• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தம்பி விடுதலை | OPS Brother acquitted in case of inciting temple priest to commit suicide

Byadmin

Nov 14, 2024


திண்டுக்கல்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகமுத்து (22). கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாகப் பணிபுரிந்து வந்த நாகமுத்து 2012-ல் தற்கொலை செய்துகொண்டார்.

முன்னதாக, தனது தற்கொலைக்கு கோயில் அறங்காவலர்களாக இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, லோகு, சரவணன், ஞானம், மணிமாறன், சிவக்குமார், பாண்டி ஆகிய 7 பேர் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் அளித்த புகாரின்பேரில், ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது தென்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தேனி நீதிமன்றத்தில் 390 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை தொடங்கிய நிலையில், வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சுப்புராஜ் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்தது. பின்னர் இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணை நடந்து கொண்டிருந்த போதே குற்றம் சாட்டப்பட்ட பாண்டி இறந்துவிட்டார்.

இந்த வழக்கில் நேற்று விசாரணை முடிவடைந்த நிலையில், நவ. 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி முரளிதரன் அறிவித்தார். இதையொட்டி, ஓ.ராஜா உள்ளிட்ட 6 பேர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். பின்னர், குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.



By admin