• Thu. Oct 10th, 2024

24×7 Live News

Apdin News

கோயம்பேட்டில் வெவ்வேறு இடங்களில் ஆயுதபூஜை சிறப்புச் சந்தை – விற்பனை மந்தம் என தகவல் | Ayudha Puja special market opening at different places in Koyambedu: Traders report sluggish sales

Byadmin

Oct 10, 2024


சென்னை: சென்னை கோயம்பேட்டில் வெவ்வேறு இடங்களில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை திறக்கப்பட்டதால் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் ஆண்டுதோறும் பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை ஆகிய விழாக் காலங்களில், பண்டிகைகளுக்குத் தேவையான பூஜை பொருட்களை மலிவு விலையில் ஒரே இடத்தில் வாங்க, மலர் சந்தை வளாகத்தில் சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். இந்த சந்தைக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. அதேநேரம், அதிகளவில் மக்கள் கூடுவதால் நெரிசல் ஏற்பட்டு கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்குவதில் சிரமமும் ஏற்பட்டது.

தற்போது கோயம்பேடு சந்தை பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை திறக்கப்பட்டுள்ளது. அங்கு பொரி மட்டும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பழச்சந்தை எதிரில் சாலையோரம் தோரணங்கள் மற்றும் பூசணிக்காய் விற்கவும், 14-வது நுழைவு வாயிலில் வாழைக்கன்றுகளை விற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இச்சந்தையில் பொரி ஒரு படி ரூ.20, உடைத்த கடலை, நாட்டு சர்க்கரை பாக்கெட்டுகள் சேர்த்த பொரி ரூ.30, 5 கிலோ பொரி மூட்டை ரூ.400, 6 கிலோ ரூ.500-க்கு விற்கப்படுகிறது. வாழைக்கன்று உயரத்துக்கு ஏற்ப 10 கன்றுகள் கொண்ட கட்டு ரூ.80 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. தென்னை தோரணங்கள் 50 கொண்ட கட்டு ரூ.200-க்கு விற்கப்படுகிறது. நேற்று பெரும்பாலான கடைகளில் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இது தொடர்பாக பொரி வியாபாரிகள் கூறியதாவது: “நாங்கள் திருவண்ணாமலை, ஆரணி, போளூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து கடை வைத்திருக்கிறோம். இதற்கு முன்பு ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் சந்தை இருந்தது. மொத்த விற்பனையும், சில்லறை விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. பூக்கடை, பழக்கடைக்கு வருவோர், பொரி கடலையும் வாங்கி சென்றனர். ஆனால் இப்போது பொரி கடைகளை மட்டும் தனியே வைத்திருப்பதால், இதை மட்டும் வாங்க இங்கு பொதுமக்கள் யாரும் வரவில்லை.

தொழிற்சாலைகள், வணிக நிறுவனத்தினர் மட்டும் வழக்கம்போல வந்து வாங்கி செல்கின்றனர். இதனால் பொரி விற்பனை மந்தமாகவே உள்ளது. வியாழக்கிழமை காலை மழை வேறு குறுக்கிட்டு வியாபாரத்தை கெடுத்தது,” என்று வியாபாரிகள் கூறினர். சிறப்பு சந்தைக்கு வந்த பொதுமக்கள் கூறும்போது, “இந்த முறை ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு திசையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு இடத்துக்கும் சென்று பூஜை பொருட்களை வாங்க முடியவில்லை.

பழம் வாங்க பழ சந்தைக்கும், பூக்களை வாங்க மலர் சந்தைக்கும் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். இங்கெல்லாம் சுற்றி வருவதற்குள் மயக்கமே வந்துவிடும் போல் இருக்கிறது. இந்த முறை எங்களுக்கு சிறப்பு சந்தை ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது,” என்றனர். இது குறித்து கோயம்பேடு சந்தை தலைமை நிர்வாக அதிகாரி எம்.இந்துமதி கூறும்போது, “சந்தை வளாகத்தில் இப்போது அனைத்து கடைகளையும் ஒரே இடத்தில் திறக்க போதுமான திறந்தவெளி பகுதி இல்லை. போதிய இடம் இல்லாதது மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, வெவ்வேறு இடங்களில் சந்தை திறக்கப்பட்டுள்ளது,” என்றார்.



By admin