பட மூலாதாரம், Getty Images
கோவையில் சமீபத்தில் நடந்த 2 சட்டவிரோத குழந்தை தத்து சம்பவத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒரு குழந்தை இறந்தநிலையில், குழந்தையின் சடலம் தேண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. என்ன நடந்தது?
“நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த திருமணமாகாத 26 வயது பெண் ஒருவர் கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதியன்று, ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.” என வடவள்ளி காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர்
திருமணமாகாத பெண்ணுக்கு பிறந்த குழந்தை
“அப்போது அந்த மருத்துவமனையில் காவலாளியாகப் பணியாற்றுபவரிடம் அக்குழந்தையை இளம்பெண் கொடுத்துவிட்டு கோத்தகிரிக்குச் சென்று விட்டார். அந்த பெண், பிரசவத்துக்கு வருவதற்கு முன்பு, அவருடைய பெயரைப் பதிவு செய்து, மருத்துவ உதவிகளைச் செய்து வந்த கிராம சுகாதார செவிலியர், குழந்தை பற்றி அவரிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் அந்தக் குழந்தை காவலாளியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அந்த கிராம சுகாதார செவிலியர், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு (DCPU) தகவல் அளித்துள்ளார். பின்பு குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு (CWC) நிர்வாகிகள் விசாரணை நடத்தினர்.
அதில் அந்தக் குழந்தை காவலாளி மூலமாக ஒரு தம்பதிக்கு, பிப்ரவரி 10 ஆம் தேதியன்றே சட்டவிரோதமாக தத்து கொடுக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்பின், தம்பதியரை வரவழைத்த அதிகாரிகள், அந்தக் குழந்தையை மீட்டு, கிணத்துக்கடவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.” என்று வடவள்ளி காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
மேலும், ”கடந்த மார்ச் 10 அன்று காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மறுநாள் அந்தக் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்றுவந்த அந்த குழந்தை கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழந்தது.
சட்டம் சாராத வழக்காகக் கருதப்பட்டு, குழந்தையின் சடலம் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. காப்பகத்தினர் அதை பொள்ளாச்சி அருகே மயானத்தில் புதைத்துள்ளனர்.
இந்தத் தகவல் மார்ச் 14 அன்றுதான் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. காவல்துறை கோரியதன்பேரில், மார்ச் 17 அன்று, குழந்தையின் சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பின்பு மீண்டும் அதே இடத்தில் சடலம் புதைக்கப்பட்டது”, என்று வடவள்ளி காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய வடவள்ளி காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், ”அந்தக் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட ஒரே நாளுக்குள் உடல் நலக்குறைவால் இறந்து விட்டது. சடலம் புதைக்கப்பட்ட பின்னரே, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் இருந்து புகார் வந்தது.
அதன்பேரில் குழந்தையின் உடல் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை. குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், சந்தேகத்திற்குரிய மரணம் ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ” என்றார்.
15 பேர் கைது
பட மூலாதாரம், Getty Images
“வடவள்ளி பகுதியில் வைத்து தத்து கொடுக்கப்பட்டதால், அந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகளால் புகார் தரப்பட்டுள்ளது.
இருப்பினும் கைதான 8 பேரும் காவல் நிலைய பிணையின் பேரிலேயே விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக குழந்தை தத்து கொடுக்கப்பட்டிருந்தாலும், இதில் பணம் எதுவும் கைமாறவில்லை என்பதன் அடிப்படையிலும், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தில் 3 ஆண்டுகள் மட்டுமே சிறை என்பதாலும், காவல் நிலைய அதிகாரத்திற்கு உட்பட்டதால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்”, என வடவள்ளி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சிலம்பரசன் தெரிவித்தார்.
கோவையில் இதேபோன்று சட்டவிரோதமாக ஒரு குழந்தை தத்து கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டது.
” ஆண் குழந்தையை, சேலத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு 2 லட்ச ரூபாய்க்கு குழந்தையின் பெற்றோர் விற்றுள்ளனர். குழந்தையை வாங்கிச் சென்றவர்கள், அதனை கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்குக் கொடுத்து விட்டனர். இதற்கிடையில் குழந்தையை விற்றது தொடர்பாக, குழந்தையின் பெற்றோருக்குள் பிரச்னை ஏற்பட்டு, காவல்துறையில் குழந்தையின் தாய் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், கன்னியாகுமரிக்குச் சென்று குழந்தையை துடியலூர் போலீசார் மீட்டு வந்தனர்”, என்று துடியலூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக குழந்தையை தத்து கொடுத்தது தொடர்பாக, குழந்தையின் பெற்றோர் உட்பட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்குள் மற்றொரு குழந்தையை சட்டவிரோதமாக தத்து கொடுத்த விவகாரத்தில், 8 பேர் கைதாகியுள்ளனர். அக்குழந்தையின் உயிரும் பறி போயிருக்கிறது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சா, ”குழந்தைகள் தத்து கொடுக்கவும், எடுக்கவும் விரும்புவோர், அதை சட்டப்படி செய்து கொள்வதே, இரு தரப்பினருக்கும் பாதுகாப்பானதாகும். மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆணையத்தின் இணையதளத்தில் (CARA –Central Adoption Resource Authority) இதற்குப் பதிவு செய்ய வேண்டும். அதிலுள்ள எல்லா விதிமுறைகளுக்கும் உட்பட்டு, உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தாலும் குழந்தைகக்காக ஓராண்டு, ஈராண்டுக்கு மேலும் காத்திருக்க வேண்டியிருக்கும். அதற்கும் நிறைய தகுதிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
முறைப்படி குழந்தையை தத்தெடுக்கும் வழிமுறை
தத்தெடுப்புக்கான அரசு இணையதளத்தின்படி, இந்தியாவை சேர்ந்த ஒருவர் குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் குடும்ப புகைப்படம், அரசு வழங்கிய ஆண்டிற்கான வருமான சான்றிதழ், மருத்துவச்சான்று, திருமணப்பதிவுச்சான்று (திருமணம் ஆகி இருந்தால்), வசிப்பிடச் சான்று போன்ற ஆவணங்கள் தேவைப்படுகின்றன.
குறைந்தபட்சம் திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் நிலையான திருமண பந்தத்தில் அந்த தம்பதியினர் வாழ்ந்திருக்க வேண்டும், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எந்த சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது உட்பட தத்து எடுப்பதற்கான சில தகுதிகள் அரசால் வரையறுக்கப்பட்டுள்ளன.
தம்பதியராக இருக்கலாம்; தனி நபராக இருந்தால்கூட குழந்தையை தத்தெடுக்க முடியும். தனியாக வாழும் ஒரு பெண்ணால் ஆண் அல்லது பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியும்; ஆனால் தனியாக வாழும் ஒரு ஆணுக்கு பெண் குழந்தை தத்து கொடுக்கப்படாது.
அதேபோல எந்தெந்த வயதுள்ள தம்பதியர், எந்தெந்த வயதுள்ள குழந்தையைத் தத்து கொடுக்க முடியும் என்பதும் அதில் வரையறுக்கப்பட்டுள்ளது.
கைக்குழந்தையில் இருந்து 2 வயது உடைய குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியினரின் கூட்டு வயது அதிகபட்சம் 85 ஆகவும், தனி நபரின் வயது அதிகபட்சம் 40 ஆகவும் இருக்க வேண்டும்.
2 முதல் 4 வயதுள்ள குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியினரின் கூட்டு வயது அதிகபட்சம் 90ஆகவும், தனி நபரின் வயது அதிகபட்சம் 45 ஆகவும் இருக்க வேண்டும்.
4 முதல் 8 வயதுள்ள குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியினரின் கூட்டு வயது அதிகபட்சம் 100 ஆகவும், தனி நபரின் வயது அதிகபட்சம் 50 ஆகவும் இருக்க வேண்டும்.
8 முதல் 18 வயதுள்ள குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியினரின் கூட்டு வயது அதிகபட்சம் 110 ஆகவும், தனி நபரின் வயது அதிகபட்சம் 55 ஆகவும் இருக்க வேண்டும்.
வெளிநாட்டவர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கு உள்ளே குழந்தையை தத்தெடுக்க விரும்புபவர்களுக்கு வேறு விதிமுறைகள் இருக்கின்றன.
”முறைப்படி பதிவு செய்திருந்தாலும் சீனியாரிட்டிபடியே குழந்தைகள் தத்து கொடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட காப்பகம் (AGENCY) இருக்கும். பதிவு செய்திருப்பவர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களைப் பற்றி இந்த ஏஜென்சி விசாரித்துத் தகவல்களை பதிவு செய்யும். அதன் அடிப்படையில்தான் குழந்தை தத்து கொடுப்பது இறுதி செய்யப்படும். உடனே குழந்தை வேண்டுமென்பதற்காக சட்டவிரோதமாக தத்து எடுத்தால் குழந்தைகள் பாதுகாப்புச்சட்டப்படி 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். எனவே எக்காரணத்தை முன்னிட்டும் சட்டவிரோதமாக குழந்தையை தத்து எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.” என்றார் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சா
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.