• Fri. Oct 24th, 2025

24×7 Live News

Apdin News

கோயில் நிதி விவகாரம்: அனைத்து கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court Orders the Charities Department to send Circular to All Temples

Byadmin

Oct 23, 2025


சென்னை: கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், கோயில் நிதியில் வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் கட்ட தடை விதிக்கக் கோரி, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.பி.பழனி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘கோயில் நிதியை பயன்படுத்தி, வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பல கோயில்களில் வணிக வளாகங்கள் கட்டப்படுகிறது’ என குற்றம்சாட்டப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில், ‘கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்ட நிலையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த கட்டிடங்கள் மூலம் மாதம் 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அறநிலையத் துறை சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கந்தக்கோட்டம் முத்துகுமார சுவாமி கோயில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை தொடர அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

அதேசமயம், அந்தக் கட்டுமானங்களை அறநிலையத் துறைச் சட்டப்படி, பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு நவம்பர் 22-ம் தேதிக்குள் பதிலளிக்க, தமிழக அரசுக்கும், கோயில் நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டனர்.

மேலும், கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சுற்றறிக்கை வெளியிட அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.



By admin