• Tue. Nov 18th, 2025

24×7 Live News

Apdin News

கோவைக்கு நவ.19-ல் பிரதமர் மோடி வருகை: 3,000 போலீஸார் பாதுகாப்பு; போக்குவரத்து மாற்றம் | Prime Minister Modi inaugurates organic farmers conference in Coimbatore

Byadmin

Nov 17, 2025


கோவை: தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் சார்பில் நாளை மறுநாள் (19-ம் தேதி) கோவையில் நடக்கும் இயற்கை விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். பிரதமர் வருகையையொட்டி, 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாநகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா அரங்கில் வரும் 19-ம் (நாளை மறுநாள்) தேதி முதல் 21-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்றை விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடி பங்கேற்று இம்மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

பின்னர், சிறப்பாக செயல்பட்ட 18 இயற்கை விவசாயிகளுக்கு விருதுகளை வழங்குகிறார். பின்னர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் மதியம் புட்டபர்த்தியில் இருந்து மதியம் 12.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் 1.25 மணிக்கு கோவைக்கு வருகிறார்.

1.30 மணிக்கு விமான நிலையத்திலிருந்து கார் மூலமாக புறப்பட்டு, 1.40 மணிக்கு கொடிசியா அரங்கிற்கு வருகிறார். அவருக்கு தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதியம் 3.15 மணிக்கு கொடிசியாவில் இருந்து கார் மூலமாக புறப்பட்டு 3.30 மணிக்கு விமான நிலையத்தை அடைந்து புதுடெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் தலைமையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொடிசியா சாலையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏதுவாக, சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாடு நடக்கும் கொடிசியா வளாகம் முழுவதும் இந்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் வருகையையொட்டி பீளமேடு சர்வதேச விமான நிலையத்திலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸார், துணை ராணுவப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.

அதேபோல், கோவை மாநகரில் நாளை மறுநாள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவிநாசி சாலை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூர ஜி.டி.நாயுடு மேம்பாலமும் நாளை மறுநாள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மூடப்படும் என போலீஸார் அறிவித்துள்ளனர். இதற்கிடையே, மாநாட்டுக்கான ஏற்பாட்டுப் பணிகள் குறித்து விழா ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் குழுவினர் இன்று (நவ.17) கொடிசியாவில் ஆய்வு செய்தனர்.

அதைத் தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, ‘‘இயற்கை விவசாயிகள் மாநாட்டில், விவசாயிகளின் அழைப்பை ஏற்று பிரதமர் பங்கேற்பது மிகவும் முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது. பிரதமர் பார்வையிடுவதற்காக இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்கள், சிறு தானியங்க, பழ வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் 16 அரங்கங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. அதை பிரதமர் திறந்து வைத்து பார்வையிடுகிறார்’’என்றார்.



By admin