பட மூலாதாரம், ANI
அமெரிக்க பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரீட்மேனின் யூடியூப் சேனலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நேர்காணல் வழங்கியுள்ளார்.
இந்த மூன்று மணி நேர 17 நிமிட பாட்காஸ்டில், தனது தனிப்பட்ட வாழ்க்கையைத் தவிர, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து ராஷ்ட்ரா, மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மோதி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, குஜராத் கலவரம் குறித்தும் அவர் பேசியுள்ளார்.
தவிர, சீனா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உடனான உறவுகள் குறித்தும் இந்த நேர்காணலில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், பிரதமர் மோதியின் நேர்காணல் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகங்களை எதிர்கொள்ள அஞ்சுபவர் ஒரு ‘வலதுசாரி வெளிநாட்டு பாட்காஸ்டருடன்’ பேசியதாகக் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், ANI
‘பயங்கரவாதம் எங்கும் இருக்கலாம், ஆனால் அதன் பிறப்பிடம் பாகிஸ்தானில் உள்ளது’
அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோதி கூறுகையில், “உலகில் எங்கு பயங்கரவாத சம்பவம் நடந்தாலும், அதுகுறித்த தேடல்கள் எப்படியோ பாகிஸ்தானுக்கு இட்டுச் செல்கின்றன” என்றார்.
“9/11 போன்ற ஒரு பெரிய சம்பவம் அமெரிக்காவில் நடந்தது. அதன் முக்கிய மூளையாக இருந்த ஒசாமா பின்லேடன் எங்கே கண்டுபிடிக்கப்பட்டார்? அவர் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருந்தார்” என்று மோதி தெரிவித்தார்.
“இந்தியாவிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் பிரச்னையின் மையமாக பாகிஸ்தான் மாறிவிட்டது. இந்தப் பாதையால் யார் பயனடைவார்கள் என்பதை நாங்கள் தொடர்ந்து அவர்களிடம் கூறி வருகிறோம். நீங்கள் பயங்கரவாதத்தின் பாதையை கைவிட வேண்டும். அரசின் ஆதரவு கொண்ட பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும்” என்று பிரதமர் மோதி கூறினார்.
தொடர்ந்து பிரீட்மேனிடம் பேசிய அவர், “நானே அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்ள லாகூருக்குச் சென்றேன். பிரதமரான பிறகு, ஒரு நல்ல தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக, எனது பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தானை சிறப்பாக அழைத்தேன். ஒவ்வொரு முறையும் எடுக்கப்படும் நல்ல முயற்சிகள் அனைத்தும் எதிர்மறையாக மாறும்.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
கோத்ரா கலவரம் பற்றி மோதி கூறியது என்ன ?
நேர்காணலின் போது, குஜராத்தின் 2002 கலவரம் குறித்தும் பிரதமர் மோதியிடம் ஃப்ரீட்மேன் கேள்விகளைக் கேட்டார்.
அக்கேள்விகளுக்குப் பதிலளித்த மோதி, “அதற்கு முந்தைய சம்பவத்தை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். டிசம்பர் 24, 1999 அன்று, விமானம் கடத்தப்பட்டு காந்தஹாருக்குக் கொண்டு செல்லப்பட்டது. 2000ம் ஆண்டில், டெல்லியில் உள்ள செங்கோட்டை மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோதி, “செப்டம்பர் 11, 2001 அன்று, அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அக்டோபர் 2001 இல், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. டிசம்பர் 13, 2001 அன்று, இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது”என்றார்.
பிறகு, “எட்டு முதல் பத்து மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பாருங்கள். அத்தகைய சூழலில், எனக்கு முதல்வர் பொறுப்பு கிடைத்தது. அதற்கு முன்பு, நூற்றாண்டின் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. நான் பதவியேற்றவுடன் இந்தப் பணியில் ஈடுபட்டேன்” என்றும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
“பிப்ரவரி 27, 2002 அன்று, சட்டமன்றத்தில் எனது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் அவையில் அமர்ந்திருந்தோம். நாங்கள் சட்டமன்ற உறுப்பினர்களான மூன்று நாட்களுக்குப் பிறகு, கோத்ரா சம்பவம் நடந்தது. அது ஒரு கொடூரமான சம்பவம். மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். காந்தஹர் விமான விபத்தில் தொடங்கி, பின்னணியில் பல பெரிய சம்பவங்கள் நடந்தன, ஏராளமான மக்கள் இறந்தனர், உயிருடன் எரிக்கப்பட்டனர். நிலைமை எப்படி இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?” என்றார்.
ஒரு பெரிய கலவரம் நடந்ததாகக் கூறுபவர்கள், இந்தத் தவறான கருத்தைப் பரப்பியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
“2002 ஆம் ஆண்டுக்கு முந்தைய தரவுகளைப் பார்த்தால், குஜராத்தில் எத்தனை கலவரங்கள் நடந்தன என்பதை நாம் காணலாம். பட்டம் விடும் போட்டியில் வகுப்புவாத வன்முறை நடந்துள்ளன. சைக்கிள் மோதலால் கூட வகுப்புவாத வன்முறைகள் நடந்துள்ளன. 2002 ஆம் ஆண்டுக்கு முன்பு, குஜராத்தில் 250க்கும் மேற்பட்ட பெரிய கலவரங்கள் நடந்தன.
1969 ஆம் ஆண்டு நடந்த கலவரங்கள் ஆறு மாதங்கள் நீடித்தன. அத்தகைய பெரிய சம்பவம் ஒரு தீப்பொறியாகி சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்” என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.
“நான் போரை அல்ல, அமைதியை ஆதரிக்கிறேன்”
பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையே நீடிக்கும் போர் குறித்து பிரதமர் நரேந்திர மோதி தனது நேர்காணலில் பதிலளித்துள்ளார்.
“எங்கள் பின்னணி மிகவும் வலுவானது, நாங்கள் அமைதிக்காகப் பேசும் போதெல்லாம், உலகம் எங்கள் பேச்சைக் கேட்கிறது. ஏனென்றால் இது புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் பூமி” என்றார்.
பிரதமர் மோதி தொடர்ந்து பேசிய போது, ரஷ்யா-யுக்ரேன் குறித்து கூறுகையில், “எனக்கு ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளுடனும் நல்ல உறவு உள்ளது. இது போருக்கான நேரம் அல்ல என்று அதிபர் புதினிடம் நான் கூற முடியும். நட்பு மனப்பான்மையுடன், உலக நாடுகள் உங்களுடன் எவ்வளவு தூரம் நின்றாலும், போர்க்களத்தில் எந்த முடிவும் ஏற்படாது என்று ஸெலென்ஸ்கியிடமும் கூறுகிறேன் ” என்றும் தெரிவித்தார்.
போரின் முடிவு பேச்சுவார்த்தை மூலமே அமையும் என்றும், ரஷ்யாவும் யுக்ரேனும் அந்த மேசையில் உள்ள போது தான் அது நடக்கும் என்றும் பிரதமர் மோதி கூறினார்.
“உலகமே யுக்ரேனுடன் எவ்வளவு தான் அமர்ந்து பேசினாலும், இரு தரப்பினரும் இருப்பது முக்கியம். நான் அமைதியை ஆதரிப்பவன் என எப்போதும் கூறுவேன்” என்றும் மோதி தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் காந்தி குறித்து மோதி கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
நேர்காணலின் போது, பிரதமர் மோதி ஆர்.எஸ்.எஸ் குறித்து விரிவாகப் பேசினார்.
“சங்கம் ஒரு பெரிய அமைப்பு. அது 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உலகில் எங்காவது இவ்வளவு பெரிய தன்னார்வ அமைப்பு இருக்குமா? கோடிக்கணக்கான மக்கள் அதனுடன் தொடர்புடையவர்கள். சங்கத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானது அல்ல. சங்கத்தின் செயல்பாடுகளை உணர வேண்டும். சங்கம் வாழ்க்கையின் நோக்கத்திற்கு வழிகாட்டுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
மேற்கொண்டு பேசிய அவர், “சங்கத்தின் சில தன்னார்வலர்கள் காடுகளில் வனவாசி கல்யாண் ஆசிரமத்தை நடத்துகிறார்கள். அவர்கள் பழங்குடியினரிடையே ஏகல் வித்யாலயாவை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் சிலர் அவர்களுக்கு 10 முதல் 15 டாலர்கள் நன்கொடை அளிக்கிறார்கள். இதுபோன்ற 70 ஆயிரம் பள்ளிகள் இயங்குகின்றன. அதேபோல், கல்வியில் புரட்சியைக் கொண்டுவர வித்யா பாரதி என்ற அமைப்பு அமைக்கப்பட்டது. அவர்கள் நாட்டில் சுமார் 25 ஆயிரம் பள்ளிகளை நடத்துகிறார்கள்” என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டார்.
கூடுதலாக பாரதிய மஸ்தூர் சங்கம் குறித்தும் பிரதமர் மோதி விவாதித்தார்.
இதுகுறித்து பேசிய அவர்,
‘இடதுசாரி தொழிற்சங்கங்கள், உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள் என்று கூறுகின்றன.
ஆர்.எஸ்.எஸ் கிளைகளிலிருந்து வெளியே வந்து தொழிற்சங்கங்களை நடத்துபவர்கள்,
‘தொழிலாளர்களே, உலகை ஒன்றிணையுங்கள்’ என்று கூறுகிறார்கள்.
இரண்டு சொற்களில் மட்டுமே மாற்றம் உள்ளது,
ஆனால் கருத்தியல் மாற்றம் மிகப் பெரியது.
சங்கத்தின் சேவை மனப்பான்மை என்னை வடிவமைக்க உதவியது” என்று குறிப்பிட்டார்.
மேலும், மகாத்மா காந்தியின் செல்வாக்கு இன்றும் ஏதோ ஒரு வடிவத்தில் இந்திய வாழ்வில் காணப்படுகிறது என்று பிரதமர் மோதி நேர்காணலின் போது கூறினார்.
“சுதந்திரத்தைப் பற்றிப் பேசினால், லட்சக்கணக்கான துணிச்சலான மக்கள் இங்கு தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். அவர்கள் தங்கள் இளமையை சிறைகளில் கழித்தனர்.
அவர்கள் முன்வந்து நாட்டிற்காக தியாகிகளாக மாறினார்கள். அந்தப் பாரம்பரியம் தொடர்ந்தது, அது ஒரு சூழலையும் உருவாக்கியது.
ஆனால் காந்தி ஒரு வெகுஜன இயக்கத்தைத் தொடங்கினார்.
அவர் ஒவ்வொரு செயலையும் சுதந்திரத்தின் நிறத்தால் வண்ணமயமாக்கினார்.
தண்டி யாத்திரை ஒரு பெரிய புரட்சியை உருவாக்கும் என்று ஆங்கிலேயர்களுக்கு ஒருபோதும் தெரியாது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மகாத்மா காந்தி கூட்டு உணர்வை வளர்த்ததாகவும், மக்களின் சக்தியை அங்கீகரித்ததாகவும் பிரதமர் மோதி கூறினார்.
என்னைப் பொறுத்தவரை, அது இன்றும் முக்கியமானது. நான் எந்த வேலை செய்தாலும், பொதுமக்களை இணைத்து செய்வதற்கே முயற்சிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
‘கண்ணுக்குக் கண் உரையாடல்’
பட மூலாதாரம், Getty Images
2013 ஆம் ஆண்டு கட்சி தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்த போது, ’அவர் ஒரு மாநிலத்தில் ஆட்சி புரிந்து வருகிறார், வெளியுறவுக் கொள்கையை அவர் எவ்வாறு புரிந்துகொள்வார்’ என்று மக்கள் கூறினர் என பிரதமர் மோதி குறிப்பிட்டார்.
“அப்போது நான் கூறினேன், ஒரு நேர்காணலில் முழு வெளியுறவுக் கொள்கையையும் விளக்க முடியாது. ஆனால், இதை மட்டும் நிச்சயமாகச் சொல்கிறேன், இந்தியா கண்களைத் தாழ்த்தியோ உயர்த்தியோ பேசாது, ஆனால் கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசும். இன்றும் கூட, நான் அந்தக் கருத்தைப் பின்பற்றுகிறேன்.
எனக்கு என் நாடுதான் முதன்மையானது. ஆனால் ஒருவரை அவமதிப்பது, ஒருவரைப் பற்றி தவறாகப் பேசுவது, இவை எனது கலாசாரத்தின் மதிப்புகளோ அல்லது எனது பாரம்பரியமோ அல்ல” என்று தெரிவித்தார்.
டிரம்ப் குறித்து மோதி கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
பிரதமர் நரேந்திர மோதி, ஹூஸ்டன் மைதானத்தில் டிரம்புடன் இணைந்து பங்கேற்ற நிகழ்ச்சியைப் பற்றியும் குறிப்பிட்டார்.
உரைக்குப் பிறகு, அரங்கத்தைச் சுற்றிப் பார்க்கலாமா என்று டிரம்பிடம் கேட்ட போது, அவர் உடனடியாக ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.
“அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பு பதற்றமடைந்து விட்டது. பாதுகாப்பு எவ்வளவு இறுக்கமாக உள்ளது, எத்தனை சோதனைகள் செய்யப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்கு இருக்கும் தைரியம் எனது மனதைத் தொட்டது. அவர் சுயமாக முடிவுகளை எடுக்கிறார், இரண்டாவதாக மோதி மீது நம்பிக்கை வைத்துள்ளார், மோதி அழைத்துச் செல்கிறார் என்றால் போகலாம் என்றார்” என்று மோதி நினைவுகூர்ந்தார்.
அனைத்து நெறிமுறைகளையும் மீறி, டிரம்ப் முழு கட்டடத்தையும் தனக்குக் காட்டியதாக பிரதமர் மோதி கூறினார்.
“அவர் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ என்பவராக உள்ளார். நான் ‘இந்தியாவுக்கு முன்னுரிமை’ என்கிறேன். அதனால் எங்களுடைய கூட்டணி சிறப்பாக பொருந்துகிறது.” என்றும் கூறினார்.
சீனாவுடனான உறவுகள் குறித்து மோதி கூறியது என்ன?
சீனாவுடனான உறவுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பிரதமர் மோதி பதிலளித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான உறவுகள் இருப்பதாகவும், ஒரு காலத்தில் இந்தியாவும் சீனாவும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியைக் கொண்டிருந்தன என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதற்கான வரலாறு இல்லை என்றும் அவர் கூறினார்.
“ஒரு காலத்தில் சீனாவில் புத்தரின் செல்வாக்கு மிகவும் வலுவாக இருந்தது.” என்றார்.
“இந்த உறவுகள் வலுவாக இருக்க வேண்டும், இதேபோல் தொடர வேண்டும். இரண்டு அண்டை நாடுகளிடையே ஏதாவது ஒன்று நடப்பது இயல்பு தான். சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் இயற்கையானவை. இது குடும்பத்திலும் உள்ளது, ஆனால் எங்கள் வேறுபாடுகள் சச்சரவுகளாக மாறாமல் இருக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்” என்று பிரதமர் மோதி தெரிவித்தார்.
கால்வானை சுட்டிக்காட்டிய மோதி, “2020 ஆம் ஆண்டு எல்லையில் நடந்த சம்பவங்கள் எங்களுக்கிடையிலான சூழ்நிலையை பதற்றமானது. ஆனால் நான் அதிபர் ஜியைச் சந்தித்த பிறகு, எல்லையில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியது” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு