பட மூலாதாரம், Getty Images
சர்தார் படேல் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஷ்யாமா பிரசாத் முகர்ஜி நாக்பூரை அடைந்தார். சற்று முன்பாக அவர் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்திருந்தார். நாக்பூரில் சிமெண்ட் பூசப்படாத ஒரு வீட்டிற்கு அவர் சென்றார். அங்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் அவருக்காகக் காத்திருந்தார்.
இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருந்தது. புதிய கட்சியைத் தொடங்க உதவுமாறு கோல்வால்கரிடம் முகர்ஜி கேட்டார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எந்த அரசியல் கட்சியின் பின்னாலும் செல்ல முடியாது என்று கூறி கோல்வால்கர் அவரது கோரிக்கையை நிராகரித்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு தனது முடிவை மறுபரிசீலனை செய்த கோல்வால்கர் இந்தப் பணிக்காக தனது நம்பகமான ஐந்து தொண்டர்களை வழங்குவதாக முகர்ஜிக்கு உறுதியளித்தார்.
தீன் தயாள் உபாத்யாய், சுந்தர் சிங் பண்டாரி, நானாஜி தேஷ்முக், பாபுசாகேப் சோஹ்னி மற்றும் பல்ராஜ் மதோக் ஆகியோர் இந்த ஐவர்.
அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு அனுபவம் பெற்றவர்களாக அப்போது இருக்கவில்லை.
சில மாதங்களுக்குப் பிறகு அதாவது 1951 அக்டோபர் 21 ஆம் தேதி இந்த ஐந்து பேரின் தலைமையில் பாரதிய ஜன சங்கம் நிறுவப்பட்டது. அதன் தேர்தல் சின்னம் விளக்கு.
வாரணாசியில் கோல்வால்கர்
மாதவ் சதாசிவ் கோல்வால்கர் 1906 ஆம் ஆண்டு நாக்பூருக்கு அருகிலுள்ள ராம்டெக்கில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவர் மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர். வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் அவர் உயிரியல் பட்டப்படிப்பு படித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான ‘கோல்வால்கர் தி மித் பிஹைண்ட் தி மேன், தி மேன் பிஹைண்ட் தி மெஷின்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் திரேந்திர கே.ஜா, “கோல்வால்கர் எப்போதும் கஞ்சி போட்ட வெள்ளை வேட்டி மற்றும் குர்தாவை அணிவார். அவருக்கு பெரிய, ஆழமான, பிரகாசமான கண்கள் இருந்தன. ஆனால் அவர் ஒரு கூச்ச சுபாவமுள்ள நபராக இருந்தார்” என்று எழுதுகிறார்.
“அவர் குறைந்தது ஐந்து மொழிகளில் அதாவது ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்தார்.”
அவரது மற்றொரு வாழ்க்கை வரலாற்றாசிரியர் கங்காதர் இந்தூர்கர், தனது ‘குருஜி மாதவ் சதாசிவ் கோல்வால்கர்’ என்ற புத்தகத்தில், “கோல்வால்கர் படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் அப்பல்கலைக்கழக நூலகத்தில் இருந்த இந்து மதம் மற்றும் ஆன்மீகம் தொடர்பான ஒவ்வொரு முக்கியமான புத்தகத்தையும் படித்திருந்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹெட்கேவார் தனது வாரிசை தேர்ந்தெடுத்தார்
பனாரஸில் படிக்கும் போது தான் அவர் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவாரை முதன்முதலில் சந்தித்தார். ஆனால் அவரை ஆர்.எஸ்.எஸ்-க்குள் கொண்டு வந்த பெருமை, அப்போது வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த பையாஜி தானியைச் சேரும்.
1939 ஆம் ஆண்டு அவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் சக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அந்த நேரத்தில் பாபாராவ் சாவர்க்கரின் மராத்தி புத்தகமான ‘ராஷ்ட்ர மீமான்சா’வால் ஈர்க்கப்பட்ட கோல்வால்கர், ‘we or our nationhood defined’ என்ற புத்தகத்தை எழுதினார். இது மார்ச் 1939 இல் வெளியிடப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார் தான் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு கோல்வல்கரிடம் ஒரு காகிதத்தை அளித்தார். அதில் “இனிமேல் நீங்கள் அமைப்பின் அனைத்துப் பொறுப்பையும் ஏற்க உள்ளீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்,” என்று எழுதப்பட்டிருந்தது. (‘கோல்வால்கர் தி மித் பிஹைண்ட் தி மேன், தி மேன் பிஹைண்ட் தி மெஷின்’)
கோல்வால்கரின் பெயர் அறிவிக்கப்பட்டபோது பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பதவிக்கு ஹெட்கேவார் வயதில் மூத்த, அனுபவசாலியான ஒருவரைத் தேர்ந்தெடுப்பார் என்று அவர்கள் நினைத்திருந்தனர்.
“ஆரம்பத்தில் ஹெட்கேவார், பாலாஜி ஹுதாரை தனது வாரிசாகக் கருதினார். அவரை ஆர்.எஸ்.எஸ்ஸின் சக பொறுப்பாளராக நியமித்திருந்தார். பாலாஜி ஹுதார் சங் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். 1936-இல் அவர் மேல் படிப்புக்காக லண்டனுக்குச் சென்றார். அங்கு அவர் கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டார். லண்டனில் இருந்து அவர் ஸ்பெயினுக்குச் சென்றார். அங்கு அவர் ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரில் பங்கேற்றார்,” என்று மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரேந்திர ஜா குறிப்பிடுகிறார்.
“1938 ஆம் ஆண்டு ஸ்பெயினிலிருந்து இந்தியா திரும்பியபோது அவரது சித்தாந்தம் முற்றிலும் மாறியிருந்தது. ஹெட்கேவார் பிரிட்டனின் ஆதரவாளராக இருந்தார். அதே நேரம் ஹுதார் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை முற்றிலுமாக எதிர்த்தார். அதுமுதல் ஹெட்கேவாருக்கும் ஹுதாருக்கும் இடையிலான தூரம் வளரத் தொடங்கியது. மேலும் அவர் கோல்வால்கரை ஆர்எஸ்எஸ்ஸின் சக பொறுப்பாளராக ஆக்கியது மட்டுமல்லாமல் அவரை தனது வாரிசாக காணத் தொடங்கினார்” என்று ஜா விளக்குகிறார்.
பட மூலாதாரம், rss.org
வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்
1930 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து ஹெட்கேவார் தனது தொண்டர்களை விலக்கி வைத்திருந்தது போலவே கோல்வால்கரும், ஆர்.எஸ்.எஸ் மீது பிரிட்டிஷ் அரசு கோபம் கொள்ளும் எந்த ஒரு செயலில் இருந்தும் தனது தொண்டர்களை விலக்கி வைத்தார்.
1942 ஆம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்துகொள்ளவில்லை.
காங்கிரஸ் தலைமையிலான இந்த இயக்கத்தை “சிறைக்குச் செல்லும் அபத்தமான திட்டம்” என்று சாவர்க்கர் வர்ணித்தார். அதை புறக்கணிக்குமாறு இந்துக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். (ஆல் இண்டியா இந்து மகாசபா, அண்ட் ஆஃப் பிரிட்டிஷ் ரூல் இன் இண்டியா, பக்கம்–55)
வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தனது ‘காந்தி: தி இயர்ஸ் தாட் சேஞ்ச்ட் தி வேர்ல்ட்’ என்ற புத்தகத்தில் ” காங்கிரஸ் இயக்கத்தில் சேர வேண்டாம் என்று ஜின்னா முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதே நேரம் சாவர்க்கரும் இந்த இயக்கத்தில் சேர வேண்டாம் என்று இந்துக்களிடம் வேண்டுகோள் விடுத்தது சுவாரஸ்யமாக இருந்தது,” என்று எழுதுகிறார்.
“ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பிரிட்டிஷ் அரசின் ‘பிரித்தாளும்’ கொள்கைக்கு ஏற்ப இருந்தது. இது இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. அவர்களின் முக்கிய எதிரி பிரிட்டிஷ் அரசு அல்ல, முஸ்லிம்கள் தான் என்று இந்துக்களிடம் கூறப்பட்டது” என்று திரேந்திர ஜா கூறுகிறார்.
“இந்தக்கருத்தின் அடிப்படையில் இந்த அமைப்பு நிறுவப்பட்டபோது, அது பிரிட்டிஷ் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஏதாவது காரணத்திற்காக ஆங்கிலேயர்கள் கோபமடைந்தால் தங்களின் இந்து ஒற்றுமை என்ற இலக்கு பாதிக்கப்படும் என்று அமைப்பு நம்பியது,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால் இந்த விஷயத்தில், மூத்த பத்திரிகையாளரும் இந்திரா காந்தி கலை மையத்தின் தலைவருமான ராம் பகதூர் ராய் வேறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார்.
“ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்க கோல்வால்கர் தூண்டியிருக்க மாட்டார். ஆனால் அவர் யாரையும் தடுக்கவில்லை. சங் அமைப்புடன் தொடர்புடையவர்கள் முசாஃபர்பூர், சதாரா மற்றும் புனேயில் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்கான உதாரணங்கள் உள்ளன,” என்று அவர் கூறுகிறார்.
” ‘குருஜி’ அமைப்பைக் காப்பாற்ற விரும்பினார். எனவே அவர் இந்த விஷயத்தில் முன்முயற்சி எடுக்கவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. இரண்டாவது விஷயம் என்னவென்றால் அவர் வெளிப்படையாக அரசியல் சார்பு இல்லாதவர்.”
பட மூலாதாரம், Getty Images
கோல்வால்கர் மற்றும் காந்தியின் சந்திப்பு
பிரிவினைக்கு முன்பு நாட்டின் பல பகுதிகளுக்கு ஆர்எஸ்எஸ்-ஐ விரிவுபடுத்துவதில் கோல்வால்கர் வெற்றி பெற்றிருந்தார். அல்வர், பரத்பூர் போன்ற வட இந்தியாவின் பல சமஸ்தானங்களிடமிருந்து அவருக்கு உதவி கிடைத்தது.
அல்வரில் பல பயிற்சி முகாம்களை ஆர்.எஸ்.எஸ் நடத்தியது. அவற்றில் ஒன்றில் கோல்வால்கர் உரையாற்றினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு 15 நாட்கள் வரை டெல்லியில் அமைதி நிலவியது. ஆனால் பின்னர் அங்கு வகுப்புவாத வன்முறை பரவத் தொடங்கியது.
1947 செப்டம்பர் 8 ஆம் தேதியன்று டெல்லி நகரம், ஒரு பதற்றமான பகுதியாக அறிவிக்கப்பட்டது. மகாதமா காந்தி செப்டம்பர் 9 ஆம் தேதி டெல்லியை அடைந்தார். செப்டம்பர் 12 ஆம் தேதியன்று அவர் கோல்வல்கரை சந்தித்தார்.
‘ஆர்.எஸ்.எஸ்ஸின் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளது,’ என்று இந்த சந்திப்பின்போது காந்தி கோல்வல்கரிடம் தெளிவாகக் கூறினார்.
“ஆர்.எஸ்.எஸ் யாருக்கும் எதிரி அல்ல. முஸ்லிம்களைக் கொல்வதை அது ஆதரிக்கவில்லை. முடிந்தவரை இந்துக்களை பாதுகாப்பதே அதன் நோக்கம்” என்று கோல்வால்கர் கூறினார்.
(மகாத்மா காந்தியின் படைப்புகளின் தொகுப்பு, பக்கம்-177)
பட மூலாதாரம், Getty Images
காந்திக்கும் கோல்வால்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு
மகாத்மா காந்தியின் செயலராக இருந்த பியாரேலால் தனது ‘மகாத்மா காந்தி, தி லாஸ்ட் பேஸ்’ என்ற புத்தகத்தில், “தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தும், டெல்லியில் முஸ்லிம்கள் தொடர்ந்து கொல்லப்படுவதை தெளிவாகக் கண்டித்தும் ஒரு அறிக்கையை வெளியிடுமாறு காந்தி கோல்வால்கரை கேட்டுக் கொண்டார். கோல்வால்கர் இந்த யோசனையை ஏற்கவில்லை,” என்று குறிப்பிடுகிறார்.
“தான் அறிக்கையை வெளியிடுவதற்கு பதிலாக காந்தியே இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அவர் கூறினார். கண்டிப்பாக அப்படி செய்திருப்பேன், ஆனால் நீங்கள் (கோல்வால்கர்) அதைப் பற்றி உண்மையிலேயே நேர்மையாக இருந்தால் அதை நீங்கள்தான் உங்கள் வாயால் சொல்ல வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறிவிட்டார்.”
நான்கு நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 16 ஆம் தேதி டெல்லியில் உள்ள வால்மீகி கோவிலில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடையே உரையாற்றிய மகாத்மா காந்தி, “இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சம இடம் இல்லை என்று இந்துக்கள் நம்பினால், பாகிஸ்தானில் அடக்கி ஆளப்படுபவர்களாக மட்டுமே இந்துக்கள் வாழ முடியும் என்று முஸ்லிம்கள் நம்பினால், அது இந்து மதம் மற்றும் இஸ்லாம் இரண்டின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்” என்று கூறினார்.
உத்தரபிரதேச வன்முறையும் கோல்வால்கரும்
உத்தரபிரதேசத்தின் அப்போதைய உள்துறைச் செயலராக இருந்த ராஜேஷ்வர் தயாள், தனது சுயசரிதையான ‘எ லைஃப் ஆஃப் அவர் டைம்’ இல், “மேற்கு மண்டல டிஐஜி ஜெய்ட்லி இரண்டு பெரிய பூட்டிய டிரங்கு பெட்டிகளை என்னிடம் கொண்டு வந்தார். டிரங்குகள் திறக்கப்பட்டபோது, மாநிலத்தின் மேற்குப் பகுதியில் வகுப்புவாத கலவரங்களை தூண்டுவதற்கான திட்டத்தின் முழு வரைபடமும் அதில் இருந்தன.
இந்த எல்லா ஆதாரங்களையும் நான் உடனடியாக முதலமைச்சர் (Premier) கோவிந்த் பல்லப் பந்தின் வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்,” என்று குறிப்பிடுகிறார்.
“இதற்கெல்லாம் பின்னணியில் இருக்கும் கோல்வால்கரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் இன்னும் இந்தப் பகுதியில்தான் இருக்கிறார் என்றும் நானும் ஜெட்லியும் வலியுறுத்தினோம். ஆனால் பந்த் கோல்வல்கரை உடனடியாக கைது செய்வதற்கு பதிலாக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முழு விஷயத்தையும் முன்வைக்க முடிவு செய்தார்.”
“கோல்வால்கர் இதைப் பற்றி அறிந்ததும் உடனடியாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறிவிட்டார்,” என்று ராஜேஷ்வர் தயாள் எழுதுகிறார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மகாத்மா காந்தியைக் கொல்வதற்கான சதித்திட்டம் பற்றி விசாரித்த கபூர் கமிஷன் முன்னிலையில் ராஜேஷ்வர் தயாளின் கூற்றுகளை ஜெட்லி உறுதிப்படுத்தினார். மேலும் தானும் தயாளும் ஜிபி பந்தை சந்தித்ததாகவும் அவர் கூறினார். (கபூர் கமிஷன் அறிக்கை, பக்கம்-62)
பட மூலாதாரம், Getty Images
மகாத்மா காந்தியின் படுகொலை குறித்து கோல்வால்கரின் எதிர்வினை
1948 ஜனவரி 30 ஆம் தேதி நாதுராம் கோட்ஸே மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார்.
கோல்வால்கர் அப்போது சென்னையில் இருந்தார். அவர் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, நேரு, படேல் மற்றும் காந்தியின் மகனுக்கு இரங்கல் தெரிவித்து தந்தி அனுப்பினார்.
இதற்குப் பிறகு அவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் அனைத்து கிளைகளுக்கும் ஒரு உள் உத்தரவை அனுப்பினார். ‘மதிப்பிற்குரிய மகாத்மாஜியின் சோகமான மறைவு காரணமாக அனைத்து கிளைகளும் 13 நாட்கள் துக்கம் அனுசரிக்கும், மேலும் எல்லா அன்றாட நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படும்.’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
(ஸ்ரீ குருஜி தொகுப்பு, தொகுதி-10, பக்கம்-5)
மறுநாள் அவர் நாக்பூருக்கு புறப்பட்டார். சுமார் ஆயிரம் பேர், பம்பாயில் உள்ள சாவர்க்கரின் வீட்டை சுற்றி வளைத்தனர்.
நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபை அலுவலகங்களை கும்பல்கள் தாக்கத் தொடங்கின.
விசாரணைக்குப் பிறகு காந்தி கொலை வழக்கில் விநாயக் தாமோதர் சாவர்க்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
பிப்ரவரி 1 ஆம் தேதி கோல்வால்கர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். “இந்த துயரத்திலிருந்து மக்கள் பாடம் கற்றுக்கொண்டு அன்புடனும் சேவை உள்ளத்துடனும் பணியாற்றுவார்கள் என்று நம்புகிறேன். தவறான புரிதலால் எழும் எந்தவொரு ஆத்திரமூட்டும் செயலை எதிர்கொண்டாலும் மக்கள் மீது அன்பைப் பேணுமாறு எனது அனைத்து தன்னார்வ சகோதரர்களுக்கும் நான் அறிவுறுத்துகிறேன். மறைந்த ஆன்மாவுக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன்,” என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
(தி ஜன் சங், தி பயோகிராஃபி ஆஃப் அன் இந்தியன் பொலிடிக்கல் பார்ட்டி, பக்கம்-43)
பட மூலாதாரம், Getty Images
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை
அதன் பிறகு கோல்வால்கர் காவலில் வைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டபோது, ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் சுமார் ஆயிரம் பேர் கூடியிருந்தனர்.
சர்தார் படேல், 1948 பிப்ரவரி 4 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ்ஸை தடை செய்தார்.
கோல்வால்கர் 1948 ஆகஸ்ட் 6 வரை சிறையில் இருந்தார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்தபோது நாக்பூரின் எல்லைக்குள் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.
சங் அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரி சர்தார் படேலுக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் அவர் பல கடிதங்களை எழுதினார்.
1948 செப்டம்பர் 11 ஆம் தேதி கோல்வால்கருக்கு அளித்த பதிலில் சர்தார் படேல்,”சங்கம் இந்து சமூகத்திற்கு சேவை செய்துள்ளது. ஆனால் விஷயம் என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ். பழிவாங்கும் மனப்பான்மையுடன் முஸ்லிம்களைத் தாக்குகிறது. உங்கள் ஒவ்வொரு பேச்சிலும் வகுப்புவாத விஷம் நிறைந்துள்ளது,” என்று கூறினார்
“இதன் விளைவால் நாடு காந்தியை தியாகம் செய்ய வேண்டியதாயிற்று. காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அதைக் கொண்டாடி இனிப்புகளை விநியோகித்தனர். அத்தகைய சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ்.ஐ தடை செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டது.”
இதற்கிடையில் கோல்வால்கர் மீண்டும் கைது செய்யப்பட்டு முதலில் நாக்பூருக்கும் பின்னர் சியோனி சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.
இறுதியாக 1949 ஜூலை 12 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
1950 டிசம்பர் 15 ஆம் தேதி சர்தார் படேல் காலமான போது கோல்வால்கர் நாக்பூரில் இருந்தார்.
மத்திய மாகாண முதலமைச்சர் ரவிசங்கர் சுக்லா, படேலின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பம்பாய்க்கு விமானத்தில் செல்வதை அறிந்த கோல்வால்கர் அதே விமானத்தில் தனக்கு இருக்கை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதற்கு சுக்லா ஒப்புக்கொண்டார். கோல்வால்கர் பம்பாயில் சர்தார் படேலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
(தி நேரு அப்ரோச், ஃப்ரம் டெமாக்ரஸி டு மோனோக்ரஸி , பக்கம்-194)
பட மூலாதாரம், Getty Images
1963 குடியரசு தின அணிவகுப்பு
1962 ஆம் ஆண்டு சீனா இந்தியாவைத் தாக்கிய போது, சீன படையெடுப்பாளர்களை விரட்டியடிப்பதில் நேருவின் அரசுக்கு அவர் ஆதரவளித்தார்.
கோல்வால்கர் இந்திய கம்யூனிஸ்டுகளை தாக்கிப் பேசினார். அவர்களை சீன கம்யூனிச ஆட்சியின் ‘ஏஜெண்டுகள்’ என்று அவர் அழைத்தார்.
சீனாவிடம் தோல்வியடைந்ததை கருத்தில் கொண்டு பாதுகாப்பு அமைச்சகம் 1963 ஆம் ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்ய முடிவு செய்தது. ஆனால் அதை எதிர்த்த நேரு, ராணுவ அணிவகுப்புக்கு பதிலாக ‘சிவிலியன் அணிவகுப்பு’ நடத்த பரிந்துரைத்தார்.
இந்த அணிவகுப்புக்கு டெல்லி மேயர் நூருதீன் அகமது பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அணிவகுப்பில் சேருமாறு சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மற்ற தொழிலாளர் சங்கங்களைப் போலவே, ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய பாரதிய மஸ்தூர் சங்கமும் அணிவகுப்பில் சேர அழைக்கப்பட்டது.
(ஜவஹர்லால் நேருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், பக்கம்-396)
“இந்த அணிவகுப்பு வித்தியாசமாக இருந்தது. இதில் நேரு மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் தலைமையில் எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பில் டெல்லியின் மற்ற குடிமக்களுடன் சேர்ந்து இரண்டாயிரம் ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் தங்கள் முழு சீருடையில் அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் கைகளில் எந்த வாசக அட்டைகளோ கொடியோ இருக்கவில்லை” என்று திரேந்திர ஜா எழுதுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
கோல்வால்கரை டெல்லிக்கு அழைத்தார் சாஸ்திரி
1965ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போர் வெடித்தபோது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, மற்ற எதிர்க்கட்சிகளுடன் கூடவே கோல்வால்கருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் மகாராஷ்டிராவின் சாங்லியிலிருந்து டெல்லிக்கு வந்தார்.
அரசுடன் எல்லா சாத்தியமான வழிகளிலும் ஒத்துழைக்குமாறு மறுநாள் அவர் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பாகிஸ்தானை ஒட்டியுள்ள குஜராத் பகுதிகளுக்கு அவர் பயணம் செய்தார். அங்கு அவர் ஆற்றிய உரைகள் அகில இந்திய வானொலியின் பரோடா மையத்தால் ஒலிபரப்பப்பட்டன.
இதன் பிறகு அவர் பஞ்சாப் சென்று அம்பாலா கண்டோன்மென்ட்டில் இந்திய வீரர்களிடையே உரையாற்றினார்.
(தி இன்கம்பேரபிள் குரு கோல்வால்கர், பக்கம்-274)
பட மூலாதாரம், Getty Images
‘முஸ்லிம்கள் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள்’
கோல்வால்கரின் ‘ வீ ஆர் அவர் நேஷன்வுட் டிஃபைண்ட்’ என்ற புத்தகம் அவரது கருத்துக்களைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் பயனுள்ள தொகுப்பு என்று ஜே.ஏ. கரேன் தனது ‘மிலிடெண்ட் இந்துயிஸம் இன் இண்டியன் பொலிடிக்ஸ்’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
“இந்தப் புத்தகத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பின் பைபிள் என்று அழைக்கலாம்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
சங்கத்தின் தேசியவாதக் கொள்கையையும், நாட்டில் சிறுபான்மையினரின் இடத்தைப்பற்றிய ஒரு பார்வையையும் இந்தப் புத்தகம் அளிக்கிறது.
‘முஸ்லிம்கள் எங்களிடமிருந்து வேறுபட்டவர்கள். இஸ்லாம் இந்தியாவில் பிறக்கவில்லை’ என்று கோல்வால்கர் எழுதுகிறார். கோல்வால்கர் சாவர்க்கரின் ‘புண்ணிய பூமி’ கொள்கையை நம்பினார்.
“இந்தியா முஸ்லிம்களின் புனித பூமி அல்ல. ஏனெனில் அவர்களின் நம்பிக்கையின் மையங்களாக மெக்கா-மதீனா திகழ்கிறது. எனவே இந்தியா மீதான அவர்களின் விசுவாசம் சந்தேகத்திற்குரியது” என்று சாவர்க்கர் எழுதினார்.
“கோல்வால்கரின் சித்தாந்த வரைபடம் ‘வீ ஆர் அவர் நேஷன்வுட் டிஃபைண்ட்’ என்பதிலிருந்து வந்தது. முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் சிந்தனை உள்ள ஒரு அரசியல் இடத்தை உருவாக்குவது பற்றி இது பேசுகிறது” என்று திரேந்திர ஜா கூறுகிறார்.
“கோல்வால்கரும் பின்னர் ‘வீ ஆர் அவர் நேஷன்வுட் டிஃபைண்ட்’ என்பதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முயன்றார்” என்று அவர் கூறுகிறார்.
“ஆர்.எஸ்.எஸ்-ஆதரவு எழுத்தாளர்கள் ‘ வீ ஆர் அவர் நேஷன்வுட் டிஃபைண்ட்’ என்பது அவர்களின் வரைபடம் அல்ல என்ற பொய்யைப் பரப்பும் வரை அது பரவாயில்லை. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்களும் இதைத் திரும்பத் திரும்பச் சொல்லத் தொடங்கும்போது அது ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றாக ஆகிவிடுகிறது என்பதை நான் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன்,” என்று திரேந்திர ஜா குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
கோல்வால்கரின் சிந்தனைத் தொகுப்பான ‘Bunch of Thoughts’-ல் மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம் என்னவென்றால் அவர் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளை ‘தேசத்தின் உள் எதிரிகள்’ என்று விவரித்திருந்தார்.
‘Bunch of Thoughts’ இல் இதைக் கூறும் பகுதி 2018 செப்டம்பரில் நீக்கப்பட்டது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், “சூழ்நிலைகள் காரணமாக சொல்லப்பட்டவை அவை. இது நிலையான உண்மை அல்ல. ஆர்.எஸ்.எஸ் ஒரு மூடிய அமைப்பு அல்ல. காலம் மாறும்போது எங்கள் சிந்தனையும் மாறுகிறது” என்று குறிப்பிட்டார்.
இருப்பினும் கோல்வால்கரின் கருத்துக்கள் குறித்து நிறைய விவாதங்கள் உள்ளன. ஆனால் கோல்வால்கர் நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ்-ஐ கொண்டு சேர்த்தார் என்பது உண்மை. அவர் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவராக 33 ஆண்டுகள் இருந்தார்.
கிறிஸ்டோபர் ஜெஃப்ரெலாட் தனது ‘இந்து நேஷனலிஸ்ட் மூவ்மெண்ட் அண்ட் இண்டியன் பொலிடிக்ஸ்’ என்ற புத்தகத்தில், “கோல்வால்கர் ராஜாவாக மாறுவதை விட ராஜாக்களை உருவாக்குவதிலேயே அதிக ஆர்வம் கொண்டிருந்தார்,” என்று எழுதியுள்ளார்.
கோல்வால்கர், ஆர்எஸ்எஸ் அமைப்பை உடைவதிலிருந்து காப்பாற்றினார் என்றும் மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு உருவான சூழ்நிலையில் கூட நாட்டின் அரசியலில் அதைப் பொருத்தமாக வைத்திருந்தார் என்றும் ராம் பகதூர் ராய் கருதுகிறார்.
“தனது மரணத்திற்குப் பிறகு கோல்வால்கர் இந்துத்துவ அரசியலில் கிட்டத்தட்ட கடவுள் போன்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். அவரது சீடர்களில் பலர் பல மாநிலங்களில் அமைச்சர்களாகவும் முதலமைச்சர்களாகவும் ஆனார்கள். அவர்களில் இருவரான அடல் பிஹாரி வாஜ்பாயும், நரேந்திர மோதியும் இந்தியாவின் பிரதமர்களாக ஆனார்கள்” என்று திரேந்திர ஜா குறிப்பிடுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.