையாடுவர், அதனால் நானும் விளையாடினேன். இப்போது எனக்கு 78 வயது. ஒரு முறை என் நெஞ்சில் கல் தாக்கியது, அதன்பிறகு நான் விளையாடுவதை நிறுத்திவிட்டேன். என் குழந்தைகளும் விளையாடுவதில்லை, உயிர் போய்விட்டால் என்னவாகும்?,” என்று இஸ்மாயில் கூறுகிறார்.

பாண்டுர்ணா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுந்தர் சிங் கனேஷ்

பட மூலாதாரம், Rohit Lohia/BBC

படக்குறிப்பு, பாண்டுர்ணா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுந்தர் சிங் கனேஷ்

இந்தக் கேள்விக்கு பதிலளித்த காவல் கண்காணிப்பாளர் சுந்தர் சிங் கனேஷ்,”கடந்த சில ஆண்டுகளில், கோட்மார் மேளாவில் வன்முறையை குறைக்க நிர்வாகம் முயற்சித்து வருகிறது. இங்கு பலத்த காவல் போடப்படுகிறது. விளையாட்டில் பிளாஸ்டிக் பந்துகளை பயன்படுத்தால் என்ற முன்மொழிவையும் வைத்தோம், ஆனால் இது அவர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று மக்கள் கருதுவதால், இதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை.”

எனினும், பாண்டுர்ணாவைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் மேலும் பல கேள்விகளை எழுப்பினார்.

“ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளன என்று நிர்வாகம் கூறுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், மக்கள் மது அருந்திவிட்டு வருகின்றனர், கல்வீச்சு கட்டுப்படுத்தமுடியாததாக மாறுகிறது, பின்னர் வழக்கமான ரத்தக் களரி தொடர்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஏதோ ஒரு வகையில் நிர்வாகமும் இந்தப் பாரம்பரியத்தின் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கிறது,” என அவர் குற்றம்சாட்டினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இத்தனை இறப்புகள் மற்றும் காயங்கள் இருந்தபோதிலும், கோட்மார் மேளா இன்றும் அதே உற்சாகத்துடன் நடைபெறுகிறது. இதற்குப் பின்னால், இரு கிராமங்களின் பழைய போட்டி, வன்முறையையும், நம்பிக்கையையும் பாரம்பரியத்துடன் இணைப்பது, நிர்வாகம் மற்றும் தலைவர்களின் சத்தமில்லாத ஆதரவு, மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன.

எனவே, எதிர்ப்பு குரல்கள் அடக்கப்படுகின்றன, மேலும் பாரம்பரியத்தின் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ரத்தம் சிந்துகிறது. நாங்கள் பாண்டுர்ணாவிலிருந்து புறப்படும்போது, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அடுத்த ஆண்டு மீண்டும் வருவோம் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

(உள்ளூர் உள்ளீடு – அன்ஷுல் ஜெயின், பாண்டுர்ணா)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin