• Wed. Oct 23rd, 2024

24×7 Live News

Apdin News

கோவையில் கனமழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கால் வாகன ஓட்டிகள் அவதி | heavy rain in coimbatore

Byadmin

Oct 23, 2024


கோவை: கோவையில் செவ்வாய்க்கிழமை (அக்.22) மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால் சாலையோர தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கோவையில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி செவ்வாய்க்கிழமை பகலில் வழக்கம் போல் வெப்பம் நிலவியது. அதன் பின்னர் மாலை 7 மணி அளவில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. அடுத்து சில மணி நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

சிங்காநல்லூர், பீளமேடு, ஆவாரம்பாளையம், சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம், உக்கடம், போத்தனூர், காந்திபுரம், டவுன்ஹால் என மாநகரின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது.

கனமழையின் காரணமாக கோவை மாநகரில் தாழ்வான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது . குறிப்பாக அவிநாசி சாலை உப்பிலிபாளையத்தில் உள்ள அண்ணா மேம்பாலத்தின் கீழ் பகுதி, லங்கா காரணம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதி, சிவானந்தாகாலனி ரயில்வே பாலத்தின் கீழ் பகுதி, காளீஸ்வரா மில் சாலை, கிக்கானி பள்ளி சுரங்கப்பாதை, வடகோவை மேம்பாலத்தின் கீழ் பகுதி உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியது.

இதனால் அங்கு வாகன போக்குவரத்து தடைப்பட்டது. அது தவிர டைடல் பார்க் சாலை, அரசு மருத்துவமனை முன்பு, ரயில் நிலையம் சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழை நீர், சாக்கடை நீருடன் கலந்து சாலையில் வெள்ளப்பெருக்கு எடுத்ததுபோல் ஓடியது. இதனால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து கடும் நெரிசல் நிலவியது. பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த மத்தம்பாளையத்தில் கனமழை பெய்ததன் காரணமாக ஏழெருமை பள்ளத்தில் மழை வெள்ளம் அதிக அளவில் ஓடியது.

இதில் கோட்டை பகுதியில் இருந்து மத்தம் பாளையத்தை நோக்கி வந்த ஒரு வேன், ஒரு கார் அடித்துச் செல்லப்பட்டன. அருகில் இருந்தவர்கள் காருக்குள் இருந்தவர்களை மீட்டு காப்பாற்றினர். தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.



By admin