சென்னை: கோயில் வளாகத்தில் நடைபெறும் இசை நிகழ்வுகளில் சினிமா பாடல்களை ஒருபோதும் பாடக் கூடாது. பக்தி பாடல்களை மட்டுமே பாட வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் திருவிழாக்களின்போது கோயில் வளாகத்தில் இசைக் கச்சேரிகளை நடத்தும்போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்தும், கவர்ச்சிப் பாடல்களுக்கு ஆபாசமாக நடனமாடுவதை எதிர்த்தும் புதுச்சேரியைச் சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், “புதுச்சேரி திருமலைராயன்பட்டினத்தில் உள்ள வீழி வரதராஜப் பெருமாள் கோயில் திருவிழாவின்போது கோயில் வளாகத்துக்குள் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. அதில் பக்திப் பாடல்களைத் தவிர்த்து பக்திக்கு அப்பாற்பட்ட சினிமா பாடல்கள் தான் அதிகமாக பாடப்பட்டது. கோயிலுக்கு அறங்காவலர்களை முறையாக நியமித்து இருந்தால் இதுபோன்ற நிகழ்வுகள் கோயில் வளாகத்துக்குள் நடைபெறாது.
எனவே கோயிலை நிர்வகிக்கும் நிர்வாகிகள் அல்லது பக்தர்கள் ஏற்பாடு செய்யும் கோயில் திருவிழா இசைக் கச்சேரிகளின்போது சினிமா பாடல்களை பாடக்கூடாது என்றும், ஆபாசப் பாடல்களுக்கு நடனமாடக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். அதுபோல புதுச்சேரி வீழி வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு அறங்காவலர்களையும் உடனடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, “கோயில் திருவிழா நேரங்களில் இசைக் கச்சேரிகளை நடத்துவதாக இருந்தால் கண்டிப்பாக பக்தி பாடல்களை மட்டுமே பாட வேண்டும். சினிமா பாடல்களை பாடக்கூடாது. அதேபோல ஆபாச நடனங்களையும் அனுமதிக்கக் கூடாது. அறங்காவலர்களை நியமிக்காமல் கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறை நீண்ட நாட்களுக்கு தனது கையிலேயே வைத்திருக்க முடியாது. எனவே இந்த கோயிலுக்கு அறங்காவலர்களை நியமிக்கவும் அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என உத்தரவிட்டுள்ளார்.