‘கொரோனா காலத்தில் 2020 மார்ச் 23 அன்று வேலையிலிருந்து நிறுத்தப்பட்டோம். அதன்பின், இன்று வரையிலும் திரும்பவும் வேலை கிடைக்கவில்லை. நான் வைண்டிங் பிரிவில் மேஸ்திரியாக இருந்தேன். இப்போது தினமும் கூலி வேலைக்கு சென்றுதான் குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன். தினமும் உரிய வேலை, ஊதியம் கிடைக்காததால் வட்டிக்குப் பணம் வாங்கிக் குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.”
தேசிய பஞ்சாலைக்கழகத்துக்குச் சொந்தமான கோவை ரங்கவிலாஸ் மில்லில் பணியாற்றி, வேலையையும் ஊதியத்தையும் இழந்து நிற்கும் செந்தில் கூறிய வார்த்தைகள் இவை.
”எங்களுக்கு வேலை இருக்கிறது. ஆனால் 5 மாதங்களாக சம்பளம் தரவில்லை, வேறு வேலைக்கும் போக முடியவில்லை. எப்படித்தான் குடும்பத்தை நடத்துவது என்றே தெரியவில்லை. கடன் சுமை ஏறிக்கொண்டே செல்கிறது. சம்பளம் கொடுத்தாலும் இப்போது வாங்கும் கடனுக்கு வட்டியை எப்படிக்கட்டுவது?”
மூடப்பட்டுள்ள தேசிய பஞ்சாலைக்கழக ஆலை ஒன்றில் பணியாற்றும் பெயர் கூற விரும்பாத துாய்மைப் பணியாளர் ஒருவரின் வார்த்தைகள் இவை.
நாடு முழுவதும் தேசிய பஞ்சாலைக்கழக (என்டிசி) ஆலைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள், வேலையும், ஊதியமும் இன்றி அவதிப்படுகின்றனர்.
கோவையில்தான் அதிகளவு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆலைகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று தொழிற்சங்கங்கள் போராடி வரும் நிலையில், இதுதொடர்பாக என்டிசி நிர்வாக அதிகாரிகள் பதிலளிக்க மறுக்கின்றனர்.
அமைச்சரவையின் முடிவுக்காக காத்திருப்பதாகச் சொல்கின்றார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.
மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தேசிய பஞ்சாலைக்கழகத்தின் (என்டிசி) கீழ், கோவையில் 8 ஆலைகள் உள்ள நிலையில், அவற்றில் 5 ஆலைகள் மட்டும் செயல்பட்டு வந்தன. கொரோனா காரணமாக, அந்த ஆலைகளும் 2020 மார்ச் 23 உடன் மூடப்பட்டன.
கொரோனா அச்சம் நீங்கி, இயல்பு நிலை திரும்பிய பின்னும் மீண்டும் ஆலைகள் இயக்கப்படவில்லை.
இவற்றில் பணியாற்றி வந்த ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு 50 சதவீத ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த பல மாதங்களாக அந்த ஊதியமும் வழங்கப்படவில்லை என்று போராடி வருகிறார்கள் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள்.
இந்திரா காந்தியால் தொடங்கப்பட்ட என்டிசி
நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும்; மீண்டும் ஆலைகளை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய பஞ்சாலைக்கழக தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் (எல்பிஎஃப்) சார்பில், கோவையிலுள்ள தேசிய பஞ்சாலைக்கழக தென் மண்டல அலுவலகத்துக்கு பூட்டுப் போடும் போராட்டம், கடந்த மார்ச் 18 அன்று கோவையில் நடந்தது.
பிபிசி தமிழிடம் பேசிய எல்பிஎஃப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, ”1960களில் இந்தியாவில் தனியார் நடத்தி வந்த 80 மில்கள் நஷ்டத்தில் இயங்கியதால், அவற்றை அவர்களால் நடத்த முடியவில்லை. அதனால் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு உதவும் வகையில், 1968 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கப்பட்டதுதான் தேசிய பஞ்சாலைக்கழகம். அந்த ஆலைகளை நிலங்களுடன் எடுக்க அப்போதே ரூ.22 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.” என்றார்.
பட மூலாதாரம், Special arrangement
மேலும் தொடர்ந்த அவர், ”மொத்தம் 128 ஆலைகள் என்டிசியால் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 23 ஆலைகள் மட்டுமே இயங்குகின்றன. கோவையில்தான் தென்னிந்தியாவிலேயே அதிகளவாக 10 ஆலைகள் இயங்கின. அதனால்தான் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான தேசிய பஞ்சாலைக்கழக தென் மண்டல அலுவலகமே, கோவையில் திறக்கப்பட்டது.” என்றார்.
கோவையில் இயங்கிவந்த 10 ஆலைகளில் 2 விற்கப்பட்டது போக, 3 ஆலைகள் மூடப்பட்டதாகவும், 5 ஆலைகள் மட்டுமே 2020 ஆம் ஆண்டு வரையிலும் இயங்கி வந்ததாக பார்த்தசாரதி கூறினார்.
இந்த ஆலைகளை இயக்குவது மற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தொழிற்சாலை தீர்ப்பாயம் இரண்டிலும் பார்த்தசாரதி வழக்குகள் தொடர்ந்துள்ளார்.
”மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எங்கள் கோரிக்கையை பரிசீலிக்குமாறு என்டிசிக்கு 2020 ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமும் இதை உறுதி செய்தது. ஆனால் இப்போது வரையிலும் தொழிற்சங்கங்களை என்டிசி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவே இல்லை. முழு ஊதியம் கேட்டு தொழில் நிறுவன தீர்ப்பாயத்திடம் தாக்கல் செய்த மனு, இன்னும் விசாரணையில் உள்ளது.” என்றார் அவர்.
இந்த மனுவை திரும்பப் பெறுமாறு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தன்னை பஞ்சாலைக் கழக அதிகாரிகள் நிர்ப்பந்தித்ததாகக் பார்த்தசாரதி கூறுகிறார்.
”அப்போதுதான் எங்களுக்கு இருந்த ஊதிய நிலுவைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தபின், இப்போது வரையிலும் எங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. கடந்த 20 மாதங்களாக எங்களுக்கு சம்பளமும் இல்லை; வேலையும் இல்லை. ஆனால் ஓடாத மில்களை நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கு முழுச்சம்பளமும் வழங்கப்படுகிறது.” என்கிறார் ஆலைத் தொழிலாளி செந்தில்.
பட மூலாதாரம், special arrangement
”இப்போதுள்ள மத்திய அரசிடம் ஜவுளித்துறை தொடர்பான உறுதியான கொள்கை இல்லாததுதான், தேசிய பஞ்சாலைக் கழக ஆலைகளின் இன்றைய நிலைக்குக் காரணம்” என்கிறார், சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை மாவட்டச் செயலாளருமான பத்மநாபன்.
தற்போது மூடிக்கிடக்கும் ஆலைகளை திரும்பவும் இயக்க முடியாத அளவுக்கு, அவை மோசமான நிலையை அடைந்துள்ளதாகக் கூறும் அவர், அத்தனைக்கும் காரணம் நிர்வாகச் சீர்கேடுதான் என்கிறார்.
”தமிழகத்திலுள்ள தனியார் ஆலைகளில் உற்பத்திச் செலவு 4 சதவிகிதமாக இருக்கும் நிலையில், இந்த என்டிசி ஆலைகளில் அதே செலவு 16.5 சதவிகிதமாக உள்ளது. நவீனமயம், இயந்திரங்களால் ஆட்குறைப்பு என்று தனியார் ஆலைகளுக்கு இணையாக இந்த ஆலைகளை இனி இயக்குவதற்கான சாத்தியம் குறைவு. அதனால் அந்தத் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டைத் தர வேண்டியது ஜவுளித்துறையின் பொறுப்பு.” என்றார் பத்மநாபன்.
140 ஏக்கர் ஆலை நிலம்
தேசிய பஞ்சாலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தேசியமயமாக்கப்பட்ட 124 ஆலைகளில் 23 ஆலைகள் மட்டுமே தற்போது நுால் மற்றும் துணி உற்பத்தியை மேற்கொள்ளும் பணியை மேற்கொள்கின்றன.
தேசிய பஞ்சாலைக்கழகத்துக்குச் சொந்தமாக கோவையிலுள்ள 8 ஆலைகளின் இடங்கள் குறித்த விபரங்கள், கோவை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட நிர்வாகம் பகிர்ந்த தகவலின்படி, அந்த 8 ஆலைகளின் இடங்களின் மொத்த பரப்பு 140.88 ஏக்கர் ஆகும். இந்த ஆலைகள் அனைத்தும் இப்போது இயங்காத நிலையில், அந்த கட்டடங்களும், அதைச் சுற்றிலும் உள்ள பல ஏக்கர் பரப்புள்ள நிலங்களும் வீணாகி வருகின்றன என தொழில் அமைப்பினர் கருதுகின்றனர்.
இதுகுறித்து, பிபிசி தமிழிடம் பேசிய இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் கோவை கிளை முன்னாள் தலைவர் நந்தகுமார், ”கோவை நகருக்குள் என்டிசி மில்களின் நிலமே பல ஏக்கர் இருக்கிறது. அந்த இடங்கள் பெரும்பாலும் புதர் மண்டி காடு போலாகி வீணாகவுள்ளன.
அந்த இடங்களை கோவை சந்திப்பு விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டுமென்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். காங்கிரஸ் காலத்திலிருந்து இப்போது வரை இந்த கோரிக்கை கிடப்பில் உள்ளது.” என்றார்.
பட மூலாதாரம், Special arrangement
”கோவையிலுள்ள என்டிசி மில் தொழிலாளர்களுக்கான சம்பள பாக்கி மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்தும், அந்த மில்களின் நிலங்களை ரயில் சந்திப்பு விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ‘ஜீரோ ஹவர்’ நேரத்தில் பேசவுள்ளோம்.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார்.
ஊதிய நிலுவை போராட்டங்கள், ஆலைகளை இயக்குவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் ஆகியவை குறித்து கருத்துக் கேட்பதற்காக, கோவை காட்டூரில் உள்ள தேசிய பஞ்சாலைக்கழகத்தின் தென் மண்டல அலுவலகத்தின் அலுவலகப் பொறுப்பாளரும், பொது மேலாளருமான வெங்கடேஷை தொடர்பு கொண்டபோது, நேரில் வருமாறு அவரது அலுவலகத்தில் பதில் தரப்பட்டது. நேரில் சென்றபோது அவர் சந்திக்க மறுத்துவிட்டார். மீண்டும் தொலைபேசியில் தொடர்புகொண்டபோதும், அவரிடம் பதில் பெற முடியவில்லை.
ஆனால் இதுபற்றி ஏற்கெனவே மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதால், இதற்கு விரைவில் தீர்வு கிடைக்குமென்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா தேசிய மகளிரணி செயலாளருமான வானதி சீனிவாசன்.
அவருடைய தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான், கோவை நகருக்குள் அமைந்துள்ள பெரும்பாலான தேசிய பஞ்சாலைக்கழக ஆலைகள் அமைந்துள்ளன.
”இது நீண்ட காலப்பிரச்னை என்பது எனக்கும் தெரியும். இது தொடர்பாக நானே ஜவுளித்துறை அமைச்சரிடம் 3 முறை பேசியிருக்கிறேன். கோவை எம்.பியாக. நடராஜன் இருந்தபோதே, அவரையும் தொழிற்சங்கத்தினரையும் அழைத்துச் சென்று பியூஸ் கோயலைச் சந்தித்துப் பேசினோம். அதற்குப் பின்னும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.
ஒன்று ஆலைகளை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் வேறு ஏதாவது முடிவெடுக்க வேண்டுமென்று தெளிவாகக் கேட்டிருக்கிறேன். அமைச்சரவையின் குறிப்புக்காகக் காத்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதனால் மிக விரைவில் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.” என்றார் வானதி சீனிவாசன்.
இந்த ஆலைகளின் நிலங்களை கோவை ரயில் சந்திப்பு விரிவாக்கத்துக்கும், வெவ்வேறு பயன்பாட்டுக்கும் மாற்றுவது தொடர்பாகவும் தான் பேசிவருவதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு