• Tue. May 13th, 2025

24×7 Live News

Apdin News

கோலி தோனியை விஞ்சி டெஸ்டில் இந்திய அணியை உச்சம் தொட வைத்தது எப்படி?

Byadmin

May 13, 2025


காணொளிக் குறிப்பு, இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டனா விராட் கோலி? சாதித்தது என்ன?

சாதனைமேல் சாதனை படைத்த கோலி டெஸ்டில் இந்தியாவை உச்சம் தொட வைத்தது எப்படி?

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

36 வயதான விராட் கோலி, 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 9230 ரன்களை 46.85 சராசரியுடன் குவித்துள்ளார். முன்னதாக கடந்த புதன்கிழமை ரோஹித் ரஷ்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது விராட் கோலியும் ஓய்வை அறிவித்துள்ளார்.

ஓய்வு பற்றி விராட் கோலி தெரிவித்தது என்ன?

ஓய்வு குறித்த அறிவிப்பைத் திங்கட்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த விராட் கோலி, “டெஸ்டில் முதன்முதலில் நான் இந்திய அணியின் தொப்பியை அணிந்து 14 ஆண்டுகள் ஆகிறது. உண்மையாக இந்த பயணம் இவ்வாறு அமையும் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. என்னைச் சோதித்து, வடிவமைத்து, எனது வாழ்க்கைக்கான பல பாடங்களை கற்றுத் தந்தது” என பதிவிட்டுள்ளார்.

மேலும், “டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதில் ஆழமான தனிப்பட்ட ஒரு விஷயம் இருக்கிறது. அங்கீகரிக்கப்படாமல் போனாலும் விடாப்பிடியாக கடைபிடித்த அணுகுமுறை, நீண்ட நாள் போராட்டம், யாருமே பார்க்காத உங்களுடன் மட்டுமே எப்போதும் இருக்கப்போகும் தருணங்கள் உள்ளிட்டவை உள்ளன.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகும் முடிவு எளிதானது அல்ல. ஆனால் அது சரியானதாக இருக்குமென நினைக்கிறேன். என்னிடம் இருந்த அனைத்தையும் அதற்கு அர்ப்பணித்துள்ளேன். நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக அது திருப்பி கொடுத்தது. இந்த பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நெஞ்சம் முழுக்க நன்றியுணர்வுடன் கடந்து செல்கிறேன். எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்,” என விராட் கோலி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

பேட்டராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி சாதித்தது என்ன?

டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மீத் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோருடன் விராட் கோலியும் இந்த தலைமுறையின் சிறந்த நான்கு பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

2011ஆம் ஆண்டு மேற்கு இந்தியன் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார். சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ஒரு ஜாம்பவானாக அறியப்பட்டாலும், தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் ஆடிய 5 இன்னிங்ஸில் அவர் மொத்தமாகக் குவித்திருந்தது 76 ரன்கள் மட்டுமே.

அதன்பின், ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற்றிருந்தார். இந்த தொடரில் இந்திய அணி 4-க்கு பூச்சியம் என கணக்கில் தோல்வியடைந்தது. ஆனாலும், இந்த தொடரில் இறுதி போட்டியான அடிலெய்ட் ( Adelaide) டெஸ்டில் விராட் கோலி தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அதாவது தனது எட்டாவது டெஸ்ட் போட்டியில் தான் முதல் சதத்தை பதிவு செய்தார்.

அதன் பின்னர் இந்திய மண்ணில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் தலா ஒரு சதத்தை பதிவு செய்தார். அதன்பின்னர் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் விராட் கோலி ஆடிய ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது.

முதல் இன்னிங்ஸில் சதமடித்தவர், இரண்டாவது இன்னிங்சில் புஜாராவுக்கு தோள் கொடுத்து 96 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் வெலிங்டன் மைதானத்தில் ஒரு சதம் விளாசினார். இந்த காலகட்டத்தில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர்களில் தலா ஒரு சதம் விளாசி வந்தார் கோலி.

ஆனால், 2014-ல் இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர் விராட் கோலிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது. ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 10 இன்னிங்சில் பேட்டிங் பிடித்த கோலி ஆறு இன்னிங்சில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனார். அந்த தொடரில் விராட் கோலி ஒரு இன்னிங்சில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் வெறும் 39 ரன்கள் தான்.

ஸ்விங் ஆகும் பந்துகளில் விராட் கோலி தடுமாறியதும்; ஆண்டர்சன் பந்துகளுக்கு எந்தவித பதிலும் இன்றி திணறியதும் விராட்கோலியின் கிராஃபை இறக்கின. பெரிய அளவில் விமர்சனங்களை எதிர்கொண்டன.

ஆனால், கிட்டத்தட்ட 11 மாத இடைவெளிக்கு பிறகு 2014-ம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியபோது, விராட் கோலி அந்தத் தொடரில் புதிய உச்சம் தொட்டார். விராட் கோலியின் டெஸ்ட் கெரியரில் முக்கியத்துவம் வாய்ந்த தொடராகப் பார்க்கப்படுவதும் இதுதான். அடிலெய்டு டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் விளாசினார். அது மட்டுமல்ல நான்கு சதம், ஒரு அரைசதம் உட்பட 692 ரன்களை குவித்தார். இந்தத் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது மகேந்திர சிங் தோனி திடீரென ஓய்வை அறிவித்ததால், நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி கேப்டனாக வழிநடத்தினார்.

அதன்பின்னர் இந்தியாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி வழிநடத்திய விதம், விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் காட்டிய ஆக்ரோஷமான அணுகுமுறை; பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் துடிப்பாக செயல்பட்டவிதம் ஆகியவை இந்தியா விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக முடிவுகளைக் கொடுக்கத் தொடங்கின.

2015-ல் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றபோதும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை வென்றது. அந்தச் சமயத்தில் 22 ஆண்டுகளில் முதன் முறையாக இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் ஹாஷிம் ஆம்லா, டி வில்லியர்ஸ் என நட்சத்திர வீரர்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த அணியாக வளையவந்த தென்ஆப்பிரிக்கா இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தென்ஆப்பிரிக்காவை வெல்லவிடாமல் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என இந்தியா வென்றது.

2016-ல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது தான் தனது முதல் இரட்டைச் சதத்தை பதிவு செய்தார் கோலி. அந்த டெஸ்ட் தொடரில் தான் இந்தியா முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்றது. அதன்பிறகு உள்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடர்களில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என வரிசையாக இந்தியா தொடரை வென்றது.

விராட் கோலி முழு நேர டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு 10 டெஸ்ட் தொடர்களில் ஒன்பதில் கோப்பையை வென்றது. பெரும் பலத்துடன் 2018-ல் தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்துக்குச் சென்றது. அதில் தான் 1- 2 என கேப்டனாக முதல் தோல்வியை சந்தித்தார் கோலி.

2018-ல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் வந்தது. விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் நிரூபிக்க வேண்டிய தருணம். இரண்டு சதங்கள் உட்பட விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாக மிகச்சிறப்பாக விளையாடினார். அனைத்து விமர்சனங்களுக்கும் தக்க பதிலடி கொடுத்தார்.

2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் விராட் கோலி மிகச்சிறந்த ஃபார்மில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் இவர் 35 டெஸ்ட் போட்டிகளில் 58 இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 3596 ரன்களை குவித்தார். அதே சமயம் 14 சதங்களையும் குவித்திருந்தார்.

ஆனால், இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த தொடரில் நான்கில் தோற்றது. விராட் கோலி கேப்டனாக சந்தித்த மிக மோசமான தோல்வி அதுவே.

அதே சமயம், 2018-19 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை வெல்வது வரலாற்றில் அதுவே முதல் முறை. அதாவது 72 ஆண்டு கால வரலாற்றில் அதுவே முதல்முறை என்பது கூடுதல் தகவல்.

விராட் கோலி கேப்டனாக இருந்த கால கட்டத்தில் இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு முறை கூட தோல்வியை சந்திக்கவில்லை.

அதே சமயம் நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியாவால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை.

இவரது தலைமையிலான இந்திய அணி 2016 முதல் 2021ஆம் ஆண்டுவரை சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்த ஐந்து ஆண்டுகள் முதலிடத்தில் இருந்தது. ஐசிசியின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரிலும் இறுதிப் போட்டிவரை தகுதி பெற்றது.

தரவுகளின் அடிப்படையில் விராட் கோலி டெஸ்ட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக அறியப்படுகிறார். 68 போட்டிகளில் இந்திய அணியை விராட் கோலி வழிநடத்தினார். அதில், 17 போட்டிகளில் தோல்வியடைந்து, 40 போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தோனி 60 போட்டிகளில் 27 வெற்றியையும், சௌரவ் கங்குலி 49 போட்டிகளில் 27 வெற்றியையும் பெற்றிருந்தனர். கேப்டனாக இந்திய அணிக்கு அதிக ரன்கள் அடித்தது, அதிக சதங்கள் அடித்தது ஆகியவற்றிலும் தரவுகளின் அடிப்படையில் விராட் கோலியே முதலிடத்தில் உள்ளார்.

சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் வெற்றி பெற்ற கேப்டன்கள் பட்டியலில் விராட் கோலி, தென் ஆப்ரிக்காவின் கிரேஸ் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் உள்ளார்.

2022-ல் தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரோடு கேப்டன் பதவியில் விலகிய கோலி, கடந்த 2024ஆம் ஆண்டு டீ20 உலகக்கோப்பையை இந்தியா வென்ற பின் டீ20 கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்திருந்தார். தற்போது டெஸ்ட் கிர்க்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று சதங்கள் மட்டுமே கோலி விளாசியுள்ளார். 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 30 சதங்களுடன் 9230 ரன்கள் குவித்துளார். இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் சச்சின், டிராவிட், கவாஸ்கருக்கு அடுத்தபடியாக கோலி உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 9 சதங்கள் விளாசியுள்ளார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin